திருவண்ணாமலை

அன்புள்ள ஜெ,
குரு பற்றிய கடிதங்களில் , திருவண்ணாமலையைப் பற்றி   “எது அவர்களை
ஈர்க்கிறது என்ற கேள்வியில் உள்ளது தொன்மையான அறம் எது என்பது” என்று
குறிப்பிட்டுள்ளீர்கள்.
1) என் மனதில் வெகு நாட்களாக உள்ள கேள்வி இது. தத்துவம் மற்றும்
ஆன்மிகத் தளங்களில் பயிற்சி உள்ளவர் என்ற முறையில் எது திருவண்ணாமலையை
நோக்கி ஈர்க்கிறது என்பதற்கான உங்கள் புரிதல் என்ன ?
2)  நான் யோகிராம்சுரத்குமார் அவர்களுடன் பெரிய பழக்கம் ஏதுமின்றி
அவர்பால் ஈர்க்கப்பட்டவன். அவருடன் உங்கள் அனுபவம் அல்லது அவர் பற்றிய
உங்கள் பார்வையினைப் பகிர்ந்து கொள்ள முடியுமாயின் மிக்க மகிழ்சி அடைவேன்.
மற்றபடி , ஆஸ்திரேலியப் பயணம் வெகு சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள்.
அன்புடன்,
மதி

அன்புள்ள மதி,

திருவண்ண்னாமலைக்கு பழங்காலம் முதலே ஒரு தொன்ம முக்கியத்துவம் உள்ளது. சங்க காலம் தொட்டு குறிப்பிடப்பட்டுவரும் சில கோயில்களில் அது ஒன்று. அருண மலை, சோண மலை, செம்மலை என்றெல்லாம் அது சொல்லப்படுகிறது. மொழியில் உள்ள இந்த தடத்தை பின் தொடர்ந்து சென்றால் அதற்கான காரணமாக புராணங்களில் சில தடையங்கள் உள்ளன. பிரம்மாவும்  விஷ்ணுவும்  யார் பெரியவரென பூசலிட்டபோது சிவன் அவர்கள் நடுவே ஒரு மாபெரும் அக்கினி தூணாக வானும் பாதாளமும் மூட நின்றாரென்றும்  இருவரும் அவரது அடிமுடி காண முடியாத அவர்கள் நாணினார்கள் என்றும் கதை சொல்கிறது. நிலவியலில் அடுத்த தடயம் உள்ளது. திருவண்னாமலை  ஒரு எரிமலை.

இப்போது ஆஸ்திரேலியாவில் கான்பெரா நகரில் உள்ளேன். சிறிய நகரம் இது. இதை ஏன் ஆஸ்திரேலியாவின் தலைநகரமாக ஆக்கினார்கள்? இது இங்கே வாழ்ந்த பழங்குடிகள் கூடி முடிவுகளை எடுக்கும் இடமாக இருந்தது. பழங்குடித்தலைவர்கள் வருடத்துக்கு ஒருமுறை இங்கே கூ்டுகிறார்கள்– தொல்பழங்காலம் முதல். இந்த பெயரே பழங்குடி மொழியில் கூடும் இடம் என்பதே. ஏன்? என்ன அடிபப்டை? எதுவோ ஒன்று இருக்கலாம். அந்த மூலக்காரணம் மனித சிந்தனை உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது. மனித மனத்தை ஆளும் தொல்படிமங்கள்  மனித சிந்தனையை விட மிகமிக பழையவை

அப்படித்தான் திருவண்ணாமலையும். அந்த எரிமலை பல லட்சம் வருடம் பழையது. அன்றிருந்தே  இந்த நம்பிக்கை நம் தொல்பழங்குடி மனதில் இருந்து மொழி உருவானபின் மொழியில் குடியேறியதா ? தெரியவில்லை.   அதைக் கண்டுபிடிப்பது கஷ்டம்

பின்னாளில் தியானத்தில் மூலாதாரத்தில் உள்ள  குண்டலினி சக்தி  எரிந்து சகஸ்ராரத்துக்குச் செல்வதைக் குறிக்கும் குறியீடாக இந்த அக்கினிமலை உருவகம்செய்யபப்ட்டது. ஆகவே துறவியருக்கு இது முக்கியமானதாக ஆகியது. நம் சித்தர்களில் பலர் அங்கே இருந்தவர்கள். இன்றும் அம்முக்கியத்த்வம் சற்றும் குறையாமல் தொடர்கிறது. திருவண்ணாமலையில் பல துறவிகள் பல ஞானிகள் இப்போதும் உள்ளனர்

நான் 1981ல் திருவண்ணாமலையில் கிட்டத்தட்ட  ஒருமாதம் சாமியார் போல இருந்துள்ளேன். அப்போது சகபிச்சைக்காரராக அங்கே இருந்தார் யோகி ராம் சுரத் குமார். சந்தித்து இல்லை. பின்னர் நண்பர் பவா செல்லத்துரையுடன் சென்று இரண்டு மணி நேரம் பேசியிருக்கிறேன். அதை எழுதியிருக்கிறேன். விரைவில் அதை இணையத்தில் போடுவேன்.

யோகி ராம் சுரத் குமா ஒரு யோகி, ஒரு ஞானி. ஆகவே நம் மதம் நம் பண்பாடு நம் தத்துவம் ஆகியவற்றுக்கு அப்பால்பட்ட மனிதர். அதை நாம் நம் மதம் தத்துவம்  ஆகியவற்றை வைத்து [தப்பாக] புரிந்துகொண்டு பேசுகிறோம். அவரை நம் மனதால் நெருங்க முயல்வதே அவரை அறியும் வழி

ஜெ

முந்தைய கட்டுரைகுயில்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைராஜா ரவிவர்மா