உயிர்மையின் நிர்வாக ஆசிரியராக இருந்த சுதீர் செந்தில் பிரிந்துபோய் உயிர் எழுத்தை ஆரம்பித்தபோது அதை வெறும் வீம்பு என்ற அவநம்பிக்கையுடன் மட்டுமே நோக்கத்தோன்றியது, செந்திலின் இலக்கியப்பரிச்சயம் மிக குறைவானதென்பதே காரணம். ஆனால் அதைச்சுற்றி உருவான ஒரு வட்டம் காரணமாக மெல்ல மெல்ல தனித்துவம் கொண்ட சிற்றிதழாக அது உருவாகி வந்திருப்பதை உணர முடிகிறது. இதழ் தொடர்ச்சியாகவும் வந்துகொண்டிருக்கிறது. பிப்ரவரி 2008 இதழ் அமைப்பு உள்ளடக்கம் ஆகியவற்றில் அழகும் அக்னமும் கொண்ட இலக்கிய இதழாக உள்ளது. பஷீரின் ·பைன் லைன் வடிவமைத்து அச்சிடுவதனால் சொல்புதிதின் சாயல் இதழுக்கு உள்ளது. அதுவும் எனக்கு உவப்பளிக்கிறது
இவ்விதழில் ஆதிமூலத்தின் அட்டை அழகாக உள்ளது. சென்ற இதழில் தேவதேவனை அட்டையில் வெளியிட்டிருந்தார்கள். நம் படைப்பாளிகளை முக்கியத்துவபப்டுத்தவேண்டும் என்ற இதழின் எண்ணம் வரவேற்கத்தக்கது.
உயிர் எழுத்தின் முக்கியமான சிறப்பு அது படைப்பிலக்கியத்தை முதன்மைப்படுத்துகிறது என்பதே. குறிப்பாக அதில் வரும் சிறுகதைகளை கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது. புதிய படைப்பாளிகள் அதிகமாக எழுதும் இதழாக உள்ளது அது. பல கதைகள் தொடக்க முயற்சிகள். ஆயினும் இது முக்கியமான ஒரு போக்குதான்.
இவ்விதழில் வண்ணதாசன் எழுதிய ‘சினேகிதிகள்’ சமீபத்தில் தமிழில் வந்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று. விசித்திரமான மௌனம் நிறைந்த கதை இது. ஒழுக்கத்தின் இந்தக் கரையில் நின்றுகொண்டு அந்தக்கரையை குறுகுறுப்புடன் எட்டிபபர்க்கும் ஒருவனின் நோக்கில் எழுதபப்ட்ட இக்கதையில் ஒரு நல்ல வாசகன் உய்த்தறியவேண்டிய பல நுண்ணிய தளங்கள் உள்ளன. ஒழுக்கமுறைக்குக்கு வெளியே வாழ்கிறவர்களுக்குள் ஏற்படும் ஆழமான நட்பு, அவர்களின் தனித்துவம் கொண்ட உறவுகள் மற்றும் பிரியங்கள் என.
உயிர் எழுத்தில் எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு எல்லா இதழிலும் முக்கியமானது. இவ்விதழில் ‘எரியும் பனிக்காட்டில் உருகிய மனிதர்கள்’ என்ற தலைப்பில் ‘ரெட் டீ’ என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கமான ‘எரியும் பனிக்காடு’ [ பி.எச்.டேனியல், விடியல் பதிப்பகம்] நாவலைப்பற்றி எஸ்.வி.ராஜதுரை எழுதிய நல்ல கட்டுரை உள்ளது. நூல்களைப் பற்றிய கட்டுரை என்றால் கட்டுரையின் இறுதியில் நூல்,ஆசிரியர் ,பதிப்பகம் முதலிய தகவல்களை தனியாக அளிகக்வேண்டியது அவசியம். இக்கட்டுரையில் நூலாசிரியர் பெயரை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது
தமிழர் புத்தாண்டாக சித்திரை இருக்கக் கூடாது என்று ஈவேரா என்றோ சொன்ன கட்டுரையை எஸ்.வி.ராஜதுரையில் குறிப்புடன் மறுபதிப்புசெய்திருக்கிறார்கள். [தமிழ் வருஷப்பிறப்பு-மானங்கெட்ட கதை] தமிழாய்வாளர்களான [பெரியாரியர்களுமான] குமரிமைந்தன் போன்றவர்கள் பஞ்சாங்க நூல்களை விரிவாக ஆராய்ச்சி செய்து தமிழருக்கு தொன்மையான தனித்துவம் கொண்ட வானியல் உண்டு என்றும், அதுவே பிற்பாடு சோதிடமாக உருமாறியது என்று பல்லாண்டுகாலமாக எழுதிவருகிறார்கள். சித்திரை மாதக் கணக்கு தமிழர்களின் தொன்மையான வானியலின் சான்று என்கிறார்கள். என் குறைவான அறிவிலேயே சோதிடநூல் சார்ந்த அந்த ஆய்வுகள் முக்கியமானவை என்று கண்டிருக்கிறேன். தமிழ் சார்ந்த இத்தகைய ஆய்வுகள் இப்போதுதான் தொடங்கியே உள்ளன.
ஆனால் இதைபப்ற்றிய ஆரம்ப அறிவுகூட இல்லாமல் ஈவேரா போகிற போக்கில் வருடப்பெயர்கள் சம்ச்கிருதமாக உள்ளன என்பதனாலும் எங்கோ யாரோ சொல்லக்கேட்ட ஒரு புராணக்கதையின் அடிப்படையிலும் சித்திரைக்கணக்கை தூக்கி வீசுகிறார். அதுவே சட்டமும் ஆகிறது.இந்த அபத்தத்துக்கு உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால் தமிழிசையை சொல்லலாம். இப்போது தமிழிசை பக்தியால், சம்ஸ்கிருதம் தெலுங்கு மொழியால் ஆனதாக உள்ளது. ஆகவே அதை தூக்கி வீசி விடமுடியுமா? தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அவ்விசை தமிழரின் தொன்மையான இசையே என ஐயமில்லாமல் நிரூபித்தார். அதேபோல வானியல் சார்ந்த ஆய்வுகள் இனிமேல்தான் வரவேண்டும்
ஈவேராவை ஒரு சமூக சீர்த்திருத்தவாதியாகவோ போராட்டக்காரராகவோ நிறுத்துவதே தமிழுக்குச் செய்யும் நன்மை. தமிழ்ப்பண்பாடு பற்றிய ஆரம்ப அறிவுகூட இல்லாத அவரை தமிழ்ப்பண்பாட்டின் அனைத்துக்கூறுகளையும் தீர்மானிக்கும் ‘நபி’ போல சித்தரிக்கும் இன்றைய போக்குகள் மிக ஆபத்தானவை
விக்ரமாதித்யன் அவருடன் சேர்ந்து குடிப்பவர்களே தமிழின் நல்ல கவிஞர்கள், அவர்கள் நல்ல கவிதைகள் எழுதாவிட்டாலும்கூட , என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அண்ணாச்சி குடிக்காமலிருக்கையில் செய்யும் நகைச்சுவைகளில் ஒன்று இது.பேபியம்மா என்ற பாலியல்தொழிலாளியின் விரிவான பேட்டி வெளியாகியுள்ளது. ஒரு சமூகப்பதிவு என்ற முறையில் முக்கியமானது
சதத் ஹ¤சைய்ன் மன்றோ பற்றிய ந.முருகேசபாண்டியனின் பதிவு மனக்கிளர்ச்சியை மட்டுமே சார்ந்தது. மன்றோ ஒரு பரபரப்பு எழுத்தாளர் மட்டுமே. அவரிடம் நுட்பமும் ஆழமும் கொண்ட படைப்புகள் மிக குறைவே. பிரிவினைக்கலவரம் சார்ந்த உக்கிரமான சித்திரங்களை அளித்திருக்கிறார். ஆனால் அதைவிட தீவிரமான நுண்சித்திரங்களை நாம் உருது எழுத்தாளரான ராஜேந்திரசிங் பேதியின் கதைகளில் காணலாம்.
பிரபஞ்சன் கனிமொழியின் சென்னை சங்கமத்தை விதந்தோதி ஒரு கட்டுரையும் தமிழச்சியின் வனப்பேச்சி ஒரு மாபெரும் தமிழிலக்கிய நிகழ்வு என்ற ஒரு மதிப்புரையும் எழுதியிருக்கிறார் ”இதெல்லாம் இப்போது சிற்றிதழ்களின் கடவுள் வணக்கம் போல. நாம் சாமிகும்பிடுவதில்லை என்பதற்காக கடவுள் வாழ்த்து உள்ள நூல்களை புறக்கணிக்கிறோமா என்ன?” என்றார் நண்பர். சரிதான்
ஆனால் பல கோணக்களில் படித்து விவாதிக்க வேண்டிய முக்கியமான சிற்றிதழ். இந்த கவனமும் உழைப்பு தொடர்க
[உயிர் எழுத்து. மாத இதழ். ஆசிரியர் சுதீர் செந்தில்.
9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி 1 தமிழ்நாடு