இந்தியா ஆபத்தான நாடா?

அன்புள்ள ஜெமோ,

முதலிலே சொல்லி விடுகிறேன், நீங்கள் நலமுடன் வீடு திரும்பியதற்குக் கடவுளுக்கு நன்றி. இக்கடிதம் உங்கள் மேல் அன்பு கொண்ட வாசகனாக எழுதியத. உங்களின் பயணக்கட்டுரை அருமையிலும் அருமை. ஆனால் படிக்கும்போது மனம் மிகவும் பதட்டத்திற்கு உள்ளானது. ஆபத்தான இந்த தேசத்தில் நீங்கள் இப்படிப் போவது உசிதம்தானா என்று நீங்கள் யோசிக்க வேண்டும்.

மிக மோசமான விபத்துக்கள் நடக்கும் நெடுஞ்சாலைகள், மிக மோசமான வேகத்தில் பறக்கும் கனரக வண்டிகள் மட்டுமில்லாமல், எங்கும் கூட்டம் சேர்த்து கொள்ளை அடிக்கும் கும்பல்கள் ஏராளம். நீங்கள் பெயர் தெரியாத இடத்தில் சாப்பிட்டேன் என்று எழுதும்போது உண்மையிலேயே மனம் பதட்டம் அடைகிறது. இப்படி சாப்பிடுவது, இப்படி நெடுஞ்சாலையில் போவது மிகவும் ஆபத்தான காரியமாகவே படுகிறது. நீங்களும் உங்கள் கூட வருபவர்களும் எப்படி பயமில்லாமல் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

சில Developed Nations எனக்கூறப்படும் நாடுகளில் இது சாத்தியமாக இருக்கலாம், ஆனால் இந்தியா போன்ற ஒரு மூன்றாம் உலக நாட்டில் இப்படிப் பயணம் செய்வது மிக மிக ஆபத்தானது என்றே தோன்றுகிறது. உங்களுக்குத் தெரியாதது இல்லை. நான் கூறுவதை நீங்கள் Right Sense இல் எடுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன்.

நீங்கள் தமிழகத்தின், தமிழ் இலக்கியத்தின் சொத்து.  இனிமேல் இப்படிப் பயணம் போகாதீர்கள். அல்லது போனால் மிக மிகப் பாதுகாப்பாக (விமானம்/ரயில்) செல்லுங்கள். இது ஒரு அபத்தக் கடிதமாகத் தோன்றலாம், உங்கள் மேல் இருக்கும் பேரன்பினால் சொல்வது.

என் மனதில் தோன்றிய பயமும், உங்கள் மேல் உள்ள அன்புமே இக்கடிதத்தை எழுதத் தூண்டியது. தவறிருப்பின் மன்னிக்கவும்.

தங்கள் மேல் பேரன்பு கொண்டுள்ள வாசகன்,
கோகுல்

அன்புள்ள கோகுல்,

இந்தியாவைப்பற்றிய பொதுவான மனப்பதிவில் இருந்து இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறீர்கள். எங்கள் பயணம் பற்றிய கட்டுரைகளிலேயே நேர்மாறான அனுபவப்பதிவுகள் இருப்பதைக் கண்டிருக்கலாம்.

இந்தியா ‘ஆபத்தான தேசம்’ அல்ல. அது நம் ஊடகங்கள், [குறிப்பாக இந்திய விரோத மனநிலை கொண்ட ஆங்கில இதழ்கள்] உருவாக்கும் பிரமை. மக்கள்தொகை, நிலப்பரப்பு அடிப்படையில் பார்த்தால் உலகிலேயே குற்றங்கள் மிகக்குறைந்த நாடுகளில் ஒன்று இந்தியா. இங்குள்ள காவல் அமைப்பு மிகப்பலவீனமானது என்பது உண்மை. ஆனால் இந்தியாவில் எந்த இடமும் பாதுகாப்பானதே. இந்தியாவெங்கும் பயணித்தபடி இருப்பவன் என்ற முறையில் இது என் அனுபவம்.

காரணம் இங்குள்ள மக்களின் மனநிலைதான். எந்தச்சூழலிலும் எவருக்கும் மனம்திறந்து உதவத் தயாரானவர்கள் இந்தியாவின் எளிய மக்கள். சமணர்களும் இஸ்லாமியர்களும் இந்துக்களும் இதில் விதிவிலக்கல்ல. எந்த இடத்திலும் புன்னகைக்கும் முகங்களை, உபசரிப்புகளை மட்டுமே இங்கே காணமுடியும். நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம் உதவுவதற்காக மக்கள் முண்டியடித்து வந்தார்கள். முன்பின் தெரியாதவர்கள்கூட டீ சாப்பிட்டுச்செல்ல உபசரித்தார்கள்.

இந்த மனநிலை ஒருவகையில் பழைமையானது, பழங்குடி வாழ்க்கையில் வேர்கள் கொண்டது. வரும் எவரும் விருந்தினரே என்ற மனநிலை இது. பழங்குடி அம்சம் மாறாமலிருக்கும் எந்த நாட்டிலும் இந்த மனநிலை இருக்கும். அ.முத்துலிங்கம் ஒருமுறை அரேபியப் பாலைவனநாடுகளைப்பற்றிச் சொல்லும்போது அந்த கிராமங்களில் முழுக்கமுழுக்க பாதுகாப்பானவர், முற்றிலும் வசதியாக இருப்பவர், அங்கே வந்த அன்னியரே என்று சொன்னார். எங்கே நவீனத்துவம் வந்து சுயநலம் மேலோங்குகிறதோ அந்த இடம்தான் பாதுகாப்பற்றது. நம் நகரங்கள் அப்படிப்பட்டவை.

அவ்வகையில் இந்தியாவிலேயே பாதுகாப்பற்ற மாநிலம் படித்தவர்கள் அதிகமாக உள்ள கேரளம்தான். எங்கும் எப்போதும் வேலைநிறுத்தம் வெடிக்கலாம். சாலைப்போக்குவரத்து துண்டிக்கப்படலாம். தனித்து விடப்படும் பயணிகளுக்கு எவருமே உதவ மாட்டார்கள். எந்த அரசமைப்பிலும் பொறுப்பாக பதில் கூடக் கிடைக்காது. கேரளத்தில் அன்னியர்கள் சுரண்டப்படவேண்டியவர்கள் மட்டுமே. ஆகவே எவராலும் நாம் ஏமாற்றப்படலாம். காவலர்களும் வாகனஓட்டிகளும் சாதாரணப் பொதுமக்களும் அலட்சியமாகவும் முரட்டுத்தனமாகவும்தான் எதிர்வினையாற்றுவார்கள்.

கேரளம் அளவுக்கு இல்லையென்றாலும் தமிழகமும் அன்னியர்களுக்கு சிக்கலான மாநிலம்தான். குறிப்பாக வாகன ஓட்டிகள், தங்குமிட ஊழியர்கள், தனித்த வனப்பகுதிகள் போன்ற இடங்களில் உள்ள சிறு அரசூழியர்கள், காவல்துறையினர் போன்றவர்கள் நம்பக்கூடாதவர்கள். தமிழகத்தில் சுற்றுலாமையங்களில் பயணிகள் கிண்டல்செய்யப்படுவதும் சீண்டப்படுவதும் சாதாரணம். அதை இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாது.

வளர்ந்தநாடுகள் சிலவற்றில் நான் பயணம் செய்திருக்கிறேன். அங்கே அரசுசார் அமைப்புகளின் உதவி எந்நேரமும் உண்டு என்பது உண்மை. ஆனால் மக்கள் பொதுவாக நட்பற்றவர்கள், இயந்திரத்தனமானவர்கள், இனநோக்கு கொண்டவர்கள். என் அனுபவத்தில் அமெரிக்கா இதில் மிக மோசம். அமெரிக்கா, அடிப்படையில் இனவாதிகளின் நாடு என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்தபடியே இருந்தது.

தனித்த பயணங்கள் அமெரிக்காவில் ஆபத்தானவை. அதை ஓர் அமெரிக்கக் காவலரே ரயிலில் என்னிடம் சொன்னார். ரயிலில் ஒரு பெட்டியில் நான் மட்டும் தனித்துப் பயணித்தேன். ஆப்ரிக்க அமெரிக்கர்களின் ஒரு குழு உள்ளே வந்தது. ஒரு காவலர் உடனே உள்ளே ஏறி என்னை வேறு பெட்டிக்குச் செல்லும்படி மெல்லிய குரலில் எச்சரித்தார். அமெரிக்கா எங்கும் பொது இடங்களில் குற்றங்களுக்கான வாய்ப்பு அதிகம். அங்கே குற்ற விகிதம் நம்மைவிடப் பல மடங்கு. உயிராபத்து காரணமாகச் செல்ல முடியாத இடங்கள்கூடப் பல உண்டு. தனித்த வேளைகளில் எந்த வெள்ளையரும் எனக்கு உதவவில்லை.அங்குள்ள காவலர்கள் எந்திரத்தனமானவர்கள், ஆனால் கடமையைத் துல்லியமாகச் செய்யக்கூடியவர்கள் என்பதுதான் ஆறுதலான அம்சம்.

உண்மையில் தென்னிந்தியாவில் உள்ள நாம் பயணம்செய்வது மிகக் குறைவு. காரணம் இந்த ‘அன்னியர் பயம்’தான். வட இந்தியாவில் அப்படி அல்ல. குடும்பம் குடும்பமாக எளிய வசதிகளுடன் பயணம் செய்துகொண்டே இருக்கிறார்கள். காரணம், அவர்களுக்கு தீர்த்தாடனம் ஒரு முக்கியமான மதக்கடமை. பயணம் ஒரு பெரிய இயக்கமாக இந்தியாவில் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் சென்ற எல்லா ஊர்களிலும் தீர்த்தாடனப் பயணிகள் வந்து, பொது இடங்களில் சமைத்துண்டபடியே இருப்பதைக் கண்டோம். ஒரு சமணர்குழு, பெண்கள், குழந்தை குட்டிகளுடன் சிரவண பெலகொலாவில் இருந்து கட்ரஜ் வரை எங்களைத் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள்.

நீங்கள் சொன்னதைப்போல இந்தியாவில் பயணம் செய்வதில் சில நடைமுறைப்பிரச்சினைகள் உள்ளன. அவற்றை அனுபவத்தால் கருத்தில்கொண்டுதான் நாங்கள் சென்றோம்.

ஒன்று, இந்தியச்சாலைகள் நெரிசல் மிகுந்தவையாக உள்ளன. ஆகவே அபாயம் அதிகம். லாரிகள் மண்டிய சாலைகளில் இரவில் பயணம்செய்வது ஆபத்தானதே. இதனால் நாங்கள் பெரும்பாலும் இரவிலும் விடிகாலையிலும் பயணம்செய்வதை தவிர்த்திருந்தோம்.

இரண்டு, இந்தியாவில் தங்குமிடம் கண்டுபிடிப்பது கடினம். ஒரு தாலுகா தலைநகரில் ஒன்றிரண்டு விடுதிகள்கூட இல்லாமலிருக்கலாம். பெருநகர்களில் திடீர் எனத் திருமணம் திருவிழா போன்ற காரணங்களால் அறைகளே கிடைக்காமலாகலாம். பெண்களுடன் சென்றால் அறை முன்பதிவு இல்லாமல் செல்வது சிக்கலானது.

மூன்று, இந்தியாவில் உணவு விடுதிகள் எவை நம்பகமானவை என ஊகிப்பது கடினம். இங்கே மேலைநாடுகளில் உள்ளது போல ஒரேவகை உணவை எங்கும் அளிக்கும் வரிசை உணவகங்கள் இல்லை. அந்தந்த ஊர் சாப்பாடுதான் கிடைக்கும். அவை அந்த ஊர்க்காரர்களுக்கு உகந்தவை, நமக்கு வயிற்றுக்கு ஒவ்வாமலாகலாம். இதில் விதிவிலக்கான மாநிலம் குஜராத் மட்டுமே. தரமான சாலையுணவகங்கள், கறாரான சுகாதாரக் கண்காணிப்பு உள்ள மாநிலம் அது.

நான்கு, இந்தியாவில் குடிநீருக்கு சராசரித் தரம் ஏதும் இல்லை. சில ஊர்களில் உப்புநீரே குடிநீர். அந்த மக்கள் பழகிப்போய்விட்டிருக்கிறார்கள். வெப்பமண்டல நாடாகையால் ஒரு ஊரில் உள்ள பாக்டீரியா அமைப்பு இன்னொரு ஊரில் இருப்பதில்லை. ஆகவே நல்ல நீராக இருந்தாலும் புதிய ஊரின் நீர் நமக்கு ஒவ்வாமலாகக்கூடும்.

ஐந்து, இன்றும் இந்தியாவில் மொழி ஒரு பெரிய சிக்கலே. வட இந்திய கிராமங்களில் இளைஞர்களிடம் கூட ஓரிரு ஆங்கிலச் சொற்களைப் பேசி பதில்பெற முடியாது. ஆனால் இந்தியை ராஜஸ்தான் முதல் அசாம் வரை, காஷ்மீர் முதல் ஹைதராபாத் வரை, பெரும்பாலும் எங்கும் பேசலாம். நடைமுறைத் தேவை அளவுக்கு அதைப் புரிந்து பேசுபவர்கள் எங்கும் இருப்பார்கள். இந்தி இல்லாமல் இந்தியாவில் பயணம் செய்வது கடினம்.

ஜெ

முந்தைய கட்டுரைவம்ச விருட்சம்
அடுத்த கட்டுரைசீனு – ஒரு குறிப்பு