பயணம் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,
உங்கள் பயணத்திற்கு என் வாழ்த்துக்கள். அடுத்த இது போன்ற பயணத்தில் கண்டிப்பாகப் பங்குகொள்ள முயற்சிப்பேன். குருவும் சீடனும் என்ற நூல் என நினைக்கிறேன், நடராஜ குரு இருபது ரூபாய்க்கு மேல் கை இருப்பாக வைக்கக் கூடாது என்று சொன்னதாக வரும். அது போல் செலவிற்குப் பணம் இல்லாமல் ஒரு பயணம் செய்ய எனக்கு ஆசை. அப்போதும் பயணச் செலவைத் தவிர மட்டும்தான். அதுகூட இல்லாமல் பயணம் செய்யத் துறவிகளால் மட்டுமே முடியும்…..

அன்புடன்,

ராதாகிருஷ்ணன்

அன்புள்ள ராதாகிருஷ்ணன்,

அடுத்த பயணத்தில் நீங்களும் வருகிறீர்கள்.

துறவிகளின் பயணம் வேறுவகை. துறவி ஆகும்போது நாம் காணாத ஒரு துறவிச்சமூகத்தில் அவர்கள் இணைகிறார்கள். அங்கே வேறு விதிகள் வேறு துணைகள் உண்டு.

ஜெ

அன்பின் ஜெ எம்,

இந்தியப் பயணத்திற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக – அதை ஒட்டிய மனநிலையுடன் இருப்பீர்கள்.
உங்களுடன் பயணத்தில் இணைந்து கொள்ள எனக்கும் பேராசைதான்…

வயதின் முதிர்ச்சியால் பெண் என்ற பால் அடையாள மனத்தடைகளையெல்லாம் நான் தாண்டிவிட்டபோதும் – பயணம் செய்யும் நல்ல உடல்நிலையுடன் நான் இருந்தபோதும், [பயணங்கள் ஒருபோதும் என்னைக் களைப்பாக்குவதே இல்லை] நீங்கள் மற்றும் பிற நண்பர்கள் எனக்குப் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்ய நினைத்து அதனால் உங்கள் பயணச் சுருதி பிறழ்ந்து விடக்கூடாது என எண்ணியே சற்றே விலகி நிற்கிறேன்…  உங்கள் சுதந்திரம் என்னால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் எனக்கிருக்கிறது.
எனினும் என்றேனும் ஓர் நாள் என் உடலின் தள்ளாமை என்னைச் செயலறச் செய்யுமுன் உங்களுடன் கட்டாயம் ஒரு பயணத்தில் கலந்து கொண்டே தீர வேண்டும் என்ற தீராத மன விருப்பத்துடன், அது நிறைவேறும் நாள் நோக்கிக் காத்திருக்கிறேன்.

சிம்லாவின் பனிப் பொழிவு காணக் குழந்தைகள் விரும்பியதால் அங்கு சென்று அந்தப் பனிப்பொழிவையும் பனி மழைத் தூவலையும் ரசித்து வந்தோம்; வாழ்நாள் அனுபவம்…

தங்கள் பயணம் சிறக்க அன்பு வாழ்த்துக்கள்…

எம் ஏ சுசீலா

அன்புள்ள சுசீலா,

ஆம், ஒரு பயணம் நாம் சேர்ந்து செல்லலாம். நாம் இன்றுவரை அதிகமாகப் பேசிக்கொண்டதில்லை. ஒரு பயணம் அதற்கான வாய்ப்பாக அமையும். பயணம் இலகுவான உற்சாகமான மனநிலைகளை உருவாக்குகிறது. பெரும்பாலான நண்பர்களுடன் பயணத்திலேயே நெருக்கமான நட்பு உருவாகியது.

பார்ப்போம்.

ஜெ

அன்புள்ள ஜெ,

உங்கள் பயணத்துக்கு வாழ்த்துக்கள். நானெல்லாம் எப்போதுமே இப்படி ஒரு பயணத்தைக் கனவு காணக்கூடியவன். இப்படி ஒருமாதம் எல்லாவற்றையும் தூக்கிப்போட்டுவிட்டு ஒரு பயணம் செய்யும் வாழ்க்கை எனக்கு அமையவே இல்லை. அதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். ஏதேதோ விஷயங்களிலே சிக்கி மீளமுடியாமல் கிடக்கிறேன். காடு நாவலில் வருமே அந்தத் துடலி முள்ளு போல. மாட்டிக்கொண்டால் மீளவே முடியாது. பயணம் போகும் விசயங்களை எழுதுவீர்கள் என நினைக்கிறேன். வாசிக்கக் காத்திருக்கிறேன்.

சிவராம்

மீண்டுமோர் இந்தியப் பயணம்

முந்தைய கட்டுரைசாகித்ய அக்காதமி – விவாதங்கள்
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 1 – கனககிரி, சிரவண பெலகொலா