சாகித்ய அக்காதமி – விவாதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

இதை எழுதி உங்களுக்குத் தலைவலி கொடுக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், இதைச் சொல்லாமல் மற்றவர்களும் இருந்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறன். நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தபோது தமிழ் இலக்கிய உலகமே அதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடியது, மறுபேச்சே இல்லை.

இப்போது ஒருவருக்குக் கிடைத்திருக்கும் விருதைப்பற்றி இலக்கியவாதியின் வீட்டில் இருக்கும் நாய்கள் கூடப் பெருமையாய்ப் பேசாது என்பது திண்ணம்.

நாஞ்சில் நாடன், “இந்த விருது சமாச்சாரம் எப்படினா….ஒரு யானை கையில மாலை கொடுத்து அனுப்புவாங்க, யாரு சரியான குடிமகனோ அவனுக்கு இந்த மாலையப் போடுன்னு. யானை சிலசமயம் அஞ்சு வருஷத்துக்கு பத்து வருஷத்துக்கு சரியான ஆளு கழுத்துல போட்டுரும். யானை கிடைக்கலேன்னா குரங்கு கையில குடுத்துருவாங்க, அது பிச்சித் திங்க ஆரம்பிச்சுரும். நான் சொல்லவருவதன் பொருள் உங்களுக்கு புரியணும்’’

வித்தியாசம்தானே நம்மைக் காட்டுகிறது.

ராம லட்சுமண்

***

அன்புள்ள ராம லட்சுமண்,

வெங்கடேசன் விருது பெற்ற விவகாரத்தில் மாற்றுக்கருத்தாகச் சொல்லப்படுவது நானறிந்தவரை அவரது வயதும், அவர் ஒரே நூல் மட்டுமே எழுதியிருக்கிறார் என்பதும் மட்டும்தான். அந்நாவலின் இலக்கியத்தகுதி அல்ல. அதை மிகச்சிலரே வாசித்திருக்கிறார்கள். மிகச்சிலரே அதைப்பற்றி பேசியிருக்கிறார்கள்.

தமிழில் மட்டுமல்ல,எல்லா மொழிகளிலும் அப்படி சிலர் முந்துவது நடந்திருக்கிறது. சிறந்த உதாரணம் தோப்பில் முகம்மது மீரான். எழுதவந்த சிலவருடங்களுக்குள்ளேயே அவர் சாகித்ய அகாதமி பெற்றார், அவருக்கு முப்பதாண்டு முன்னரே எழுத ஆரம்பித்து அவரைக் கைபிடித்து எழுத்துலகுக்குக் கொண்டுவந்த ஆ.மாதவன் இன்றுவரை அதைப் பெறவில்லை.

சாகித்ய அக்காதமி விருதின் விதிகள் அதை வாழ்நாள் சாதனைக்கான விருதாகக் கொள்ளவில்லை. ஆகவே நடுவர்குழு அவர்களுக்கு முன்னால் வந்த நாவல்களைக்கொண்டு முடிவெடுப்பது சாத்தியமே.

ஜெ

***

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

உயிர்மை இதழின் இந்த மாத இதழ் படித்தேன். நீங்கள் படித்தீர்களா? சாஹித்ய அகாடமி விருதைப் பற்றியும் அதைப் பெறும் தகுதி சு.வெங்கடேசனுக்கு இல்லை என்றும் தாறுமாறாக எழுதியிருக்கிறார் மனுஷ்யபுத்திரன். இந்தக் காழ்ப்புக்குக் காரணம் என்ன?

சாஹித்ய அகாடமியிடமிருந்து பணம் கொடுத்து விருதை வாங்கி இருக்கிறார் என்ற அளவுக்குத் தரம் தாழ்ந்து எழுதப்பட்டு இருக்கிறது. சாஹித்ய அகாடமி விருதுக்கு ஒரு லட்சம் என்றால் நாமும் தமிழ் சாஹித்ய அகாடமி ஒன்று நிறுவி இரண்டு லட்சம் பரிசளிக்க வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது. உழைப்புக்கேற்ற ஊதியம் என்ற மார்க்ஸ் தத்துவம் இதற்குக் கிடையாதா என்றும் எழுதப்பட்டு இருக்கிறது.

மிகவும் வேதனையாக உள்ளது. ஒரு எழுத்தாளனுக்கு விருது கிடைத்தால் பாராட்டக் கூட இவர்களுக்குப் பெருந்தன்மை இல்லையா? அல்லது இவர்களின் இதழில் எழுதும் சாரு நிவேதிதாவிற்கும் மனுஷ்ய புத்ரனுக்கும் விருதளித்தால்தான் ஒப்புக் கொள்வார்களா? ஊதியத்திற்கும் பாராட்டுக்கும் இவர்களுக்கு இன்னும் வித்யாசம் புரியவில்லையா? விருது எப்படி ஊதியமாகும்?

ஆவலுடன் உங்கள் பதிலை எதிர்பார்க்கும்,
கணேஷ் ஆத்ரேயா

***

அன்புள்ள கணேஷ்,

உயிர்மையின் விமர்சனத்தில் தவறேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. விருது என்பது எல்லாரும் பாராட்டியாகவேண்டிய மங்கலத் தருணம் அல்ல. அது ஒரு மதிப்பீடு. அதை ஓர் அமைப்பு முன்வைக்கும்போது அதை ஏற்காதவர்கள் விமர்சிப்பது இயல்பே. விருதுகள் அளிக்கப்படும்போது சம்பந்தப்பட்ட படைப்புகள் விமர்சனத்துக்கும் விவாதத்துக்கும் உள்ளாகவேண்டும், அந்த விருது எல்லாத் தரப்பு வாசகர்களாலும் பரிசீலனை செய்யப்படவேண்டும் என்பதே முறை.

ஜெ

முந்தைய கட்டுரைபூமணி – கடிதம்
அடுத்த கட்டுரைபயணம் – கடிதங்கள்