இம்முறையானது மிக விரைவிலேயே பெரும்பாய்ச்சலை உருவாக்கியிருக்கும் என்பதை எவரும் ஊகிக்கலாம். ஏற்கனவே உலகின் அனைத்துத் தகவல்தொகைகளையும் ஒருங்கிணைத்து ஒரே தகவல்வெளியாக ஆக்கியிருந்தனர். இப்போது அத்தகவல்தொகையானது மூளைக்கு வெளியே கணிப்பொறிகளில் இருந்தாலும் எக்கணமும் எண்ணிய உடனே அதிலுள்ள அனைத்தையும் மூளைக்குள் நிரப்பிக் கொள்ள இயலும் என்ற நிலை உருவாயிற்று. அதாவது, ஒரு தனி மூளையின் தகவல்திறனானது நடைமுறையில் உலகில் உள்ள அனைத்துத் தகவல்களையும் கொண்டதாக மாறியது. மானுடமூளை என்பது கணிப்பொறிகள் மற்றும் புறஸீட்டா கதிர்களினாலான நரம்புவலையால் இணைக்கப்பட்ட ஒற்றைப்பெரும் மூளையாக உருவானது. அனைத்துச் செயல்பாடுகளும் உண்மையில் இந்த மாபெரும் ஒற்றைப்பெரும் மூளைக்குள் நிகழ்வதாக ஆயிற்று. இந்த ஒற்றைப்பெரும் மூளை படிப்படியாக உருவாகும்தோறும் நான் ஏற்கனவே சொன்னபடி மின்கதைகள் வழக்கிழந்தன. அச்செயல்பாடு முழுமையடைந்தபோது நுண்கதை உருவாயிற்று
நுண்கதை என்பது இந்த ஒற்றைப்பெரும் மூளையால் தனக்குள்ளே நிகழ்த்திக் கொள்ளப்படுவது என்று சுருக்கமாகச் சொல்லலாம். அம்மூளையின் ஒர் அலகான ஒரு தனி மூளைக்குள் உருவாகி அதன் பொதுத் தகவல்கிடங்குக்குள் சேரும் ஓர் ஆக்கம் அது. பழைய முறையில் சொல்வதானால் ஒரு மனிதமூளைக்குள் உருவாகும் ஓர் எண்ணம் அல்லது கற்பனை அல்லது கனவு போல. சில எண்ணங்களை மூளை நீட்டிக்கொள்கிறது. சிலவற்றை அப்படியே விட்டுவிடுகிறது. ஒன்றை இன்னொன்றுடன் முடைகிறது. இச்செயல்பாடு ஓயாமல் தொடர்ந்து நிகழ்கிறது. ஒருகணத்தில் கோடிகோடி ஆக்கங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. இக்காலகட்டத்தில்தான் ஆக்கங்களுக்கு ஆக்கியோன் என்பவன் தேவையில்லை என்ற கருத்து உருவாகி ஏறத்தாழ ஐம்பது வருடம் ஆட்சிசெய்திருக்கிறது. காரணம் மானுடமனம் என்பது ஒற்றைப்பேரமைப்பே என்றும், அதன் அணுக்களே ஒவ்வொரு மனமும் என்றும் ஒரு கருத்து சமூகதளத்தில் உருவாகி வலுப்பெற்ற காலகட்டம் அது. உலகம் ஒற்றைப்பேரரசாக மாறியது. பூமி மானுடமனம் என்ற ஒற்றை மையத்தால் ஆளப்பட்டது.
ஆகவே நுண்கதைகளை உருவாக்கியவர்களின் பெயர்களும் சரி, அக்கதைகளின் தலைப்புகளும் சரி, இப்போது கிடைப்பதில்லை. கோடிக்கணக்கான செல்கள் கலந்து ஒரு திசுவாகவும், திசுக்கள் இணைந்து ஓர் உறுப்பாகவும்,உறுப்புகள் இணைந்து ஓர் உடலாகவும் ஆவதுபோல எராளமான நுண்கதைகள் இணைந்து ஒரே வகையான உலகப்பார்வையாக மாறின. அப்பார்வை பூமியில் ஏறத்தாழ இருநூறுவருடம் ஆட்சி செய்திருக்கிறது. இன்று அந்த யுகம் ‘மாபெரும் செயலின்மையின் யுகம்’ என்று அழைக்கபப்டுகிறது என நாம் அறிவோம். அந்தக்காலகட்டம் இத்தனை நீள்வதற்குக் காரணம் மெல்லமெல்ல பூமியில் மானுட மனச்செயல்பாடு மந்தமடைந்தது என்பதே. தனிமூளை தன் செயலை ஆற்றுவதற்கான ஊக்கத்தை இழந்தது. காரணம் தன்னகங்காரம் என்பது இல்லாமலானதே. ஒட்டுமொத்தமாக நிகழ்ந்ததை மீண்டும் நிகழ்த்தியபடி மானுடமனம் சோம்பிக்கிடந்தது. அது உருவாக்கிய புற அமைப்பு — அதைப் பழைய சொற்களில் அரசு மற்றும் சமூகம் எனலாம் – அச்சோம்பலைப் பிரதிபலித்தது. அது தன் இயல்பான விசையால் இயல்பான செயல்பாடுகளைச் செய்தபடி மாற்றமே அற்று இருந்தது.
2868ல் பூமி அதன் சூழல்சீர்கேடுகளினால் அழிந்தது. இன்று வெறும் தகவலாக மாறிவிட்ட இந்நிகழ்வு உண்மையில் இருநூறு வருடங்களாக மிக மெல்ல நிகழ்ந்த ஒன்று. இறுதி நூறு வருடங்களில் பூமியை மீட்க இயலாது என்பது உறுதியாகிவிட்டது. இக்காலகட்டத்தில்தான் மானுடமனத்தின் சோம்பல்யுகம் முடிவுக்கு வந்தது. பலதுறைகளில் கடுமையான நெருக்கடிகளும் அதன் விளைவான பாய்ச்சல்களும் நிகழ்ந்தன. இந்நிகழ்வுகளின் விளைவாக மீண்டும் தனிமனித ஆளுமை அல்லது தனியடையாளம் உருவாகியது. அல்லது தனியடையாளம் உருவானதனால் அச்செயல்வேகம் உருவாயிற்று. இக்காலகட்டத்தில்தான் மீண்டும் நமக்குத் தனியான கண்டுபிடிப்புகள், படைப்புகள் அவற்றை உருவாக்கியவர்களின் பெயர்கள் மீண்டும் கிடைக்க ஆரம்பிக்கின்றன. மரபைத் துழாவிப் தனக்கான பெயர்களைச் சூட்டிக்கொள்ளும் முறை உருவாகியது. உதாரணமாக ஆக்ஸிஜனை அணுக்கூட்டு மூலம் செயற்கையாக உருவாக்குவதைக் கண்டுபிடித்தவர் பழுவேட்டரையர். இது சூட்டிக்கொள்ளப்பட்ட பெயர் என்பதில் ஐயமில்லை. இது இருபதாம் நூற்றாண்டின் தமிழ்நாவலான பொன்னியின்செல்வனில் வரும் ஒரு கதாபாத்திரம்.
முதலில் பூமி மீது கடுமையான கதிர்வீச்சுகள் உருவாயின. உயிர்வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாயிற்று. மெல்லமெல்ல பூமியைக் கைவிட்டு மனித இனம் பிறகோள்களில் குடியேற ஆரம்பித்தது. இக்கோள்களில் அணுவெடிப்புகள் மற்றும் கதிர்க்கொந்தளிப்புகள் உருவாக்கப்பட்டு ஆக்ஸிஜன், நைட்ரஜன் முதலியவை செயற்கையாக உருவாக்கப்பட்டன. அணு எண்மாற்ற வேதியியல் 2589 ல் ‘ஷேக்ஸ்பிய’ரால் பாதரசத்தைத் தங்கமாக மாற்றியபடி தொடங்கப்பட்டது. அது பெரிய துறையாக வளர்ந்து பருப்பொருள் என ஒன்று இருந்தால் அதிலிருந்து எந்தப்பொருளையும் உருவாக்கிவிடலாம் என்ற நிலை உருவானது.ஆகவே எந்தக் கோளிலும் குடியேறலாம் என்றாயிற்று.
2612ல் ‘சந்திரகுப்தர்’ தன் ஆய்வகத்தில் நுண்துகள் எண்ணிக்கை மாற்றம் மூலம் புரோட்டீனை உருவாக்க எளிய வழியைக் கண்டுபிடித்தது ஒரு திருப்புமுனை. மனித இனம் முதலில் செவ்வாய்க் கோளில் குடியேறியது. அங்கு ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட மூடிய குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதற்குள் மாவும் சர்க்கரையும் புரோட்டீனும் பிற பொருட்களும் செயற்கையாக உருவாக்கப்பட்டன.
2800 களின் இறுதியிலேயே பூமி ஏறத்தாழக் கைவிடப்பட்டுவிட்டது. அதை நினைவுகூர்ந்திருந்த தலைமுறை அழிந்தது. அது மெல்ல மெல்ல மறக்கப்பட்டுவிட்டதனால் அதில் ஏற்பட்ட அணுப்பெருவெடிப்பும், அதன் முழுமையான அழிவும் மனித மனங்களில் பெரிய அளவில் நேரடிப்பாதிப்பை உருவாக்கவில்லை. இப்போது எட்டு பெரிய நிலவுகளாகவும் பல்லாயிரம் துண்டுகளாகவும் அண்ட வெளியில் சுழலும் அது அடிக்கடி நினைவுகூரப்படும் ஒன்று அல்ல. காலப்போக்கில் அதன் அழிவு ஓர் உளக்குறியீட்டு நிகழ்வாகவே காணப்பட்டது. மேலும் மானுட இனம் ஏறத்தாழ இருபத்தைந்து கோள்களிலும் துணைக்கோள்களிலுமாகக் குடியேறி மிக விரிவான இடத்தை ஆக்ரமித்துக் கொண்டபின்பு வானில் இருண்ட துணுக்குகளாகத் தென்படும் அந்தக் கோளை வெளியேறிய பிறகு கருப்பையை திரும்பிப்பார்க்கும் மனநிலையுடன்தான் மனிதர்கள் கண்டார்கள். அங்கே மனித இனம் நெருக்கியடித்துக் கொண்டு, மிக மிகக் குறைவான வளங்களுக்காக ஓயாது போர் புரிந்தபடி, இயற்கைசக்திகளால் புழுக்கள் போலக் கோடிக்கணக்காக அழிக்கப்பட்டபடி வாழ்ந்ததைப் பற்றி இன்றைய தலைமுறை சரியாக அறியாது.
ஆனால் கருப்பை அனைவரிலும் கருத்து வடிவில் எஞ்சுகிறது. தாங்கள் வந்து வாழ்நேர்ந்த பிரம்மாண்ட பருவெளி மனிதர்களை அச்சுறுத்தியது போலும். பூமியை விட்டுவிட்டபிறகு புதிய காலக்கணிப்பு உருவாயிற்று. காலம் பூமிவருடம் வெளிவருடம் எனப் பிரிக்கப்பட்டது. பூமியில் இருந்த வாழ்க்கையை மனவெளியில் மீண்டும் அமைத்துக் கொள்ளும் வேகம் உருவாகி இருநூறு வருடம் வலுவாக இருந்தது. நாடுகள் ,மொழிகள், கலாச்சாரங்கள், இலக்கியமரபுகள் அனைத்தும் மீண்டும் உருவகிக்கப்பட்டன. இவை மனிதமனம் என்று தொகுக்கப்பட்ட ஒற்றைப் பேரிருப்பில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்டன . மீண்டும் தனிமனித ஆளுமைகள், தனிமனித மனங்கள் உருவாயின. ஊர்களும் வம்சங்களும் உருவகிக்கப்பட்டன. வீடுகள் உருவாயின. குடும்பம், மனைவி, மக்கள் எனற சமூக அமைப்பு உருவாக்கப்பட்டது.தீபாவளி, பொங்கல் போன்ற கொண்டாட்டங்கள் உருவாயின. மதுரை சண்முகவடிவேல் நாடார் என்ற மனிதர் வெளிவருடம் 112 ல் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்த அறிவியலாளர் என்பதை இங்கே உதாரணம் காட்டலாம். இத்தகைய ஒருபெயரை பூமிவருடம் இருபதாம் நூற்றாண்டில்தான் நாம் காணமுடியும்.
இக்காலகட்டத்தில் மீண்டும் தனிமனிதர்களால் படைப்புகள் உருவாக்கப்பட்டன. மீண்டும் எழுத்தாளனும் வாசகனும் உருவாயினர். ஆனால் அச்சொற்களின் பொருள்களே முற்றாக மாறிவிட்டன. காரணம் எழுத்து வாசிப்பு இரண்டுமே நிகழாமல் ஆகி நூற்றாண்டுகள் தாண்டிவிட்டிருந்தன. மனிதமனங்கள் நுண்கதிர்களின் மூலம் முழுமையாக இணைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் இவ்வுருவகங்கள் மேலும் மேலும் வலுப்பெற்றன. தமிழ்வாசகன் தமிழ் இலக்கியத்தைப் பற்றி மட்டுமே அறிந்திருப்பதாக உருவகிக்கப்பட்டான். பூமிக்காலத்து படைப்புகள் ஏறத்தாழ அனைத்துமே அவற்றின் முழு உரைகளுடன் பதிப்புத் தகவல்களுடன் மீண்டும் தகவல்நிலையின் முகப்புக்குக் கொண்டுவரப்பட்டன. ஏராளமான தமிழ்க் கதைப்பாடல்களும் காப்பியங்களும் நாவல்களும் உருவாயின. சிலப்பதிகாரம், நல்லதங்காள் கதை முதலிய ஏராளமான கதைகள் மீண்டும் படைக்கப்பட்டன. தி ஜானகிராமன், சுந்தர ராமசாமி, நாஞ்சில்நாடன் போன்ற பெயர்கள் பரபரப்பான பேச்சாக இருந்தன. அக்கால நாடகங்கள், திரைப்படங்கள் ஆகியவையும் மீண்டும் உருவாக்கப்பட்டு ரசிக்கப்பட்டன.
இக்காலத்தைய படைப்புகள் ஆச்சரியமூட்டும் அளவுக்கு பூமிக்காலப் படைப்புகள் போலுள்ளன. கரையூர் அம்மூவனார் எழுதிய ‘விஷ்ணுபுரம் இரண்டாம் பாகம்’, சரவண் எழுதிய ‘பொன்னியின்செல்வன் மறுபகுதி’ ஆகியவை உதாரணங்கள். இக்காலக் கதைக்கருக்களும் பெரும்பகுதி இல்லாதொழிந்த அக்காலகட்டத்தைப் பற்றியவையே. வையையில் வந்த ஒரு வெள்ளத்தைப்பற்றிச்சொல்லும் ‘பிட்டுமண்’ [ குமார் பொன்னம்பலம் ] சென்னை நகரத்தில் ஒருநாளைப்பற்றி விவரிக்கும் ‘தேர்நிலை’ [மதுரை கணக்காயன்] ஆசிரியப்பாவில் எழுதப்பட்ட நாடகமான ‘ராஜராஜசோழன் உலா’ [ சுத்தானந்தபாரதி] கடலூர் வட்டாரத்து மக்களின் வேர்க்கடலை வேளாண்மையைப்பற்றிய சித்தரிப்பான ‘செம்புலப்பெயல்’ [ சுந்தரம் கண்ணதாசன்] ஊட்டியில்நடந்த ஒரு கொலையைத் துப்பறியும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் கதையான ‘இரண்டாவது இரவு’ [ நல்லந்துவனார்] ஆகியவை வகைக்கு ஒரு மாதிரியாக உதாரணமாகச் சுட்டப்படவேண்டியவை.
இப்போக்கின் உச்சம் புத்தகங்களை அச்சிடுதல் எனலாம். புராதன தகவல்தொகையில் இருந்து நூல்களின் வடிவம் மீட்கப்பட்டு அப்படியே மீண்டும் உருவாக்கப்பட்டது. அவை அரிய பொருட்களாக உற்சாகத்துடன் சேர்க்கப்பட்டன. வீடுகளில் உ.வே.சாமிநாதய்யர் நூலக வெளியீடான ‘ என் சரித்திரமு’ம் [ 1988] தமிழினி வெளியீடான ஜெயமோகனின் ‘பின்தொடரும் நிழலின் குரலு’ம் [2001] அப்படியே வைக்கப்பட்டிருந்தன. அபூர்வமாக அவை அவ்வடிவில் படிக்கவும் பட்டன. இக்காலகட்டத்தில் வீடுகளின் அறைகள் இருபத்தொன்றாம் நூற்றாண்டு தமிழ்நாட்டு வீடுகள் போல வடிவமைக்கப்பட்டிருந்தமையால் நூலகம் என்ற அமைப்பு தேவைப்பட்டது. இந்த அலையின் ஒருபகுதியாக பழங்கால எழுத்தாளர்களின் நேர்க்காட்சி ஒளிவடிவங்கள் உருவாக்கப்பட்டு அவர்களை மேடையேற்றி அக்கால மாதிரியிலேயே இலக்கியக் கூட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. இவர்களில் ஜெயகாந்தனின் மேடையுரை அவரது குரல் உடல்மொழி ஆகியவற்றின் காரணமாக மிகப்பரவலாக ரசிக்கப்பட்டது.
இக்காலகட்டத்தில்தான் குடியேறிய கோள்களில் புது வாழ்க்கைமுறையை உருவாக்கும்பொருட்டுக் கடுமையான உழைப்பும் புதிய ஆய்வுகளும் நிகழ்ந்தன என்பதை இங்கே கணக்கில் கொள்ளவேண்டும். ஒரு பக்கம் புற வாழ்க்கை விரிவடைந்தது மறுபக்கம் அகவாழ்க்கை சுருங்கியது. தமிழ்ப்பண்பாடு மற்றும் வாழ்க்கைமுறையுடன் இணைந்து இந்துமதம், குறிப்பாக சைவம் வளர்ச்சி அடைந்தது. காருண்யன் எழுதிய ‘சைவமும் தமிழும்’ , டேனியல் பருத்தித்துறை எழுதிய ‘முருகனின் முகங்கள்’ செல்லப்பன் எழுதிய ‘தமிழ்ப்பண்பாட்டுக் களஞ்சியம்’ போன்ற நூல்கள் இக்கால மனநிலைகளைக் காட்டுகின்றன. இதைப் பொதுவாக மீட்புயுகம் என்று சொல்கிறார்கள். கோள்களில் வாழ்க்கை நன்றாக வேரூன்றிய 230களில் இப்போக்கு மெல்ல இல்லாமலானாலும்கூட தமிழ்க்கூறு என்பது வெளியுக வாழ்வின் பிரிக்க இயலாத அம்சமாகவே நீண்ட நாட்களாக இருந்தது. மெல்ல மெல்ல மென்கதை என்ற வடிவம் உருவாகி வந்தபோது மீட்புயுகமும் நினைவுகளாக மாறி விட்டிருந்தது.
மென்கதை என்ற சொல்லாட்சியானது இருபத்தொன்றாம் பூமிநூற்றாண்டுக் கலைச்சொல்லான மென்பொருள் என்பதன் மறுவடிவம். இலக்கியக் கோட்பாட்டாளரான ‘கலைச்செல்வன்’ உருவாக்கியது. மனித உடல் என்பது வன்பரு என்றும் ,அதற்குள் நிகழ்வதெல்லாம் மென்கதை என்றும் உருவகிக்கப்பட்டது. கோள்களில் உருவான புதிய வாழ்க்கையைப் பற்றிய தரிசனங்களே மென்கதையின் பெரும்பகுதி எனலாம். மென்கதையானது பூமிக்காலத்துடன் ஒப்பிட்டால் கதை, கவிதை, அறிவியல் கோட்பாடு, வரலாறு , நினைவுகூர்தல் ஆகியவற்றை ஒன்றாக்கிய ஒரு நிகழ்வு. இவ்வேறுபாடுகள் பூமிக்காலத்துக்குப் பிறகு மெல்ல மெல்ல இல்லாமலாகிவிட்டன. மனித இனத்தின் முன் விரிந்து கிடந்த வான்வெளி ஒரு பெரிய அறைகூவலாக இருந்தது. அது சாத்தியங்களினாலான பெருவெளி. அறிதல்களின் முடிவின்மை. ஆரம்பத்தில் அதை அஞ்சி அதை தவிர்த்து இறந்தகாலத்தில் வாழமுயன்ற மனித இனத்துக்கு மீட்புயுகப் படிப்புகள் தேவையாயின. அடுத்த தலைமுறையினர் பெருவெளி மீது வெற்றிகள் பெறத் தொடங்கியபோது அதற்குரிய வடிவமாக மென்கதை உருவாகியது.
மனிதர்கள் , தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளின் விரிவும் வேறுபாடும் இவ்வடிவை முக்கியமாகத் தீர்மானித்தன. உலோகங்கள் உருகும் வெப்பநிலை கொண்ட கோளங்கள் முதல் எவ்வித திரவமும் இருக்க இயலாத அளவுக்கு உக்கிரமான குளிர் கொண்ட கோள்கள் வரை ,அதி ஈர்ப்புவிசைக் கோள்கள் முதல் ஈர்ப்பே இல்லாது மனிதர்கள் பறந்தலையும் நிலாக்கோள்கள் வரை அவர்கள் சிதறி வாழ்ந்தனர்.ஆனால் அனைவரும் நுண்ணலைத் தொடர்பு மூலம் ஒரேமூளையாக மாறிச்சிந்திக்கும் தன்மையும் கொண்டிருந்தனர். உண்மையில் மனித இனமே ஒரே மூளையாகத்தான் சிந்தித்தது. ஆனால் அதற்குள் தமிழ்மனம் உருவகிக்கப்பட்டது. அதற்குள் சேர, சோழ, பாண்டிய ,தொண்டைமண்டலங்கள் உருவகிக்கப்பட்டன. தனிமனித மனமும் அப்படிப்பட்ட ஓர் உருவகமாக இருக்கலாம்தான். இக்குழுக்களுக்குள் நிகழும் மனஅலை என்று மென்கதையைச் சொல்லலாம்.
மென்கதை ஒருமனதில் உருவாகி பிறமனங்களுக்குச் செல்கிறது. அது ஓரு தொடர்ந்த பெரும் உரையாடல். அல்லது சேர்ந்திசை. வளர்ந்து வளர்ந்து பெருகும் அது ஓர் உச்சத்தை அடைந்து மெல்ல இல்லாமலாகிறது. பல்லாயிரம் மனிதமனங்கள் அதில் பங்கு பெறுகின்றன. அதன் வடிவம் என்பது ஏறத்தாழ தீ போன்றது. வடிவமில்லாத ஒரு தீவிரம் பொங்கி மேல்நோக்கி எழுந்தணைவது என்று அதைச்சொல்லலாம். மிகப்பழங்காலத்தில் ஒரு தனிமனித மூளைக்குள் ஓர் எண்ணம் எழுந்து அமைவதுபோன்றது இது. ஆனால் மாபெரும் கூட்டுமூளைக்குள் நிகழ்கிறது. 480கள் வரை மென்கதையை ஆசிரியரற்ற ஒரு படைப்பாகக் கொள்ளும் வழக்கம் இருந்தது. மென்கதைகள் இணைந்து இணைந்து இன்று அக்காலகட்டத்தின் நினைவாக ஒரே மாபெரும் மென்கதையாக அது நினைவில் உள்ளது. 480ல் ‘மலைச்செந்நறவனார்’ தன்னுடைய ஆக்கத்தில் தன் பெயரைச் சேர்த்தார். அது அவர் பெயரில் வழங்கப்படலாயிற்று. அத்துடன் தனிப்பட்ட படைப்புகள் உருவாக ஆரம்பித்தன. பிற்பாடு ஒரு குழு அதற்கு ஒரு ஆசிரியர் பெயரைப்போட்டுக் கொள்ளத் தொடங்கியது. ‘கண்ணனார்’ என்பது பலர் அடங்கிய ஒரு குழுவேயாகும்.
இதன் அடுத்த கட்டவளர்ச்சியே இன்று இங்கே பலவாறாகப் பேசப்பட்ட நவீன இலக்கிய வடிவங்கள் என்று சொல்லலாம். சமகால வடிவங்களைப்பற்றி நான் அதிகமாகப், பேச விரும்பவில்லை. இன்றைய இலக்கிய வடிவங்கள் மென்கதைக்கும் அதற்கு முந்தைய மீட்புவாதத்துக்கும் இடையேயான சமரசங்கள் என்று சுருக்கமாகச் சொல்லலாம். மென்கதையானது உருவாக்கப்படுவதிலும் உணரப்படுவதிலும் அதன் அனைத்துத் தனித்தன்மைகளையும் தக்கவைத்துக் கொண்டபோதிலும் மேல்தளத்தில் காவியம், நாவல் ,சிறுகதை போன்ற ஒரு வடிவ பாவனை அதற்கு அளிக்கப்படுகிறது இன்று. கணநேரமின்னலாக உருவாகி ,அறியப்படும் அருவமான மனநிகழ்வாக இருக்கும் இவ்வடிவங்களை வேறு ஒரு தளத்தில் நாம் தனித்தனியான ஆக்கங்களாகவும் கணக்கு வைக்கிறோம். தனித்தனியாக ஆய்வுசெய்கிறோம். இந்த ஆய்வுகளுக்கு பூமி வருடத்து மொழிநடையையும், அன்றிருந்த அலசல் சார்ந்த தர்க்கமுறை ஆகியவற்றையும் கையாள்கிறோம். இக்கட்டுரை, இந்த ஆய்வரங்கு ஆகியவைகூட அத்தகைய ஒரு புறயதார்த்தமாக உருவாக்கப்பட்டவை. இருபத்தொன்றாம் நூற்றாண்டு புகழ்பெற்ற புனைகதையாளரான ஜெயமோகனின் என்ற பெயரை நான் சூட்டிக் கொண்டிருக்கிறேன். இக்கட்டுரையையும் அவரது மொழிநடையிலேயே அமைத்திருக்கிறேன்.
அறிதல்முறையில் உருவான மாற்றங்கள் இலக்கியம் என்ற இப்பாவனையையும் மாற்றிவருகின்றன. ஒரு மனிதமூளையைப் பிரதிசெய்து பலநூறு நுண்கணிகளில் பொருத்தி வெளியில் மானுடர் வாழும் எல்லா உலகங்களிலும் வைத்து அவற்றை நம் மூளையுடன் தொடர்புபடுத்தி ஒரேசமயம் அனைத்தையும் அறிந்து கொண்டிருக்கிறோம். ஓர் உடல் இறக்கும்போது மூளை அப்படியே அடுத்த மூளைக்குள் சேர்க்கப்படுகிறது. ஆகவே நமக்கு ஆளுமை மரணம் இல்லை. நம்மைப்பொறுத்தவரை இடம் காலம் என்ற சொற்களுக்கு பொருளே இல்லை. நாம் நம் மூளையின் அனைத்துத் திறன்களையும் வெளியில் ஏவி இப்பெருவிரிவை உள்வாங்க முயல்கிறோம். காலஇடவெளி நமக்கு மலைப்பும் அச்சமும் கொடுக்கும் பெரும் அறைகூவலாக உள்ளது. அவ்வறைகூவல் கண்முன் உள்ளதனால் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருகணமும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இவ்வுழைப்பின் இடைவெளிகளில் நாம் இலக்கியத்தை நாடுகிறோம். ஆனால் இளைப்பாறுதலுக்காக மட்டுமல்ல. இலக்கியம் என்றுமே இளைப்பாற்றும் முறைமையாக இருந்து வந்துள்ளது உண்மை . ஆனால் அது அதற்கும் ஒருபடி மேல்தான். அது என்ன ?
**
சான்றோர்களே அன்பர்களே,
இக்கருத்தரங்கில் இதுவரை முன்வைக்கப்பட்ட இக்கருத்துக்களை இவ்வாறு தொகுத்துக் கொள்ள விழைகிறேன். தமிழ்மரபின் தொடக்க காலத்தில் சங்க இலக்கியங்கள் உள்ளன. அவற்றை ஆராய்ந்த அக்கால அறிஞர்கள் அவை மறைந்து இல்லாமல்போன ஒரு மாபெரும் பண்பாட்டின் இடிபாடுகளில் இருந்து எஞ்சிய துணுக்குகள்போல உள்ளன என்று சொல்லியிருக்கிறார்கள். குமரிக்கண்டம் என்று சொல்லப்படும் ஒரு நிலப்பரப்பும் அங்கு ஒரு பெரிய பண்பாடும் இருந்துள்ளது என்ற கருத்து வலிமையாக இருந்துள்ளது. சங்கப்பாடல்களில் வரும் ஏராளமான தொல்லியல் பாவைகள் – அவை சங்க கால மக்களுக்கே தொல் தெய்வங்களாக இருந்தன — பூதங்கள் முதலியவற்றை நாம் இவ்வாறாகத்தான் புரிந்துகொள்ளமுடியும் . அழிந்து மறைந்த அப்பண்பாடு எங்கேபோயிற்று ? அது அவர்களுடைய ஆழ்மனதில் , நனவிலியில் உறைந்தது. அவர்கள் மொழியில் அது புதைந்துகிடந்தது. அவர்கள் உருவாக்கிய கலை இலக்கியம் வாழ்க்கைமுறை அனைத்திலும் அது மீண்டும் மீண்டும் புதுவடிவம் கொண்டு பிறந்தது.
சங்க இலக்கியங்களைப் பிற்கால வாசகன் ஒருவன் வாசிக்கும்போது அவன் ரசிப்பது என்ன ? நண்பர்களே அக்காலத் திறனாய்வாளர்கள் சொல்லிவந்த ‘ஆழம்’ என்பது என்ன ? ஒரு படைப்பு அது சொல்லியவற்றை விட அதிகமாக ஊகிக்க வைக்கும்போது அது ஆழமானது என்று சொல்லப்பட்டது. அப்படி நிகழ்த்தப்படும் ஊகமே இலக்கிய இன்பம் என்று கொள்ளப்பட்டது, ரசிக்கப்பட்டது . எப்படி ஒருபடைப்பு ஊகிக்கவைக்கிறது ? பிற்கால உளவியலாளர்கள் அக்காலத்தில் வகுத்ததை வைத்துப் பார்த்தால் ஒரு படைப்பின் மொழியாட்சி, படிமம் முதலியவை எங்கே ஆழ்மனதை, நனவிலியைத் தீண்டி எழுப்புகிறதோ அப்போதுதான் கற்பனை நிகழ்கிறது. படைப்பின் ஆழம் என்று சொல்லப்பட்டது அதனுள் புதைந்துள்ள ஆழ்மனக்கூறுதான். வாசகனின் ஆழ்மனதை அது சென்று தொடுவதையே இலக்கிய அனுபவம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு குறி அல்லது படிமம் என்பது ஆழ்மனதின் ஒரு கூறைப் பிரநிதித்துவம் செய்யும் ஓர் அடையாளமேயாகும். சங்ககால மனதில் அதற்கு முந்தைய அழிந்துபோன பண்பாடுதான் ஆழ்மனமாக மாறித்தேங்கியிருந்தது.
அப்படியானால் வாசிப்பு என்பது வெறுமே ஆழ்மனமாக உறையும் பண்பாட்டின் இறந்தகாலத்துக்குச் செல்லும் கனவுப்பயணம் மட்டும்தானா ? ஒரு படைப்பை நாம் வாசிக்கும் போது நம் அன்றாட நடைமுறை வாழ்க்கையுடன் அது கொள்ளும் தொடர்பும் நமக்கு மிக முக்கியமானதாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு தொடர்பை முற்றிலும் உருவாக்காத படைப்பை நாம் ரசிப்பதில்லை. அதேபோல நம் மனதில் எதிர்காலம் குறித்து ஊறிக்கொண்டிருக்கும் கனவைத் தீண்டும் படைப்பும் நமக்கு மிக்க மனத்தூண்டலை அளிக்கிறது. ஆகவே இப்படிச் சொல்லலாம், இறந்தகாலத்தின் முடிவில்லா ஆழத்தை நிகழ்காலத்துடனும் எதிர்காலத்தின் முடிவின்மையுடனும் ஒரேசெயல்மூலம் இணைக்ககூடிய ஓர் அக நிகழ்வே இலக்கிய வாசிப்பு என்பது.
நம் முன்னோர்கள் பூமியில் வாழ்ந்த காலம் இத்தனை தகவல்பதிவுகள் இருந்தும் இன்று நம்மால் அறிய முடியாததாக உள்ளது. ஆனால் அன்று இருந்த எதுவும் அழியவில்லை. அவை உருமாறி நம் ஆழ்மனமாக மாறிவிட்டன. இன்று நம்முள் மாபெரும் குறியீட்டு, படிம வெளியாக உள்ளது அக்காலம். நமது மொழியின் ஆழம் ,நம் கனவுகளின் நிலம் அதுவே. நம் படைப்புகள் குறிகள் மற்றும் படிமங்கள் மூலம் நம் ஆழ்மனதைத் தூண்டி ஒரு கனவை மீட்பதுபோல அவற்றை மீட்டெடுக்கின்றன. அவற்றை நமது இன்றைய யதார்த்ததுடனும் நாளை குறித்த கனவுகளுடனும் பிணைக்கின்றன. நாளை நாம் நட்சத்திர மண்டலங்களில் குடியேறலாம். நமக்கு அருவ உடல்கள் மட்டும் இருக்கலாம். நாம் ஒளிவேகத்தை மிஞ்சிப் பயணம் செய்யலாம். அப்போதும் இலக்கியம் மூலம் நாம் இந்த முக்கால இணைப்பை செய்தபடியே இருப்போம் என்றே சொல்லவிழைகிறேன். இலக்கிய வடிவங்களின் ஆதி நோக்கம் இதுவே. அத்தேவை இருக்கும் வரை இலக்கியம் இருந்தபடியேதான் இருக்கும் — மனிதகுலம் உள்ளவரை.
நன்றி
*
டிசம்பர் 2004 ல் திண்ணை இணைய இதழில் எழுதப்பட்ட கதை. பின்னர் விசும்பு (அறிவியல் சிறுகதைகள்) தொகுதியில் இடம் பெற்றது.