ஜெயமோகன்
பின் நவீனத்துவம் பற்றிய உங்கள் விளக்கம் சுருக்கமாக இருந்தாலும் தெளிவாக இருந்தது. ஆனாலும் இன்னும் குழப்பங்கள்தான். ஆனால் அது எதற்காக நமக்கு இப்போது தேவைபப்டுகிறது? ஏன் இறக்குமதி செய்யவேண்டும்?
ஆர்.கணேஷ்
அன்புள்ள கணேஷ்
பின் நவீனத்துவம் பற்றி இன்னும் சுருக்கமாக.
புரூஸ் லீ நவீனத்துவம். அவர் சண்டை போடுகிறார். ஜாக்கிச்சான் பின்நவீனத்துவம் எப்ப்டி சண்டை போடுவதென காட்டுகிறார். சண்டையை ஒரு ஆட்டமாக மாற்றுகிறார்
உத்தம புத்திரன் நவீனத்துவம். இருபத்து மூன்றாம் புலிகேசி பின் நவீனத்துவம்
பின் நவீனத்துவம் இன்றைய வாழ்க்கை நோக்கில் இயல்பாகவே உள்ளது. ரீமிக்ஸ் பாடல்கள் ஓர் உதாரணம். நாம் நிகழ்ந்தவற்றை ஏன் நிகழ்ந்தது எபப்டி நிகழ்ந்தது என்று நோக்குகிறோம். மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறோம். மாற்றியமைக்கிறோம். கிண்டல்செய்கிறோம். விரிவாக்கிப்பார்க்கிறோம்.
பின்நவீனத்துவ சூழல் உலகளாவியது. பொருளியல் சார்ந்து. ஊடகங்கள் சார்ந்து இன்றைய உலகத்தில் பொதுமைகள் அதிகம்
ஆகவே பின்நவீனத்துவச் சூழலும் உலகளாவியதே
ஆனால் பின்நவீனத்துவம் எங்கும் ஒரேவகையானது அல்ல. அந்த ‘டிரெண்ட்’ ஒன்றுதான். வெளிப்பாடு ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகை. அதற்கு அந்தப் பகுதியின் கலாச்சாரம் வாழ்க்கைமுறை என எத்தனையோ காரணங்கள்
பின்நவீனத்துவம் பற்றிய மிக முட்டாள்த்தனமான பேச்சே இது ஒரிஜினல் பின் நவீனத்துவம் இல்லை அதுதான் என ஐரோப்பாவையோ அமெரிக்காவையோ காட்டுவது. அப்படிசொல்லக்கூடாது என்றுதான் பின்நவீனத்துவம் வாதிடுகிறது
ஜெயமோகன்