பயணத்துக்குக் குழு தேவையா?

அன்புள்ள ஜெயமோகன்,

இந்தியப்பயணத்துக்கான தயாரிப்புகளில் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். உங்கள் பயணக்கட்டுரைகளைத் தொடர்ந்து வாசிப்பவன் நான். உங்களுடைய பெரும்பாலான பயணங்களில் நண்பர்களுடன்தான் செல்கிறீர்கள். அப்படிக் குழுவாகச்செல்லும்போது அரட்டையும் பேச்சுமாகக் கவனம் திசை திரும்பி பயணத்தில் நிலைக்காமல் ஆகிவிடுமல்லவா? தனியாகப் பயணம் செய்யும்போதுதானே உள்நோக்கிய கவனம் குவிந்து ஒருமுகப்பட்டு நாம் கவனிக்க முடியும்? இதை நான் உங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைத்தேன். ஆகவே கேட்கிறேன்.

நாராயணன்
வேம்பலூர்

அன்புள்ள நாராயணன்,

பயணங்களைத் தொடர்ந்து செய்பவர்கள் சிலரே. பெரும்பாலானவர்கள் பயணம் பற்றிய கற்பனைகளில் மட்டுமே இருப்பவர்கள். பயணம் பற்றிய பல கொள்கைகளை இவர்களே உருவாக்குகிறார்கள். உண்மையிலேயே பயணம் செய்பவர்கள் இந்தக் கேள்விக்கான விடையை அவர்களே அனுபவம் சார்ந்து சொல்லிவிட முடியும்.

நான் தனியாகவும் நண்பர்களுடனும் பயணம் செய்யக்கூடியவன். இப்போதும் பலபயணங்களைத் தனியாகவே செய்கிறேன். இரண்டுக்குமான மனநிலைகள், பயன்கள் வேறுவேறு.

தனியாகச்செல்லும் பயணங்களில் மனம் ஒருமை கூடும் என்பதெல்லாம் ஒரு பிரமை மட்டுமே. அதிகமும் பயணிக்காதவர்களின் நம்பிக்கை அது. உண்மையில் புதிய இடங்களில் தனியாகப் பயணம்செய்யும்போது பலவகையான லௌகீகமான பொறுப்புகள் நம் மீது அமர்கின்றன. வழிவிசாரித்தல் முதல் தங்குமிடம், உணவு முதலியவற்றைக் கண்டடைதல் வரை எல்லாமே நாமே செய்தாகவேண்டும். தனியாகப் பயணம் செய்பவர்களின் பெரும்பாலான நேரம் இதில்தான் செலவாகும். சிறுவயதில்- இதெல்லாமே அனுபவங்களாகத் தோன்றும் காலகட்டத்தில்- தனியாகச்செல்லும் பயணத்தின் சுவாரசியமே இதுவாக இருக்கும். ஆனால் பின்னர் இதில் சலிப்பு வந்துவிடும். சாராம்சமான அனுபவங்களை மட்டுமே நாட ஆரம்பிப்போம்.

தனியாகச் செல்லும்போது மனம் குவியும் என்பதெல்லாம் கற்பனை. மனம் குவிவதென்பது எளிதில் நிகழக்கூடியதல்ல. யோகிகள் அல்லாத எவருக்கும் தனியாகச்செல்லும்போதும் மனம் பல்வேறு நினைவுகளால் அலைபாய்ந்தபடியேதான் இருக்கும். சொல்லப்போனால் தனிமை காரணமாகவே இன்னும் அதிகப்படியான எச்சரிக்கை உணர்ச்சியும் கடந்த நினைவுகளும் வருங்காலத் திட்டங்களுமாக எண்ணங்கள் அலைபாயும். பெரும்பாலும் ஒரு புதிய இடத்தைப்பார்த்ததும் வரும் மன எழுச்சி சில கணங்களிலேயே இல்லாமலாகிவிடும். அக்காட்சிமீது நம் பிரக்ஞை நினைவுகளைக் கொண்டுவந்து கொட்ட ஆரம்பிக்கும். அந்தக் காட்சியுடன் இணைந்த எண்ணங்களும் பிம்பங்களுமாக அனுபவம் ஒரு பெரிய சருகுக்குவியலாக ஆகும். மனித மனதின் மிகப்பெரிய ஆற்றல் என்பதே அது தொடர்புவலையை உருவாக்குவதுதான். அதுவே அதன் சிக்கலும் கூட. தன்னிச்சையாக விரியும் அந்த வலையை அறுத்துச்சுருட்டுவது எளிதல்ல.

மனதைக் குவியச்செய்வதற்குத் தனிமை ஒரு வழியே அல்ல. அதற்கு வேறு வழிகள் உள்ளன. தனியாகச் சென்றால்கூட மனதைப் புறக்காட்சியில் குவியச்செய்து முழுக்க உள்வாங்கிக்கொள்ளப் பலவகையான நுட்பமான பயிற்சிகளும் செயல்முறைகளும் உள்ளன. முழுப் பிரக்ஞையையும் கண்ணிலும் காதிலும் தேக்கி வெளியே பார்ப்பதும், ஊடாக வந்து மறைக்கும் எண்ணங்களின் பாசிப்படலத்தை விலக்குவதும் ஒருவகை தியானம். நித்யா கற்பித்து என் பயணங்களில் செய்யும் பல வழிகள் உண்டு. அவற்றில் சிலவற்றை நாங்கள் செய்வதுமுண்டு.

தனியாகச் செல்லவேண்டிய தருணங்கள் உண்டு. நாம் மீண்டும் மீண்டும் செல்லுமிடங்களுக்குத் தனியாகச் செல்லலாம். இயல்பாகப் புற உலகம் பற்றிய எச்சரிக்கையோ தேவைகளோ இல்லாமலாகிவிட்டிருப்பதனால் நாம் நமக்குள் குவிவதற்கு மேலும் அதிக சாத்தியங்கள் உள்ளன.

மற்றபடி சேர்ந்து செல்வதே மேல். ஒன்று பயணத்தின் பலவிஷயங்களைப் பகிர்ந்துகொள்ள முடியும். பலவகைத் திறமைகள் கொண்டவர்கள் உண்டு. வழிகேட்டு நினைவில் வைத்துக்கொண்டு செல்வதில் கெட்டிக்காரர்கள் இருக்கலாம். தங்குமிடம் போன்றவற்றை எளிதில் ஏற்பாடு செய்பவர்கள் இருக்கலாம். அத்தகைய குழு நம் புறவுலகச் சுமைகளைப் பெருமளவுக்குக் குறைத்துவிடுகிறது.

அதைவிட முக்கியமானது செலவு. நாங்கள் செல்லும் இந்தப்பயணங்கள் இயற்கையனுபவத்துக்காக, வரலாற்றனுபவத்துக்காகச் செல்பவை. ஆகவே அதிகமும் மக்கள் வசிக்காத வனப்பகுதிகளும்,கிராமப்பகுதிகளும்தான் எங்கள் திட்டத்தில் இருக்கும். அங்கே செல்ல கார் இல்லாமல் முடியாது. பேருந்தில் சென்றால் பேருந்துக்காகக் காத்திருப்பதே பெரிய வேலையாக முடியும். கார்ச்செலவை நண்பர்கள் சேர்ந்து பகிர்ந்துகொள்ளாவிட்டால் இத்தகைய பெரிய பயணங்களை அடிக்கடி திட்டமிட முடியாது. இந்த இந்தியப்பயணத்தை நான் மட்டும் காரில் சென்றால் மொத்தச் செலவு ஒருலட்சம் வரை வரக்கூடும். பயணங்களில் மோகமுடைய ஒருவர் அதிகபட்ச பயணம் என்பதையே விரும்புவார். அதற்காகவே திட்டமிடுவார்.

ஆனால் பயணத்தில் நம் மனநிலையுடன் இணையாத நண்பர்களைச் சேர்த்துக்கொள்வது கூடாது. பயணத்தையே அலுப்பாக்கிவிடுவார்கள். ஒரே மனநிலையில் குவியும் நண்பர்கள் தேவை. அவர்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் உண்மையில் ஒரு பயணம் முழுக்க அந்தப்பயணத்தின் தீவிர மனநிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும்.

இன்னும் ஒரு விஷயம் உண்டு, தனியாகச் செல்வதை விட நண்பர்களுடன் செல்லும்போது அதிகமான தீவிரமும் ஒருமுகப்படுதலும் சாத்தியமாகிறது. நம் நினைவுகள் அலைபாய்ந்தால்கூட இன்னொரு நண்பர் நம்மை அந்த மனநிலைக்கு இழுத்துச் சென்றுவிடுவார்.

இலக்கிய வாசிப்பு, தத்துவ விவாதம், இசைகேட்டல் என எல்லாவற்றிலும் கூடிச்செய்வது உத்வேகத்தை அதிகரிப்பதை நீங்கள் அனுபவத்தில் காணலாம். ஒரு செறிவான காவியத்தைத் தனியாக அமர்ந்து வாசித்தால் பத்து பாடல்களுக்கு மேலே செல்ல முடியாது. ஒரு கூட்டுவாசிப்பில் நாலைந்து நாட்கள்கூட அதே தீவிர மனநிலையுடன் பல அதிகாரங்களை வாசித்துச்செல்ல முடியும். ஆகவேதான் பெரும்பாலான கல்வியமைப்புகள் கூட்டுக்கல்வியை வலியுறுத்துகின்றன. ஊட்டி கவியரங்கு போன்றவற்றில் இதை அனுபவபூர்வமாகக் காண்கிறோம்.

ஏன் தியானத்தைக்கூடக் கூடிச்செய்வதையே பெரும்பாலான குருமுறைகள் முன்வைக்கின்றன. ஏனென்றால், ஒரு மனதின் தீவிரம் இன்னொரு மனதை பாதிக்கக்கூடியது. தீவிரமான மனங்கள் பல ஒன்றாகச் சேர்ந்தால் அனைவருடைய தீவிரமும் ஒன்றாகி ஒட்டுமொத்தமாக ஒரு பெரும் தீவிரம் உருவாகிறது. அந்த ஒட்டுமொத்தத் தீவிரத்தின் அளவு எந்தத் தனிநபராலும் அடைய முடியாதது. அதேசமயம் ஒரு கூட்டுச்செயல்பாட்டில் அதை ஒரு தனிநபர் எளிதில் சென்றடைய முடிகிறது.

பயணத்திலும் அது நிகழ்வதைக் காணலாம். ஒத்தமனம் கொண்டவர்கள் என்றால் அந்த வேகம் அனைவரிலும் கூடுகிறது. ஒரே உச்சமனநிலையில் ஒருமாதம் பயணம்செய்ய முடிகிறது. தனியாகச்செல்லும்போது நிகழாத ஒருமையும் தீவிரமும் சாத்தியமாகிறது. பண்டாரங்களாக அலையும் துறவிகள் கூட அப்படித்தான் பயணம்செய்கிறார்கள் என்பதை கவனித்திருக்கிறேன். துறவிகளின் குழுக்களுடன் இமயமலைப்பயணம் செய்யும்போதும் இந்தத் தீவிரம் கைகூடுவதை அனுபவித்தறிந்திருக்கிறேன்.

ஆனால் நிபந்தனை ஒன்றுதான். சமமான மனநிலை கொண்ட குழுவாக இருக்கவேண்டும். இத்தகைய பயணத்தில் ஒருவர் அந்த மனநிலையில் இருந்து இறங்கினால்கூட பிறரையும் இறக்கிவிட்டுவிடுவார். இருவர் நடுவே சண்டையோ கசப்போ வந்தால் ஒட்டுமொத்தப் பயணமும் இனிமையை இழந்துவிடும். அந்த அனுபவமும் முன்பு ஏற்பட்டதுண்டு. ஆகவே எப்போதும் கூடக் கூட்டிச்செல்லும் நண்பர்களின் விஷயத்தில் மிகமிக கவனமாக இருக்கிறேன். என்னுடைய ஆடிப்பிம்பங்கள் போன்ற நண்பர்களையே தேர்ந்தெடுக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஇணையதள வாசகர்கள்
அடுத்த கட்டுரைகாந்தியாயணம்