காலையில் எழுந்தது ஐந்து மணிக்கானாலும் கிளம்பத் தாமதமாகிவிட்டது. காலையின் குளிர் ஒரு காரணம். வடக்குநோக்கி வர வர , பகலின் வெப்பத்துக்கும் இரவின் குளிருக்கும் இடையேயான வேறுபாடு அதிகரித்தபடியே வந்தது. காலை ஆறரைக்குத்தான் கிளம்பினோம். நேராக மூல்குந்த் என்ற முலுகுந்து மலைக்குச் சென்றோம். சமணர்களின் முக்கியமான ஒரு தலமாக இருந்தது இந்த ஊர். ஆனால் நாங்கள் வழி விசாரித்து அங்கே செல்வதற்குள் ஆயிரத்தைநூறு வருடங்கள் தாண்டி அந்த ஊர் புழுதி மண்டிய இடிபாடுகளின் குவியலாக மாறிவிட்டிருந்தது.
முலுகுந்து இன்று முக்கியமான தொல்லியல் மையமாக அறியப்பட்டிருந்தாலும் அதிகமான ஆய்வுகள் ஏதும் செய்யப்படவில்லை. இடிபாடுகளைக்கொண்டு கட்டப்பட்ட பாழ்வீடுகள். சாக்கடை ஒழுகும் தெருக்கள். பன்றிகள். வறுமை திகழும் முகங்கள் கொண்ட மனிதர்கள். அதிகமும் முஸ்லீம்கள். அவர்கள் அங்கே வருபவர்களை வேறு ஏதோ உலகத்தில் இருந்து வேடிக்கை பார்த்தார்கள். மூல்குந்தின் தெருவில் இருந்த ஒரு ஆயா கடையில் இட்லி சாப்பிட்டோம். இட்லி இங்கே ஒரு தின்பண்டம், வடைபோல, ஜிலேபி போல. உணவு அல்ல. ஒரே ஒரு இட்லிக்கு சாம்பார் விட்டு ஸ்பூன் போட்டுக் கொடுத்தார்கள். நான்கு பூரி எட்டு ரூபாய். ஒரு இட்லி நான்கு ரூபாய். டீ குடித்தபின் சமண பஸதியை விசாரித்து நடந்தோம்.
பார்ஸ்வநாதருக்குக் கட்டப்பட்ட புகழ்வாய்ந்த சமண பஸதி ஜினகிரி என ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட குன்றின் பாதி உயரத்தில் இருந்தது. பலரிடம் வழிகேட்டபோது விசித்திரமாகப் பார்த்து சந்தேகத்துடன் சொன்னார்கள். அங்கே செல்லச்செல்ல ஒன்று தெரிந்தது. அப்பகுதியை மொத்த ஊரும் கழிப்பிடமாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தது. மக்கள் கைகளில் பிளாஸ்டிக் செம்புகளுடன் சாரிசாரியாக மேலேறிச்சென்றார்கள். கழிவிறக்கத்தை ஒரு சமூகச் செயல்பாடாகச் செய்வதை இங்கேதான் பார்த்தேன். மொத்தமாக ஒரு பெரும் மலக்காடு. சமணக் கோயில் பெரியது. உள்ளே மூலச்சிலை ஏதும் இல்லை. பாறைமேல் ஒரு பெரும் தீர்த்தங்கரர் சிலை செதுக்கும்பணி ஆரம்பித்துப் பாதியில் நின்றிருந்தது. துணியால் முகம்மூடி நிற்கும் குழந்தை போலத் தீர்த்தங்கரர் பாறைக்குள் மெல்லிய புடைப்புகளாகத் தெரிந்தார். கோயில் வளாகம் முழுக்க இடிந்த கோயில்துண்டுகள், சிற்பங்கள். கதம்பர்களின் காலகட்டத்தில் கட்டப்பட்ட கோயில் இது.
சமணம் செழித்திருந்த முலுகுந்து நகரில் இன்று ஒரு சமணக் குடும்பம் கூட இல்லை. இப்படிக் கைவிடப்பட்டுக் கிடந்த பல சமணக் கோயில்கள் தமிழகத்திலும் இருந்ததைப் பதினேழாம் நூற்றாண்டுப் பயணிகளும் எச் ஆர் பேட்ச், ஜெ எச் நெல்சன் போன்ற ஆங்கில ஆட்சியாளர்களும் பதிவுசெய்திருக்கிறார்கள். ஒரு இடிபாட்டுப்பகுதி மனிதவாசம் இல்லாமல் கிடக்கும். ஆனால் மக்கள் தொகை அதிகரிக்கையில் அவை ஊர்களாகின்றன. அந்த ஆலயங்கள் சைவ வைணவ மதங்களின் பயன்பாட்டுக்கு வருகின்றன. என்றாவது இந்தக் கோயிலும் உயிர்பெறலாம்.
கீழே வந்தோம். வெயில் நன்றாக ஒளிவீச ஆரம்பித்திருந்தது. கீழே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சித்தேஸ்வரர் கோயில் இருந்தது. கதம்பர்களின் பாணியில் அமைந்த வட்டத்தூண்களும் அழகிய முகமண்டபமும் கொண்ட கோயில். பல இடங்களில் கோயில் சாதாரணப் பாறைகள் இடைசெருகிச் செப்பனிடப்பட்டிருந்தது, கம்பராமாயணத்தில் இடைச்செருகல் பாடல்களைப்போல.
எட்டரை மணிக்கெல்லாம் அங்கிருந்து கிளம்பிவிட்டோம். அருகே உள்ள இன்னொரு சமணத்தலமான லக்குண்டிக்குச் சென்றோம். இருபது கிமீ தூரமானாலும் சாலையின் புழுதியால் ஒருமணி நேரமானது. லக்குண்டியில் தொல்லியல்துறையின் வரவேற்பு மையம் உள்ளது. அங்கே உள்ள கோயில்கள் பெரும்பாலும் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளன.
கதக் மாவட்டத்தில் உள்ள லக்குண்டி ஒரு முக்கியமான புராதன நகரம். இன்று ஒரு சிற்றூர். இங்குள்ள வீடுகள் பெரும்பாலும் மண்ணைக்குழைத்துக் கட்டப்பட்டு ஓடு வேய்ந்து பெரிய வராந்தாக்களுடன் உள்ளன. மிக அபூர்வமாகவே ஒரு சிமிண்ட் கூரை வீடு கண்ணுக்குப் படுகிறது. சுற்றியுள்ள நிலம் பெரும்பாலும் வறண்டது. தென் கன்னடத்தின் பசுமை மறைந்து விட்டிருப்பதை முன்னரே கண்டோம் என்றாலும் மண் பெரும்பாலும் புழுதி மண்டிய செம்பழுப்பு வெளியாகத் தெரிய ஆரம்பித்தது இப்போதுதான்.
லோக்கி குண்டி என்ற பேரில் பழைய ஆவணங்களில் உள்ளது இந்நகரம். உண்மையில் இங்குள்ள சிற்றூருக்கு நடுவே வீடுகளுக்குள் புதைந்தும் மண்ணில் அமிழ்ந்தும் ஒரு கைவிடப்பட்ட நகரமே கிடக்கிறது. கல்யாணி சாளுக்கியர்களின் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமாக அமைந்த பல கோயில்கள் இங்குள்ளன. கிட்டத்தட்ட 50 கோயில்கள் இங்கே உள்ளன என்றது செய்தி நிலையம். பல குளங்கள், புராதனமான கிணறுகள்.
லக்குண்டியின் காசிவிஸ்வேஸ்வரர் ஆலயம் முக்கியமான ஒரு கலைப்படைப்பு. கல்செதுக்குக் கலையின் நுண்மையின் உச்சங்களை இங்கே காணலாம். கதம்பா-கல்யாணி கட்டிடக்கலையின் சிறப்பம்சங்களான மண்டபமும் வட்டத்தூண்களும் இங்கும் இருந்தன. ஆனால் கோயில் வாசல்களைச்சுற்றி செதுக்கப்பட்டிருந்த சிற்ப அடுக்குகள் வேறெங்கும் காணக்கிடைக்காதவை. கட்டை விரல் அளவே கொண்ட சிற்பங்கள். மலர்க்கொடிகளில் பின்னிப்பிணைந்த கின்னரர்கள். யட்சிகள். மலர்களைப் பற்றிய சாலபஞ்சிகைகள். கட்டைவிரல் அளவுள்ள ஒரு மோகினி காதில் அணிந்திருந்த குழையில் பதிக்கப்பட்ட கற்களையும் வளையல்களின் செதுக்குவேலையையும் கல்லில் கொண்டு வந்திருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் சலிப்பே ஏற்பட்டு விட்டது. மிகமிக நுட்பமான பல்லாயிரம் சிற்பங்கள். இங்கே ஒரு விஷயத்தை கவனித்தோம். இதற்கு முன்பே பார்த்த கோயில்களில் இல்லாத ஒன்று. கோயில்களின் அடித்தளம் முழுக்க யானைகளின் வரிசைகள். கோயிலே யானைகள் மேல் அமைந்திருப்பது போல. அரை அடி உயரமான யானைகள். போரிடும் யானை, திரும்பிப் பார்க்கும் யானை, உடல் ஒசிந்த யானை. இந்த அமைப்பை முன்னர் நல்கொண்டா பகுதியின் காகதீயர் கட்டிடங்களில் கண்டிருக்கிறேன்.
லக்குண்டியின் மல்லிகார்ஜுனர், வீரபத்ரர், மாணிகேஸ்வரர், நன்னேஸ்வரர், லட்சுமிநாராயணன், சோமேஸ்வரர், நீலகண்டேஸ்வரர் ஆலயங்கள் குறிப்பிடத்தக்கவை. நன்னேஸ்வரர் ஆலயம் அழகான தூண்கள் கொண்டது. கோயிலுக்குள் சென்றால் அங்கே போர் போடுவதற்கான இரும்புக்குழாய்களைக் கட்டுமான ஒப்பந்ததாரர் குவித்துப் போட்டிருந்தார். அவற்றை எடுக்கும்போதும் போடும்போதும் சிலைகள் தட்டுப்பட்டு உடைவதைத் தவிர்க்க முடியாது. புகார்ப் புத்தகத்தை எடுத்துப் புகாரைப் பதிவுசெய்தோம். அங்கிருந்த ஊழியரிடம் சொன்னோம். அவருக்கு அக்கறையே இல்லை. எழுதிவிட்டுப் போங்கள் என்றார்.
சோமேஸ்வர் ஆலயத்து வளாகத்தில் உள்ள நகல்யாணி புஷ்கரணி என்ற 101 படிகொண்ட கிணறு முக்கியமானது. அதை கூட்டிப்பெருக்கிக் கொண்டிருந்தா
இங்குள்ள சமண ஆலயத்தை ஆற்றிமாப்பி என்னும் அரசி கட்டியதாகச் சொல்லப்படுகிறது. ஆற்றிமாப்பி கன்னடத்தின் முக்கியமான கவிஞரான ராண்ணாவின் புரவலராக இருந்தார். அவர் தன்னுடைய அஜிதபுராணம் என்னும் நூலில் ஆற்றிமாப்பிக்குப் புகழ்மாலை சூட்டியிருக்கிறார். பொன்னாவும் அவரது சாந்திபுராணத்தில் ஆற்றிமாப்பியைப் பணிவுடன் குறிப்பிடுகிறார். கன்னட வரலாற்றில் ஆற்றிமாப்பி ஒரு முக்கியமான நட்சத்திரம். ஆற்றிமாப்பி பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். அவரது முன்னோர் வெங்கிநாட்டைச் சேர்ந்தவர்கள். புனகனூரு என்பது அவர்பிறந்த ஊர் என்கிறார்கள். தந்தை மல்லப்பையா, தாய் அப்பாக்கப்பி. அவரது தந்தை கவிஞர்களை ஆதரித்தவர். அவரது சபையில்தான் கன்னடப்பெருங்கவிஞர் பொன்னா வாழ்ந்தார். சாளுக்கிய சக்ரவர்த்தி ஆகவமல்ல சோமேஸ்வரரின் தளபதியாக இருந்த நாகதேவரை மணந்தார். ஆற்றிமாப்பியின் தங்கை குண்டம்மாப்பியும் நாகதேவரையே மணந்துகொண்டார். ஆற்றிமாப்பி ஒரு மகனைப் பெற்றார், அன்னிகதேவர். குண்டம்மாப்பிக்கு மைந்தர்கள் இல்லை. ஆகவே நாகதேவர் இறந்தபோது அவர் உடன்கட்டை ஏறினார். ஆற்றிமாப்பி தன் மகனுக்காக உயிர்வாழ்ந்தார். எஞ்சிய வாழ்க்கையை ஒரு பெரும் விரதமாக ஆக்கிக்கொண்டார். தன்மொத்த சொத்தையும் தர்மத்துக்காக செலவிட்டார். ஆகவே தம்மசிந்தாமணி என்று பெயர் பெற்றார் ஆற்றிமாப்பி. லக்குண்டியில் ஒரு பெரிய சமணக் கோயிலைக் கட்டினார். அவர் ஆயிரத்தைநூறு ஜினதேவ சிலைகளைப் பொன்னிலும் வெள்ளியிலும் செய்து வினியோகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. பொன்னாவின் சாந்திபுராணாவை ஆயிரம் ஓலைப்பிரதிகள் எடுத்து எல்லா அறிஞர்களுக்கும் அளித்தார். ஆற்றிமாப்பியின் தியாக வாழ்க்கையை ராண்ணா கவித்துவமாகப் புகழ்ந்து எழுதுகிறார். கர்நாடக அரசு ஆற்றிமாப்பியின் பெயரால் பெண் படைப்பாளிகளுக்காக ஒரு விருது வழங்கிவருகிறது. லக்குண்டியில் அவர் கட்டிய ஜினாலயத்தைச் சென்று பார்த்தோம். தொல்பொருள்துறைப் பராமரிப்பில் உள்ள அக்கோயில் கதம்பக் கட்டிடக்கலைப் பாணியிலேயே உள்ளது.
லக்குண்டியில் இருந்து டாம்பால் கிளம்பினோம். பலரால் வழிசுட்டப்பட்டு இருமுறை சுற்றி வந்தபின் ஒன்று தெரிந்தது. அது டாம்பால் அல்ல, டம்பலா. டம்பலா உண்மையில் ஒரு பௌத்தநகரம். 12ஆம் நூற்றாண்டுவரை பௌத்தம் செழித்த ஊர். சாதவாகனர் ஆட்சிக்காலம் முதலே கர்நாடகத்தில் பௌத்தம் செழித்திருந்தது. டம்பலாவுக்கு உள்ள முக்கியத்துவம் என்னவென்றால் பௌத்தப் பெண் தெய்வமான தாராதேவிக்கு மட்டுமாக அமைந்த முக்கியமான ஆலயம் இங்கேதான் உள்ளது என்பதுதான். பத்தாம் நூற்றாண்டில் பதினாறு வணிகர்கள் சேர்ந்து இதைக் கட்டினார்கள் என்று ஒரு கல்வெட்டு சொல்கிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை இங்கே ஒரு பெரிய பௌத்தக் கல்விநிலையம் இருந்தது.
டம்பலாவில் உள்ள தொட்ட பாஸப்பா கோயில் மேலைசாளுக்கிய கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணம். இது பதினாறு மடிப்புகள் கொண்ட நட்சத்திர வடிவில் அமைந்துள்ளது. தூண்கள் மிக மிக நுட்பமான மடிப்புகள் கொண்டவை. இங்கும் வாசலைச் சுற்றியிருக்கும் விதானத்தில் நெருக்கமாக செதுக்கப்பட்டிருந்த சிற்பங்கள் பிரமிப்பை ஊட்டின. சிற்பங்களால் ஆன மணிமாலை என்றும் சிற்பங்களின் மலர்க்குவியல் என்றும் சிற்பங்கள் தானியமணிகளாக மாறிவிட்டன என்றும் தோன்றிக்கொண்டே இருந்தது. எல்லாச் சிற்பங்களும் நடன நிலைகளில் இருந்தன. கோயிலே நடமிட்டுக்கொண்டிருப்பது போலத் தோன்றியது.
டம்பலாவில் பல சமணக் கோயில்களும் உள்ளன. பெரும்பாலும் எல்லாமே அழிந்த நிலையில்தான் உள்ளன. சிறிய கோயில்கள் அவை. சமணம் பொதுவாகவே வட கர்நாடகத்தில் அழிந்துவிட்டது என்று தோன்றியது. கர்நாடகத்தைப் பொறுத்தவரை சமணத்தின் வடக்கு எல்லை கும்ச்சாதான் என்று தோன்றியது.
கர்நாடகத்தில் நாங்கள் திட்டமிட்டிருந்தது ஒரு வாரம். அது முடியப்போகிறது. நாரேகால் போகவேண்டும். அதைத் தாண்டிச்செல்ல முடிவெடுத்தோம். ஹுப்ளியையும் பார்க்க எண்ணியிருந்தோம். அதையும் விட்டுவிட்டோம். ஒரே மூச்சில் கதக், ஹுப்ளி, தார்வாட் நகரங்களைத் தாண்டி வந்தோம். வரும் வழியில் திட்டமிட்டிருந்த ஒரே ஊர் ஹலசி. மையச்சாலையில் இருந்து விலகி ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் புழுதி நிறைந்த சாலையில் சென்று ஹலசியை அடைந்தோம். மாலையில் ஒரு குளத்தருகே குளிப்பதற்காக இறங்கினோம். ஆனால் தண்ணீர் கலங்கி அழுக்காக இருந்தது, தவிர்த்துவிட்டோம்.
ஹல்ஸி என்றும் ஹல்ஷி என்றும் அழைக்கப்படும் ஹலசி பெல்காம் அருகே உள்ளது. கதம்ப வம்ச மன்னர்களின் இரண்டாம் தலைநகரமாக இருந்தது. ஒரு முக்கியமான வரலாற்றுத் தலம் இது. மிகச்சிறிய பஞ்சாயத்து இது. பழைய வீடுகள். சிறிய பள்ளிக்கூடம். சுற்றும் வறண்ட நிலம். சமண பஸதி ஒன்று உண்டு என்று வாசித்துத் தேடிச் சென்றோம். கண்டுபிடிக்க முடியவில்லை. ஊர் நடுவே உள்ள பூவராகர் ஆலயத்துக்குச் சென்றோம். பெரிய ஆலயம். அதிகமான சிதிலங்கள் இல்லாமல் இருந்தது. முன்னால் ஒரு ஆழமான நீராழி பல படிகளுடன் இருந்தது. இப்பகுதியில் கோயில்களில் இப்படி நீர் அறாத பெரும் நீராழிகளைஅமைப்பது தேவையாக இருந்தது போல. கோயிலுக்குள் உள்ள பூவராகமூர்த்தியின் சிலை மிகமிக அழகானது. நான் பார்த்த பூவராகர் சிலைகளிலேயே ஒரு பெரும் கலைப்படைப்பு அதுதான். கல்லில் உலோகத்தின் மினுமினுப்பு. கண்களில் மதம் பரவிய பன்றிமுகம், ஆனால் அது கடவுள்முகமும் கூட! தோளில் பூமியை ஏந்தி ஆதிசேடன் மேல் கால் வைத்து நிற்கும் சிலை. எதிரில் பெருமாள் இருந்த திருக்கோலத்தில். கோயிலில் ராஜு என்ற உள்ளூர் நிலப்பிரபு அறிமுகமானார். அவர் ஒரு உதவியாளரை அனுப்பி சமண பஸதியைக் காட்டினார். ஊரில் சமணர்கள் எவரும் இல்லை என்றார். பஸதி அவரது வீடு அருகிலேயே உள்ளது. இடிந்து காலியாகக் கிடந்தது. ஆனால் மலினப்படுத்தப்படவில்லை. கதம்பமன்னர்களின் புராதனமான செப்பேடு இங்கே கிடைத்துள்ளது. காகுஸ்தவர்மன் என்ற மன்னன் ஒரு சமணப் பள்ளி அமைக்க அளித்த நிவந்தம் சம்பந்தமானது. இந்தசமணர் கோயில் பதினொன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இங்கே ஒரு கோட்டையும், கோகர்ணேஸ்வரர், கலிலேஸ்வரர், ஸ்வர்ணேஸ்வர், ஹடகேஸ்வரர் ஆலயங்களும் உள்ளன. இந்த ஊரில் ஒரு நாள் முழுக்கத் தங்கினால்தான் சரிப்படும். அதற்கு நேரமில்லை. கிளம்பிவிடலாம் என்று நினைத்தோம். அந்த ஊரில் தங்கமுடியுமா என ராஜுவிடம் கேட்டோம். ஊரில் எந்த வசதியும் இல்லை என்றார். ஆகவே கிளம்பினோம். மறுநாள் வந்தால் ஊரைக் காட்டித்தருவதாக ராஜு சொன்னார். ஆனால் நாங்கள் பெல்காம் சென்று தங்குவதாக முடிவெடுத்தோம்.
மேலும் …
படங்கள் இங்கே
https://picasaweb.google.com/