பயணம் – கடிதங்கள்

அன்புள்ள சார்,

களைப்பும் ஆர்வமும் மனநிறைவும் ஒரு சேர்ந்த மனநிலையில் இருப்பீர்கள் என நினைக்கிறன். படங்களையும் கட்டுரைகளையும் வாசிக்கும்போது ஒவ்வொரு இடத்திலிருந்தும் பொக்கிசங்களை எடுத்து நிறைத்து வருகிறீர்கள் என்பது தெரிகிறது. என் பாஷைல சொல்லணும்னா “வயிறு எரியுது சார்”.

ஆனாலும் நீங்க சொல்லிதான் இதெல்லாம் பற்றி நான் தெரிந்து கொள்கிறேன், நன்றிங்க. உங்க கட்டுரைகளில் ஒரு அழகு இருக்கும். கட்டுரையின் முடிவில் அதிலுள்ள விசயங்களில் இருந்து மீறிக் கட்டுரையாளன் உன்னத மனதுடைய எழுத்தாளனாக மாறிப் பேசுவது. உதாரணம் சொல்லணும்னா அந்த இந்தியாவின் உப்பு வேலி கட்டுரையில் அந்த ஆசிரியர் [ராய் மாக்ஸ்ஹாம்] சிவபெருமானிடம் வேண்டும் பாரா, இந்த அம்சம் இப்ப உங்க பயணக் கட்டுரைகளிலும் காண்கிறேன்.

அன்புடன்,

ராதாகிருஷ்ணன்

அன்புள்ள ராதாகிருஷ்ணன்,

புனைவு எழுத்து என்பது ஆசிரியனின் அகம் வெளிப்படும் இடம். பயணக்கட்டுரையில் தன்னிச்சையாக ஆங்காங்கேதான் அது வெளிப்பட முடியும். அத்தகைய இடம் ஒன்றை அழகாக சுட்டிக்காட்டியிருந்தீர்கள்.

நன்றி
ஜெ

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்களின் கோடான கோடி வாசகிகளில் ஒருத்தியான திருமதி. கவிதா அன்பரசன் எழுதிகொள்வது. ஆங்கிலத்தில் எழுத நினைத்து, எங்கே முழுமையான உணர்வினை வெளிப்படுத்த முடியாதோ என்ற எண்ணத்தில் தமிழில் எழுதியுள்ளேன். பிழை இருப்பின் பொறுத்தருளவும்.

நீங்கள் ஒரு பதிவரின் வசைபாடலின் மூலமே எனக்கு அறிமுகமானீர்கள். அவரின் வசைபாடலைப் படித்த பிறகு உங்களை இணையத்தில் தேடி உங்களின் இணையதளத்தில் வந்து சேர்ந்தேன்.

உங்களின் எழுத்துக்களின் ஆழம் மற்றும் வலிமை பிடிக்கும். (உங்களின் எல்லாக் கருத்துக்களுடனும் நான் ஒத்துப் போவதில்லையானாலும்) இந்து மதத்தை, தேசபிதாவை, இந்தியாவை நான் சரியாகப் புரிந்துகொள்ள நீங்கள் உதவினீர்கள். அதிலும் தொன்மையான இந்திய வரலாற்றினை அறிந்துகொள்ள மிக ஆர்வம். தொல்பொருள் ஆராய்ச்சி நூல்களின் வழி படிப்பதைக் காட்டிலும் கல்கி, பாலசுப்ரமணியன், சாண்டில்யன் கதைகளின் மூலம் படிக்கவே விருப்பம்.

எனக்குப் பயணங்கள் பிடித்தமானவை. ஆங்கில ஆசிரியரான எனது தந்தை 90-களில் ஆரம்பித்து அவர் இறக்கும் வரையிலும் வருடத்திற்கு ஒருமுறையாவது வாடகை வண்டி வைத்தோ அல்லது பேருந்துகளிலோ தென் இந்தியாவின் நான்கு மாநிலங்களுக்கும் எங்களை அழைத்துச் சென்றதினாலோ என்னவோ பயணக்கட்டுரைகள் எனக்குப் படிக்க மிகவும் பிடிக்கும். உங்களின் ‘இந்தியப் பயணங்கள்’, ‘அருகர்களின் பாதை’ படிக்கும்போது எனக்கு உங்கள் குழுவின் மீது மிகப் பொறாமையாக இருந்தது. உங்களின் கண்களின் வழியாகவும், இதயத்தின் வழியாகவும் இந்தியாவை எனக்குக் காண்பித்தமைக்கு மிக்க நன்றி.

நீங்கள் இப்படிக் காடு கரையெல்லாம் சுற்ற சம்மதித்து, நீங்கள் அருகில் இல்லாத காலத்தில் குடும்பத்தை நடத்தவும், குழந்தைகளைப் பார்த்துகொள்ளவும் தேவையான அதிகப்படியான உழைப்பைக் கொடுத்து ஒத்துழைத்த உங்களின் மனைவிக்கும் எனது நன்றி.

உங்களின் எழுத்துப்பணி இடையறாது நடக்க எல்லாம் வல்ல இறைவன் துணையிருக்க வேண்டுகிறேன்.

திருமதி. கவிதா அன்பரசன்

அன்புள்ள கவிதா,

நன்றி.

என் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வழக்கமாக வாசிக்கும் கதைகளைப்போல அல்லாமல் கொஞ்சம் மேலதிக கவனத்துடன் வாசிக்க வேண்டிய கதைகள், கட்டுரைகள் அவை. ஆனால் தொடர்ந்து வாசித்தீர்கள் என்றால் எளிதில் என்னுடைய படைப்புலகில் நுழைந்துவிடமுடியும். அது கண்டிப்பாக உங்கள் வாசிப்புலகை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லக்கூடியதாகவே இருக்கும். தொடர்ந்து வாசியுங்கள். எழுதுங்கள்.

அன்புடன்
ஜெ

முந்தைய கட்டுரைஜடாயு இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழ்நாட்டில் சமணத்தலங்கள்