இசை:கடிதம்

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

அன்புள்ள ஜெ,

இசைகுறித்த விவாதங்களில் ரத்தன் அவர்களின் கடிதங்கள் படித்தேன். இதுகுறித்த விவாதம் தேவையில்லை எனும்போதும், எனது கருத்துகளாக சிலவற்றை சொல்ல விழைகிறேன்.
(இக்கடிதத்தில் நீங்கள் பலமுறை சொன்னதை ஏதோ எனது கருத்துபோல உங்களுக்கே மறுபடி எழுதுவது கூச்சத்தைத் தருகிறது.)

நான் முன்பே சொன்னதுபோல எனது அவதானிப்பின் கூர்மையை பொருத்ததே எனது கருத்துகள் அமைகின்றன. அது சரி என்று வாதிடவும் என்னாலாகாது. முழுவதும் தவறாகவே இருக்க பெரும் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் உணர்ந்தே இருக்கிறேன்.என்னால் ஒரு ஆகச்சிறந்த இசையை உருவாக்க முடியாமல் போகலாம் ஆனால் ஒரு நல்ல இசையை அடையாளம் கண்டுகொள்ளும் திறன் இருப்பதாகவே நம்புகிறேன். நான் இசையில் கரைகண்டவனும் அல்ல. ஒரு ராஜா நல்லவர் கண்ணுக்கு மட்டும் தெரியும் உடையை அணிந்துகொண்டு நிர்வாணமாக ஊர்வலம் வரும்போது, அனைவரும்  அவர் உடையணிந்தவராக அவரது இல்லாத உடையைப் புகழும்போது, ஒரு சிறு குழந்தை அவர் நிர்வாணமாக வருவதை உரக்கக் கூவியதைப்போல சொல்கிறேன். அவ்வளவே.

இத்தகைய கருத்துகள் ஒரு கலைஞனிடத்தில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் எழுதப்படுவதல்ல இவை. அந்த கருத்துகளுக்கு அக்கலைஞன் எந்த வித மதிப்பும் தரப்போவதில்லை என்று தெரிந்தும் எழுதப்படுபவையே. இத்தகைய நிலையில் எழுதும்போது யாரையும் திருப்தி செய்யும் நோக்கில் கருத்துகள் சொல்லவேண்டியதும் இல்லை. எழுதுபவரின் நேர்மையும், அவதானிப்புமே அங்கே முக்கியமாகப் படுகிறது.

விருதுகளுக்கென்று மதிப்பு இருவகையில் உருவாகிறது. ஒன்று அதைத்தருபவரை வைத்து, இரண்டு அதைப் பெறுபவரைப் பொறுத்து.விருதுகளுக்கு என்று தனி மதிப்பு என்பது எப்போதுமே இருப்பதில்லை. நான் இங்கே விருதுப் பணத்தை கணக்கில் வைக்கவில்லை.ஒரு கலைஞன் யாரால் பாராட்டப்படுவதை விரும்புகிறான் என்பதை வைத்தே அவனது இயல்பு விளங்கும். உதாரணமாக, நானோ என்னைப்போன்ற சிலரோ உங்களை பாராட்டுவதாலோ, விமரிசிப்பதாலோ உங்களுக்கு என்ன பெருமையோ சிறுமையோ வந்துவிடப்போகிறது? ஒரு விருது வழங்கப்படும்போது, அந்த படைப்பும், படைப்பாளியும் இன்னும் நுண்மையான விமரிசனங்களுக்கு உட்படுத்தப்படவேண்டியது மிக அவசியம். ஏனெனில் அது அப்படைப்பாளியின் உண்மையான இயங்குதளங்களை வெளிச்சம்போட்டு காட்டும் அல்லவா?
ஆஸ்கர் விருது குறித்து இத்தனை நாள் எனக்கென ஒரு கருத்தும் இருந்ததில்லை.அது எனக்குத் தேவையில்லாத விஷயம் என்று தான் இருந்தேன். இந்திய தேசத்து இசையமைப்பாளர் ஒருவர் ஒரு விருது வாங்குவதும், அது இந்தியாவிற்கே பெருமை என்று நினைப்பதும், அதை ஊடகவியலாளர்கள் ஒரு மாபெரும் சாதனை என்று பிரகடனம் செய்ததும், தெருவுக்குத் தெரு ஃப்ளக்ஸ் பேனர் வைப்பதும், உண்மையில் மக்களை ஏமாற்றும் ஒரு மாபெரும் அயோக்கியத்தனமாகவே கருதுகிறேன். இதுதான் இசை என்றும் இதுதான் வெற்றி என்றும் மக்களை நம்பவைத்து அவர்களை முட்டாள்களாகவே நிலை நிறுத்தும் வேலையில் ஊடகவியலாளர்கள் முனைந்து செயல்படுகின்றனர். கருத்து சுதந்திரம் என்ற ஒன்றின் போர்வையில் பணமுதலைகள் தனக்குத் தேவையான கருத்தை பொதுமக்கள் கருத்தாகத் திணிப்பதை பொறுக்கமுடியாமல் எழுதியதே அது. இந்த நாடு, ஊடகத்தின் துணைகொண்டு பல நிரந்திர முதல்வர்களை உருவாக்கிய சரித்திரம் உடையது.
கலை என்பது மக்களுக்காக மட்டுமே என்பது சரியல்ல என்பது எனது புரிதல். மக்கள் விரும்புவதை மட்டுமே கொடுப்பது என்பதன் பின்விளைவுகள் விபரீதமாக முடியும். கலை என்பது ஆயிரம் அறிவிலிகளைச் சேர்ந்து அவர்களால் பாராட்டப்படுவதை விட ஒரு நல்ல ரசிகரைச்சேர்ந்தால் போதும் என்று நினைப்பவன் நான். பிழைத்தல் கலைகளைக் குறித்து எனக்கு கவலை இல்லை. ஏனெனில் அது கலைகளுக்கான மதிப்பீட்டில் இடம்பெறமுடிவதில்லை.

உண்மையில் பாரத தேசத்தில், பழமைவாதம் என்று அதன் கலைகளே மொத்தமாக குறியிடப்பட்டு தள்ளப்படுவதில் எனக்குப்பெரிதும் வருத்தத்தைத் தருவது. நல்லது எது அல்லாதது எது என்று பிரித்தறியும் திறனுடையவர்கள் குறைந்துபோன நிலையில் ஒரு கருத்துருவாக்கம் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. அது மிகவும் ஆபத்தானது. எனக்குத்தெரிந்தவரை கேரளத்தில் இந்தப்பருப்பெல்லாம் வேகாது. வெந்திருந்தால் அங்கே இசையுலகில் ரவீந்த்ரன் மாஸ்டர் , கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி போன்றவர்கள் இருந்திருக்க முடியாது.

ராஜ ரத்தினம் பிள்ளை அவர்களைப்பற்றி சொல்வார்கள், ஒரு முறை கோவில் ஊர்வலத்தில் தெருவில் வாசித்துக்கொண்டு வந்தபோது பலரும் ஆஹா, ஓஹோ என்ற போதெல்லாம் சும்மா வந்தவர், ஒரு இடத்தில் பெட்ரமாக்ஸ் லைட் தூக்குபவர் சபாஷ் என்று சொன்னதும் வாசிப்பை நிறுத்திவிட்டு தலை குனிந்து அதை ஏற்றுக்கொண்டாராம். அது அவருக்கான உண்மையான பாராட்டென அவர் உணர்ந்திருந்தார். ஆனால் அந்த விளக்குத்தூக்கி எத்தனை நூறு பேர் வாசிக்கக்கேட்டிருப்பார், எத்தனை அனுபவம் வாய்த்திருக்கும்? இப்போதும் எங்கு எவர் நாதஸ்வரம் வாசித்தாலும் போய் உட்கார்ந்துவிடுவேன். கல்யாணமாகட்டும், கோவிலாகட்டும். அவர்களோடு ஒரு மணி நேரமாவது கழித்தாலே எனக்கு நிம்மதி. நாதஸ்வரக் கலைஞர்களுக்கு இப்போதெல்லாம் மதிப்போ மரியாதையோ இல்லை என்று சொல்கிறார்கள். ஒரு நல்ல கலைஞன் கம்பீரமாக வந்து நின்றால் நிச்சயமாக யாராயினும் பாராட்டுவார்கள்.

திரையிசையை சமரசம் என்று ஒப்புக்கொண்டேன். அதற்காக எந்த அளவு சமரசம்? ஒருவர் எந்த அளவு சமரசம் செய்துகொள்கிறார்களோ அந்த அளவு வெற்றி பெறலாம் என்பதும் புரிகிறது, ஆனால் இசை விஷயத்தில் சமரசம் என்பது சாத்தியமில்லாத ஒன்றாக இருக்கிறது எனக்கு. மாற்றம் என்பது தேவைதான் ஆனால் அது எப்போதுமே நல்லதற்கான மாற்றம் என்று சொல்லமுடிவதில்லை. மாற்றங்கள் தீயவையும் பயக்கும். ஒரு சுமாரான இசைக்கோவையை எடுத்து ஒரு சமூகம் மிகச்சிறந்ததாக பாராட்டுகிறது என்றால் அதை சகிக்க முடியாமல் எழுதியதே அது. ஒரு பழமையான கலாசார செழுமை மிகுந்த, கல்தோன்றி மண்தோன்றா காலத்தின் முன் தோன்றிய மூத்த குடி “அட்ரா அட்ரா நாக்க மூக்க”  பாடலை தனது தேசிய கீதமாக கொள்ளத்தக்க நிலையில் தனது இளைஞர்களையும் சமுதாயத்தையும் வைத்திருப்பது வெட்கக்கேடானது. இந்த தேசத்தில், தோற்றுப்போன கலைஞனிடம் பேசினால் புரியும் உண்மையான கலை என்னவென்று. வென்றவர்களுக்கு கலையை புரிந்துகொள்வதற்கான நேரம் கிடையாது.

இதில் யாரோ வெற்றி பெற்றார்கள், யாரோ விருது கொடுத்தார்கள். இதில் தோற்றுப்போனது நிச்சயம் செழுமையான பாரம்பரியமும், அதி நுணுக்கமான பரிணாம வளர்ச்சியும், பல தளங்களிலும் செயல்படும் நமது பாரத இசை. இதில் பாரதத்தில் புழங்கும் நாட்டுப்புறப்பாடல் முதல், சாஸ்த்திரிய இசைவரை அனைத்தும் அடங்கும். ஒருவர் விருது வாங்கியதை இந்த நாடே ஒரு ஹிஸ்டீரியாபோல கொண்டாடும்போது, அந்த விருது பெற்றவரையும், விமரிசத்த இந்த கூத்துகளின் இடையில் ஓரமாக அறையின் ஓரமாக மூலையில் கிடப்பது இசை. இதையே தோற்றது இசை என்று என்று சொன்னேன்.

இந்த தேசமும், கலாசாரமும், இதன் நுண்மையான கலை தோற்றமும் வளர்ச்சியும் மழுங்கடிக்கப்பட்டு ஒரு தரக்குறைவான இசையை இதுதான் இந்த இளைஞர்களுக்கான இசை என்று முன் நிறுத்தி அதை விளம்பரப்படுத்தும் போதும், அது அல்ல உண்மை என்று சொல்ல வாய் துணியவில்லை என்றால் ஒரு நல்ல ரசிகனுக்கு சோறு இறங்காது சார்.

உண்மையை உலகுக்கு உரத்து சொல்ல உலக குரு அல்ல சார் நான். ஆனாலும் எனது அறியாமையாலும், அதனால் வந்த அசட்டுத்துணிச்சலாலும் பேசிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவே.

-ராம்

அன்புள்ள ராம்.

லோகித் தாஸின் ‘பூதக்கண்னாடி’ என்ற படம் முக்கியமான ஒன்று. அதன் கரு எப்படி கிடைத்தது என்பதைப்பற்றி ஒருமுறை அவர் சொன்னார். அவர் வாட்ச் பழுது நோக்கும் கடையில் மழைக்கு ஒதுங்கினார். அந்த பழுதுநீக்குபவரைக் கண்டதும் ஒரு ஆச்சரியம் ஏற்பட்டது. ஒரு கண்ணில் அவர் நுண்ணோக்கி அணிந்திருந்தார். மறுகண்னால் பார்த்து ”வணகம் சார்” என்றார். ஒருகண் அதிநுண்மைகளைக் காண்கிறது. மறு கண் அன்றாடவாழ்க்கையை நோக்குகிறது!

நுண்கலைகளின் விஷயமும் இதுதான். அது அதிநுண்மையை நோக்கும் ஒரு கண். இசை போன்ற நுண்கலைகளைக்கொண்டு நாம் நம் மனதில் உள்ள அதிநுண்மைகளைத்தான் மீண்டும் மீண்டும் பரிசீலித்துக்கொள்கிறோம். நுண்கலைகளில் தான் மதிப்பீடுகளின் முரண்படுகள் அதிகம் வரும். விவாதங்கள் அதிகம் எழும். அவை ஒவ்வொருவரும் அறிந்த சுய உண்மை என்பதனால் முரண்பாடுகள் கோபங்களாகவும் கனியும்.

நுண்ணோக்கியில் பார்ப்பதை அன்றாடவிழியால் மதிப்பிட்டுக்கொள்ள முடியவேண்டும். அதே நுண்ணோக்கியால் உலகை நோக்கக்கூடாது. கலைசார்ந்த விவாதத்தில் இருந்து நான் கற்றுக்கொண்டது இதுவே

ஜெ

இசை, கடிதங்கள்

இசை:ஒரு கடிதம்

இசை, மீண்டும் சில கடிதங்கள்

முந்தைய கட்டுரைகவிதைகள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைபண்பாடு: ஆதங்கம்,அவநம்பிக்கை:ஒரு கடிதம்