பண்பாடு: ஆதங்கம்,அவநம்பிக்கை:ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்

உங்களின் அள்ளிப் பதுக்கும் பண்பாடு படித்தேன். வெகு நாட்களாக என்னை குடைந்து கொண்டிருந்த ஒரு கேள்விக்கு மிக அழகாக ஆழமான பதிலைக் கொடுத்திருக்கிறீர்கள். இதை எழுப்பிய ஓவியர் மணிகண்டன் அவர்களுக்கும் நன்றி. நதிக்கரை சமுதாயங்களில் கலைகள் வளர்ந்தமைக்கும் நாகரீகங்கள் வளர்ந்தமைக்கும் கூட இந்த அடிப்படைத் தேவைகளின் பிரச்சினை ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்க வேண்டும். தமிழின் தற்கால எழுத்துப் பங்களிப்பை எடுத்துக் கொண்டாலுமே செழிப்பான தஞ்சை, குமரி, நெல்லைப் பகுதியில் இருந்து வந்தவர்களே அதிகம் இருந்தற்கும் அதே காரணம் இருந்திருக்கலாம். மிக கோர்வையாக இதற்கான காரணங்களைத் தொகுத்துச் சொல்லியுள்ளீர்கள்.
என் வாசிப்பு இரண்டாம் மூன்றாம் வகுப்பில் படிக்கக் கிடைத்த ராஜாஜியின் வியாசர் விருந்தில் துவங்கியது இன்று வரை தொடர்கிறது. ஒரு நாள் கூட என் தந்தை என்னை பாட புத்தகம் மட்டும் படி என்று அறிவுறுத்தியதில்லை. அப்படி அவர் சொல்லியிருந்து கடுமை காட்டியிருந்தால் நான் உருப்பட்டிருப்பேனோ என்ற எண்ணம் இப்பொழுதும் எனக்கு அவ்வப் பொழுது ஏற்படும் :))

 

இத்தனைக்கும் நான் படித்து வேலைக்குப் போய்தான் அவரது சுமைகளைக் குறைக்க வேண்டும் என்ற நிலமை இருந்த போதிலும் என் பிற வாசிப்புக்களைக் கட்டுப் படுத்தியவர் இல்லை. ஆனால் அந்த சூழலும் காலமும் இப்பொழுது இல்லை. கடுமையான பொருளாதாரச் சூழ்நிலைக்கும் நடுவில் கூட என் தந்தை தொடர்ந்து வீட்டுக்கு மஞ்சரி, கல்கி, கோகுலம், கலைக்கதிர், தினமணி, துக்ளக் ஆகிய பத்திரிகைகளை வருவித்துக் கொண்டிருந்தார். நியுசெஞ்சுரி புக் ஹவுஸ் பக்கம் போனால் நாலைந்து சிறுவர்  புத்தகங்களாவது வாங்காமல் வர மாட்டார். கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு நடுவிலும் கூட  இது தொடர்ந்திருக்கிறது. ஊரில் பழைய அலமாரியைத் திறந்த பொழுது என் தாத்தா வாங்கிச் சேர்த்த நூல்கள் இருந்தன. இது இந்த நாளில் இந்த ஊரில் வாங்கியது என்று எழுதிக் கையெழுத்துப் போட்டு வைத்திருந்தார். வசதியற்ற சூழ்நிலையிலும் கூட ஒவ்வொரு ஊருக்குப் போகும் பொழுதும் புத்தகம் வாங்கிப் படிக்கும் வழக்கம் அவருக்கு இருந்திருப்பது புரிந்தது.

 

இன்று அமெரிக்காவில் நல்ல நிலையில் அமர்ந்து விட்ட, எந்தவித பொருளாதார அச்சமும் அடையத் தேவையில்லாத, நல்ல சேமிப்பு உள்ளவர்களில் கூட நல்ல ரசனையையும், தேடலும், பிரயாண நாட்டமும், வாசிப்பு ஆர்வமும், தேர்ந்தெடுத்த நுகர்வும், நுண்கலைத் தேடலும், கலைரசனையும் உள்ளவர்கள் மிகக் குறைவாகவேதான் தென்படுகிறார்கள். வாசிக்கும் வழக்கம் உள்ளவர்களைக் காண்பது இன்னும் அரிது. இதற்குக் காரணம் நிச்சயம் எதிர்காலப் பொருளாதாரம் குறித்த அச்சம் மட்டும் இல்லை அதையும் மீறி நம்மிடம் மிச்சம் இருக்கும் அதே பஞ்ச கால உணர்வாகவும் கூட  இருக்கக் கூடும் என்பது உங்கள் கருத்தைப் படிக்கும் பொழுது தோன்றுகிறது. 

 
ஒரு வேளை நம்மிடம் பஞ்ச காலத்தில் தோன்றி விட்ட பாதுகாப்பின்மை உணர்வு இன்னமும் அகல வில்லை போலும், நிலமை சீர்பட இன்னும் பல நூற்றாண்டுகள் ஆகலாம். மேலும் இடைக்காலத்தில் கடந்த நூற்றாண்டிலும் இந்த நூற்றாண்டிலும் நம்மிடம் புகுந்து விட்ட நச்சு உணர்வுகள் அகலவும் இன்னும்  நூறாண்டுகள் பிடிக்கலாம். நாம் மீள முடியாத ஒரு வித மீளா விட்டான் ஜங்ஷனில் மாட்டி விட்டது போலவே தோன்றுகிறது. மதுரையின் கோவில்களின் அழகிய சிற்பங்களைப் பார்த்து விட்டு வெளியே வரும் பொழுதெல்லாம் உங்கள் மலையாள நண்பர் கேட்ட அதே கேள்வி என்னையும் குடைந்திருக்கிறது.  பகட்டிலும் புரட்டிலும், பொய்மையிலும், சினிமா மாயையிலும் மக்களின் மூளைகளை மழுங்க வைத்து ஊரைச் சுருட்டிய உத்தமர்களுக்கோ ஊர் முழுக்கச் சிலைகள்; ஏதோ இவர்கள்தான் தமிழ் நாட்டையே கண்டு பிடித்து நிர்மாணித்தவர்கள் போன்ற பாவனையில் பல்வேறு நிலைகளில் காட்சியளிக்கிறார்கள். ஆபாச சிலைகளும், மலினமான சுவர் விளம்பரங்களும், அற்புதமான கோவில் சிற்பங்களும் அருகருகே நிற்கும் முரண் முகத்தில் அடிப்பது. அந்த முரண்பாடு ஏற்படுத்தும் அருவருப்பு குமட்டலை வரவழைப்பது.

 

நவீன தமிழகத்தின் சரித்திரச் சின்னங்களான இந்தச் சிலைகளை நாஞ்சில் நாடன் தன் சிறுகதை ஒன்றில் பின்வருமாறு கிண்டலடடித்திருப்பார்.

‘பணப் பிரிப்புக்குப் போகிற சீட்டுக் கம்பெனி ஊழியன் போல கையில் ஒரு பையோடு, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் போல கைக்கிடையில் இடுக்கிய பையோடு, கல்லூரி பேராசிரியர் போல கையில் புத்தகங்களோடு, கொன்று போடுவேன் அல்லது அவசரமாய் ஒன்றுக்குப் போக வேண்டும் என்பது போல விரலை உயர்த்திக் கொண்டு, சட்டையில்லாமல் கண்ணாடி போட்ட கணக்கப் பிள்ளை போல சம்மணம் போட்டுக் கொண்டு, தமிழ்நாட்டையே அவர்தான் கண்டு பிடித்தார் என்று நாளைய வரலாற்றாசிரியர்கள் பதிவுச் செய்யச் சான்றாக…’
 பஞ்ச கால அச்சம் பாதுகாப்பிலாத உணர்வு ஏற்படுத்திய தாக்கத்தை விட இந்த மலிவான ரசனையும், கீழ்த்தரமான அருவருக்கத்தக்க அரசியலும் ஏற்படுத்திய விளைவுகள் களப்பிரர் காலத்தை விட மோசமான இருண்ட காலத்திற்கு நம்மைத் தள்ளி விட்டதாகவே தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஒரு பத்து நூற்றாண்டுகளுக்கும் மேலாக நாம் வளர விடப் படாமல் ஸ்டண்ட்டட் க்ரோத்திலேயே வைக்கப் பட்டிருக்கிறோம். இன்னும் அந்த அழுத்தத்தில் இருந்து வெளி வர முடியவில்லை.

ராஜ்
அன்புள்ள ராஜ்

உங்கள் கருத்துக்கள் உண்மையான ஆதங்கத்தைக் காட்டுகின்றன. அதைந் ஆனும் பகிர்ந்துகொள்கிறேன். நம்முடைய வீழ்ச்சிகள் வரலாற்றுப்பின்னணி கொண்டவை என்னும்போது அதை நாம் புரிந்துகொள்ளவும் அப்புரிதலின் மூலம் அவநம்பிக்கையையும் கசப்பையும் வெல்லவும்தான் முயலவேண்டும் என எண்ணுகிறேன் அதுவே நம்முடைய அவ்ழிமுறையாக இருக்கவேண்டும்

நான் எந்நிலையிலும் நம்பிக்கைவாதி– எனென்றால் நான் காந்தியவாதி
ஜெ

முந்தைய கட்டுரைஇசை:கடிதம்
அடுத்த கட்டுரைகுயில். கடிதங்கள்