அருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா

சமணர்களுக்கு முக்கியமான புனிதத்தலமான மிர்பூர் ஒரு காலத்தில் ஒரு ஊராக இருந்திருக்கிறது. ஆனால் இப்போது அங்கே ஒரு குடியிருப்புகூட இல்லை. கச்சிதமான லாடவடிவில் மலை சூழ்ந்திருக்க நடுவே ஒரு வெண்பளிங்கு ஆலயம். பார்ஸ்வநாதரின் சன்னிதி. அதனருகே இரு சிறிய ஆலயங்கள். ஒரு தர்மசாலை.

தர்மசாலையை அந்த ஊருக்கு பெரியது என்றே சொல்லவேண்டும். இருநூறு பேர் தங்கும் வசதி உடையது. அதை கவனித்துக்கொள்ளவும் கோயில் பூசைக்குமாக நான்குபேர். அவர்கள் தனியாக அங்கே தங்கியிருக்கிறார்கள். பத்து கிமீ தூரத்தில்தான் கிராமம். சுற்றியிருக்கும் காடு முட்புதர்களும் குட்டை மரங்களும் அடர்ந்தது. மலையின் மடிக்குவையில் அப்போது பிறந்த குழந்தை போல வெண்ணிறக்குருத்து உடலுடன் இருந்தது மிர்பூர் ஆலயம்.

மிர்பூருக்குக் கிளம்பியபோது சாயங்காலம் நான்குமணி. மௌண்ட் அபுவில் இருந்து மிர்பூர் எழுபது கிமீ என்றது கூகிள். அஸ்தமனத்தை மிர்பூரில் பார்க்கலாமென நினைத்தோம். ஆனால் கூகிள் கொண்டுவிட்ட வழி ஒரு மலை இடுக்கு. செங்குத்தான கற்பாறை வழி. குதிரையில் இறங்கலாம், கொஞ்சம் கஷ்டப்பட்டால்.

மௌண்ட் அபுவின் நக்கி ஏரியைச்சுற்றியிருக்கும் சிறிய சாலையில் சுற்றிச்சுற்றி தட்டழிந்து வழிகேட்டோம். ஏரியைச்சுற்றிய பாதையில் நான்கு கிமீ சென்ற பின் வழிமூடியிருக்க பின்னால் ஓட்டியே மொத்த தூரத்தையும் திரும்பவந்தோம். மீண்டும் பழைய சாலைக்கே வந்து மீண்டும் வழி பிடித்து மிர்பூர் வழியை ஒருவழியாக கண்டு பிடித்தபோது மலையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும், நூற்றி ஐம்பது கிமீ ஆகும் எனத் தெரிந்தது.

மிர்பூருக்கு வந்து அஸ்தமனம் பார்க்க முடியாதென உறுதியானதும் ஒரு விவசாயியின் வயலில் இறங்கி வெந்தய வயல்களுக்கு அப்பால் அணைந்து கொண்டிருந்த சூரியனைப் பார்க்கலாமென முடிவெடுத்தோம். நாங்கள் இறங்கிச்சென்றதுமே குடும்பத்தலைவர் சுருங்கிய சிரிக்கும் கண்களுடன் வந்து வரவேற்றார்.

வசதியான விவசாயியான உக்காராம் அறுவடை இயந்திரம் டிராக்டர் எல்லாம் வைத்திருந்தார். தொழுவம் நிறைய எருமைகள். பல காளைகள். கோதுமை அறுவடை முடிந்து மலைமலையாக வைக்கோல் குவித்து வைத்திருந்தார். களத்துமேட்டில் ஏழெட்டு கயிற்றுக்கட்டில்கள். சாணிமணம். வைக்கோல்மணம்.

அவருக்கு நான்கு பையன்கள், ஒரு பெண். பெண் அழகி. எங்களைப்பார்த்ததும் வெட்கம் தாங்காமல் வீட்டுக்குள் ஓடிவிட்டாள். பையன் கான்வெண்ட் மாணவன். ஒரு சொல் அங்கிரேசி தெரியாது, அந்த வெட்கம் இருந்தது.

மிர்பூர் செலும் வழியிலேயே நல்ல தர்மசாலைகள் பல உள்ளன என்று உக்காராம் சொல்லி அனுப்பியிருந்தார். இப்பகுதியில் வழிநெடுகிலும் நிறைய சமண ஆலயங்கள் இருந்தன. பளிங்கினாலும் சுதையாலும் புதியதாகக் கட்டப்பட்டவை. சமணர்கள் நிறையபேர் வாழ்கிறார்கள் போலும். அவர்கள் வணிகர்கள் என்பதனால் பணமும் கைவசம் உண்டு

ஆனால் மிர்பூர் சென்று அங்கே தங்கலாமென எண்ணினோம். இரவு ஏழரை மணிக்கு மிர்பூர் வந்தோம். மிர்பூர் தர்மசாலை அருகெ சென்றபோது சமையற்காரர் வந்து ”என்ன வேண்டும்?” என கேட்டார். ”நாங்கள் பயணிகள் என்றதும் தங்குவதில் பிரச்சினை இல்லை, ஆனால் சமையல் செய்ய முடியாது, அதற்கான வசதி இல்லை” என்றார்.

அவர் தயங்குவதைக் கண்டு “நாங்கள் சமணர்கள் அல்ல” என்றதும் ”சமணர்களுக்கு மட்டும் தங்குமிடம் என்பதே வழக்கம்” என்றார். நாங்கள் திரும்பப்போனோம். அவரது நிர்வாகியிடம் தொலைபேசியில் பேசச்சொன்னார். கிருஷ்ணன் வழக்கறிஞர் தோரணையில் பேசினார். அவர் உற்சாகமடைந்து உடனடியாக எங்களுக்கு தங்குமிடம் அளிக்கச் சொல்லி உணவுக்கு ஏற்பாடும் செய்தார்.

இதுவரை தங்கியதிலேயே விசித்திரமான இடம். சுற்றிலும் மிக நெருக்கமாக உயர்ந்த மலைகள். விடுதி தவிர கட்டிடங்களே இல்லை. அதில் தன்னந்தனியாக இருந்தோம். வேறு பயணிகள் எவரும் இல்லை. இரவில் குளிருக்கு ரஜாய் கொடுத்தார்கள். ஆனால் அந்த அளவுக்கு குளிர் இல்லை. நண்பர்கள் காரிலேயே சாப்பிடச்சென்றார்கள். நான் கட்டுரையை எழுதிமுடித்து விட்டுக் காத்திருந்தேன்.

அவர்கள் கொண்டுவந்த பழங்களைச் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டேன். காலை ஏழுமணிக்குத்தான் விழித்தேன். சமையற்காரர் ஒரு பெரிய தகரக்கடாயில் சுடுநீர் கொதிக்கவைத்துக்கொண்டிருந்தார். அதை அள்ளிக்கொண்டு சென்று குளித்தேன். அவர் அளித்த சூடான சாய் குடித்தேன். புத்துணர்ச்சியுடன் இளவெயில் பரவ ஆரம்பித்த மிர்பூரின் மலைகளை பார்த்தேன்.

மிர்பூரின் மலைக்குமேல் பழைய கோட்டை ஒன்றின் இடிபாடுகள் தெரிந்தன. ஆயிரம் வருடங்கள் முன்னரே கைவிடப்பட்ட கோட்டை. அங்கே செல்லமுடியாது. முட்புதர்கள் அடர்ந்த மலைச்சரிவு. மேலே மலையுச்சியில் அம்பாதேவி கோயில் ஒன்றும் தெரிந்தது. இரவில் அதற்குக் கீழிருந்தே விளக்கு போடுகிறார்கள். மேலே செல்ல படிகள் உண்டு. காலையில் மலைச்சரிவெங்கும் மயில்கள் அகவியபடி கூட்டம் கூட்டமாக அலைந்தன.

மிர்பூரில் கிடைத்த கல்வெட்டு ஒன்று அடிவாரத்தில் உள்ள சமண ஆலயம் முன்பு சம்பிரதா என்ற ராஜபுத்திர மன்னரால் கட்டப்பட்டது எனத் தெரிவிக்கிறது. அந்த ஆலயம் இடிக்கப்பட்டு இடிபாடுகளாகக் கிடந்தது. ஆசாரிய ஜெயானந்த சூரிசஸ்வரஜி மகராஜ் என்ற சமணத் துறவியின் ஆணைப்படி அவரது மாணவரான ஸ்ரீ சமந்த் என்ற வணிகரால் இந்த ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

கோயில் இருக்கும் இடத்தைச்சுற்றி ஏராளமான கோயில்கள் மற்றும் அடித்தளங்கள் கண்டடையப்பட்டுள்ளன. ஆனால் இந்த மறைந்த நகரம் பற்றி பெரிய அளவிலான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆய்வுகளும் நிகழவில்லை.

வெண்பளிங்காலான அழகிய கோயில். உயரமான அடித்தளம் கொண்டது. இடிக்கப்பட்ட பழைய கோயில் இருநூறாண்டுகளுக்கு முன்னர் திரும்ப கட்டப்பட்டிருக்கிறது. பெரும்பாலான சிலைகள் சீராக இருந்தன. உடைக்கப்பட்ட மூலச்சிலை மட்டும் மீண்டும் செய்யப்பட்டது. ஐந்து தலை நாகம் படமெடுக்க அமர்ந்திருந்த பார்ஸ்வநாதர் சிலையை பூசாரி காவித்துணியால் துடைத்துக்கொண்டிருந்தார்.

அழகிய மண்டபம். குடைவடிவ உட்கூரையில் வித்யாதேவியர் சிலைகளுக்கு பதிலாக பிள்ளையார் சிலையும் தேவர்களின் சிலையும் இருந்தன. சுற்றுச்சுவர்களில் வெண்பளிங்கில் செதுக்கப்பட்ட அழகிய தேவியர் சிலைகள். சிவனும் விஷ்ணுவும் பிரம்மாவும் இருந்தனர்.

ஆனால் அவர்களுக்கு தென்னகத்தில் நாம் கொடுக்கும் அடையாளம் ஏதும் இல்லை. காலடியில் காளை அல்லது மான் இருந்தால் சிவன். சிலசமயம் கையில் பாம்பு அல்லது சூலம் இருக்கும். தேவியின் காலடியில் யானையும் கையில் தாமரையும் இருந்தால் அது விஷ்ணு. சமணச் சிற்ப இலக்கணத்துக்கு ஒரு நல்ல நூல் வாங்கி இந்த வடிவங்களைப் புரிந்துகொள்ள முயலவேண்டும்.

சமண ஆலயங்களில் பெரும்பாலும் இந்து தொன்மங்களே செதுக்கப்பட்டுள்ளன. உண்மையில் சமணம் இந்து மதத்தில் இருந்து தத்துவார்த்தமாக மட்டுமே வேறுபட்டது. பூஜைமுறைகள், ஆசாரங்கள், தொன்மங்கள், தேவர்கள், ஆலய அமைப்பு எல்லாமே ஒன்றுதான். வட இந்தியாவில் ஒரே மதமாகவே இவை பற்பல நூற்றாண்டுக்காலம் இருந்திருக்கின்றன. விஷ்ணு இல்லாத ஒரு சமண ஆலயமே எங்குமில்லை.

ஆகவேதான் பின்னர் சமணர்களில் பெரும்பாலானவர்கள் வைணவர்களாக ஆனார்கள். காந்தியின் குடும்பம் போல சமணமும் வைணவமும் ஒரே குடும்பத்துக்குள் இருக்க முடிந்தது. இன்றும் இந்த இணைப்பு அப்படியே நீடிக்கிறது. சமண ஆலயத்து இந்து தொன்மச்சித்தரிப்புகளில் தேவர்களும் அசுரர்களும் பாலாழி கடைந்து அமுதம் எடுக்கும் காட்சி முக்கியமானது.

கோயில்களைப் பார்த்தபின் அருகே உள்ள குன்றுமேல் ஏறினோம். வர வர காலையில் ஒரு மலை ஏறாவிட்டால் உடம்பு தினவெடுக்க ஆரம்பித்துவிடுகிறது. முட்புதர் மண்டிய காடு. சிவந்த பாறைகள். இந்தக் கல்லால்தான் தரங்கா கோயில் கட்டப்பட்டிருந்தது.

முட்கள் வழியாக கஷ்டப்பட்டு மேலேறிச்சென்று சூரிய ஒளி பரவிய மலைகளைப்பார்த்தோம். உரிமையாளரின் கை வருடலை ஏற்று நிற்கும் நாய்க்குட்டிகள் போல மரங்கள் சூரிய ஒளியை பூசிக்கொண்டு சலனமற்று நின்றன. அவ்வப்போது உவகை தாளாமல் கொஞ்சம் நெளிந்தன. வால்குழைத்து உடல் சிலிர்த்தன. உடலே முள்ளாக சிலிர்த்த மரக்கூட்டங்கள். முட்களின் நிழல்கள் மண்ணைக் கீறாமல் புழுதியில் விழுந்து கிடந்தன.

வறண்ட நிலத்துத் தாவரங்கள் முட்களை உருவாக்கிக்கொள்கின்றன என அஜிதன் ஒரு முறை சொன்னான், மேயப்படுவதை அவை தாங்க முடியாது. அவை முட்களை நீட்டி எச்சரிக்கையுடன் நிற்கின்றன.

மாறாக வரண்ட நிலத்து மக்கள் நேர் மாறாக மலர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களா என்ன? பெரும்பாலும் பாலைநில மக்களே கொடையும் பகிர்ந்துண்ணும் வழக்கமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அது அவர்கள் எதிர்மறைச்சூழல்களை கூட்டாகச் சந்தித்து தங்கிவாழ அவசியமான பண்பாட்டுப் பழக்கமாக இருக்கிறது.

சமண மதம் உருவான நிலம் இன்று பெரும்பாலும் பாலை. அது உருவான சரஸ்வதி சிந்து நாகரீகத்தின் காலகட்டத்துக்குப்பின் இந்நிலம் நீர்வறண்டு பாலையாகியது. ஆனால் இந்தப் பாலையில் அது நீருக்குப்பதில் கருணையைப் பாய்ச்சி வளம் கொழிக்கச்செய்தது.

பத்துமணிக்குக் கிளம்பினோம். வரும் வழியில் ஓர் டாபாவில் சாப்பிட அமர்ந்தோம். கடுமையான பசி இருந்தமையால் சப்பாத்தி டால் சப்ஜி என கொண்டுவரச் சொன்னோம். நெய் வேண்டுமா என்று கேட்டார். சரி என்றபோது நாலைந்து சொட்டுதான் எதிர்பார்த்தோம். ஆனால் அவர் ஆளுக்கு நூறு மில்லி நெய்யை அள்ளி குளமாக விட்டுவிட்டுச் சென்றார். அதுதான் வழக்கமாம்.

உண்மையில் ருசியாகத்தான் இருந்தது. ஆனால் முழுநாளும் எவரும் எதுவுமே சாப்பிட வைக்கவில்லை. இரவில்கூட பழங்கள்தான்.ஆனால் லாரி ஓட்டுநட்கள் சப்பாத்தியை புனல் போலக் குவித்து அதில் நெய்யை வாங்கி உறிஞ்சிக்குடித்துச் விட்டுச்செல்வதைக் கண்டேன். அவர்களுக்கு வயிற்றுக்குள் எரியுலை இருக்கலாம்.

நேராக உதய்புர் அருகே உள்ள நகடா ஊருக்குச் சென்று அங்குள்ள சாஸ் பாகு கோயில்களைப் பார்ப்பது திட்டம். நேராக குறுக்கு வழி போட்டதில் வழக்கம்போல கூகிள் விளையாடியது. சரியான ராஜஸ்தானிய கிராமங்களுக்குள் நுழைந்து மண்படிந்த சாலைகளில் சுற்றிவர ஆரம்பித்தோம். புழுதி மொத்த கிராமங்களையும் மூடியிருந்தது. கூரைகளில், இலைகளில், மக்கள் தலைமயிரில், ஆடைகளில் எல்லாம் செம்புழுதி. உயர்ந்த மலைச்சரிவுகள் முழுக்க புழுதி.

மலைப்பாறைகள் எல்லாம் சோன்பப்டி அடுக்குகள் போல அமைந்திருந்தன. அவை உடைந்து சரிந்த சிப்பிக்கற்கள் சில்லுக்கற்களால் ஆன சரிவுகள். மீண்டும் மீண்டும் வழி கேட்டோம். பொறுமையாக ராஜஸ்தானி மொழியில் அவர்கள் சொன்னதை இந்தியில் புரிந்துகொண்டோம். தப்பாக வண்டியைத் திருப்பி சுற்றி அவர்களிடமே வந்து மீண்டும் வழிகேட்டோம்.

ராஜஸ்தானின் இப்பகுதியில் ஓரளவு நீர்வளம் உண்டு. சில ஓடைகள் சாலையை அறுத்துச் சென்றன. கோதுமை ஆங்காங்கே பயிரிடப்பட்டிருந்தது. பெண்களின் உடைகளில் ஆண்களின் தலைப்பாகைகளில் வண்ணங்கள். ஆனால் நாம் திரைப்படங்களில் பார்ப்பது போல அவை பளீரிடவில்லை. புழுதிபடிந்து மங்கியிருந்தன. இம்மக்கள் அடர்வண்ணங்களைத் தெரிவுசெய்வதற்கான காரணமே இதுதான் போலும்.

வழிகேட்டு ஒருவழியாக மையச்சாலைக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து நகடா வந்துசேர்ந்தோம். சாஸ் பாகு கோயில்களை விசாரித்துச் சென்று சேர்ந்தோம். சாஸ்பாகு கோயில்களை ஒட்டி இங்கே ஒரு சுற்றுலாமையம் உருவாகியிருக்கிறது. வெள்ளையர்கள் தென்பட்டனர். மலைமேல் ஒரு தங்குமிடம் விசித்திரமான வடிவில் ராஜஸ்தானிய கோட்டைகள் போல அமைக்கப்பட்டிருந்தது.

நகடா முன்பு நாகதரா என்று அழைக்கப்பட்டிருக்கிறது. மேவார் மன்னரான நாகாதித்யர் ஆறாம் நூற்றாண்டு வாக்கில் உருவாக்கிய நகரம். நகரைச்சுற்றி மலைகள் அரண் செய்கின்றன. அம்மலைகள் மேலே கோட்டை இருந்திருக்கிறது. ஆங்காங்கே அதன் இடிபாடுகள் இருந்தன.

ஒரு காலத்தில் மேவார் நாட்டின் தலைநகரமாக இருந்த ஊர் இது. பத்தாம் நூற்றாண்டு வாக்கில் இந்த நகரம் முழுமையாகக் கைவிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட புராதன ஆலயங்களின் அடித்தளங்கள் கண்டடையப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானது சாஸ் பாகு கோயில் தொகை.

சாஸ் பாகு என்ற பெயர் சகஸ்ர பாகு என்ற சொல்லின் மரூஉ. ஆயிரம் தோள்கள் எனப் பொருள். விஷ்ணுவுக்கான கோயில்கள் இவை. இரு பெரிய கோயில்கள் அருகருகே உள்ளன. சுற்றி எட்டு சிறிய கோயில்கள். அவற்றில் இரு கோயில்கள் அடித்தளம் மட்டும் எஞ்சுகின்றன. பத்தடி உயரமான பெரிய அடித்தளம் மேல் இந்தக் கோயில்கள் அனைத்தும் அமைந்துள்ளன. உள்ளூரில் மாமியார் மருமகள் என்ற பொருளில் இக்கோயில்களைச் சொல்கிறார்கள்.

இவை எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. முகலாயர்காலத்தில் இக்கோயில்கள் இடிக்கப்பட்டு மூலவிக்ரகம் அகற்றப்பட்டது. அதன்பின் அப்படியே கிடந்து வெள்ளையர் காலகட்டத்தில் மீட்கப்பட்டன. இன்று இந்தியாவின் முக்கியமான கலைப்பொக்கிஷங்களாக இவை பாதுகாக்கப்படுகின்றன. சுற்றுலாப்பயணிகள் மட்டுமே வருகிறார்கள்.

பெரிய ஆலயம் முகப்பில் பெரிய தோரண வாயிலுடன் கூடியது. கருங்கல்லால் ஆனது. பிற்காலத்தில் சலவைக்கல்லில் சாதித்த எல்லா நுட்பங்களையும் இங்கே கருங்கல்லில் அடைந்திருக்கிறார்கள். நான் நேற்றுவரை நம்பி வந்த கொள்கைகள் எல்லாவற்றையும் கைவிடவேண்டியிருந்தது. கருங்கல் சலவைக்கல்லை விட மென்மையாக குழைந்தது, நெளிந்தது, பொன்னுக்கு நிகராக நுண்மைபூண்டது.

சிற்பங்கள் கணுக்கணுவாக பூத்த நாகராபாணி கோயில் இது. சாண் அளவுள்ள சிலைகளே அதிகம். பூமாதேவியை ஏந்திய பூவராகன், உலகளந்த பெருமாள் சிலைகள் முழுமையும் நுட்பமும் கொண்டவை. கோயிலைச்சுற்றியும் முகமண்டபத்திலும் கூரை அடியிலும் உத்தரங்களிலும் எங்கும் சிற்பங்கள். சட்டென்று மனிதர்களும் தேவர்களும் தெய்வங்களும் கூடி ஒருவர் மேல் ஒருவராகக் குவிந்து தங்கள் உடலாலேயே ஒரு கோயிலைக் கட்டியது போலத் தோன்றியது.

 

கோயிலின் சிலைகளில் பெரும் ஊர்வலங்கள், போர்க்களக்காட்சிகள், யானைகளின் சாகசங்கள் என கண்மறைந்த ஓர் உலகமே எழுந்து வந்தது. தேவதாசிகளின் புணர்ச்சிக்காட்சிகள். பலவகையான நடனங்கள். ஏராளமான வாத்தியங்கள். தொன்மங்களின் சித்தரிப்புகள்.

பூமிச்செப்பின் வானத்து மூடியைத் திறந்து ஒரு அரிய நகையைக் காட்டுவது போல அந்தக் கோயில். ஆனால் பெரும்பாலான சிலைகள் மூளியானவை. கோயிலே விழி பிடுங்கப்பட்ட கண்பள்ளம் போன்ற கருவறையுடன் பாழடைந்தே கிடந்தது.

 

நகடாவில் ஓர் சமணக் கோயில் உள்ளது. மேவார் இந்து மன்னர்களால் கட்டப்பட்டது. இந்நகரம் சமண வணிகர்கள் நிறைந்ததாக இருந்திருக்கிறது. அந்தக் கோயில் நெடுங்காலம் பாழடைந்து கிடந்திருக்கிறது. இப்போதுதான் கோயிலை சற்றுத் தள்ளி வெண்பளிங்கில் எடுத்துக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள். கரிய கல்லால் ஆன பத்தடி உயரமான ஆதிநாதர். இங்கே அவருக்கு அத்புத்ஜி என்று பெயர் – அதிசயமானவர் என்ற பொருளில்.

இடிந்த பழைய கோயிலைச்சுற்றி இடுப்புவரை உடைக்கப்பட்ட தீர்த்தங்கரர்களின் சிலைகள் சிதறிக்கிடக்கின்றன. நாங்கள் செல்லும்போது சலவைக்கற்களை செதுக்கி அடுக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. குதிரைகள், மின்தூக்கிகள் வேலை செய்துகொண்டிருந்தன. கம்பீரமான நாலைந்து குதிரைகள் சோம்பலாக நின்று அலட்சியமாக எங்களைப்பார்த்தன. குதிரை தொன்மையான வரலாற்றைச் சேர்ந்த ஒரு மிருகம். மின்தூக்கியின் அருகே அது நின்றபோது இரு காலகட்டங்கள் சந்தித்துக்கொள்வது போலத் தோன்றியது.

காரில் ராஜஸ்தானின் பொசுங்கிய மலைகளை, எரிந்தவிந்த நிலவிரிவை, புழுதி மூடிய தெருக்களை பார்த்துக்கொண்டே வந்தோம். காருக்குள் வீசிய காற்று குளிருடன் இருந்தது. வழியில் ஒரு பெரியவர் வழிகேட்டு எங்கள் காரில் ஏறி இருபது கிமீ தள்ளி அவரது ஊரில் இறங்கிக்கொண்டார். ஷுக்ரியா என்று சொல்லிவிட்டு கண்கள் சுருங்க சிரித்து விடைபெற்றார்.

குஜராத்திலும் ராஜஸ்தானிலும் பொதுப்போக்குவரத்து வசதிகள் மிகமிகக் குறைவு. முக்கியமான வாகனம் பெரிய டீசல் ஆட்டோ. அதில் முப்பதுநாற்பதுபேர் ஏறிச்செல்கிறார்கள். வண்டிகளின் மேலே இருபதுபேர் செல்வது மிக சாதாரணம். சிலசமயம் வண்டியே தெரியாத அளவுக்கு மக்கள் செல்கிறார்கள். பேருந்துகள் மிக அபூர்வமாகவே கண்ணுக்குப் பட்டன.

எந்த நம்பிக்கையில் பெரியவர் வந்து நின்றார்? ஏதாவது வண்டி அகப்பட்டால் போகலாம் இல்லாவிட்டால் பரவாயில்லை என்ற மனநிலை. இங்கே காலம் மிக மிக விரிவாக பரந்து கிடக்கிறது, இந்த மண்ணைப்போல. மண்புழுவைப்போல உடலைச்சுருக்கிச் சுருக்கி விரித்து மெல்ல நகர்கிறது. நாம் வாழும் நகர்களில் காலம் சாரைப்பாம்புபோல வளைந்து வளைந்தோடுகிறது. அவ்வளவு அச்சத்துடன் அவ்வளவு பதற்றத்துடன்.

மேலும்…

மேலும் படங்கள் 1

மேலும் படங்கள் 2

முந்தைய கட்டுரைபயணம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசீனு – கடிதங்கள்