இது ஒரு தாங்கொண்ணா உணர்ச்சியின் வெளிப்பாடு. இதுவரை எந்த ஒரு புத்தகமும் ஏற்படுத்தியிராத தாக்கத்தை தங்களின் விஷ்ணுபுரம் ஏற்படுத்தியுள்ளது. இன்னும் கடந்து போக 100 பக்கங்களுக்கு மேலிருப்பினும் கடந்து செல்லும் மனமின்றி மீண்டும் மீண்டும் ஏதாவதொரு பக்கத்தை எடுத்து வைத்து வாசித்துக்கொண்டிருக்கும் இந்த அனுபவம் முற்றிலும் புதிதானது. இந்த நாவலின் வெற்றியின் அடிப்படையே அதன் கட்டமைப்பு என்பதை கடைசி சில நூறு பக்கங்கள் நிருபிக்கின்றன. நடந்து போன நிகழ்வுகளை பின்னாட்களில் மனிதர்களில் வாயிலாக வரலாறாக அறிய நேரும் இடங்களில் நம்மை மீறி நாம் அந்த நிகழ்வுக்ளின் சாட்சியாக நின்றுபோவதை தவிர்க்க முடியாமல் போகிறது. அச்சாட்சிகளின் மறுதலிப்பே நம்மை அடுத்த செல்லா வண்ணம் தடுத்து நிறுத்துகிறது என்பதும் என் எண்ணம். ஆகச்சிறந்த நாவல் ஒன்றை படைத்து விட்டு எப்படி தங்களால் இந்த வணிக படைப்புகளுக்குள்ளும் செல்ல முடிகிறது என்பது எனக்கு ஆச்சர்யமான ஒன்றாக எழுந்துள்ளது. (இது எழுத்தாளர்களின் தவிர்க்க முடியாத தலையெழுத்து, எழுத்தையும் வாழ்வியலையும் பிரித்துப்பார்க்க வேண்டுமென மனம் எத்தனையோமுறை எடுத்துச்சொன்னாலும் கேட்க மறுக்கும் பிடிவாதம் கொண்டது தானே வாசக மனம் இது தானே ஆரதனைக்கும் இட்டுச்செல்கிறது???) ஆனாலும் இந்த நாவலுக்கான உழைப்பு தங்களுக்குள் எத்தகைய மாற்றத்தை உண்டு பண்ணியது. தங்கள் அடிப்படை நம்பிக்கைகளில், வாழ்க்கை முறைகளில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தியதா அறிந்து கொள்ள ஆவலாயுள்ளேன் (இணையத்தில் இதற்கான பதிலை தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை) ஏதாகிலும் மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை தந்த தங்களுக்கு அனந்த கோடி வந்தனங்கள். இதன் பாதிப்பில் இன்னும் சில நூல்களை வாங்கி வைத்துள்ளேன் பார்க்கலாம் எப்படிப்போகிறதென்று. அன்புடன்
கிருத்திகா ஸ்ரீதர்.
http://authoor.blogspot.com/
அன்புள்ள கிருத்திகா,
தங்கள் கடிதம். மன்னிக்கவும் பதில்போட தாமதம்.
விஷ்ணுபுரம் என் பிற நாவல்களில் இருந்து மாறுபட்ட ஒன்று. அதற்கான வாசகர்களை அது தொடர்ந்து கண்டடைந்தபடியே இருக்கிறது. அதற்கான முக்கியமான காரணம் அதன் உலகம்தான். நம் கண்ணெதிரே உயர்ந்து நிற்கின்றன மாபெரும் கோயில்கள். அவற்றைக் கட்டிய மனநிலை, தத்துவம், கலைஎழுச்சி எவையுமே நாமறியாதவை– ஆனால் நமக்கு மிக அருகே உள்ளவை. விஷ்ணுபுரம் அவ்வுலகத்தைச் சென்று தீண்ட முயல்கிறது. ஒரு கனவுக்குள் அதை எழுப்பிக் கலைக்கிறது. அதன்பின் நம் ஆலயங்கள் நமக்கு மிக நெருக்கமானவையாக ஆகிவிடுகின்றன
நன்றி
ஜெ
அன்புள்ள ஜெ.மோ.
வணக்கம். நலமா? ஆஸ்தரேலியாப் பயணத்துக்குத் தயார் செய்துகொண்டிருப்பீர்கள் என் நினைக்கிறேன். இந்த முறை இந்தியப் பயணத்தில் கன்யாகுமரியில் நான்கு நாட்கள் தங்கினோம். தங்களைச் சந்திக்க நினைத்தும் நடக்காமல் போய்விட்டது. அருணாவிடம் தொலைபேசினேன். நீங்கள் ‘விஸா‘ சம்பந்தமாகச் சென்னைக்குப் போயிருக்கிறீர்கள் என்று தெரிந்தது. நமக்கு ‘விதி‘க்கவில்லை என்று எண்ணிக்கொண்டேன்:-)))சென்னை வந்தபின் ‘நான் கடவுள்‘ பார்த்தேன். படம் முடிந்து வெளிவரும்போது மனசு கனத்திருந்தது.சென்னையில் புதிய புத்தக உலகத்தில் உங்களது புத்தகங்களைப் பற்றி அவர்களிடம் கேட்டபோது, கடையில் இருந்த விற்பனைப்பெண் சொன்னது எனக்கு வேடிக்கையாக இருந்தது….ஓ…உங்களுக்கு அந்த மாதிரிப் புத்தகங்கள் வேணுமோ?’ என்னைக் கூட்டிக்கொண்டுபோய் உங்கள் புத்தகங்கள் அடுக்கி வைத்திருந்த பகுதியைக் காண்பித்தார்கள்.:-)))))தங்களுடைய ஏழாம் உலகமும், காடும் கிடைத்தன. விஷ்ணுபுரம் கிடைக்கவில்லை.ஏழாம் உலகம் படித்தாயிற்று ஒருமுறை. ஒவ்வொரு அத்தியாயமும் படித்துமுடித்ததும், உடனே அடுத்த அத்தியாயத்தைத் தொடரமுடியாமல் மனசு முழுக்க படித்ததை உள்வாங்கிச் சிந்தனை செய்தபடியே இருந்தது. விடுவிடுவென்று படித்துக்கொண்டே போகமுடியாமல்…… கடைசிப் பகுதியைச் சிங்கையிலிருந்து நியூஸி வரும் பயணத்தில் வாசித்து முடித்தேன். நான் கடவுளையும், ஏழாம் உலகத்தையும் பற்றியே சிந்தித்தபடி என் பயணம் நடந்தது.இங்கே வந்தபிறகு தங்கள் தளத்தைப் பார்த்தால் எக்கச்சக்கமாக எழுதிக் குவித்திருக்கின்றீர்கள். நிதானமாக ஒவ்வொன்றாக வாசித்துவருகின்றேன்.அருண்மொழி, சைதன்யா, அஜிதன் ஆகியோருக்கும் செல்லங்களுக்கும் என் அன்பு.அடுத்தமுறை அந்தப் பக்கம் வரும்போது சந்திக்க ஆவல்.தங்கள் ‘ஆஸி‘ப் பயணம் சிறப்பாக அமையட்டும்.என்றும் அன்புடன்,
துளசி.
—
என்றும் அன்புடன்,
துளசி
அன்புள்ள துளஸி
ஆமாம் இன்று நாகர்கோயிலில் இருந்து சென்னை கிளம்புகிறோம். அதற்கான பதற்றங்கள் .
ஆஸ்திரேலிய விஸாவுக்காக கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. பல உபக் கேள்விகள், உபச் சிக்கல்கள். வருடம் இரண்டு லட்சம் வருமானவரி கட்டுபவராக இருந்தால் அவை எவையுமே எழுந்திருக்க வாய்ப்பில்லை. மன்னிக்கவும், உங்களைச் சந்திக்க முடியாமல் போனதில் எனக்கும் வருத்தம்தான்
விஷ்ணுபுரம் கடையில் உள்ளது என்றார்கள். என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. அதை கவிதா பதிப்பகம் வெளியிட்டிருந்தார்கள்
ஜெயமோகன்
விஷ்ணுபுரம்:மீண்டும் ஒரு கடிதம்
இருத்தலின் சமநிலை:ஓர் உரையாடல்
விஷ்ணுபுரம்,யூதமரபு,தியானம்:ஒருகடிதம்
விஷ்ணுபுரம்,யூதமரபு,தியானம்:ஒருகடிதம்
ஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்
ஜெயமோகனின் ஏழாம் உலகத்தில் உடைந்து சிதறும் மதபீடங்கள்:புதியமாதவி, மும்பை
ஜெயமோகனின் ஏழாம் உலகம்”அ.முத்துலிங்கம்
ஜெயமோகனின் ஏழாம் உலகம் “பொ கருணாகர மூர்த்தி
ஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா
அருளும் பொருளும் (ஜெயமோகனுடைய ‘ஏழாம் உலகம் ‘ நாவல் அறிமுகம்) :பாவண்ணன்
ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘ சுமதி ரூபன்