கொற்றவை – ஒருகடிதம்

மதிப்பிற்குரிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
‘கொற்றவை’ நாவலின் மிகப்பெரிய பலவீனமே அதன் நம்பகத்தன்மை கொண்ட வரலாற்று சிருஷ்டிப்பு என கருதுகிறேன். இந்த நாவல் படித்ததும் மிகவும் மனக்கிளர்ச்சியையும் பின்னர் மனம் சமநிலை அடைந்ததும் மிகவும் ஏமாற்றம் அளித்ததும் ஆகும். இந்நாவலை அதன் வரலாற்று புனைவுத்தளத்தை நீக்கிவிட்டு பார்க்கும் போது பல ஆழ்மன தொன்மப்படிமங்களுடன் வலுவாக திகழ்கிறது. ஒரு இடத்தில் அரியணை என்பது அன்னை தெய்வத்தின் மடி (சரியான வாக்கியம் நினைவில் இல்லை) என்று நீங்கள் கூறியிருந்தது எகிப்திய அரசனின் அரியணை தாய் தெய்வத்தின் மடி என கருதப்பட்ட பழமையான தொன்மத்திலிருந்து பெறப்பட்டதாக இருக்கலாம் என வினவிய போது அது வழக்கு பேச்சிலிருந்து பெறப்பட்டது என சுட்டிக்காட்டினீர்கள். கூட்டு நனவிலியின் வலிமையையும் இருப்பையும் உணர்த்தியது அது. ஆனால் ‘தோற்கடிக்கபட்ட தாய் தெய்வங்கள்’ என்பது போன்ற கிம்புடாஸ் முதல் கோசாம்பி ஈறாக கூறப்பட்டு வரும் வரலாற்று ஊகங்கள் அத்துடன் அறிவியல் நிலவியல் ஆதாரமற்ற அதே நேரத்தில் வெறுப்பியல் கூறுகள் கொண்ட குமரிக்கண்டம் போன்ற அதீத கற்பனைகளை யதார்த்த வரலாறாக இந்த புனைவு முன் வைப்பதும் – அதன் நீட்சியான அரசியலில் ஒரு வசீகரமும் வலிமையும் வாய்ந்த பிரச்சார கருவியாக உங்கள் புனைவு பயன்படும் என்கிற ஒரே காரணத்துக்காக அது பாராட்டப்படுவதும் சிறிது சங்கடத்தை உண்டாக்குவதாக அமைகின்றன.
பணிவன்புடன்
அரவிந்தன் நீலகண்டன்

அன்புள்ள அரவிந்தன்

உங்கள் கடிதம் படித்தேன். கொற்றவை ஏதாவது கருத்தியலை உறுதியாக முன்வைக்கிறது என நான் கருதவில்லை- என் பிற நாவல்களைப்போல இதுவும் ஒரு களம்தான். கருத்துக்கள், படிமங்கள். படிமங்கள் மேலான ஈடுபாடே இதை எழுத வைத்தது. குறிப்பாக தாய்த்தெய்வம் சம்பந்தமான படிமங்களை நான் எந்த அறிஞரிடமிருந்தும் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நான் அதிலேயே பிறந்து வளர்ந்தவன். அதுவே என் அக ஆழம்.

கொற்றவை தொல்படிமங்களின் ஒருவெளியை மட்டுமே முன்வைக்கிறது. அதன் மீதான வாசிப்புகளைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. எழுதியதுமே நாவலில் இருந்து விலகி வருவது என் இயல்பு.

எல்லா நாவல்களிலும் நீன்டுபோகும் ஒரு சரடு உன்டு. அது தாய்மை– தொல்தாய்– தொல் அறம் – குறித்த ஒன்று. அதை கொற்றவை நாவலும் கையாள்கிறது.

அதைத்தவிர ஆசிரியன் நாவலைப்பற்றி எனன் சொல்ல முடியும்?

ஜெயமோகன்

 

 

கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் : அரவிந்தன் நீலகண்டன்

கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை. ராமபிரசாத்

தமிழின் நல்லூழ்:இரா. சோமசுந்தரம்

முந்தைய கட்டுரைஉயிர் எழுத்து மாத இதழ்
அடுத்த கட்டுரைஆற்றூர்– இரா.முருகன்:கடிதம்