மடிக்கணினி

சென்னைக்குச் செல்லும் ரயிலில் ஓர் இளம்பெண் சிறிய மடிக்கணினியைத் திறந்து வைத்துக்கொண்டு என் எதிரில் அமர்ந்திருந்தாள். நான் தூங்கும்வரை அடிக்கடி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். வேறு உலக நினைப்பே இல்லை. மெல்லியகுரலில் பேசிக்கொண்டே இருந்தாள். காதலின் ஒரு கோடி முகபாவனைகள். நாணம், சிரிப்பு, செல்லக்கோபம், போலி அலட்சியம்…அவளுடன் அந்த மடிக்கணினிவழியாக எங்கிருந்தோ ஒரு காதலன் பேசிக்கொண்டிருந்தான். இரவு முழுக்க…

தூங்கும்போது திடீரென்று அம்மாவுடன் சென்று பார்த்த படம் ஒன்று நினைவுக்கு வந்தது. அதிலுள்ள கண்டசாலாவின்பாட்டு எனக்குப் பிடித்தமானது. ‘நீதானே என்னை அழைத்தது’. எனக்கு சின்னவயதில் இருந்தே பிடித்தமான பெரும்பாலான பாடல்கள் ஆபேரி அல்லது அதைப்போன்ற ராகங்களில் அமைந்தவை என்பதை இப்போதுதான் வாசித்துத் தெரிந்துகொள்கிறேன். அதுவும் அந்த ராகம்தான். அதில் சாவித்திரி நிஜமாகவே ஒரு மடிக்கணினியில் காதலனிடம் ‘லைவ் சேட்’ செய்வார்.

இந்தப்பாடலைத் தேடி எடுத்துத் திரும்பப் பார்க்கிறேன். இப்போது வண்ணத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் என் நினைவிலும் இந்தக் கறுப்புவெள்ளைப்படம் வண்ணங்களாகவே இருக்கிறது. வண்ணங்கள் கண்ணுக்குள் நிறைந்திருந்த காலத்தில் பார்த்தபடம், மாயாபஜார்.

சாவித்திரி மிக மென்மையாக மிகையில்லாமல் காட்டும் முகபாவனைகள் அழகியவை. பாடல் காட்சிகளில் மிகையில்லாமல் நடித்த ஒரே பழங்கால நடிகை. பாடல் முடியும்போது நீதானா என்று விரலைக்காட்டுவது சரியான தெலுங்கு அசைவு என இப்போது தோன்றுகிறது.

http://www.youtube.com/watch?v=c0VCVOHlklA

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 2 – சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி
அடுத்த கட்டுரைஎஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது