அன்புள்ள ஜெ,
நீங்கள் சொல்வது சரிதான். நம் மரபில், பண்பாட்டில் உள்ள பிரச்சினை அது என்பதை ஒத்துக் கொள்கிறேன்.
ஆனால், வரலாற்றெழுத்தைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும், தூண்டுதலையும், சுவாரஸ்யத்தையும் முதலில் மாணவர்கள் மனதில் உருவாக்க வேண்டுமே. இப்போதுள்ள பாடத்திட்டம் அதைச் செய்வதில் கடும் தோல்வியையே அடைகிறது. மிக மோசமாக எழுதப்பட்ட சலிப்பூட்டும் வரலாற்றுப் பாடங்கள் மாணவர்கள் வரலாற்றைக் கண்டு அஞ்சி ஓடவைக்கின்றன.
அந்த ஆர்வத்தை உருவாக்கும் முகமாகவாவது அமர் சித்திரக் கதைகளைப் பாடத்திட்டத்தில் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இதிகாசம்/புராணம் குறித்த கதைகளைக் கூட ஆதாரபூர்வமாக ஆய்வு செய்த பின்னரே அமர் சித்திரக் கதைகளை உருவாக்கிய மறைந்த அனந்த் பாய் அவர்கள் வெளியிட்டார். வரலாறு குறித்த புத்தகங்களை இன்னும் கறாராகவே கண்காணித்து செய்திருக்கிறார்கள். ஒரு sample ஆக சுப்பிரமணிய பாரதி, பாபாசாகேப் அம்பேத்கர் குறித்த புத்தகங்களைப் பார்த்தாலே தெரியும்.
அன்புடன்,
ஜடாயு
அன்புள்ள ஜெ,
உங்கள் பயணத்தின்போது ஒவ்வொரு இடத்திலும் சுல்தானிய ஆட்சியில் உடைக்கப்பட்ட கோயில்களைப் பற்றி சொல்லிக் கொன்டே வந்தீர்கள்.
இந்தச் செய்தியைப் பாருங்கள். அருங்காட்சியகத்துக்குள் இருந்த புராதன இந்து, பௌத்த சிலைகள் அனைத்தையும் கூட அடித்து நொறுக்கி விட்டார்களாம்.. 99% காலி என்கிறார் அருங்காட்சியகக் காப்பாளர்.
ஒரு உல்லாச சுற்றுலாத் தலமாக மட்டுமே இந்தியர்களால் கருதப்பட்டுவந்த இந்த சின்னத் தீவில் இஸ்லாமிய மதவெறி வளர்ந்து எவ்வளவு மோசமான பரிமாணத்தை எட்டியுள்ளது என்று நினைக்க அதிர்ச்சி ஏற்படுகிறது. பக்கத்தில் இவ்வளவு பெரிய நாடான இந்தியா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. வேதனை.
அன்புடன்,
ஜடாயு
http://www.cbsnews.com/8301-501843_162-57377428/maldives-museum-reopens-minus-smashed-hindu-images/