அன்புள்ள ஜெ,
“மனிதர்கள் மலத்தில் நெளியும் புழுக்களைப் பிடித்து தின்பதில்லை. ஆனால் இங்கே வாழும் மனித உடல்களை நுகர மங்களூரின் பளபளப்பான சாலைகளில் கார்களுடன் வந்து நிற்கிறார்கள்.” – இவ்வரிகளின் வீரியத்தை என்னவென்பது? நான் விபச்சாரியை நாடுபவனாக இருந்தால் கண்டிப்பாக இன்றுடன் ஒரு முற்றுப்புள்ளி வைத்திருப்பேன். உங்களிடமிருந்து இந்த செருப்படி (? அல்லது மல எறி? ) கிடைக்கும் என்பதால்தான் எனக்கு இந்த பழக்கம் வரவில்லையோ?
இந்த கட்டுரையை படித்த பிறகு என் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை உங்கழுடன் பகரலாமேன்று நினைக்கின்றேன்.
அப்போது நான் ஏழு அல்லது எட்டாவது வகுப்பில் படித்துக்கொண்டிருப்பேன். என் வீடு கடற்கரையை ஒட்டியிருக்கும். மிக சிறிய, கதவில்லாத ஓலை வீடு. என் அம்மா வேறு சில பெண்களுடன் மீன் வாங்கி அதனை சந்தையில் சென்று விற்பனை செய்வார்கள். அன்று ஏராளமான நொத்தோலி மீன் வாங்கி அதனை கடற்கரையில் உலரப்போட்டிருந்தர்கள். அப்பா சொன்னார் “இண்ணு மள பெய்யும். நொத்தோலிய ஒணரப்போடாத”. அம்மா சட்டைசெய்யவில்லை.
சிறிது நேரத்திற்குள் மழைபெய்ய ஆரம்பித்தது. உலராத மீனை வாரி எங்கள் வீட்டில் கொண்டு சென்று சமயலறையில் பரத்திப்போட்டு உலரவைக்கவேண்டுமென்று அப்பா அம்மாவிடம் சொல்லியிருக்கின்றார். இது எனக்குத் தெரியாது. நான் வீட்டில் உக்கார்ந்து படித்துக்கொண்டிருக்கின்றேன்.. தூறல் விழுந்துகொண்டிருக்கின்றது. உடனே அனைவரும் சேர்ந்து மீனை கூடையில் வாரி அதனை எங்கள் வீட்டில் கொண்டுவர ஆரம்பிக்கின்றார்கள். முதலில் மீனைக் கொண்டுவருவது என் அப்பாவின் மாமி. அவர் மீனைக்கொண்டுவந்து சமயலறையில் பரப்ப ஆரம்பிக்கும்போது நான் சென்று சொன்னேன் “இங்கன மீனப்போடண்டா. ஒறங்க வேற இடமில்ல”. இவர் உடனே மீனை வைத்துவிட்டு கடற்கரைக்கு மீண்டும் மீனெடுக்க சென்றுவிட்டார். நான் சொன்னதின் காரணம், எங்கள் வீட்டின் சமயலறையில்தான் என் தங்கைகளும் அம்மாவும் தூங்குவார்கள். நானும் அப்பாவும் தம்பிகளும் திண்ணையில் தூங்குவோம். மீனை சமயலறையில் போட்டால் அவர்கள் எங்கே தூங்குவது?
சற்று நேரத்தில் அப்பா ஓடிவரும் சத்தம் கேட்டது. மழை பெய்ய ஆரம்பித்தால் அப்பா எங்கிருந்தாலும் வீட்டுக்கு ஓடி வருவார். அது ஒரு சாதாரண(?) நிகழ்வு. காரணம், எங்கள் வீட்டுத்திண்ணையும் வீதியும் ஒரே நேர்கோட்டில், சமநிலையில் இருக்கும். எனவே மழைத்தண்ணி கடலில் கலக்க வீதி வழி ஓடி எங்கள் வீட்டு திண்ணையிலும் வந்து புகுந்து கொள்ளும். இதனைத்தடுக்க, அப்பா தன் பெரிய காலால் வீதியிலிருந்து மண்ணை இழுத்து ஒரு தடுப்பணை உண்டுபண்ணுவார். ஆனால், இது கரிகாலனின் கல்லணையை விட வலுவானது. மழைத்தண்ணி உள்ளே வராது. நானும் இதற்காகத்தான் அப்பா ஓடிவருகின்றார் என்றெண்ணி படிப்பதில் மூழ்கியிருந்தேன்.
அந்த சினம் கொண்ட முடிசிலிர்த்த உருவம் என்முன் சீறிநின்று, “லே…த் த..ள்..ள..ய ஓ…ளி. நீ இங்கின மீனப்போடண்டானு சொன்னியாம். பு…ண்..டா…ச்சு… மோ..ன…, உனக்கு மீனு நாறும் என்ன? மீனில்லன்னா நீ இல்ல”. அவர் என்னை அடித்தாரா என்று ஞாபகமில்லை. ஆனால் அவர்சொன்ன அந்த வார்த்தைகள் என்னை நிலைகுலையச் செய்தது. நான் தவறெதுவும் செய்யவில்லை. சூடான எண்ணையை என்மீது ஊற்றியது போல் ஒரு வேதனை. அப்போது ஒன்றும் புரியவில்லை என்னக்கு. பின்னர் தான் அம்மா சொன்னார் அப்பாவின் மாமி தவறாக சொல்லியிருக்கின்ரார்கலென்று.
நேரம் செல்லச்செல்ல அந்த வரிகளின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது. இரவில் நானும் வானமும் அழுதுகொண்டிருந்தோம். நான் சத்தமில்லாமல். நெடுநேரத்திற்குப்பிறகு ஒரு பெரிய கரடுமுரடான கை என் முகத்தை துடைத்தது. அப்போது மழை விட்டிருந்தது. பின்னிரவில்தான் நான் என் வாழ்க்கையில் கலப்படமில்லாத ஆக்சிஜனை சுவாசிக்க ஆரம்பித்தேன். அது சமையலறையிலிருந்து வந்துகொண்டிருந்தது.
மீனின் நாற்றம் என்பது வைட்டமின் கலந்த நீரூற்று எனக்கு. அந்த சுவாசக் காற்றுதான் என்னை மென்பொருள் பகுப்பாளனாக ஆக்கி அமெரிக்காவில் கொண்டு வைத்திருக்கின்றது. நான் இப்போது என்மனைவிக்கு இட்டிருக்கும் கட்டளையே, மீன் நாறுகின்றது என்று சொல்லக்கூடாது என்பதுதான்.
அந்த மீனின் வாசத்தை மீண்டும் சுவாசிக்கச் செய்ததற்கு உங்கழுக்கு எனது நன்றிகள்.
உங்கள் வாசகன்
கிறிஸ்
அன்புள்ள கிறிஸ்டோபர்,
சிலநாட்களுக்கு முன்னர் நான் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது செருப்பு அறுந்துவிடது. சகதியில் காலை ஊன்றி வீடு திரும்பினேன். அரை கிலோமீட்டர் தூரம் சேற்றில் நடந்தபோது கால் கூசியது. வீடுதிரும்பி காலைக் கழுவிய பிறகே என் அருவருப்பு நீங்கியது. ஆனால் அறைக்குள் வந்து அமர்ந்ததும் ஒரு குற்ரவுணர்வும் கூச்சமும் என்னைக் கவ்வியது. ஒரு விவசாயக்குடும்பத்தில் விவசாயம் செய்து வளர்ந்த நான் சேற்றிலேயே வாழ்ந்தவன்.
எங்கள் ஊர் மலைசார்ந்த நிலம். அதிகமும் ஆழமான வயல்கள். மேடுகளில் வீடுகள். வருடத்தில் இரண்டுமாதம் தவிர எல்லாமே மழைக்காலம். வயல்களில் நீரை வடித்து வெளியே விட்டுவிட்டு விவசாயம் செய்யவேண்டிய இடம் அது. அதற்கான உத்திகள் பல உண்டு– வயல்கள் நடுவே ஆழமான குழி வெட்டிவைப்பது அதில் ஒன்று. அதை நீராழி என்பார்கள்.
அந்தச்சூழலில் நான் வளர்ந்த நாட்களில் சேறு எனக்கு வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத பகுதியாக இருந்தது. எங்கள் வீட்டில் மாடுகள் நிறைய இருந்தன. புல் பறிப்பது ஓர் அன்றாடத் தேவை. நான் காலையில் கிளம்பினால் ஒரு தலைச்சுமை நிறைய புல்லுடன் வந்தபின்னரே கல்லூரிக்குச் செல்வேன். மாலையிலும் புல் பறிக்கச் செல்வேன். சேறு அழுக்கு எதுவுமே அருவருப்பூட்டியதில்லை. ஒருமுறை புல்பறிக்க புதருக்குள்சென்றபோது ஒரு காட்டுப்பூனை செத்து உலர்ந்து எலும்பு தெரியக் கிடந்ததைப் பார்த்திருக்கிறேன்.
இப்போதுகூட எங்காவதுசெல்லும்போது செழிப்பான புல்லைப்பார்த்தால் ஒருவகை பரபரப்பு ஏற்படும். அதுவும் ‘வாகைமண்’ ஊரில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு விரிந்து கிடக்கும் பசும்புல்வெளியில் ஒரு பசுமாட்டுக்கு வரும் உற்சாகம் எனக்கும் ஏற்படுவதுண்டு. புல்லின் வகைகள், அவ்வகைகளுக்கு ஏற்ப மாறுபடும் மணங்கள் எனக்கு தெரியும். புல்லில் இருக்கும் பல்வேறு பூச்சிகளை, புழுக்களை என்னால் இனம்காணமுடியும்
அதேபோல சாணி. சேற்று விவசாயத்தில் சாணி மிக முக்கியமான ஒன்று. நீர் தேங்குவதனால் வேதிவினை நடந்து மண்ணிலிருந்து அகலும் நைட்ரஜனை அது மீட்டளிக்கிறது. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் எங்கே சாணியைப் பார்த்தாலும் அள்ளி வீட்டுக்குள் அல்லது எங்கள் தோட்டத்துக்குள் வீசிவிட்டுத்தான் போவேன். சாலையில் சாணிகிடந்தால் அள்ளி அருகே உள்ள தோட்டங்களில் விசுவதுண்டு. சாணியை ஓர் அரும்பொருளாகவே என் மனம் இன்றும் கூட நோக்குகிறது.
நான் சாணி சுமந்திருக்கிறேன். அருகுவெட்டிப் புரட்டி உழுது மரமடித்திருக்கிறேன். பெரும் மோகத்துடன் மாடுகளை குளிப்பாட்டுவேன். இப்போதுகூட ஒரு பசுவை அல்லது காளையைக் கண்டால் கூடுமானவரை அதைத் தொடாமல் நகர மாட்டேன். அறுவடைசெய்து புதுநெல்லின் மணத்தின் போதையை அறிந்திருக்கிறேன். வாழையின் முதல் கூம்புவருகையில் பொங்கும் கிளர்ச்சியை நினைவுகூர்கிறேன்
இப்போது நெடுந்தூரம் விலகி வந்துவிட்டேன். இப்போது அந்த மனப்பழக்கங்களுக்கு என்ன பொருள்? ஒன்று தெரிகிறது,என்னால் மானசீகமாக விவசாயியாகவே உணர முடிகிறது. மனதுக்குள் விவசாயி இருக்கும் ஒருவருடன் பேச மகிழ எத்தனையோ இருக்கிறது. நாஞ்சில்நாடனுடன், சு.வேணுகோபாலுடன்.
நான் காய்கறி வாங்கப்போனால் எப்போதுமே அத்துமீறிவிடுவேன். பச்சையைக் கண்ட பரவசத்தில் தேவைக்குமேல் காய்கறி வாங்காமலிருக்க என்னால் முடியாது. இந்த மனநிலை நாஞ்சில்நாடனிடமும் இருக்கிறது. ஓர் ஊரைப்பற்றிச் சொன்னால் அங்கே என்ன விவசாயம் என்பதைச் சொல்லாமல் என்னாலோ அவராலோ இருக்க முடியாது.
முன்பொருமுறை நானும் நாஞ்சில்நாடனும் சென்னையில் சந்தித்துக் கொண்டோம். நான் ஊரிலே மழை உண்டா என்றேன். நல்ல மழை வாழக்கெல்லாம் சேதம் என்றார் நாஞ்சில். நானும் அவரும் மழை பற்றிப் பேசிக்கொண்டிருப்பதை வசந்தகுமார் கேட்டு சிரித்தார். நான் இருந்தது தர்மபுரியில். நாஞ்சில் கோவையில். நாகர்கோயிலில் மழைபெய்தால் எங்களுக்கு ஒன்றுமில்லை. ஆனால் அதைக் கேட்காமல் இருக்க முடியாது.
நான் என் அலுவலகத்துக்கு முன்னால் உள்ள சிறிய கூரை ஓட்டலில்தான் தினமும் டீ சாப்பிடுவது. அங்குவரும் விவசாயிகளிடம்தான் நல்ல உறவு இருக்கிறது. அவர்கள் பேசுவதுதான் புரிகிறது. ரசிக்கிறது. என் மனம் இந்த மண்ணுடன் பிணைந்தது. நான் பத்துவருடம் பிற நிலங்களில் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் குமரிமண்ணைத்தவிர பிற மண்ணைப்பற்றி நான் எழுதவேயில்லை
என் மனம் இந்த மண்ணின் பிரதிபலிப்பே. என் உலகம் இங்குள்ள மரங்களும் செடிகளும் பூச்சிகளும் பறவைகளும் நிறைந்தது. இந்த மண்ணின் ஒருபகுதியாகவே நான் என்னை உணர்கிறேன். எங்கிருந்த போதும் இதையே எண்ணிக்கொண்டிருந்தேன். மிகுந்த கஷ்டப்பட்டு இங்கேயே திரும்பி வந்து சேர்ந்தேன். இப்போது சினிமா வாய்ப்புகள் வரும்போதுகூட இந்த மண்ணைவிட்டு போக நான் விரும்பவில்லை.இதற்குக் காரணம் என் மனதுக்குள் இருக்கும் விவசாயிதான். என்னை எழுத்தாளனாக ஆக்கியது அவன்தான்.
நாம் கடந்துவந்த வாழ்க்கை நம்முள் மெல்லமெல்ல குறியீடுவடிவம் எடுக்கிறது. இன்று எனக்குள் இருக்கும் என் மண் ஒரு பெரிய குறியீட்டு வெளி. ஒரு காவியத்துக்கான கரு அது. அதன் ஒவ்வொரு விஷயத்துக்கும் விரிவான பொருள் உண்டு எனக்கு. அதையே நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
அன்று நான் மிண்டும் சேற்றில் இறங்கி செருப்பு இல்லாமல் எட்டு கிலோமீடர் நடந்து மீண்டேன். அப்படி என்னை விலக்கும் எதுவுமே என்னுடையதல்ல என்ற வீம்புதான்.
உங்களுக்குள் இருக்கும் கடல் ஒரு நினைவு மட்டுமல்ல. அது மெல்ல மெல்ல ஒரு குறியீடாக ஆகும். அதுவே உங்கள் ஆழத்தை வடிவமைக்கும். உங்கள் கனவுகளை உருவாக்கும். நீங்கள் எடுக்க எடுக்கக் குறையாத அக அனுபவங்களின் தொகுப்பாக வந்துகொண்டிருக்கும். துன்பங்களோ இன்பங்களோ எல்லா அனுபவங்களும் செல்வங்களே
ஜெ
அன்புள்ள கிறிஸ்தோபர்
நினைவுகள் அந்தரங்கமானவை. அவற்றை மதிக்கும் சூழலில் மடுமே அவெளியிடுங்கள். நெருக்கமானவர்கள் ஆனாலும் அவற்றை எப்போதும் பகிரவேண்டுமென்பதில்லை.
எறும்புகள் கூடுகடுவதைப் பார்த்திருக்கிறோம். பெரிய எறும்புப்புற்று பணகுடிப்பக்கம் ஆறடி உயரம்கூட எழும். ஒரு எறும்பின் அளவைவைத்துப்பார்த்தால் பல லட்சம் மடங்கு. ஒரு எறும்பு பிறந்த ஒருவாரத்தில் இறக்கும். எறும்புப்புற்றுகள் சில ஆயிரம் வருடங்கள் நீடித்த்ருக்கும்
மனித அனுபவங்களும் அபப்டியே. அவை நம்முடன் மடியவேண்டியதில்லை. நாம் நம் தலைமுறைக்கு நாம் அனுபவித்ததைக் கொடுத்துச்செல்கிறோம். அவை கூடிக்கூடி மானுட அனுவம ஆகின்றன. அந்த மானுட அனுபவத்தில் நாம் ஒரு சிறு துளிதான்.
நம் அனுபவத்தை மானுட அனுபவமாக ஆக்க சிறந்தவ்ழி எழுதுவதுதான். நீங்கள் ஏன் எழுதக்கூடாது? உங்கள் நடை சரளமாக இருக்கிறது சிறிய நுண் விஷயங்களைக் கவனிக்கும் கண் உள்ளது. அனுபவங்களை நேர்மையாகச் சந்திக்கிறீர்கள். ஆகவே எழுதுங்கள்.
எழுதுவது உங்களை நீங்களே தொகுத்துக்கொள்ள உதவும்
ஜெ