இந்தியர் அனைவரும் அறிந்த குடைவரை ஓவியங்களின் ஊரான அஜந்தா ஔரங்காபாதில் இருந்து எழுபது கிமீ தூரத்தில் இருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த எல்லோரா மடம் ஔரங்காபாதில் இருந்து இருபத்தைந்து கிமீ தூரத்தில்.காலையில் அஜந்தாவைப் பார்த்துவிட்டுக் கிளம்பி மாலைக்குள் நாசிக் சென்று சேர்ந்தாக வேண்டும் எனத் திட்டமிட்டோம்.
எங்கள் பயணத்திட்டத்தில் அடுத்த இடம் மங்கிதுங்கி. மங்கிதுங்கி விசித்திரமான இரட்டை மலைகள் கொண்ட இடம். இந்துக்களுக்கும் சமணர்களுக்கும் இது முக்கியமானது. இந்த இடத்தின் வரலாறு இன்னும் எழுதப்படவில்லை. கிமு 3 ஆம் நூற்றாண்டுமுதலே இந்த இடம் ஒரு முக்கியமான புனிதத் தலமாகவும் வணிகத்தலமாகவும் இருந்து வந்துள்ளது. நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளும் சிலைகளும் இங்கே கிடைத்துள்ளன.
ஆனால் மங்கிதுங்கியைத் தவிர்த்துவிடலாமென முடிவெடுத்தோம். இருபத்திஐந்தாம் தேதிக்குள் குஜராத்தை சென்றடைந்துவிடவேண்டும் என்பது எங்கள் திட்டம். இப்போதே ஒருநாள் தாண்டிவிட்டது. ஏற்கனவே பாண்டவ்லேனி போன்ற பல இடங்களைத் தவிர்த்துத்தான் சென்றுகொண்டிருக்கிறோம். ஆகவே காலையில் ஐந்தரை மணிக்கே கிளம்பி அஜந்தா சென்று குகைக்கோயில்கள் திறக்கும்போதே பார்க்க ஆரம்பித்து மதியம் கிளம்பி சூரத் சென்று இரவு தங்கலாமென எண்ணினோம். நான் காலையில் எழுந்து எல்லாரையும் எழுப்பினேன். ஐந்தரைக்கே கிளம்பவும் செய்தோம்.
ஆனால் பழைய கதைகளில் வருவது போல ‘விதி விளையாடியது’. [சரியான விளையாட்டுப்பிள்ளை போல] ஔரங்காபாத் தாண்டிக் கொஞ்சதூரத்திலேயே காரின் சக்கரத்தில் ஓட்டை விழுந்து விட்டது. சத்தம் கேட்டு வண்டியை நிறுத்தினோம். காற்றுக்குழாய் இல்லாத ரப்பர் சக்கரம். சாதாரணமாக ஏதும் ஆகாது. ஆனால் ஆழமான வெட்டு. ஓட்டுநர் வண்டியின் அடியில் இருந்த உபரி சக்கரத்தை எடுக்கக் கம்பியை விட்டு சுழற்ற அது உடைந்து விட்டது.
வேறுவழி இல்லை. அந்த இடம் சுல்தான்பூர். அதிகாலை, இருட்டு அழுத்தமாகவே இருந்தது. இறங்கிக் குளிருக்கு ஒடுங்கி எவரையாவது பார்க்கமுடியுமா என்று எண்ணியபடி நடந்தோம். சாலையோரமாக நாலைந்து பையன்கள் நின்று ‘ஹேப்பி இண்டிபெண்டன்ஸ் டே’ என வாழ்த்துச் சொன்னார்கள்.அது குடியரசுதினம் என அவர்களுக்கு நினைவூட்டினோம். எல்லாம் சமம்தானே என்பது போல ஒரு சிரிப்பு. பையன்கள் பத்தாம் வகுப்பும் மேல்வகுப்புகளும் படிப்பவர்கள். ஆனால் ஒருவருக்கும் ஒரு வார்த்தையேனும் ஆங்கிலம் தெரியவில்லை.
ஒருவழியாக விஷயத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினோம். தமிழ்நாடு என்பது பெங்களூரும் திருப்பதியும் அல்ல என்பதைப் புரியவைத்தபோது மலர்ந்துவிட்டார்கள். ராணுவ அடிப்படையில் செயல்பட ஆரம்பித்தார்கள். ஊரிலேயே ஒரே ஒரு வண்டி பழுதுபார்ப்பவர்தான். அவரது கடைக்குச்சென்று தட்டிப்பார்த்தால் வழக்கம்போல அவர் உள்ளே தூங்கவில்லை, வீட்டுக்குச்சென்றுவிட்டார். இன்னொரு கடையைத் தட்டித் திறந்து உள்ளிருந்தவரிடம் பழுது பார்ப்பவரின் வீட்டைக் கேட்டுத் தெரிந்துகொண்டு ஒருபையன் சென்று கதவைத்தட்டி அவரை எழுப்பி வந்தான். மற்ற பையன்களிடம் பேசிக்கொண்டிருந்தோம்.
குடியரசு தினத்துக்குக் கொடியேற்ற பையன்களை ஆசிரியர் வரச்சொல்லியிருந்தார் . ஆசிரியர் கொஞ்ச நேரத்தில் வந்து அதிகாலையின் முதல் பான்பராக்கைத் தட்டி தட்டி வாயில் போட்டுக்கொண்டார். பையன்களுக்கு ஒரே குதூகலம். மாறி மாறி எங்களுடன் கைகுலுக்கிக்கொண்டார்கள். கைகுலுக்குவதென்பது ஒரு ஒரு நவநாகரீக செயல்பாடு என அவர்கள் நம்புவது தெரிந்தது. ஒரு பையன் பெயர் ஷேக் முஜீப் நஹ்மான் . வங்கசிங்கம். மிகச்சின்னவன், ஆனால் அவன் பத்தாம் வகுப்பு. ரொம்ப புத்திசாலியான பையன் என இன்னொருவன் சான்றிதழ் கொடுத்தான்.
அந்தக்காலைநேரத்தில் உற்சாகமான பையன்களுடன் பேசிக்கொண்டிருந்தது குதூகலத்தை அளித்தது. கொஞ்சநேரத்தில் உள்ளூர் முஸ்லீம்கள் வந்து என்ன உதவி தேவை என்றார்கள். சக்கரம் பழுது பார்ப்பதைச் சொன்னோம். ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள். இனாம்தார் என்பவர் இரும்பு வியாபாரம் செய்வதாகச் சொன்னார். மெட்ராஸ் அவருக்குத் தெரியவில்லை. நான் கன்யாகுமரி என்றதும் புரிந்துகொண்டார். சாய் குடித்தோம். அப்போது பள்ளி மாணவமாணவிகளின் குடியரசு தின ஊர்வலம் ‘போலோ பாரத் மாதா கி ஜே’ கோஷத்துடன் சென்றது. ஒரே கீச்சுக்குரலாகக் கேட்டது. பெரும்பாலும் பெண்குழந்தைகள்.
அஜந்தாவுக்குக் கிளம்பிச்சென்றோம். ஒவ்வொருவரிடமும் மீண்டும் மீண்டும் கைகுலுக்கிப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். மராட்டிய மக்களில் வழுக்கைகளே இல்லையே என்ற எண்ணம் சட்டென்று ஏற்பட்டது. சின்ன உடலமைப்புள்ள மக்கள். வெளிர்நிறம் அல்லது மாநிறம். பெண்கள் ஆண்களை விடச் சின்ன உடல்கொண்டவர்கள். புதியவர்கள் மேல் அவர்கள் கொள்ளும் பிரியம் சூரியன் உதிப்பதற்குள்ளேயே காலை நேரத்தைப் பொன்னிறமாக ஆக்கியது.
அஜந்தாவுக்கு நான் வருவது இது மூன்றாவது முறை. முதன்முறையாக 1982 இல் வந்தேன், சிறுவனாக. அப்போது அஜந்தா கிட்டத்தட்டக் கைவிடப்பட்ட நிலையில் இருந்தது. சுவரோவியங்களை சுற்றுலா வந்தவர்கள் சுரண்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அங்கே காவலுக்கிருப்பவர்கள் ஐந்து ரூபாய் பக்ஷீஸ் கொடுத்தால் அவர்களே சுரண்டிக் கையில் தருவார்கள். ஆண்மைவிருத்திக்கு நல்ல மருந்து என்றார்கள்.ராணுவ வீரர்கள் கும்பல்கும்பலாக வந்து தங்கி குகைகளிலேயே அடுப்பு மூட்டி சப்பாத்திபோட்டு தின்று கும்மாளமிட்டுக் கொண்டிருந்தார்கள்.
மனம் வெதும்பி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு ஒரு கடிதமெழுதினேன். அவர்கள் அதை தனியாகக் கட்டமிட்டுப் பிரசுரித்தனர். அக்கடிதத்திற்கு எதிர்வினையாக ஆக்ரோஷமான ஒரு கடிதத்தைப் பிரபல நடனமணி சோனால் மான்சிங் எழுதியிருந்தார். ‘லார்ட் ஜான் ஸ்மித் அஜந்தாவை மூடியிருந்த கற்பாறைகளை அகற்றி அஜந்தாவைக் கண்டுபிடித்தார். ஆனால் அஜந்தாவைக் காப்பாற்றும் தகுதி இந்தியர்களுக்கில்லை. அதை மீண்டும் பாறை வைத்து மூடிவிடலாம். நமக்கு நாகரீகமும் பண்பாடும் கைவரும்போது அதைத் திறந்துகொள்ளலாம்’ என எழுதியிருந்தார். .
பின்னர் இந்தியாவின் கலாச்சாரத் தூதராக அவர் ஜப்பான் சென்றிருந்தபோது ஜப்பானிய அரசிடம் அஜந்தாவைக் காப்பாற்றும்படி கோரினார். அஜந்தாவை ஜப்பானின் சிபாரிசின்படி யுனெஸ்கோ ஏற்றுக்கொண்டமைக்கும் இன்று அவை சிறப்பாகப் பேணப்படுவதற்கும் சோனால் மான்சிங் முக்கியமான காரணம். அதில் எனக்கும் ஒரு நகமளவு பங்குண்டு என நான் பெருமிதம் கொள்வதுண்டு.
மீண்டும் நான் அஜந்தாவுக்கு வந்தது வாசகநண்பர் சோமசுந்தரம் டாமனில் இருந்த நாட்களில். குழந்தைகளுடன் டாமன் சென்று அங்கிருந்து அஜந்தா சென்றோம். செல்லும்வழியில் அஜிதன் லஸ்ஸி சாப்பிட்டு நச்சுணவாகி நான்குநாள் கடுமையான காய்ச்சலில் ஔரங்காபாத் ஆஸ்பத்திரி ஒன்றில் கிடந்தான். அவன் ஓரளவு நலமானதும் நானும் அவனும் மட்டும் அஜந்தாவை சென்று கண்டோம். ஒவ்வொரு குகையிலாக அவன் இளைப்பாற அமர்ந்துகொள்ள நான் அவனுக்கு புத்தரின் கதையைச் சொன்னது அவன் இன்றும் நினைவுகூரக்கூடியதாக இருக்கிறது.
அஜந்தாவின் கதை ஒரு நாவலில் வருவது போன்றது. அஜந்தா குகைகளில் உள்ள ஆரம்பகாலக்குகைகள் கிமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் கடைசிக்குகைகள் கிபி ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும் பரவலாக அறிஞர்களால் கருதப்படுகிறது. அதாவது கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு அஜந்தா ஒரு கல்வி அமைப்பாகவும் ஆன்மீக அமைப்பாகவும் நீடித்திருக்கிறது.
ஆனால் சமீபகாலமாக ஐரோப்பிய ஆய்வாளர்கள், குறிபாக வால்ட்டர் ஸ்பிங் போன்றவர்கள் கிட்டத்தட்ட இருபதாண்டுக்காலத்தில் செதுக்கப்பட்டவை இக்குகைகள் என்றும் மிகக்குறைந்தகாலமே இவை புழக்கத்திலிருந்தன என்றும் சொல்கிறார்கள். கிபி 460 முதல் 480 வரை வாகாடகர் காலகட்டத்தில் இவை செதுக்கப்பட்டன என்று ஸ்பிங் சொல்கிறார் [Ajanta-A Brief History and Guide – Walter M. Spink]
ஆனால் அஜந்தாவைப் பார்ப்பவர்கள் ஸ்பிங் சொல்லும் கூற்றை ஏற்க முடியாது. அஜந்தாவின் குகை விகாரங்களில் தெளிவாகவே ஒரு பரிணாம வளர்ச்சியைக் காணமுடியும். எந்தவித அலங்காரங்களும் இல்லாத வெறும் தங்குமிடங்களும் வழிபாட்டிடங்களுமாக உள்ள குகைகள் ஆரம்ப காலத்தையவை. அவை ஹீனயானிகளுக்குரியதாக இருக்கலாம். மிகப்பிரம்மாண்டமான கட்டமைப்பும் நுட்பமான அலங்காரங்களும் கொண்ட குகைகள் காலத்தால் பிந்தையவையாக இருக்கலாம். அவையெல்லாமே வெறும் இருபதாண்டுக்காலத்தில் செதுக்கப்பட்டன என்பதை நம்புவது கடினம். மேலும் அவ்வளவு குகைகளை ஒரேயடியாக செதுக்கித்தள்ளுவதற்கான நடைமுறை நோக்கமும் ஐயத்துக்கிடமானது. அஜந்தா நெடுங்காலம் நீடித்திருந்தது என்றால் மட்டுமே அதை விளக்க முடியும்.
வாகாடகப் பேரரசர் ஹரிசேனரின் காலகட்டத்தில் இக்குகைகளில் பல செதுக்கப்பட்டன என்பது ஆய்வாளர்களின் கூற்று. கிபி மூன்றாம் நூற்றாண்டில் மகாராஷ்டிர நிலப்பகுதியில் தோன்றிய அரசு வாகாடகப் பேரரசு. இன்று வாசிம் என அழைக்கப்படும் நகரில் இவரது தலைநகர் இருந்தது. இது முன்பு வாத்ஸகுல்மா என்றழைக்கப்பட்டது. வாகாடகர்கள் குஜராத்தின் மால்வா பகுதியையும் தெக்காணத்தின் வடக்கையும் ஆண்டார்கள். அப்போது வட இந்தியாவில் குப்தப் பேரரசு இருந்தது.
வாகாடகப் பேரரசர் ஹரிசேனர் அஜந்தா குகைகளை செதுக்க உதவினார் என்று கல்வெட்டுகள் சொல்கின்றன. அவர் சௌராஷ்டிரத்தையும் மாளவத்தையும் தெக்காணத்தையும் வென்றதைப்பற்றிக் கல்வெட்டுகள் பேசுகின்றன.அஜந்தாவில் உள்ள கல்வெட்டுகள் ஹரிசேனரின் அமைச்சர் வராகதேவனும் அவர் மைந்தன் ஹஸ்திபோஜனும் அஜந்தாகுகைகளை செதுக்கவும் ஓவியம் வரையவும் நிதியளித்ததைப்பற்றிப் பேசுகின்றன. வாகாடகப்பேரரசு ஹரிசேனருக்குப் பின்னர் மெல்லமெல்ல அழிந்தது. வாகாடகப் பேரரசு குறித்து அதிகமான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
ஏப்ரல் 1819இல் சென்னை மாகாணத்தைச்சேர்ந்த பிரிட்டிஷ் அதிகாரியான ஜான் ஸ்மித் வேட்டையாடுவதற்காக அஜந்தா காட்டுக்குள் சென்றார். ஒரு புலியை அவர் துரத்திச்சென்றபோது மாடுமேய்க்கும் பையன் ஒருவன் புலிகள் தங்குமிடம் என இக்குகைகளை சுட்டிக்காட்டினான். புதர்மண்டி மூடிக்கிடந்த பத்தாவது குகைக்குள் சென்று அவர் ஓவியங்களைக் கண்டுபிடித்தார். அவ்வாறு கிட்டத்தட்ட ஆயிரத்தி இருநூறு வருடங்களாக மறைந்து கிடந்த அஜந்தா குகைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
அஜந்தாகுகைகள் இன்று யுனெஸ்கோவால் பேணப்படுகின்றன. இன்று அஜந்தா குகைகளின் அருகே செல்ல எரிபொருள் வண்டிகளுக்கு இடமில்லை. மின்கலவண்டிகளில்தான் செல்லவேண்டும். குகைகள் ஓவியங்களுக்குத் தீங்குசெய்யாத ஒளியால் காட்சிப்படுத்தப்படுகின்றன. அஜந்தாவில் முப்பது குடைவரை விகாரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்பது பத்து பத்தொன்பது இருபத்தாறு இருபத்தொன்பதாம் குகைகள் சைத்யங்கள். அதாவது பௌத்த வழிபாட்டிடங்கள். எஞ்சியவை துறவியர் தங்கும் விகாரங்கள்.
அஜந்தாகுகை ஓவியங்கள் குகையின் கற்சுவர்மேல் களிமண்ணும் சாணியும் கலந்த கலவை பூசப்பட்டு அதன் மேல் சுண்ணாம்புச்சாந்து பூசப்பட்டு இறுக்கப்பட்ட பரப்பில் பலவண்ணக் கூழாங்கற்களை அரைத்து உருவாக்கப்பட்ட நிறங்களைக்கொண்டு வரையப்பட்டவை. சுண்ணாம்புச்சாந்து இறுகுவதற்குள் வரையட்டுவிடுவதனால் கூழாங்கல்சாந்து உறுதியாகவே ஒட்டிக்கொள்கிறது. இவை தாவர வண்ணங்கள் அல்ல. ஆகவேதான் இரண்டாயிரம் வருடங்களாகியும் வண்ணம் மங்காமலிருக்கின்றன. கல்கி அவரது ’சிவகாமியின் சபதம்’ நாவலில் ஆயனச்சிற்பி இந்த வண்ண ரகசியத்தைத் தேடுவதாக எழுதியிருப்பார்.
அஜந்தா ஓவியங்களின் ஊர் என்ற எண்ணத்தை இந்தியா முழுக்க உருவாக்கியிருக்கின்றன பாடநூல்கள். பெண்குழந்தைகளுக்கு அஜந்தா என்று பெயரிடும் வழக்கமே பல இடங்களில் உண்டு. அஜந்தா என்பது ஒரு மரூஉ தான். அசிந்தா என்பது உண்மையான பெயர். சிந்தனையற்ற நிலை என்று பொருள்.
ஐந்து குகைவிகாரங்களில் ஓவியங்கள் இருக்கின்றன . பெரும்பாலான ஓவியங்கள் இன்று சிதைந்த நிலையிலேயே உள்ளன. 1910இல் அஜந்தாவுக்கு வந்த வங்கபாணி ஓவியர்களான தேவேந்திரநாத் தாகூர் போன்றவர்கள் அதை ஓரளவு நன்றாகவே பிரதி எடுத்திருக்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் ஐம்பதாண்டுக்காலத்தில் ஓவியங்களின் பெரும்பகுதி அழிந்துவிட்டிருக்கிறது. பல புகழ்பெற்ற ஓவியங்களில் சில வண்ணத்தீற்றல்களை மட்டுமே காணமுடிகிறது. சில குகைகளில் ஓவியங்களின் சிதிலங்கள் மட்டுமே உள்ளன.
ஆனாலும் புகழ்பெற்ற கரியநிற அழகி, போதிசத்வ வஜ்ரபாணி, போதிசத்வ பத்மபாணி போன்ற ஒவியங்களைக் காண்பது ஒரு அபாரமான அனுபவம்தான்.போதிசத்வ வஜ்ரபாணியின் பெரும் மணிக்கிரீடம் இந்தியா முழுகக் பல்வேறு சினிமாக்களில் நகல்செய்யப்பட்ட ஒன்று.
கூர்ந்து பார்க்கப்பார்க்க சுவர்ப்பரப்பின் மங்கலான வண்ணப்பரவலில் இருந்து வடிவம் கொண்டு எழுந்து வரும் இந்த ஓவியங்கள் நம் கற்பனையை உறிஞ்சிக்கொண்டு வளர்ந்து முழுமை பெறுகின்றன. நம் கண்களுக்குள் புகுந்து அகத்தை நிறைத்து விரிகின்றன.அஜந்தா ஒவ்வொரு முறையும் எனக்கொரு கனவு வெளியாகவே அனுபவமாகிறது. ஒரு மாபெரும் வண்ண ஓவியத்திரைச்சீலையை அடித்தளமாகக் கொண்ட கடலின் நீராழத்தில் மூழ்கி நீந்தி அந்த ஓவியங்களைப்பார்ப்பது போல. நீரின் அலைகளில் ஓவியங்கள் நெளிகின்றன. தெளிந்தும் கலைந்தும் கலங்கியும் சேர்ந்தும் ஜாலம் காட்டுகின்றன.
எந்த ஓவியத்தயும் தனியாக கவனிக்க முடிவதில்லை என்பதே அஜன்ந்தாவின் அனுபவம். வழிகாட்டிகள் துல்லியமான சொற்களால் விளக்கத்தொடங்கினால் அறிதல் என்னும் அனுபவம் நிகழ்கிறது. ஆழ்ந்து ச்லும் கன்வுந்லை கலைகிறது. கண்களை அலையவிட்டு உள்ளத்தை மயங்கிச்செல்ல விட்டால் ஒட்டுமொத்தமாக ஓவிய வெளியே நெளிந்துகொண்டிருக்கிறது. ஓர் ஓவியத்தைக் கூர்ந்து நோக்கினால் அது கலைந்து மறைகிறது. எதிர்பாராத கணம் ஓர் ஓவியம் துல்லியமாக நம்மைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறது. சிலசமயம் மரக்கிளைகளில் நாம் அப்படி சில பறவைகள் நாமறியாமல் நம்மை நோக்கி அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிடுவோம்.
அஜந்தா ஓவியவெளியின் அற்புதமே திடுமென ஓர் ஓவிய விழி நம்மைப் பார்க்கும் தருணம்தான். பேரழகுகொண்ட பெண்கள். நீண்ட நீலக்கண்கள் கனவுடன் சாய உடல் அக்கனவின் சுமைதாளாமல் ஒசிய தாமரை கூம்பியது போல நின்றிருக்கிறார்கள். வைரமுடி அணிந்த போதிசத்வர்கள் தியானத்தில் சிலைத்திருக்கிறார்கள். ததாகதரின் நூறு நூறு முகங்கள்.
கருணை ஒரு மனித உருவெடுத்து இந்த மண்ணில் நடந்திருக்கிறது. ஞானத்தைத் தொட்டறியும் வாய்ப்பு இந்த மண்ணில் சிலருக்குக் கிடைத்திருக்கிறது. எங்கும் கொண்டாட்டம். கனவுகளிலேயே அத்தனை பெரிய களியாட்டு நிகழமுடியும். இது ஒரு கனவுதான். மெய் மறக்கச்செய்யும் காட்சிவெளி. மாடமாளிகைகள். பாய்மரக்கப்பல்கள். தெருக்களில் செல்லும் யானைகள்.
எத்தனை யானைகள். யானை இப்படி ஒசியுமா? யானை இப்படி மிதக்குமா? யானைக்குள் புகுந்த குழந்தையை வரைந்திருக்கிறார்கள். யானை என்ற குறும்புத்தனத்தை வரைந்திருக்கிறார்கள். வழிந்தோடும் நீரோடைமேல் மரக்கிளைகளின் நிழலாட்டம் போலச் சென்ற காலம் இக்காலத்தில் படரவிடும் தோற்றங்கள்….சட்டென்று ஒரு கண்பார்வை வேல்நுனிபோல வந்து தீண்டுகிறது. அந்தப் பேரழகி என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மரணமற்ற காலமற்ற ஒரு நிரந்தரக் கணத்தில்.
அஜந்தா ஓவியங்களின் சிறப்பியல்புகள் இரண்டு. ஒன்று இரட்டைப்பரிணாமத்தன்மை. முப்பரிமாணப் புகைப்படத்தோற்றம் கொண்டவை அல்ல. ஆகவே நிழல் இல்லை. கோடுகளாக வரையப்பட்ட ஓவியங்களுக்குள் சாயம் பூசப்பட்டிருக்கிறது. யோசிக்கையில் இதுவே ஓவியத்தில் சரியான இயல்பென்று தோன்றுகிறது. முப்பரிமாணம் என்பதே சிலைகளுக்குரியது. மேலும் நிழல் இல்லாமல் முப்பரிமாணம் இல்லை. நிழல் இல்லாத காட்சிவெளிதானே ஓவியத்தின் கனவாக இருக்க முடியும்?
இரண்டாவதாக இந்த ஓவியங்களில் காலஇடம் வரையறுக்கப்படவில்லை. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களில் நிகழ்பவை ஒரே ஓவியப்பரப்பாகக் கலக்கப்பட்டுள்ளன. மாயாதேவி தன் கனவுக்குள் புகும் வெள்ளையானையை நோக்கி பிரமிக்கும் காட்சிக்குள் சுத்தோதன மன்னரின் அரண்மனை நீட்டி வந்து நிறைந்திருக்கிறது. காலமும் வெளியும் புறவயமானவை. இந்த ஓவியங்கள் காட்டுவது நித்ய நிகழ்காலமாக எல்லாவற்றையும் அள்ளிச்சுருட்டி ஓடிக்கொண்டிருக்கும் சித்தவெளியை. எல்லாவற்றையும் கலந்து அகம் விளையாடும் ஆடலை.
காவியும் நீலமும் மட்டுமே அதிகமும் மிஞ்சியிருக்கின்றன இந்த ஓவியங்களில். பிற வண்ணங்கள் காலத்தில் மங்கிவிட்டன. இந்த ஓவியங்களை வரைந்த ஓவியன் காலத்தின் குழந்தை. அவன் வரைந்துமுடிக்கவும் அந்த சைத்ரிகத் தந்தை தூரிகையை வாங்கி ஓவியத்தைத் திருத்தி மாற்றி வரைந்திருக்கிறான். சிதிலங்களும் ஓவியப்பரப்புக்குள் ஊடுருவி ஓவியமாகின்றன. ஓவியங்களின் கற்பனை வீச்சை சிதிலங்கள் வென்று செல்கின்றன.
பார்த்து முடிக்கமுடியாதவை இந்த ஓவியப்பரப்புகள். ஒவ்வொரு முறையும் நான் துல்லியமான தகவல்களைத் திரட்டிவந்து பார்க்க நினைப்பேன். ஒவ்வொரு முறையும் சொல்லிழந்து நிற்பேன். பார்க்கவே இல்லை என எண்ணியபடி திரும்பிச்செல்வேன். நான் பார்த்துச்செல்வது என்னுள் இருக்கும் ஓவியங்களைத்தானா?
அஜந்தா குகைவிகாரங்களின் கருவறைகளில் புடைப்புவடிவமாகச் செதுக்கப்பட்டுள்ள மாபெரும் புத்தர்சிலைகளும் அருகே அரையிருளில் அவரை நோக்கி நின்றிருக்கும் பிரம்மாண்டமான போதிசத்வர் சிலைகளும் மிகக் கூரிய மௌன மொழியில் பேசிக்கொண்டிருக்கின்றன.கருவறைக்கு முன் சென்று நிற்கையில் வெண்ணிழலாகத்தெரியும் சிற்பங்கள் இருளில் இருந்து புடைத்தெழுவது ஓர் அரிய அனுபவம்.
இப்போது சிறப்பான ஒளியமைப்பு செய்திருக்கிறார்கள். நான் முதல்முறை வந்தபோது சேவகர்கள் கண்ணாடியை வெயியில் பிடித்து விதவிதமான கோணங்களில் புத்தர்சிலைகளைக் காட்டினார்கள். பக்கவாட்டில் ஒளி படும்போது புத்தர் புன்னகைப்பது போலவும் கீழிருந்து மேலாக ஒளி விழும்போது புத்தர் துயரத்துடன் இருப்பது போலவும் தோன்றியது.
அஜந்தா குகைகளில் எனக்கு மிகப்பிடித்தமான சிலை என்பது கடைசிk குகையில் உள்ள பரிநிர்வாண புத்தரின் தோற்றமே. புத்தர் இடப்பக்கமாக ஒருக்களித்துப் படுத்தநிலையில் தன் சீடர்களுக்குக் கடைசி உபதேசம் அளித்தபடி முக்தியடைந்தார் என்கிறார்கள். நேபாளம்செல்லும் வழியில் குஷீநகரில் சயனபுத்தரின் பெரியதோர் சிலையைக் கண்டிருக்கிறேன். அங்குதான் புத்தர் முக்தியடைந்தார் என்பது வரலாறு.
புத்தர் படுத்திருக்கும் சிலை பின்னர் மகாயான பௌத்தர்களால் நிறைய இடங்களில் செதுக்கப்பட்டது. உண்மையில் படுத்திருக்கும் விஷ்ணுவின் சிலை அந்த பௌத்த சிலைகளை முன்மாதிரியாகக்கொண்டு செதுக்கப்பட்டது என்கிறார்கள். அல்லது படுத்திருக்கும் மூதாதையர் சிலைகளைச்செய்யும் பழங்குடி மரபிலிருந்து இவ்விரு சிலைகளும் உருவாகின.
அந்தப் பெரிய புடைப்புச்சிலையை பிரமிப்புடன் பார்த்து நின்றிருந்தேன். ஆரம்பகட்டக் குகைகளில் மாயாதேவியின் வயிற்றுக்குள் வெள்ளை யானை புகும் கனவு ஓவியமாகத் தீட்டப்பட்டிருந்தது. அந்த வெள்ளை யானை வெண்மேகமாக வான்வெளியில் கரையும் தருணம் இது. புத்தர் முகத்தில் அறிவதற்கினி ஏதுமில்லை என்ற புன்னகை. கீழே அழும் சீடர்கள். மேலே தாளங்களும் மேளங்களும் துந்துபிகளுமாகக் கொண்டாட்டமிடும் தேவர்கள். அஜந்தா என்னும் பெரும் கனவு முடியும் புள்ளி அது. ஒரு பேரிசை முடியும் மௌனம் போல.
அஜந்தாவில் இருந்து மாலை மூன்று மணிக்குக் கிளம்பினோம். இரவே சூரத்தை அடையத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் வழியில் மலைப்பாதையில் லாரிகளின் மிகப்பெரிய வரிசை. அய்யப்பனின் மணிமாலை கிடப்பது போல் தோன்றியது அந்த மலை அணிந்த லாரிநிரையைப் பார்க்கையில். சாலையில் தங்கித் தங்கி ஊர்ந்து ஒருவழியாக வழியிலேயே சோனாபூர் என்ற ஊரில் வந்ததும் தங்க முடிவெடுத்தோம். இங்கே சாயிகிருபா என்ற விடுதியில் இரவு பத்தரைக்கு வந்து சேர்ந்தோம். இதை எழுதியபின்னர்தான் நான் தூங்கவேண்டும்.
மேலும்…