சுவையறிதல்

அனைவருக்கும் வணக்கம்,

பதின்வயதுகளில் புல்வெட்டும் நண்பர்களுடன் காட்டுக்குச் செல்லும் வழக்கம் எனக்கு இருந்தது. கல்லூரிக்குச்செல்லும் பாவனையில் கிளம்பி புத்தகங்களை ஏதேனும் கடைகளில் போட்டுவிட்டுச் செல்வேன்.இரவில் திரும்பி வந்துசேர்வேன். படிப்பு உள்ள ஒரு நண்பன் கூடவருவதிலும் அவன் நிறைய கதைகளைச் சொல்வதிலும் நண்பர்களுக்கு மகிழ்ச்சி. காட்டைப்பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

ஒருமுறை ஒரு காட்டுயானையைப் பார்த்தேன். நாங்கள் ஒரு மேட்டில் ஏறியபோது கீழே விரிந்த சற்று வரண்ட நிலத்தில் பிரம்மாண்டமான கொம்பன் மேய்ந்துகொண்டு நின்றிருந்தது. உடம்பெல்லாம் செம்மண் படிந்து வரிவரியாக வெடித்திருந்தது. அச்செம்மண்ணின் மீது விழுந்த விதைகள் முளைத்து மெல்லிய பச்சை மயிர்ப்பரப்பு போல தெரிந்தது. மத்தகம் முழுக்க உதிர்ந்த மலர்களும் சருகுகளும். யானை ஒரு செம்மண் குன்றுபோல் தெரிந்தது.

காற்று எதிர்பக்கமிருந்து வீசி யானையைக் கடந்து எங்களை அடைந்தது. ஆகவே யானை எங்களை உணரவில்லை. நாங்கள் அதன் உடலில் இருந்து வந்த யானைப்பிண்டத்தின் மணத்தை உணர்ந்தோம். மூச்சடக்கி யானையைப் பார்த்துக்கொண்டு முழந்தாளிட்டு அமர்ந்திருந்தோம். யானை என்ன தின்கிறது என்று கண்டு நான் பிரமித்துப்போனேன்.

எங்களூரில் தொட்டால்வாடி என்றொரு செடி உண்டு. அதன் இலைகள் நாம் தொட்டதுமே மூடிக்கொள்ளும். அதன் பூக்கள் ஆரஞ்சு நிறத்தில் உருண்டையாக இருக்கும். மிகமிக மெல்லிய இதழ்கள் கொண்ட சிறிய பூக்கள் அவை.  அந்தபூக்களை யானை தன் துதிக்கையால் ஒவ்வொன்றாக கொய்துகொண்டிருந்தது.

தேக்குமரத்தை வேருடன் பிழுதெடுக்கும் துதிக்கை! வெற்பு பிளக்கும் பெரும் மத்தகம்! விளையாடும் குழந்தை போல வால் சுழற்றி காது வீசி உடலை உழற்றிக்கொண்டு மெல்லமெல்ல அது  பூக்களை கொய்தது. ஒருமணிநேரம் கொய்த பூக்களை அது அழுத்தி உருட்டியபோது ஒரு கோழிமுட்டை அளவுக்குத்தேறியது. அதை தன் தொங்கும் வாய்க்குள் துதிக்கையை விட்டு கடைவாயில் செருகி மென்றது. ருசியில்  காது அசைவிழந்தது. வால் சுழி போட்டு நின்றது.

அந்த மாபெரும் வாய்க்கு அந்த பூப்பந்து எந்த மூலைக்குக் காணும்? ஒன்றும் புரியவில்லை. பின்னர் மெல்ல நடந்துசென்று மூங்கில்புதரை அடைந்தது. யானை மூங்கில் உண்ணும் நுட்பத்தை நான் அப்போதுதான் கவனித்தேன். மூங்கில் புதரை ஒட்டுமொத்தமாகத் தின்றாலும் அதன் பசி அடங்கிவிடாது. ஆனால் முதலில் மூங்கிலின் தளிர்குருத்துக்களை மட்டும் அது பிய்த்துச் சேர்த்து தின்றது. மூங்கிலின் குருத்தில் மெல்லிய இனிப்பு இருக்கும் என்பதை தின்றுபார்த்தவர்கள் அறிந்திருப்பீர்கள்.

முழு மூங்கில்கூட்டத்தையும் சுற்றிவந்து தளிர்களைத் தின்று தீர்க்க வெகுநேரமாகியது. அதன்பின்பு மூங்கில் இலைகளின் தளிர்களை அது பிய்த்துத் தின்றது. அதன்பின் இன்னும் சற்று முற்றிய இலைகளை. பிறகு மூங்கில்தடிகளையே பிடுங்கி உடைத்து மென்று தின்றது. மெல்ல அந்த மூங்கில் கூட்டத்தையே தின்றுவிடக்கூடும்!

ஆம், யானைப்பசியிலும் யானை தன் ருசியை இழப்பதில்லை. அதன்முன் மொத்த காடும் தீனியாக விரிந்து கிடக்கும்போதும் அது பூவுக்கும் தளிருக்கும் இலைக்கும் இடையேயான வேறுபாட்டை மறப்பதில்லை. தன்முன் பலநூறு சுவைகளாக மாறி விரிந்துகிடக்கும் இயற்கைக்கு யானை அளிக்கும் கௌரவம் அது.

அந்தக்கௌரவத்தை இலக்கியத்துக்கு அளிக்கும் செயலையே நான் விமரிசனம் என்று சொல்கிறேன். யானைப்பசி கொண்டவனே நல்ல விமரிசகன். அவனுடைய வாசிப்பு ஒருபோதும் துவண்டுவிடக்கூடாது. அவனுக்கு புதியவற்றில் சலிப்பே வரக்கூடாது. ஆனால் அவனுக்கு யானையின்  ருசியும் இருக்க வேண்டும். என் வகையில் விமரிசனம் என்பது சுவையறிதல்தான்.

சுவை என்று சாதாரணமாகச் சொல்கிறோம். சுவை என்றால் என்ன? நாக்குச்சுவையையே எடுத்துக்கொள்வோம். மதுரையின் இட்லி சுவையானது என்கிறார்கள். வடக்குமாசி வீதியில் இட்லிக்கார அன்னம்மா பாட்டி  சாதாரணமாக கால்பரப்பி அமர்ந்து இட்லி அவித்து சுடச்சுட சாம்பாரும் இரண்டுவகை சட்டினியுமாக வாழையிலைக்கீற்றில் வைத்து நீட்டுகிறாள். தேவைப்பட்டால் இட்டிலிப்பொடிமீது நல்லெண்ணையை ஊற்றிக் குழைத்து அளிக்கிறாள். அந்தச்சுவை மதுரையின் சாரங்களில் ஒன்று அல்லவா?

நண்பர்களே, அந்தச் சுவை எத்தனை நூற்றாண்டுகளாக உருவாகித் திரண்டு வந்தது? அந்த வழியாகச் சென்று நாம் மதுரையின் வரலாற்றையே அள்ளிவிடமுடியாதா என்ன? நம் மரபும் நாம் பிறமரபுகளுடன் கொண்ட நூற்றாண்டுக்கால உரையாடலும் அல்லவா இட்டிலியையும் சட்டினிசாம்பாரையும் உருவாக்கி நமக்களித்திருக்கிறது?

சங்ககாலத்திலேயே தமிழில் புளிக்கவைத்து அப்பம்செய்யும் முறை இருந்தது. பின்னர் பல்லவர் காலத்தில் உளுந்து வந்துசேர்ந்தது. மராட்டியர்கள் சாம்பாரைக் கொண்டுவந்தார்கள்; சௌராஷ்டிரர்கள் வெங்காயத்தை அறிமுகம் செய்தார்கள். இட்டிலியை சூடாக சாம்பாரில் முக்கி வாயிலிடும்போது நம் நாவில் கரையும்  அந்த நுண்ணிய சுவையென்பது நம் பண்பாட்டின் சுவை அல்லவா?

இலக்கியத்தில் நாம் தேடும் சுவை என்பது நம் பண்பாட்டின் நுண்மையே ஒழிய வேறு அல்ல. பண்பாட்டு நுண்மைகளை தொட்டுத்தொட்டு எடுத்துசேர்க்கும் ஒரு கலையே இலக்கியம் என்பது.பூத்த காட்டில் பலகோடி மலர்களில் அத்தாவரங்களின் இனிமை திரண்டு நிற்கிறது. ஆழங்களில் வேர்கள் அறியும் இனிமை. சூரிய ஒளியில் இலைகள் அறியும் இனிமை. அந்த இனிமையை மலர்களின் ஆழங்கள் தேக்கிவைத்திருக்கின்றன.

காட்டின் இனிமையை நாம் மலைத்தேனீக்களின் தேனில் அறிகிறோம். கிளைகளில் தொங்கும் தேனீக்கூடுகள் காட்டின் துடிக்கும் இதயங்கள் அல்லவா?  கோடி கோடி மலர்களில் இருந்து தேனீக்கள் கொண்டுவந்துசேர்க்கும் தேன் அது. ஒவ்வொரு தேனீயிடமும் ஒரு துளித்தேன் இருக்கிறது. ஒரு மொழியின் ஒவ்வொரு சொல்லிலும் இருக்கிறது அப்பண்பாட்டின் ஒரு துளிச்சாரம்

பண்பாட்டின் மொத்த நுண்சுவையையும் தன் படைப்பில் திரட்டிவைக்க முடிந்தால் அதுவே பேரிலக்கியம். பேரிலக்கியங்களே ஒரு மக்கள்திரளின் பண்பாட்டு ஆவணங்கள். ஒரு பண்பாட்டுக்குப் பதிலாக ஒரு நூலை நிறுத்த முடிந்தால் அதுவே பேரிலக்கியமென்றார் கதே. அந்தப்பண்பாடு அழிந்தாலும் அந்த நூலில் இருந்து அதை மீட்டுருவாக்கம்செய்யமுடியும். முப்பது நூற்றாண்டுக்கால பழமைகொண்ட தமிழ்ப்பண்பாட்டுக்கு கம்பராமாயணம் ஒன்றேபோதும் என நான் சொல்லத்துணிவேன்.

ஒரு பண்பாடு தன் இலக்கியங்கள் மூலம் தன்னை மெல்லமெல்ல திரட்டிக்கொள்கிறது. ஒவ்வொரு கணமும் அந்தச்செயல்பாடு நடந்துகொட்டிருக்கிறது. எந்த ஒரு சமூகத்தில் எல்லா நாளிலும் பல்லாயிரம் கவிதைகள் எழுதப்படுகின்றன. நூற்றுக்கணக்கில் கதைகள் எழுதப்படுகின்றன. சமூகத்தில் மிக அதிகமாக உற்பத்தி செய்யபப்டும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது இலக்கியம்!

இதைப்பற்றி நீங்கள் எண்ணிப்பார்த்ததுண்டா? நம் சமூகத்தில் ஒருநாளில் எத்தனை கதைகளும் கவிதைகளும் உருவாக்கபப்டுகின்றன என்று? இதழ்களில், நாளிதழ்களில், தொலைக்காட்சிகளில், வானொலிகளில்…. இவற்றில் பெரும்பகுதியை உதவாத குப்பை என நாம் நிராகரித்திருப்போம். இவற்றை ‘குறைக்க’ ஏதேனும் செய்யவேண்டும் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால் இவை மூச்சுக்காற்று போல ஒரு சமூகத்தின் இயல்பான செயல்பாடு என்றே நான் நினைக்கிறேன்.

இந்த இலக்கியச்செயல்பாடுமூலம்தான் ஒரு சமூகத்தின் புனைவுமொழியும் கவிமொழியும் உயிருடன் நீடிக்கின்றன. ‘வெட்டவெளியில் ஒரு பறவை’ என்று ஒரு கவிஞன் எழுதியதுமே ஏன் நமக்கு சுதந்திரம் என்னும் விழுமியம் ஞாபகம் வருகிறது? அந்தக் கவிமொழி நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதனால்தான். இலக்கியத்தின் நுண்மொழி என அதைச் சொல்லலாம்.

இலக்கியம் தொடர்புறுத்தப்படுவது அந்த நுண்மொழி வழியாகவே. அந்த மொழி நாம் பயன்படுத்தும் அன்றாட மொழிக்கு நிகராகவே செயல்பாட்டில் இருந்தாகவேண்டியிருக்கிறது. அது பண்பாட்டில் இருந்து பெறப்படும் நுண்மையான சுவைகளில் இருந்து முளைப்பது. ‘அமைதி என்பது வந்தமர்ந்த பறவையினால் அசையும் கிளையோ’  என்று கவிஞன் [தேவதேவன்] எழுதினால் அந்த அனுபவத்தை நம் மனம் அறிகிறது. அவனறிந்த  அந்தத்தருணத்தின் அழகை, அந்தப் பண்பாட்டு நுண்மையின் சுவையை நாம் பெறுகிறோம்.

இதற்காகவே ஓயாமல் இலக்கியம் எழுதப்படுகிறது. பல தளங்களில். பல தரங்களில். இதன் மூலம் அச்சமூகம் தான் வாழும் வாழ்க்கையை நுட்பமாக சுவைக்கிறது. அந்தச்சுவையை பதிவுசெய்து பகிர்ந்து கொள்கிறது. அதன்மூலம் மேலும் சிறந்த சுவைக்கான எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. மெல்லமெல்ல தன் சுவையை அதிகரித்துக்கொள்கிறது. அதாவது தன் பண்பாட்டை ஒவ்வொரு கணமும் நுட்பமும் கூர்மையும் கொண்டதாக ஆக்கிக்கொள்கிறது

தன்னைத்தானே நுண்மைப்படுத்திக் கொள்ளும் இந்தப்போக்கில்தான் மேலும் மேலும் நல்ல இலக்கியங்கள் உருவாகின்றன. அவை திரண்டு பேரிலக்கியங்கள் பிறக்கின்றன. பேரிலக்கியங்கள் அப்பண்பாட்டின் களஞ்சியங்கள். பின்னர் வரும் அனைத்து படைப்புகளும் அப்பேரிலக்கியங்களாலேயே அளவிடப்படுகின்றன.

பேரிலக்கியங்கள் விளைந்த தமிழில் எல்லா இலக்கியங்களும் அவற்றின் முன்வைத்து மட்டுமே அளவிடப்பட வேண்டும், அதுவே இயல்பானது. ஒரு நாவலின் நாடகத்தனமும் கவித்துவமும் கம்பராமாயணத்துடன் ஒப்பிடப்படுகின்றன. காதலின் பரவசம் கொண்ட கவிதை ஆண்டாளின் சொற்களுக்கு முன் நின்றாகவேண்டியிருக்கிறது. இலக்கிய அளவுகோல்கள் இவ்வாறுதான் உருவாகின்றன.

பெரும்பசியுடன் இலக்கியத்தில் இறங்கும் இலக்கியவிமர்சகன்கூட இலக்கியத்தின் அரிதாகக் கிடைக்கும் அதிநுண்மைகளைத்தான் முதலில் அடையாளம் கண்டுகொள்வான். அவற்றை அறிந்தபின்னரே அவன் அடுத்த கட்டத்துச்செல்ல வேண்டும்.  ஈழ இலக்கியம் பற்றிப் பேசும்போது நான் ஏன் மு.தளையசிங்கம்,எஸ்.பொன்னுதுரை,சு.வில்வரத்தினம், அ.முத்துலிங்கம் என்று செல்கிறேன் என்ற வினாவுக்கு இந்தப்பதிலையே என்னால் சொல்லமுடியும்.

இவர்கள் மட்டுமே எழுதுகிறார்கள் என்று நான் சொல்லமாட்டேன். யானை தன் பெரும்பசியையும் மீறி கண்டுகொள்ளும் நுண்சுவைகள் இவர்களின் ஆக்கங்களில் உள்ளன என்பதே அதன் பொருள். ஒரு மொழியில் சிறந்த இலக்கியங்கள் உருவாகவேண்டுமென்றால் அப்பண்பாட்டின் அனைத்துச் சுவைகளும் இலக்கியம் நோக்கி வரவேண்டும். அங்கே அவை செறிவுறப்வேண்டும், மேம்படவேண்டும். அந்தப் பரிணாமத்தின் உச்சியில் மேலும் மேலும் சிறந்த இலக்கியங்கள் உருவாகும்.

விமரிசகன் அந்த இலக்கியங்களை அப்பண்பாடு உருவாக்கிய பேரிலக்கியங்களை வைத்து மதிப்பிடுவான். அந்த இலக்கியங்களை வைத்து அவற்றுக்கு கீழே உள்ள பிற இலக்கியங்களை மதிப்பிடுவான். மூங்கில் மரமே மூங்கில் தளிரை உருவாக்கியதென்று யானைக்குத்தெரியும். மூங்கில்தளிரில் மூங்கில்தண்டின் சுவை மேலும் செறிவுகொண்டிருக்கிறதென அது புரிந்திருக்கிறது.

சுவை என்னும் விஷயத்தை மேலும் அழுத்திச்சொல்ல விரும்புகிறேன். என் அப்பா மறைந்த பாகுலேயன் பிள்ளை அவரது கிராமத்துக்கு வெளியே போகாமலேயே வாழ்ந்தார். அங்கேயே அவர் தேடிய அனைத்துச்சுவைகளும் இருந்தன.  ஒரு வயலில் மட்டும் செம்முட்டன் என்னும் தனிநெல்லை பயிரிடுவார். அதற்கு ரசாயன உரம் போட மாட்டார். கசக்கும் தாவரங்களின் தழையைக் கூட போடமாட்டார். அந்த நெல்லின் கைக்குத்தல் அரிசியை மட்டுமே சாப்பிடுவார். புட்டுக்கு மட்டும் வேறு ஒரு நெல். புட்டுமணியன் என்னும் அந்த நெல் புட்டு அவிப்பதற்கு மட்டுமே உரியது

முற்றத்தில் நின்ற நான்கு தென்னை மரங்களில் இருந்து பறித்த தேங்காய்களையே கறிக்கு அரைக்கவேண்டும் என்பார். நெய் இல்லாத சூரை மீன் வாங்கினால் மட்டும் நெய் குறைவான ஆற்றங்கரை தென்னையில் தேங்காய் பறித்து அரைக்க வேண்டும். ஊறுகாய்க்கு காய்தருவதற்கு அதற்கான மாமரம் உண்டு. மாம்பழத்துக்கு வேறு மாமரம். மாம்பழப்புளிசேரி வைப்பதற்கு வேறு மாமரம். இதில் எது மாறினாலும் அவரால் கண்டுகொள்ளமுடியும். குறைசொல்லும் வழக்கம் அவருக்கு இல்லை. தொடாமல் நீக்கி வைத்துவிடுவார்.

இது நாவின் சுவை. இவ்வாறு எத்தனை சுவைகள் உள்ளன வாழ்க்கையில். ஒவ்வொரு இடத்திலும் குடிநீருக்கு தனிச்சுவை. ஒவ்வொரு ஆற்றுநீரிலும் குளிப்பதற்கு தனி சுகம் இருக்கிறது. குமரிமாவட்ட ஆறுகளின் நீர் கனமாக தோலை அழுத்தும், தாமிரவருணிநீர் மயில்பீலிபோல உடலை வருடிச்செல்லும். ஒவ்வொரு பருவகாலத்துக்கும் ஒவ்வொரு அழகு. ஒவ்வொரு மணம். ஒவ்வொரு மண்ணிலும் ஒவ்வொரு வசந்தகாலம். குமரிமாவட்டத்திலேயே மலைப்பகுதியில் மழை கருமையானது. நாகர்கோயிலில் செம்மைகலங்கும் நிறம்கொண்டது. நெல்லைநிலத்தில் அதற்கு விசித்திரமான நீல நிறம்.

அனுபவங்களின் சுவைகள் எல்லையற்றவை. வாழ்க்கை மாறும் தோறும் வண்ணங்கள் மாறுகின்றன. பள்ளிப்பருவ ஆதர்ச அழகி நம் கண்ணெதிரே அரைக்கிழவியாகி நிற்கும் அனுபவத்தின் விசித்திரம்தான் என்ன! அவள் தோற்றத்தின் முதுமைக்குமேல் மிக இளமையான நினைவுகள் கடந்துசெல்வதன் மாயத்தை எப்படிச் சொல்வது. நமது மார்பின்மீது குப்புறக்கிடந்து தூங்கி நம் வயிற்றின்மீது சிறுநீர்  சூடாக வடியவிட்ட நம் மகன் கால்தடுக்கும் நம்மை கனத்த கைகளுடன் தோள்பற்றி நிறுத்தும் அனுபவத்தின் எல்லையின்மைதான் எப்படிப்பட்டது!

இன்பங்களை மட்டும் சொல்லவில்லை. துன்பங்களும் சுவைகளே. எத்தனை கொடுந்துன்பத்திலும் நம் உள்ளே ஒரு நாம் அவற்றை ரசித்துக் கவனித்துக் கொண்டிருக்கிறோம். துன்பத்தை அனுபவித்த நாம் மெல்லமெல்ல மட்கி மறைந்தாலும் துன்பத்தைக் கண்ட நாம் அப்படியே நீடிக்கிறோம். கடந்தகால துன்பங்களெல்லாம் இன்றைய மறைமுக இன்பங்களாவதன் மர்மம் இதுவே.

அத்தனை சுவைகளையும் மொழியினூடாக பதிசெய்து சேர்த்து வைக்கும் கலையே இலக்கியம். அப்படிச்சேர்த்த சுவைகளினூடாக மேலும் மேலும் சுவைகளை கற்பனைசெய்வதே இலக்கியத்தின் வழிமுறை. அவ்வாறு கற்பனைசெய்யபப்ட்ட அதிநுண்ணிய ஒரு சுவை நோக்கி எப்போதும் பண்பாட்டை இட்டுச்செல்ல முயல்வதே இலக்கியத்தின் இயல்பு.

அத்தகைய இலல்பு கொண்ட படைப்பாளிகள் இவர்கள். இவர்களின் ஆக்கங்களில் நாமறிந்த தமிழ்ப்பண்பாட்டின் சாரம் வெளிப்படுகிறது. நான்றியாத ஈழத்து மண்ணின் நூறு நூறு சுவைகள் எழுந்துவருகிறன. அம்மண்ணில் ஒவ்வொருநாளும் நிகழ்ந்து காலத்தில் மறையும் வாழ்க்கையின் கணங்கள் நுண்ணிய சித்தரிப்புகள் வழியாக நம் பண்பாட்டுச்சாரத்தில் சேகரிக்கப்படுகின்றன. நம் சுவைநரம்புகளாக அவை மாறுகின்றன. அதனாலேயே இவர்கள் முக்கியமான படைப்பாளிகள்.

முன்னொருகாலத்தில் சீனமன்னன் ஒருவன் ஓர் இனக்குழுவை முழுமையாகவே அழித்தொழித்தான். அவர்களின் பண்பாட்டின் ஒரு சிறிய அம்சம்கூட இல்லாமல் செய்தான். அந்த இனக்குழுவின் குலப்பாடகனைக் கொன்றான். அந்த பாடகனின் நரம்பிசைக்கருவியையும் உடைத்தான். ஆனால் அக்கருவியில் நரம்புகளை இழுத்துக்கட்டும் ஒரு கிளிஞ்சலை மட்டும் ஒரு வீரன் எடுத்து வைத்துக்கொண்டான். அது வித்தியாசமாக இருந்தது.

பல நூற்றாண்டுகள் கழிந்து ஒரு இசைக்கலைஞன் அந்தக் கிளிஞ்சல் ஓரு நரம்பிசைக்கருவியின் உறுப்பு என்று கண்டுகொண்டான். அதை பயன்படுத்தவேண்டுமானால் அந்த நரம்புகள் எப்படி இருக்க வேண்டும் என அவதானித்தான். அந்தநரம்புகளை கட்ட அந்தக்கருவியின் குடம் எப்படி இருக்க வேண்டும் என்று ஊகித்தான். அவ்வாறாக அவன் அந்தக் கருவியை மீண்டும் உருவாக்கினான்

அந்தக்கருவியை அவன் இசைத்தபோது அந்தக் குலப்பாடகனின் இசை மீண்டு வந்துது. அந்த இசைஎழுந்தபோது இறந்துபோன இனக்குழு மூதாதையரின் ஆவிகள் மக்களின் உடல்களில் தோன்றின. அவை அழுதபடி தங்கள் கதைகளை சொல்ல ஆரம்பித்தன. அந்தக்கதைகள் வழியாக எல்லாமே மீண்டு வந்தது.

ஒரு துளி சம்பலில் யாழ்ப்பாணம் எஞ்சுகிறது நண்பர்களே. நம் நாக்கில் எஞ்சும் ஒரு சுவை ஒரு வாழ்க்கைமுறையின் விதை. நம் வாக்கில் எஞ்சும் ஒரு சொல் ஒருபண்பாட்டின் விதை.

இலக்கியம் என்பது ஒரு மகத்தான விதைநிலம்

நன்றி
[26-4-2009 அன்று ஆஸ்திரேலியா மெல்பர்ன் நகரில் உதயம் இதழும் விக்ரோரியா பல்தேசிய கலாசார (VMC) ஆணைம், மெல்பேன் தமிழ்சங்கம்  இணைந்து நடத்திய ‘ஈழ இலக்கியம் ஓரு விமரிசனப்பார்வை’ [ஜெயமோகன்] என்னும் நூலின் வெளியீட்டுவிழாவில் ஆற்றிய உரை]

 

ஆஸ்திரேலியாவில் என் நிகழ்ச்சி

மறுபிரசுரம்/ முதல்பிரசுரம் 2009 ஜூலை

முந்தைய கட்டுரைஇண்டர்ஸ்டெல்லார் – கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 45