குயில். கடிதங்கள்

அன்புள்ள ஜெ…சார்,

 

நீங்கள் பறவைகள் அதிகம் வாழும் இடத்தில் வசிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அஜிதனின் பறவை ஆர்வம் அதை விட மகிழ்ச்சி. இங்கே கரூர் நகரத்தில் மரங்கள் இல்லை. அதனால் பறவைகளும் குறைவு. நல்ல வேளையாக என் வீட்டருகே மரங்கள் உள்ளன. அதனால் பறவைகளை காண முடிகிறது. என் காலை பொழுதுபோக்கே அதுதான். very interesting, peculiar and very small singing birds.  I dont know their names.

 

இன்னொன்று சிட்டுக்குருவி. காலை காபியை ரசித்துக்கொண்டே அவை ஜோடி ஜோடியாக மின் கம்பங்களின் மேல் தத்தி தாவிக் கொண்டிருப்பதை பால்கனியில் அமர்ந்து ரசித்துக் கொண்டிருப்பேன். தீடீரென்று ஒரு மாத காலமாக அவற்றைக் காணவில்லை. ஒரு குருவியைக் கூட காண முடியவில்லை.

 

இங்கே மதுக்கடைகளில் சற்று வித்தியாசமான சைட் டிஷ் கிடைக்கும். கொய்யாக்காய், குச்சிக்கிழங்கு பொறியல், முருங்கைக்காய் பொறியல், வாழைப்பூ பொறியல். அவற்றில் ஒன்று சிட்டுக்குருவி பொறியல். இதுதான் காரணமென்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

 

வீட்டுக்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கும் செல் போன் டவர் தான் காரணமென்று பின்னர் அறிந்தேன்.


இளம்பரிதி

88

 

அன்புள்ள ஜெ,

நலம்தானே? குயிலைப்பற்றிய கட்டுரையை பலமுறை படித்தேன். நான் சென்னையில் வேளச்சேரியில் இருக்கிறேன். உயிர்வாழலாயக்கில்லாத நகரம் என்று சென்னையைச் சொல்கிறார்கள். அதிலுள்ள மேலும் உயிர்வாழலாயக்கில்லாத  இடம் வேளச்சேரி. இங்கே தெருக்கூட்டுதல், குப்பை அள்ளுதல், சாக்கடை எதுவுமே கிடையாது. மழைபெய்யாவிடால் தூசி. பெய்தால் சகதி. சத்தம் புகை எல்லாம்  அதிகம்

ஆனால் நீங்கள் எழுதிய கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும்போதுதான் கேட்டேன், இங்கேயும் குயில்கள் கூவிக்கொண்டே இருக்கின்றன. அதிலும் மத்தியான்ன நேரத்தில் குயில் சத்தம் எப்போதுமே கேட்கிறது. அவற்றுக்கு தேவையான மரங்கள் இருக்கிறதா என்று எண்ணிக்கொண்டேன். மறுநாள் காலையிலே வாக்கிங் போகும்போது பார்த்தேன்.  ஆச்சரியமான உண்மை! ஏராளமான மரங்கள் இருக்கின்றன. அதிகமும் வேம்பு மரங்கள்தான். தென்னைகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் நிறைய பறவைகளும் இருக்கத்தான் செய்கின்றன

நாம்தான் பறவைகளைப் பார்க்காமல் நம் கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டிருக்கிறோம் இல்லையா? ஆச்சரியமாக இருந்தது. நான் சென்று ஒரு நல்ல பைனாகுலர் வாங்கிக்கொண்டு வந்தேன். பாடும் குயிலைப் பார்க்கவேண்டும் என்று ஆசை

சிவசுப்ரமணியம்
சென்னை

 

 

பறக்கும் புல்லாங்குழல்

முந்தைய கட்டுரைபண்பாடு: ஆதங்கம்,அவநம்பிக்கை:ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைகுரு:கடிதங்கள்