அன்பு ஜெயமோகன்,
` தொழில்முறை விளையாட்டுகளையே நான் வெறுக்கிறேன். அவை மனித அகங்காரத்தின் வெளிப்பாடுகள்’.
மேற்கண்ட சொற்களின் பொருள் என்ன? புரியவில்லை. `தொழில்முறை விளையாட்டுக்கள்’ என்றால் – தொழில் செய்பவர்கள் செய்யும் தகிடுதத்தங்களைச் சொல்கிறீர்களா? அல்லது விளையாட்டை வாழ்க்கையாகக் கொண்டவர்களைச் சொல்கிறீர்களா?
உங்கள் விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் – நான் சதுரங்க விளையாட்டை வாழ்க்கையின் தேடல்களில் ஒன்றாகக் கொண்டவன் :-)
அவசரம் இல்லை.
வி.சரவணன்
சிறுவயதில் நான் ஒரு கபடி ஆட்டக்காரனாக இருந்தேன் என்றால் இன்று என் நெருக்கமான நண்பர்கள்கூட நம்பமாட்டார்கள். அதற்கு என் முழங்காலில் உள்ள விழுப்புண்கள் சான்று. நான் ஒரு மிகச்சிறந்த ஆட்டக்காரனாகவே இருந்தேன். குறிப்பாக பாய்ந்து கால்களைப் பிடிப்பதில் நான் பெரிய நிபுணன்.
எங்களூரில் ஆற்றுமணலில்தான் கபடி ஆடுவோம். மாலைவெயில் சரிந்ததுமே அணிபிரிந்து கோடுபோட்டு தயாராகிவிடுவோம். ஏழு மணிவாக்கில்தான் ஒளி போகும். அதுவரை ஆட்டம். ஒரு கட்டத்தில் களைப்பில் மூச்சு சிக்கிக் கொண்டு நெஞ்சு கல்லாக கனக்கும். நிற்க முடியாதபடி கால்கள் குழையும். ஆனாலும் ஆட்டத்தை நிறுத்த முடியாது.
ஆட்டம் முடிந்து அப்படியே சென்று ஆற்று நீரில் கும்பலாக விழுந்து நீந்தித்துழாவிக் குளிப்போம். ஆட்டத்தைப்பற்றிய அலசலகள், விமரிசனங்கள், சிரிப்புகள்….. ஆட்டம் நடந்த நேரம் முழுக்க கூவிச்சிரித்து கத்திக் கூப்பாடு போட்டுக் கொண்டே இருந்திருப்பது இரவில் வீட்டுக்குச் சென்று அமர்ந்த பின்னர்தான் தெரியும். படிக்க அமர்ந்தால் குரலே எழாது. தொண்டையில் உயிரின் தொடர்பே இருக்காது.
அதேபோல கிளியந்தட்டு என்று ஓர் ஆட்டம். அந்த ஆட்டத்தை பிற ஊர்களில் விளையாடுகிறார்களா என்று தெரியவில்லை. பலதிசைகளிலும் ஒரே சமயம் கவனம் நிற்கவேண்டிய ஆட்டம் அது. மூச்சிரைக்க ஓடி ஓடி விளையாடவேண்டும். சரசரவென்று நிகழ்வுகள் மாறிக்கொண்டே இருக்கும் ஆட்டங்கள் இவை. உடலும் மனமும் ஒருங்கிணைந்து ஆட வேண்டியவை.
ஓணப்பந்து என்று ஓர் ஆட்டமும் எங்களூரில் பிரபலமாக இருந்தது. கிரிக்கெட் பந்து அளவில் உள்ள தோல்பந்தை பன்னிரண்டுபேர் கொண்ட இரு அணிகள் மாறி மாறி அடித்து வீசி விளையாடும் இந்த ஆட்டம் தென் திருவிதாங்கூரில் மிகவும் பிரபலமாக இருந்து இப்போது மெல்ல மெல்ல மறைந்துவிட்டது. அதிலும் நான் ஒரு நிபுணன்.
இந்த ஆட்டங்களில் எல்லாம் போட்டிகளும் உண்டு. கபடியில் திற்பரப்பு முதல் அருமனை வரையில் உள்ள பல்வேறு ஊர்களைச் சேர்ந்த அணிகள் எங்களூருக்கு வரும். வருபவர்களுக்கு ‘போஞ்சி’ என்ற எலுமிச்சைநீர் அளிப்போம். அற்றகைக்கு எங்காவது தோட்டத்தில் புகுந்து இளநீர் திருடியும் உபசரிப்போம். பரிசு ஒன்றுமில்லை. ஆட்டம் முடிந்ததும் சேர்ந்து ஆற்றில் நீராடுவோம்
ஆனால் ஓணப்பந்து விளையாட்டுக்கு அதிகாரபூர்வ போட்டிகள் உண்டு. நான் சிறுவயதில் குடியிருந்த முழுக்கோடு ஊரில் ஒரு சிறந்த ஓணப்பந்து கிளப் இருந்தது. முழுக்கோடு ஆரம்பப்பள்ளி மைதானத்தில் ஓணத்தை ஒட்டி பத்துநாள் இருபது போட்டிகள் நடக்கும். கேரளத்தில் இருந்தெல்லாம் குழுக்கள் வரும். மஞ்சாலுமூடு, கண்ணுமாமூடு அணிகள் பலமானவை.
முழுக்கோடு அணியும் வலிமையானது. அண்டுகோடு பள்ளி ஆசிரியர் ஒருவரும் அவரது தம்பியும்தான் நட்சத்திர ஆட்டக்காரர்கள். ஜெயித்த அணிக்கு சுழல்கேடயம் உண்டு. நிறைவு விழாவில் நாடகம் போடுவார்கள். தமிழ் நாடகமும் மலையாள நாடகமும். இரண்டிலும் ஆட்டக்காரர்களே நடிப்பார்கள்.
இப்போது சிந்திக்கும்ப்போது என் இளமைநாட்களை கொண்டாட்டம் மிக்கவையாக ஆக்கியதில் இந்த விளையாட்டுகளுக்கு இருந்த பங்கு பிரமிப்பூட்டுகிறது. இந்த ஆட்டங்கள் கிராமத்தில் பையன்களும் இளைஞர்களும் நட்பு கொள்ள வழிவகுத்தன. கிராமங்களுக்கு இடையே மிகச்சிறந்த நட்புணர்வுகளை வளர்த்தன. நாங்கள் பக்கத்து ஊருக்குச் சென்றால் அந்த ஊர் ஆட்டக்காரர்கள் எங்களுக்கு போஞ்சி வாங்கி தந்தேயாகவேண்டும்.
எண்பதுகளில்தான் எங்களூரில் கிரிக்கெட் வர ஆரம்பித்தது. சொல்லப்போனால் தொலைக்காட்சி வந்தபின்னரே கிராமங்களில் கிரிக்கெட் வந்தது. கிரிக்கெட் எல்லா கிராமப்புற விளையாட்டையும் இல்லாமல் ஆக்கியது. கிராமப்புற ஆட்டங்களில் விளையாடுதலும் போட்டியும் உண்டு என்றால் கிரிக்கெட்டில் பயிற்சித்திறனும் போட்டியும் மட்டும்தான்.
கிரிக்கெட் தேசிய அளவிலான போட்டி ஆட்டமாக இன்று முன்வைக்கப்படுகிரது. அதில் இருந்து விளையாட்டில் உள்ள கொண்டாட்டமே மறைந்து விட்டது. நான் சிறுவயதில் விளையாடிய விளையாட்டுகளுக்கும் இன்றைய கிரிக்கெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இன்று இந்தியா முழுக்க பரவியிருக்கும் கிரிக்கெட் மோகம் என்பது விளையாட்டு மீதான மோகமே அல்ல, அது ஒரு பொழுதுபோக்கு மட்டும்தான். ஒற்றைலாட்டரிப்போதை போன்ற ஒன்று மட்டுமே .
முதல் விஷயம் இன்று கிரிக்கெட் பைத்தியங்களாக இருப்பவர்களில் தொண்ணூறு சதவீதம்பேர் கிரிக்கெட்டே விளையாடுவதில்லை. எதுவுமே விளையாடுவதில்லை. விளையாடுதல் என்பதில் உள்ள களிவெறியை அவர்கள் அறிய மாட்டார்கள். அது உடலுக்கு உள்ளத்துக்கும் அளிக்கும் அபாரமான விடுதலையை அவர்களால் கற்பனைசெய்துகொள்ளவே முடியாது. அவர்களுக்கு அது ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி மட்டுமே. ஒரு ‘திரில்லர்’ நிகழ்ச்சியில் உள்ள பரபரப்பு. இன்னும் சிலருக்கு சூதாட்டத்தின் வேகம்.
இதை ‘விளையாட்டு ஆர்வம்’ என்று பலர் சொல்வதைக் கேட்கும்போது எனக்கு எழும் எரிச்சல் சாதாரணமானதல்ல. சூம்பிய தோளுடன் தொப்பையுடன் வெளிறிப்போன ஆசாமிகள் தங்கள் பொழுதுபோக்கு ‘ஸ்போர்ட்ஸ்” என்று நம்புகிறார்கள். தொலைக்காட்சிமுன் உட்கார்ந்திருப்பதிலும் ‘ஸ்கோர்’ கேட்டு தெரிந்துகொள்வதிலும் என்ன விளையாட்டு இருக்கிறது? விளையாடுபவனுக்குத்தான் அது விளையாட்டு. சீட்டாடுபவன், ஆடுபுலி ஆடுபவன் விளையாட்டு ஆர்வம் உண்டு என்று சொல்லிக் கொள்ளலாமா என்ன?
இந்தப்போதை என்பது இன்று ஒரு பெருந்தொழில். அந்த தொழிலை பரப்ப ஊடகங்கள் அனைத்தும் திறமையாகப் பயன்படுத்தப்படுகின்றன. பெருந்தொழில் என்னும்போது அதில் உயர் தொழில்நுட்பம் வந்துசேர்கிறது. உயர்தர பயிற்சிகள். நுணுக்கமான வியூகங்கள். கணக்குவழக்குகள். மெல்ல மெல்ல அது விளையாட்டு என்ற இடத்தில் இருந்து நகர்ந்து அதிதிறன்கொண்ட நிபுணர்களின் போட்டியாக ஆகிவிடுகிறது. அந்த போட்டியை கோடிக்கணக்கானவர்கள் ரசிக்கிறார்கள். பணத்தைக் கொட்டுகிறார்கள்.
சில நண்பர்கள் கிரிக்கெட் சார்ந்த தகவல்களைச் சேர்த்து வைத்திருப்பதுண்டு. அதன் நுட்பங்களை அலசி ஆராய்வதுண்டு. ஒற்றைஇலக்க லாட்டரி வாங்குபவர்களுக்கும் அதன் நுட்பங்கள் அந்த அளவுத்தெரிந்துதான் இருக்கும். அப்படி எந்தச் சூதாட்டத்திலும் எந்தப்போட்டியிலும் நுட்பங்கல் இருக்கும். அதன் வழியாக வரும் களிப்பு விளையாட்டு அளிக்கும் களிப்பே அல்ல என்பதே என் எண்ணம்.
தொழில்முறை விளையாட்டுக்கள் என நான் சொல்வது இதைத்தான். வணிக நோக்குடன் உருவாக்கபப்டும் இந்த விளையாட்டுகளை நான் விளையாட்டுக்கள் என்று ஏற்றுக்கொள்வதில்லை. அவற்றில் மிதமிஞ்சி ஈடுபடுபவர்களின் மனநிலைகளை நான் பகிர்ந்துகொள்வதில்லை. அத்தகய ஈடுபாடுகள் கொண்டவர்கள் மேல் அந்த அளவுக்கு மதிப்பின்மையும் எனக்கு உண்டு. ஏனென்றால் பொழுதுபோக்குக்காக ஒரு விஷயத்தைச் செய்வதென்பது மனித மனம் என்ற மாபெரும் வரத்தை இழிவுசெய்வது. அது ஒரு கீழ்மை.
விளையாட்டுக்கு ஒரு சமூகப்பங்களிப்பு உண்டு என்று சொல்கிறார்கள். அவை ‘பதிலி யுத்தங்கள்’ நவீன காலகட்டத்தில் விளையாட்டுக்கள் மூலம் நாம் போரை அழிவில்லாமல் நாசூக்காக நடத்திக் கொள்கிறோம் என்றும் அது மானுட நாகரீகத்துக்குத் தேவை என்றும் சொல்கிறார்கள். இருக்கலாம். ஆகவே போருக்குக் காரணமான சமூக- தேசிய- இன பிரிவினைகளை தங்கள் கல்வியாலும் சிந்தனையாலும் பண்பாட்டாலும் தாண்டிச்செல்ல முடியாத எளிய மக்களுக்கு தொழில்முறை விளையாட்டு தேவையானதாகவும் இருக்கலாம். ஆனால் சிந்திக்கும் பழக்கம் கொண்ட ஒருவர், அதற்கான திறன் கொண்ட ஒருவர் இத்தகைய பதிலிபோர்களில் நேரம் செலவிடுவாரென்றால் அது அவரது ஆன்மீக வறுமையை மட்டுமே காட்டுகிறது.
இப்போது மெல்போர்னில் இருக்கிறேன்.[22-4-2009] இன்றுகாலை நான் காலைநடைக்கு ஒரு பூங்காவுக்குச் சென்றேன். ஏழெட்டு வெள்ளைக்காரத் தாத்தாக்கள் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் . எண்பது வயதுக்கும் மேலிருக்கும். அவர்களின் முதுமையை மீறி ஆட்டம் நடந்துகொண்டிருந்தது. சுருக்கம் அடர்ந்த முகங்களில் என்ன ஒரு சிரிப்பு, எத்தனை பூரிப்பு! விளையாட்டு அவர்களை உடலின் எல்லைகளில் இருந்து விடுவிக்கிறது. வயதில் இருந்து விடுவிக்கிறது. விளையாட்டு எத்தனை புனிதமானது! மனிதனுக்கு அளிக்கப்பட்டிருக்கும் உடல் என்னும் செல்வத்தைக் கொண்டாடுவதல்லவா அது?
விளையாட்டு ஒரு களியாட்டமாக இருக்க வேண்டும். விளையாடுபவர்களின் முகங்களில் மகிழ்ச்சி பொங்கும்போதுதான் அது கொண்டாட்டமாக இருக்கிறது என்று பொருள். விளையாட்டு ஆனந்தத்தின் பொருட்டு மட்டுமே ஆடப்படவேண்டும்– அப்போதுதான் அது விளையாட்டு. பணத்துக்காக, புகழுக்காக, தேசப்பெருமிதத்துக்காக, சாதனைக்காக ஆடப்படுவது விளையாட்டல்ல. அது ஒருவகை தொழில் அல்லது சண்டை. அதில் இருப்பது உழைப்பும் வெறுப்பும் மட்டுமே. வென்றவனும் தோற்றவனும் உட்பட ஆடிய அனைவருமே மகிழ்ச்சியைஅ டையும்போது மட்டுமே அது விளையாட்டு
ரிச்சர்ட் அட்டன்பரோவின் வனப்பதிவுகளைப் பார்க்கையில் தெரிகிறது, அனைத்து உயிரினங்களும் விளையாடுகின்றன. மிருகங்கள் பறவைகள் புழுப்பூச்சிகள் கூட. விளையாட்டில் அவற்றின் உடல்கள் துள்ளித்துடிக்கும் சங்கீதத்தில் இப்பிரபஞ்சமாக மாறி தன்னைக் கொண்டாடும் அந்த அறியமுடியாத ஒன்றின் உள்ளம் வெளிப்படுகிறது. அதை ஆனந்தமே உருவமும் அருவமும் ஆக இருப்பது என்று — சத் சித் ஆனந்தம் என்று- நம் மரபு சொல்கிறது
இப்பிரபஞ்ச இயக்கத்தை லீலை என்று இந்து மரபு சொல்கிறது. அலகிலா ஆட்டம் என்று சைவம். லீலை என்றால் நோக்கமேதும் இல்லாத ஒரு செயல் என்று பொருள். ஒன்றைச்செய்வதன் இன்பத்தின் பொருட்டே அதை செய்தல் என்று பொருள். ‘அலகிலா விளையாட்டு’ என்று அதை நாம் காண்கிறோம். நாம் ஆடும் ஒவ்வொரு ஆட்டமும் அந்த பெருவிளையாடலின் ஒரு சிறுதுளியாக இருக்க வேண்டும். அதுவே ஆனந்தம்
ஏனென்றால் மண்ணில் நாம் அடையும் ஆனன்ந்தம் எதுவும் பிரபஞ்சமாக நிறைந்துள்ள ஆனந்தப்பெருவெளியின் துளி மட்டுமே
ஜெ
மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2009 மே