ஊர்திரும்புதல்

 

சென்ற ஏப்ரல் எட்டாம் தேதி ஆஸ்திரேலியா வந்தேன். மெல்போர்ன் நகரில் நான்குநாட்கள். பின்னர் கான்பெரா நகரில் ஐந்து நாட்கள். பின்னர் சிட்னியில்  நான்குநாட்கள். மீண்டும் மெல்போர்ன். இன்று [27-4-2009] நள்ளிரவு பதினொரு மணிக்கு தாய் ஏர்வேய்சில் ஊர்திரும்புகிறேன். பாங்காக்கில்  28-4-2009 அன்று காலை ஆறுமணிக்கு இருப்போம். இரவு ஒன்பது மணிக்கு மீண்டும் விமானம். 28-4-2009 அன்று நள்ளிரவு சென்னையைச் சென்றடைவோம்.

ஆஸ்திரேலியா ஓர் உற்சாகமான அனுபவமாக இருந்தது. நிலம் என்றுமே பேரழகு மிக்கது. பாலையில் புல்வெளியில் வயல்வெளியில் எங்கும்….  இந்த விரிந்த புல்வெளிகள் இனி என்றும் கனவின் ஒரு பகுதிதான்…இங்குள்ள இனிய நண்பர்கள், வாசகர்கள். அனைவருக்கும் எப்படி நன்றிசொல்வேன். எத்தனை மனம் திறந்த உபசரிப்புகள். பேரன்புகள்.  அனைவருக்கும் என் வணக்கம்.

 

 

 

 

 

 

 

2001ல் நான் கனடா சென்றிருக்கிறேன். அதுதான் என் முதல் வெளிநாட்டு அனுபவம். முதல் உலகத்தைப் பார்த்தல். அது கணந்தோறும் வியப்பு நிறைந்த அனுபவமாக இருந்தது. இப்போது பூமியின் இந்த முனையிலும் அந்த அற்புதமான மனமலர்ச்சி நிறைந்த நாட்கள் மீண்டு வந்தன. முக்கியமான காரணம் இம்முறை என் செல்லமனைவி கூடவே இருந்தாள். மண்ணில் அவளுக்கு இணையான துணை எனக்கு வேறில்லை.

இப்பயணத்தை பயணத்தின்போதே எழுத முடியவில்லை– மடிக்கணினி இல்லாமல் இருந்தது. சென்னை சென்றதும்தான் ஒன்று வாங்குவதாக இருக்கிறேன். ஆஸ்திரேலிய அனுபவங்களை ஊர் திரும்பிய பின்பு எழுதுவேன்.

இந்தப்பயணத்தில் நான் உணர்ந்த உச்ச அனுபவம் என்பது ஒன்றுதான். எழுபதுகள்வரை இன ஒதுக்குமுறை இருந்த நாடு இது.  இங்கிருந்த பழங்குடிகளை கொன்றே ஒழித்த மக்களின் வாரிசுகள் வாழும் நாடு. இன்று அந்த வரலாற்றுப்பின்புலத்தில் இருந்து தங்களை விடுவித்துக்கொண்டுவிட்டிருக்கிறார்கள். உலகம் முழுக்க இருந்து குடியேற்றங்களை வரவேற்கிறது இந்நாடு. இங்கே வெள்ளையர் சிறுபான்மையினராக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். பெருமையுடன் அவர்கள் அதை தங்கள் தேசிய அடையாளமாக காண்கிறார்கள்

நெல்ஸன் மண்டேலாவின் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்த நாடு இது. அவரது முதல் பேருரை நிகழ்ந்த அன்னிய மண் இது. தங்கள் இறந்தகாலத்து போர்மனநிலைக்காக திறந்த மனத்துடன் மன்னிப்பு கோரிய நாடு இது. இங்கே வாழும் பலரிடம் கேட்டேன், அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என. அரசு நிர்வாகத்தில், சமூக அமைப்பில், அன்றாடப்புழக்கத்தில் ஒருபோதும் நிற – இன வேறுபாட்டை தாங்கள் காணவில்லை என அவர்கள் சொல்லும்போது மனம் நிறைகிறது

இந்நாட்டின் ஒவ்வொரு பொதுக்கூடுகைகளும் பல இன மக்களால் நிறைந்திருக்கின்றன. பல நிறக்குழந்தைகள் கூவி ஆர்ப்பரித்து பூங்காக்களில் விளையாடுகின்றன. பூமியில் உள்ள அனைத்து நாடுகளும் இந்தக் காட்சியால் நிறையும்போதுமட்டுமே மானுடம் முழுமை பெற்றுள்ளது என்று பொருள்.

இந்த மகத்தான இணைவு பத்தாயிரம் வருடம் முன்னரே தோன்றிவிட்ட  ஒரு நிலத்தில் பிறந்தவன் நான். அண்ணன் கறுப்பனாகவும் தம்பி வெளுப்பனாகவும் இருக்கும் நிலையை இயல்பாகக் கொண்ட ஒரு நாட்டில். இன்னும்  ஐந்து தலைமுறை கழித்தால் ஆஸ்திரேலியா எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் ஒரு நாட்டில். ‘வஸ¤தைவ குடும்பஹம்’ என்றும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்றும் கண்டடைந்த ஞானிகளின் நாட்டில்.

நம்மில் பேதம் இருந்திருக்கிறது. இழிவாக்கமும் கீழ்மையாக்கமும் இருந்திருக்கிறது. பிரம்மாண்டமான ஒரு நிலப்பகுதியில் மக்கள் ஒருவரை ஒருவர் வென்று வாழ முற்பட்ட காலத்தின் அழிவுகளும் இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றுக்கு அப்பால் திறமறிந்த அறவோர் குரல் என்றும் ஒலித்திருக்கிறது. பல இன ,மொழி மக்கள் கோடானுகோடிப்பேர் வாழும்  இந்த மண்ணின் வாழ்க்கையை மெல்ல மெல்ல அவர்கள் மேம்படுத்தியிருக்கிறார்கள். காந்தி வரை அந்த அறவோரின் வரிசை நீண்டு நம்மைத் தொட்டிருக்கிறந்து.

முந்நூறு வருடம் முன்பு என் மண்ணுக்கு வந்த வெள்ளையர் அவர்கள் மனதில் நிறைந்திருந்த இனவாதத்தின் விஷத்தை நம் மடியில் துப்பிவிட்டுச் சென்றார்கள். எங்களில் ஒருசாரார் அமுதமென அதை உண்டு உடலாக்கி வளர்க்கிறோம். அதை நவீனச் சிந்தனை என்றும் கோட்பாடென்றும் சுமந்தலைகிறோம்.  இனமென்றும் இனக்குழுவென்றும் மொழிக்குழுவென்றும் மதமென்றும் பிரிவினைபேசி நம்மை நாமே அழிக்க முன்னிற்கிறோம்.

மூதாதையர் தந்தவற்றை எல்லாம் இழந்து நிற்கும் வறியவர்களாகிய நாம் இன்று இம்மக்களிடமிருந்து நாம்  அந்த அழியாத ஞானத்தை மீண்டும் கற்கவேண்டியிருக்கிறது.  பூங்காவில் காலைநடை செல்லும்போது புத்தம்புதிதான பட்டுரோஜா போன்ற முகத்துடன் எதிரே வரும் வெள்ளைய நங்கை மனம் திறந்த முறுவலுடன் காலை வாழ்த்துச் சொல்லிப்போகிறாள். அவள் தள்ளிச்செல்லும் வண்டியில் இடுங்கிய கண்களுடன் அவளுடைய சீன இனக்குழந்தை வாய்க்குள் கையை ஒட்டுமொத்தமாக செருகி உட்கார்ந்திருக்கிறது. அவள் வாயில் நான்கேட்ட சொற்களுக்கு ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர் !’ என்றுதான் பொருளா?

அவள் சொல்லும்  அந்தக் காலை வாழ்த்து ஒரு ஆசி. என் தேசத்துக்கும் ஒரு நல்ல காலை விடிவதாக!

முந்தைய கட்டுரைகுரு:கடிதங்கள்
அடுத்த கட்டுரைபயணம்:கடிதங்கள்