சென்ற ஏப்ரல் ஏழாம்தேதி காலையில் சென்னைவந்திறங்கினேன். நண்பர் கெவின்கேர் பாலா சென்னை எழும்பூர் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார். காலை நாலரை மணிக்கே வந்துவிட்டார் என்றார். ரயில் நேரமே ஆறரைதான். கேட்டால் எழும்பூர் ரயில்நிலையத்தை அதிகாலையில் பார்ப்பது பிடிக்கும் என்று சொன்னார். அவரது வீட்டுக்குச் சென்று காபி குடித்ததுமே நேரடியாக இலக்கிய சர்ச்சைக்குள் புகுந்துவிட்டேன்.
பாலாவின் மனைவி விஜியை நான் நேரில் அப்போதுதான் பார்க்கிறேன், தொலைபேசியிருக்கிறேன், இணையத்தில் தொடர்பு கொண்டிருக்கிறேன். நிறைய பேசினோம். அவரது க்ழுஅந்தைகள் பள்ளிக்குச் ச்ன்றுகொண்டிருந்தார்கள். பள்ளிக்குச் செல்லவில்லையா என்றுகேட்டேன். பள்ளிக்குத்தான் செல்கிறார்கள் என்றார். சீருடை இல்லையா என்றேன். அவர்கள் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் படிக்கிறார்கள். அங்கே சீருரை சீரான கல்வி ஏதும் இல்லை. அவரது பெண் இப்ப்போது ஒன்பதைந் எருங்குகுகிறாள். தேர்வு முறைக்குள் நுழையப்போகிறாள். தேர்வு உருவாக்கும் பதற்றம் இப்போதுதான் அறிமுகமாகிறது என்றார் பாலா. ஆனால் எனக்கு அது முதல் தேர்வு எழுதும்வரைத்தான் இருக்கும் என்று தோன்றியது.
பாலா அலுவலகம் சென்றார். விஜியும் அருண்மொழியும் ஒரு காரில் துணிகளும் பொருட்களும் வாங்கச்சென்றார்கள். நான் பாலா ஏற்பாடுசெய்த வாடகைக்காரில் சென்னையில் சுற்றினேன். முதலில் நேராக என் பயணமுகவரிடம் சென்று அன்னியச்செலவாணி வாங்கினேன். அதன்பின் மனுஷ்யபுத்திரனைப் பார்க்கப்போனேன். அவரது சிறிய ஏஸி அறையில் வழக்கம்போன்ற உற்சாகமும் சோர்வும் சரிவிகிதமாகக் கலந்த மனநிலையில் இருந்தார். அவரிடம் என் நூல்களை வாங்கிக் கொண்டேன்
எம்.யுவன் ஷாஜி பற்றிஎ ழுதிய கட்டுரையைப்பற்றித்தான் பேசிக்கொண்டோம். எனக்கு எம்.யுவன் நெருக்கமான நண்பன். ஷாஜியும். நண்பர்கள் நடுவே இப்படி ஒரு மோதல் அவ்ரும்போது சங்கடம்தான் ஏற்படுகிறது. அக்கட்டுரையில் யுவனுக்கு இருக்கும் மனச்சிக்கல்கள் மட்டுமே தெரிகின்றன. அவனுக்கு ஷாஜியின் இசை பற்றிய விமரிசனங்கள் சார்ந்து ஒரு விமரிசனக்கருத்தையும் சொல்வதற்கு இல்லை. ஷாஜி மரபிசை, மேலை இசை,பரப்பிசை அனைத்தையும் ரசிக்கவும் விமர்சிக்கவும் ஒரு பொது அளவுகோலை உருவாக்க முடியுமா என்று பார்க்கிறார். அதற்கான அணுகுமுறை ஒன்றை சுயமாக உருவாக்குகிறார். அது மூன்று தளங்கள்ச் ஆர்ந்தது. ஓர் ஒலிப்பதிவுநிபுணர் என்ற முறையில் துல்லியமான ஒலியமைப்பு அவரது கவனங்களில் ஒன்று. சுருதியும் பாடலும் கச்சிதமாக அமைவது ஓர் அளவுகோல். உணர்ச்சிகள் சிறப்பாக வெளிப்படுவது இன்னொரு அளவுகோல். இம்மூன்றும் சிறப்பாக அமையவேண்டும். அல்லது ஒன்றின் குறைவை இன்னொன்று ஈடுசெய்யவேண்டும். இந்த அளவுகோலை அவர் கட்டுரைகளில் சீராக காணலாம். யுவன் ‘எனக்கும் இசை தெரியும்’ என்று மட்டும்தான்ச் ஒல்கிறார். யுவன் மிகத்தீவிரமாக இசை கேட்பவர், கேட்டு உருகுபவர். ஆனால் ஷாஜியிடம் உள்ள மதிபீட்டுக்கருவிகள் அவரிடம் இல்லை.
அங்கிருந்து கிளம்பி எனி இன்டியன் கடைக்குப்போய் ஈழ இலக்கியம் விமரிசனப்பார்வை நூலை 20 பிரதிகள் வாங்கிக் கொன்டேன். தி நகரில் காரை ஒரு கிலோமீட்டர் தள்ளியே நிறுத்த முடிந்தது. கையில் சுமையுடன் வெயிலில் அலைய வேண்டியிர்நுதது. அங்கிருந்து ராயப்பேட்டையில் வசந்தகுமாரின் வீடு. தமிழினி நூல்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டேன்.
மதியம் மீண்டும் பாலா வீடு. பாலா வந்தார். சாப்பிட்டுவிட்டு நானும் பாலாவும் விஜியும் லைஃப் ஸ்டைல் கடைக்குச் சென்று இரு சட்டைகள் பெல்ட் என சில பொருட்களை வாங்கிக் கொண்டோம். எனக்கு பொதுவாக எல்லா சட்டைகளும் நன்றாக இருப்பதாகவே பட்டது. அவர்கள் தேர்வுசெய்ததை வாங்கிக் கொன்டேன்.
மாலை எட்டரை மணிக்கு விமான நிலையம் கிளம்பினோம். ஆஸ்திரேலியா உள்ளே நுழையும்பொருட்களுக்கு கடுமையான கட்டுபபடுகளை விதித்திருக்கும் நாடு. தாவரப்பொருட்கள், விலங்குத்தயாரிப்புகள் மேல் மிகக் கடுமையான கண்காணிப்பு. விதைகளும் நோய்களும் பரவாமல் இருப்பதற்காக. ஆகவே எதையுமே கொண்டுசெல்லவேண்டியதில்லை என்ற முடிவில் இருந்தோம்.
ஒன்பதேமுக்காலுக்கு சென்னை சர்வதேச விமானநிலையத்துக்குள் நுழைந்துவிட்டோம். முதல் தேர்விலேயே அருண்மொழி எனக்குத்தெரியாமல் உள்ளே வைத்திருந்த கத்தரிக்கோலை எடுத்து இது என்ன என்று கேட்டார்கள். பரிதாபமாக ‘தெரியாது’ என்று சொல்லி அருண்மொழியை கடுப்பாக பார்த்தேன். புத்தகங்கள் கட்டுக்கட்டாக இருந்ததனால் அதிகமாக கேள்வி ஏதும் கேட்கவில்லை
பன்னிரண்டு மணிக்கு விமானத்தில் ஏறி அமர்ந்தோம். தூங்கலாம்தான். ஆனால் தூக்கம் வரவில்லை. தூங்கி வரும்போது எதையாவது தின்னக் கொன்டுவந்தார்கள். விளக்கைப்போட்டார்கள். காலை ஆறுமணிக்கு பாங்காக்.
பாங்காக் பிரம்மாண்டமான விமானநிலையம். அதில் எல்லாம் தெரிந்த சகஜபாவனையுடன் நடந்தேன். பொதுவாக இந்தியாவுக்கு வெளியே எதுவும் குளறுபடி ஆவதில்லை என்பதே என் அனுபவம். தேவையான அனைத்துமே எழுதப்பட்டிருக்கும். கேட்டால் சரியான பதில்கள் கிடைக்கும். ஆனால் ஒரு சாக்லேட் டிரிக்ங் குக்கு மூன்று அமெரிக்க டாலர் என்றதை ரூபாய்க்கு மாற்றுஇப்பார்த்து மன அதிர்ச்சி அடைந்தேன்.
ஒன்பதரை மனிக்கு தாய் ஏர்வேய்ஸின் விமானம். விமானத்தில் பாதி இடம் காலியாகவே இருந்தது. படங்களை தேர்வுசெய்து போடலாம். நன் ஏற்கனவே பார்த்த எனிமி இன் த கேட்ஸ் என்ற படத்தை மீண்டும் பார்த்தேன். முதல்தடவை பார்த்தபோது இருந்த வேகம் கொஞ்சம்கூட இல்லை. சவசவ படம். தூங்கிவிட்டேன். இந்திய சைவ உணவு இருமுறை கொன்டுவரப்பட்டபோது மட்டுமே விழித்தேன்
எட்டாம் தேதி இரவு எட்டு மணிக்கு மெல்போர்ன் வந்தேன். முருகபூபதியும் டாக்டர் நடேசனும் விமானநிலையம் வந்திருந்தார்கள். குளிர் இலேசாக இருந்தது. அவர்கள் கோட்டுகள் கொன்டுவந்திருந்தார்கள். முருகபூபதியின் வீட்டுக்குவந்தோம். சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டோம்.
அசோகமித்திரன் ஒருமுறைஎ ழுதினார்– மிகமிகக் குறுகலான இடத்தில் நீங்கள் சௌகரியமாக இருக்கிறீர்கள் என்னும் எண்ணத்தை எப்படி உருவாக்குவதென விமானத்தில்தான் பார்க்கலாம் என. கைகால் நீட்டி படுத்தபோதுதான் விமானத்தின் இடுங்கல் புத்தியை அறைந்தது