நேற்றிரவு ஏழுமணிக்கே தரங்கா குன்றுகளின் அடிவாரத்துக்கு வந்துவிட்டோம்.வழிதோறும் சமண தர்மசாலைகளைத் தேடியபடியே வந்தோம், சாலையோரமாகவே கண்டுகொண்டோம். வந்து எங்கள் சோகப் பாடலைப் பாட ஆரம்பிப்பதற்குள்ளாகவே அந்த சமணத்துறவி “சாப்பாடு தங்கிடம்தானே, அதோ அங்கே செல்லுங்கள்” என்று புன்னகையுடன் சொன்னார். வசதியான இரு பெரிய அறைகள். காலையில் வெந்நீர் கிடைக்கும் என்றார்கள்.
நான் உடனடியாக என் துணிகளைத் துவைக்க ஆரம்பித்தேன். பொதுவாக, கிளம்பியதில் இருந்தே நான் அழுக்குத்துணிகளைத் தங்கவிடவில்லை. எனக்குக் குளித்தபின் அழுக்கு போடுவது பிடிக்காது. தினமும் துணிகளைத் துவைத்துப் பிழிந்து உதறிக் காயப்போடுவேன், காலையில் காய்ந்திருக்கும். அதற்கேற்ப எளிதில் காயும் பாலியெஸ்டர் சட்டைகளை வைத்திருப்பேன். அடர்நிறம் கொண்டவை.
ஆனால் பலிதானா முதல் தினமும் அறைக்கு வரத் தாமதமாகியது. ஆகவே துவைத்த இரு சட்டைகள் மட்டுமே மிஞ்சின. வேறுவழியில்லை. ஈரம் சொட்ட கொண்டுவந்த துணிகலை பயங்கர ஓசையுடன் பத்துப்பதினைந்துமுறை உதறினேன்.காயப்போட்டபின் அமர்ந்து கட்டுரையை எழுதினேன். ஆனால் இணையத் தொடர்பு இல்லை. ஆகவே கட்டுரையை இணையத்தில் ஏற்ற வசதி இல்லை. செய்வதொன்றும் இல்லை என்பதனால் இரவு பத்து மணிக்கெல்லாம் படுத்துத் தூங்கிவிட்டேன்.
அதிகாலையில் எழுந்து தரங்கா குன்றுக்குச் செல்லவேண்டும். இந்தபயணத்திலேயே குளிரை இப்போதுதான் அனுபவித்தோம். போகப்போகக் குளிர் அதிகரிக்கும் என்றார்கள். எல்லைப்பாதுகாப்புப்படை வீரர் ஏற்கனவே மௌண்ட் அபுவில் இரவில் இரண்டு பாகை வரை குளிர் இறங்குவதாக செய்தி சொல்லி பீதியைக் கிளப்பியிருந்தார்.
விடிகாலையில் வெளியே விறகடுப்பில் சூடான தண்ணீர் ஒரு உருளைத்தொட்டிக்குள் கொதித்துக்கொண்டிருந்தது. குளிக்கும்போது உடம்பு குளிரில் எந்த அளவுக்கு சுருங்கி ஒடுங்கியிருக்கிறதெனப் புரிந்தது. ஒரு பெரியவர் டீ கொண்டு வந்து எல்லாருக்கும் தந்தார். தரமான டீ. வடக்கே டீக்கடைகளில் டீத்தூளைக் கொதிக்க வைத்து மீண்டும் கொதிக்கவைத்து பிழிந்து சக்கையாகி டீ போடுகிறார்கள். இந்த டீ அப்படி இல்லை.
[நாங்கள் தங்கிய தரங்கா தர்மசாலா, பருந்தின் பார்வையில்]
தர்மசாலை வளைவுக்குள் சமணத் துறவிகள் தங்குவதற்கான அறைகள் சில உள்ளன. இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களுக்கும் தனித்தனியாக சின்னக் கோயில்கள். நடுவே வெண்பளிங்கில் பத்தடி உயரத்தில் அமர்ந்திருக்கும் அஜிதநாதரின் சிலை. காலையில் அந்தப் பகுதியை சுற்றிவந்தது அமைதியை நிறைக்கும் அனுபவமாக இருந்தது. சுற்றிலும் பெரிய மலைகள். நடுவே குட்டைமரங்கள் கொண்ட காடு. அங்கே சமணர்கள் வளர்க்கும் மயில்கள் அகவின. சமண மையங்களில் சமணத் துறவிகளுக்காக மயில்பீலி சேகரிக்க மயில்கள் வளர்க்கப்படுவது வழக்கம். மயில் உதிர்க்கும் இறக்கைகளையே அவர்கள் பயன்படுத்த வேண்டும்.
காலை எட்டு மணிக்கு தரங்கா குன்றுகளைப் பார்க்கக் கிளம்பிச்சென்றோம். அந்தக்குளிருக்கு அதுவே புலர்காலைதான். பனிப்படலம் மீது வெயில் இறங்குகையில் வெண்பளிங்கு புகையாக நுரையாக ஆகிவிட்டது போலவும் கோயில்கள் கரைந்து அதில் மிதப்பது போலவும் பிரமை எழுந்தது. பனிப்படலம் ஒலிகளை ஒருவிதமாக மழுங்கடிக்கச்செய்கிறது. எல்லா ஒலிகளிலும் ஒரு மௌனம், ஒரு கனம் கூடிவிடுகிறது. எப்போதும் ஒரு தியானநிலையில் இருப்பது போல. ரீங்கரிக்கும் வெண்கல மணிக்குள் புகுந்துவிட்ட ஈ போல ஒரு மயக்கம்.
[ தரங்கா குன்றுகள் ]
தரங்கா சமணர்களின் முக்கியமான புனிதத் தலங்களில் ஒன்று. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோலங்கி வம்சத்து மன்னர் குமாரபாலரால் கட்டப்பட்ட சமணக் கோயில் இங்கே உள்ளது. இப்பகுதியெங்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சமண ஆலயங்கள் உள்ளன. அனைத்துக்கும் சமணர்கள் தீர்த்தயாத்திரையாக வந்துகொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் தரங்கா கிமு இரண்டாம் நூற்றாண்டிலேயே புனிதத் தலமாக இருந்தது. இங்கே கோட்டையும் ஆலயங்களும் இருந்தன. பின்னர் அந்த ஆலயங்கள் புதுப்பித்துக் கட்டப்பட்டன. ஆசாரிய ஹேமச்சந்திரர் அறிவுரை சொன்னதன் பேரில் குமாரபாலர் இதைக் கட்டினார். சோலங்கி வம்சத்தின் இந்து மன்னர்கள் இங்கே பல சமணக் கோயில்களைக் கட்டியிருக்கிறார்கள்.
காரில் வரும்போது இதைப்பேசிக்கொண்டே வந்தோம். குஜராத் ஒருவகையில் குமாரபாலரின் உருவாக்கம் என்றே சொல்லலாம். ஹேமச்சந்திரர்-குமாரபாலர் உறவைப்போல இந்திய வரலாறெங்கும் உதாரணங்கள் உள்ளன. ராஜராஜ சோழன்-கருவூர்த்தேவர் போல. சிவாஜி-சமர்த்த ராமதாசர் போல. ஹரிஹர – புக்கர் வித்யாரண்யர் போல.
ஒரு மன்னனை ஒரு குரு எவ்வகையிலேனும் ஆட்கொண்டு அரச போகங்களில் இருந்து திசை திருப்பினாரென்றால் அவன் மாமன்னனாக, கலைப்புரவலனாக ஆகிவிடுவதைக் காண்கிறோம். அது நிகழவில்லை என்றால் பெண்ணின்பமும் அதிகார வெறியும் அம்மன்னரை அழிக்கும்.
கூடவே இன்னொன்றும் தோன்றியது. ஏன் குமாரபாலரை நாம் அறிந்ததே இல்லை? ராஜராஜ சோழனை ஏன் குஜராத்திகள் அறியவே இல்லை? ஹானிபாலை, நெப்போலியனை அறிந்திருக்கிறோம். சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த முக்கியமான பிழைகளில் ஒன்று, எந்த வித வழிகாட்டுநெறிகளும் இல்லாமல் பாடத்திட்டங்களைத் தீர்மானிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டமை. குறுகிய பிராந்தியவாதமும் இனவாதமும் அரசியல் நோக்குடன் நம் குழந்தைகள் மனங்களில் திணிக்கப்பட வழிவகுத்தது அது.
[ தரங்காவின் பாறைகளூடாக … ]
தரங்காவில் மூன்று பாறைச்சிகரங்கள் உள்ளன. இது சமணர்கள் வழிபட்டாகவேண்டிய 14 சிகர ஆலயங்களில் ஒன்று. ஆலயத்தை ஒட்டிய வழியில் மேலே செல்லும் படிகள் எழுகின்றன. குறுகலான கற்படிகள். படிகளில் ஏற ஏற காற்று வந்து சூழ்ந்துகொண்டது. கீழே நிலம் விரிந்து பரந்தபடியே சென்றது.
இந்தப்பகுதி, பலவகையிலும் ஆந்திராவின் ராயலசீமாவை நினைவூட்டுகிறது. அள்ளிக்கொட்டப்பட்டது போலப் பாறைகள். உடைந்தும் குவிந்தும் கிடக்கும் பாறைகள் நடுவே வழி வளைந்து சென்றது. மணல்பாறைகள், ஆகவே அவை நீரில் அரிக்கப்பட்டுக் கோழிமுட்டை போல, உடைந்த கோளங்கள் போல, மண்டை ஓடுகள் போல, படகுகள் போல விசித்திரமான வடிவங்கள் கொண்டிருந்தன.
[ முதல் சிகரத்தின் உச்சியில் ]
நாநூறு படிகளுக்கு மேல் மலையுச்சியில் சிறிய கோயில். அதற்குள் அஜிதநாதர் நின்ற கோலத்தில் கோயில்கொண்டிருந்தார். பளிங்குச்சிலை. மலையைச்சுற்றி குமாரபாலர் கட்டிய கற்கோட்டை ஆங்காங்கே இடிந்தும் சரிந்தும் நின்றிருந்தது. மோனம் நிறைந்து கிடந்த மலைச்சரிவைப் பார்த்து சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். தியானநிலை கைகூடிய தருணம். இயல்பாகவே ‘அசதோமா சத்கமய..’ என்ற மந்திரம் மனதில் கூடியது.
பின்பு நினைத்துக்கொண்டிருந்தேன். ‘தீமையில் இருந்து நன்மைக்கு, இருளில் இருந்து ஒளிக்கு, மரணத்தில் இருந்து பெருவாழ்வுக்கு இட்டுச்செல்க’ என்பதே அப்பாடலின் பொருள். ஆனால் அசத் என்பதை ஏன் தீமை என மொழியாக்கம் செய்யவேண்டும்? அதற்கு இல்லாதது, இருப்பற்றது என்றும் பொருள் கொள்ளலாமே. இன்மையில் இருந்து இருப்புக்கு என ஏன் பொருள் கொள்ளக்கூடாது? அரவிந்தர் அப்படித்தான் ஓர் உரையில் பொருள் கொள்கிறார்.
புலரி ஒரு மாயத்தூரிகையால் வானத்தில் ஒவ்வொரு மலையாக எழுதிக்கொண்டிருந்தது. ஒளிரும் பொன் வண்ணத்தில் பாறைமுகடுகள். நிழல்களுடன் கலந்து புடைத்தெழுந்த மலைப்பாறைச்சரிவுகள். பச்சை மரங்கள். அப்பால் நீர்த்த வண்ணத்தில் மலைகள். அவற்றுக்கும் அப்பால் மிகநீர்த்த வண்ணத்தில் தொலை தூரத்து மலைகள். அவற்றுக்கும் அப்பால் கலைந்த வண்ணத்தீற்றல்கள் போல இன்னும் உருவாகி முடிக்காத மலைகள்.
[ கல்லால் ஆன அலைப்பரப்பு ]
விசித்திரமான மலைப்பகுதி. தரங்கா என்றால் அலை. கல்லால் ஆன அலைப்பரப்பு அப்படியே உறைந்திருந்தது. அல்லது அதன் கொந்தளிப்பை உணரமுடியாத அளவுக்கு வேகமாக நிகழும் குறுகலான காலத்தில் நானும் என் பிரக்ஞையும் இருந்தோம். துளிகள் போலப் பாறைகள். துமிகள் போல சிறு பாறைகள். பாறையலையை அசப்பில் பார்த்தபோது அந்த உக்கிரம் அச்சம் கொள்ளச்செய்தது.
கீழே இறங்கிவந்து இன்னொரு டீ குடித்துவிட்டு மீண்டும் ஐநூறு படிகள் ஏறி இன்னொரு கோயிலுக்குச் சென்றோம். அந்த மலை உச்சிக்குச் செல்லும் பாதை வினோதமானது. பிரம்மாண்டமான பாறைகள் ஒன்றுமேல் ஒன்றாகக் கிடந்த சந்துக்குள் நுழைந்து குகைக்குள் செல்வதுபோலச் சென்றது. மாபெரும் யானைகளின் கால்களுக்குள் செல்வது போல. கரும்பாறையாகக் கொட்டும் அருவி ஒன்றுக்குள் சென்றது போல.
[ தரங்கா பேராலயம் ]
கீழே இறங்கி வந்தோம். குமாரபாலர் அஜிதநாதருக்குக் கட்டிய பேராலயம் இங்குள்ளது. இக்கோயிலில் அஜிதநாதரின் காலடிச்சுவடு கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் மிகப்பெரிய ஆலயம் இதுவே. ஹஸ்தகிரி பேராலயம் முடிக்கப்பட்டால்தான் இதைவிட உயரமானதாக அது ஆகும். சுல்தானியப் படையெடுப்பில் சிதைக்கப்பட்டாலும் பின்னர் முழுமையாக சீர்செய்யப்பட்டு இன்று கட்டிய கோயில் போலிருக்கிறது. சிவப்புக்கல்லால் ஆன கட்டிடம்.
பிரம்மாண்டமான கோயில். 148 அடி உயரம் கொண்டது. தஞ்சைப் பெரிய கோயிலை விட அறுபதடி உயரம் குறைவானது. ஆனால் அடித்தளம் முதல் உச்சியின் சிகரவட்டம் வரை ஒவ்வொரு பகுதியிலும் சிற்பங்களும் அலங்காரங்களும் கொண்டது. ஒவ்வொரு சிற்பமும் ஒவ்வொரு அலங்காரமும் முழுமையான பேரழகு கொண்டவை. அதேசமயம் அவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று கச்சிதமாக இணைந்து ஒரே முழுமையான வடிவமாகவும் ஆகின்றன.
இத்தகைய பரிபூரணத்தைப் பொதுவாக மலர்களின் அல்லிவட்டம் புல்லிவட்டம் போன்ற அமைப்புகளில் மட்டுமே காண முடியும். இந்தக் கோயிலும் கல்லில் பூத்த அபூர்வமான ஒரு மலர்தான். இதன் செந்நிறக்கல்தான் அழகை முழுமையாக்குகிறது. காலையிளவெயிலில் ஒரு செம்புச்சிலை போல் மிளிர்கிறது கோபுரம்.
இந்தியாவில் இடியாமல் முழுமையுடன் இருக்கும் மகத்தான கலைக்கோயில்கள் சிலவே. கஜுராஹோவின் காந்தரிய மகாதேவர் கோயில் முக்கியமானது. அதைப்பற்றி மிக அதிகமாக எழுதப்பட்டுள்ளது. தரங்கா கோயில் கஜுராஹோ ஆலயத்துக்கு இணையானது. கலையின் நேர்த்தியில் ஒரு படி மேலானது. ஆனால் இக்கோயில் பற்றிப் பெரிதாக ஏதும் எழுதப்பட்டதில்லை. நான் இக்கோயிலை இப்போதுதான் பார்க்கிறேன்.
இந்தக் கோயிலைப்பார்த்து நிற்கும்போது சட்டென்று ஒரு பொறாமையும் தாழ்வுணர்ச்சியும் உருவாகிறது. இந்த ஆலயத்துக்கு நிகரான ஒரு கலைப்படைப்பு தமிழ் மண்ணில் இல்லை. இப்படி ஒவ்வொரு அணுவிலும் கலையழகு கூடிய ஓரு கட்டிடமே நம்மிடம் இல்லை. தஞ்சைக் கோயில் இதைவிடப் பெரியது, ஆனால் இப்படி சிற்பமே கோயிலாக ஆன அற்புதமல்ல அது.
ஐம்பதடி நீளமும் நூறடி அகலமும் நூற்றுநாற்பத்தியெட்டு அடி உயரமும் கொண்ட இக்கோயில் நாகரா பாணி கோபுரம் கொண்டது. முன்பக்கம் பெரிய முகமண்டபம். மண்டபத்துக்குள் கவிழ்ந்த தாமரை வடிவமான கூரை. சிற்பங்களாலான தூண்கள். இந்த ஆலயத்தின் சுற்றுச்சுவரில் உள்ள சிற்பங்களைப் பார்த்துத் தீராது. பல சிற்பங்களை அடையாளம் காண முடியவில்லை. இரு கைகளிலும் சக்கரங்களுடன் நிற்கும் தேவதை அடிக்கடி தென்பட்டாள்.
ஒரு முக்கியமான விஷயம் உண்டு. சமண ஆலயங்களில் அனேகமாக எல்லாவற்றிலுமே இந்து தெய்வங்கள் உள்ளன. பிள்ளையார் தவிர்க்க முடியாதவர். சில இடங்களில் பிள்ளையார் தேவியருடன் அமர்ந்திருக்கிறார். சங்கு சக்கரத்துடன் பெருமாள் எழுந்தருளாத சமண ஆலயங்கள் குறைவு. இங்கே நடனநிலையில் சிவன் இருக்கிறார். கோயில்களைப் பெரும்பாலும் இந்து மன்னர்களே கட்டியுமிருக்கிறார்கள்.
[ பாகுபலி சுவாமியின் பளிங்குச்சிலை ]
இக்கோயிலின் பக்கவாட்டில் கௌமுக்ஜி கோயில் உள்ளது. சாமவசரன் என்று சொல்லப்படும் விரிந்த மண்டபம் இங்கே அமைந்திருக்கிறது. குமாரபால மகாராஜாவின் ஒரு சிலை இங்கே உள்ளது. அக்கோயிலின் அருகே ஒரு குன்றுமேடையில் பாகுபலி சுவாமியின் பளிங்குச்சிலை நின்று கொண்டிருக்கிறது. பன்னிரண்டடி உயரமான சிலை நின்ற தியானக்கோலத்தில் விண்ணை நோக்குகிறது.
அங்கே தர்மசாலையில் உணவுண்டோம். முழுமையான மதிய உணவு. சப்பாத்தி, சோறு, கூட்டு. எங்கள் முன்னால் அமர்ந்திருந்த சமணர்களுக்குத் தனியாக சாப்பாடு வந்தது. செந்தில்குமார் தேவன் ‘அவங்களுக்கு மட்டும் தனியா சாப்பாடு போடுறாங்க போல’ என்றார். அதை ஊகித்த எதிரே அமர்ந்த சமணர் சிரித்துக்கொண்டு ‘உங்களுக்கு வேறு சாப்பாடு. எங்கள் சப்ஜியில் நிறைய சக்கரை போடுவோம்’ என்றார். எங்கள் சப்ஜியிலும் கொஞ்சம் வெல்ல இனிப்பு. அப்படியென்றால் அவர்களின் சப்ஜி பாயசம் போலவே இருக்கும் போல!
மடத்துக்குச் சென்று வண்டியை எடுத்துக்கொண்டோம். நல்ல தண்ணீர் கிடைக்கும் இடங்களில் கூடுமானவரை தண்ணீர் பிடித்துக்கொள்வது எங்கள் வழக்கம். பொதுவாக பயணங்களில் குடிநீரில் மிக அதிகமாக கவனம் செலுத்துவோம். குளங்கள் கிணறுகளில் நீர் பிடிப்பதில்லை. வடிகட்டி தூய்மைப்படுத்தப்பட்ட நீரையே குடிப்போம். பெரும்பாலும் வாங்கிக்கொள்வோம்.
அங்கிருந்து நேராக கும்பாரியாவுக்குக் கிளம்பினோம். கும்பாரியா வழியில்தான் செய்தித் தொடர்புக்குள் நுழைந்தோம். உடனே கட்டுரையை அனுப்பி வைத்தேன். என் கட்டுரைத்தொடரை இணையத்தில் பல்லாயிரம்பேர் வாசிக்கிறார்கள். அவர்களும் மானசீகமாக என்னுடன் வந்துகொண்டிருக்கிறார்கள்.
குஜராத்தில் அம்பாஜி அருகே உள்ள கும்பாரியா சமணர்களுக்கு முக்கியமான ஊராகும். பண்டைக்காலத்தில் இப்பகுதி முழுக்க அரசானா என்ற பெருநகரமாக இருந்தது. இன்று பெரும்பகுதி கைவிடப்பட்ட கிராமநிலமாக உள்ளது. இந்நகரத்தின் தோற்றம் அழிவு இரண்டுமே இன்றும் மர்மமானவை.
[ கும்பாரியாவின் பெரிய ஆலய முகப்பு ]
கும்பாரியா என்ற பெயரைக்கொண்ட இந்த ஊர் சித்தூர் அரசர் ராணா கும்பாவால் உருவாக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். அரசானா, பதினாறாம் நூற்றாண்டிலேயே கும்பாரியா என அழைக்கப்பட ஆரம்பித்துவிட்டது. ராணாகும்பா வாழ்ந்த காலம் பதினான்காம் நூற்றாண்டு. ஆகவே இந்த ஊகம் பொருத்தமற்றது என்கிறார்கள். இந்த ஊர் சோலங்கி மன்னர் காலகட்டத்தில் சமண வணிகர்களின் இடமாக இருந்திருக்கலாம். இங்கிருந்த எல்லா ஆலயங்களும் படையெடுப்பாளர்களால் இடிக்கப்பட்டன.
கும்பாரியாவில் ஐந்து பெரிய சமண ஆலயங்கள் அருகருகே உள்ளன. ஐந்துமே வெண்பளிங்கில் கட்டப்பட்ட அழகான கோயில்கள். பெரிய நாகராபாணி கோபுரம். முகமண்டபம். சிற்பங்கள் கொண்ட தூண்கள். வெண்பளிங்கு பார்க்கப்பார்க்கக் கண்ணுக்குப் பழகி ஒரு அண்மையை அளிக்க ஆரம்பித்தது. குமார்யாவின் சிலைகளைப் பார்க்கையில் அவை தித்திப்பானவை, சீனியாலானவை என்ற எண்ணம் ஏற்பட்டுப் புன்னகை வந்தது.
இவை இடிபாடுகளாக நெடுங்கலாமாக கிடந்தன.கதைகளின்படி மாதா அம்பாஜி இப்பகுதியில் வாழ்ந்த சேத் விமல்ஷா என்பவருக்கு ஜைனக்கோயில்களைக் கட்டி, தீர்த்தங்கரர்களைக் குடியிருத்தும்படி கனவில் வந்து சொன்னார். அவர் இந்த ஐந்து கோயில்களையும் கட்டியதாகச் சொல்கிறார்கள். அவர் கட்டிய வேறு சில கோயில்கள் அழிந்துவிட்டன என்று சொல்லப்படுகிறது.
கும்பாரியா எங்கள் குஜராத் பயணத்தின் கடைசி ஊர். நேராக மௌண்ட் அபுவுக்குக் கிளம்பினோம். வழியெல்லாம் உயர்ந்த மலைகள். பாறைகள் தியானம்செய்யும் சிகரங்கள். நீரோடைத்தடங்கள். குளிர் ஏற ஆரம்பித்தது. பாறைகளின் விதவிதமான வடிவங்களைப் பார்த்துக்கொண்டே சென்றேன். காட்சிவெளி குழம்பியடித்தது. கடந்த பல நாட்களாகவே சிற்பங்களையும் பாறைகளையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். பாறைகளில் ஒளிந்திருக்கும் சிற்பங்கள் தெரிகின்றன. சிற்பங்கள் அலங்காரம் மறைந்து முழுமை கொண்ட பாறைகளாகின்றன.
ஒலி சொல்லாகிறது. சொல் கவிதையாகிறது. பிரபஞ்ச அர்த்தம் கொண்ட அனைத்தையும் தொட்டுத்தொட்டு மீட்டெடுத்து தனக்கான அர்த்தங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது மனிதப்பிரக்ஞை. மொத்தப் பிரபஞ்சத்தையும் தன்வயப்படுத்தித் தனக்கான அர்த்தங்களை ஏற்றித் தன்னுள் நிறைக்கத் துடிக்கிறது. அதன் கைக்குச் சிக்குவது சிறு துளி…
பாறை மேல் படியும் மானுடப்பிரக்ஞை அதைச் சிற்பமாக்குகிறது. அப்படியென்றால் சிற்பங்களைப்பார்க்கும் எந்தப் பிரக்ஞை அதைப் பாறையாகக் காண்கிறது? தூய மிருகம் ஒன்று உள்ளிருந்து இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கிறதா என்ன?
மேலும்…