மலர்களின் கவிதைகள்

ஆசிரியருக்கு,

தினம் தினம் பூக்களையும், அது பூக்கும் செடிகளையும் பார்த்தாலும் ஒவ்வொரு நாளும் புதிதாகவே தோற்றமளிக்கின்றன, ஒரு மலர் போலப் பிறிதொன்று இல்லை, ஏன் ஒரு கணத்தில் தோன்றுவது போல அடுத்த கணம் இல்லை. ஒரு போதும் ஒரு மலர் அதே வகையில் கூட இன்னொன்றை நினைவுபடுத்துவதில்லை. தினம் எழும் மறையும் சூரியனும், வானில் அது தீட்டும் வண்ணங்களும் அவ்வாறே. இவ்வளவு நாட்கள் நாம் தொடர்ந்து பேசியும், உங்கள் எழுத்துக்களைப் படித்தும் இன்றும் அன்று மலர்ந்த மலரே நீங்கள். அடுத்த நொடி நான் எதிர் பார்க்காத ஆச்சர்யம் உங்கள் படைப்பு, எனக்குப் புதுமைகளும் ஆச்சர்யங்களும் பழகி விட்டன, புளிக்கவில்லை. ருசி கண்ட பழக்கத்தில் இனிப்பே கூடுகிறது. குறுந்தொகை உரையும் அவ்வாறே.

உங்களின் தொடர் வாசகன் ஆன நான் ஒன்றைக்கூற முடியும், கடந்த ஓராண்டாக நீங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் படிமமாக்குகிறீர்கள், ஒவ்வொரு காட்சியையும் குறியீடாக்குகிறீர்கள். அவ்வளவும் கவித்துவமானது, கலையுயர்வானது. இந்தக் குறுந்தொகை உரையிலேயே அணை திறந்த நீரும், கோதை ஆறும், சங்க இலக்கிய வாசிப்பும் எனத் துவங்கி ஒரு நவரத்தினக் கண்காட்சிக்குள்ளேயோ, ஒரு ஓவியக் கண்காட்சிக்குள்ளேயோ சென்று பார்க்கும் அனுபவம் (சு.ராவின் எஸ்.என். நாகராஜன் சம்பாஷனையும் கல்லூரிப் பெண்கள் ஒப்பீடும் நினைவுக்கு வருகிறது ) அல்லது நுண் சிற்பங்கள் அடங்கிய பெருங்கோவில். எதைப் பார்ப்பது எவ்வளவு நேரம் பார்ப்பது, எதை விடுப்பது.

வாசிப்பின் நோக்கைத் தர்க்கரீதியாகவும்

(தமிழனையும் தமிழ்ப்பண்பாட்டையும் தெரிந்துகொள்ள அவற்றை அவன் வாசிப்பதில்லை. மனிதர்களை, மானுடத்தை உணர்ந்துகொள்ள அவற்றை வாசிக்கிறான்)

வாசிப்பாகும் அனுபவத்தை அழகுறவும், அதில் கூட வெறும் தாழ் அல்ல, மணித்தாழ்.

(நான் இந்தப்பக்கம் நின்று மெல்லப் பணிவுடன் அதைத் தட்டுகிறேன். அந்தப்பக்கம் நின்றுகொண்டு அந்தக் கவிஞன், என் முதுமூதாதை அதைக்கேட்டு அதன் மணித்தாழை மெல்ல விலக்குகிறான்)

அது நம்முள் வளர்வதைக் கவித்துவமாகவும்

(பாலைநிலத்து விதைகள் போல எனக்குள் புதைந்து கிடக்கும். வாழ்க்கையின் தருணங்களில் எப்போதோ ஏதோ ஒரு துளி நீர் பட்டு சட்டென்று அக்கவிதை எனக்குள் முளைத்தெழுந்து வரும்)

சொல்லி உள்ளீர்கள்.

ஆனால்,

(ஒவ்வொரு மலரும் ஒரு சொல்லைச் சொல்ல விரிந்த, குவிந்த உதடுகள்… ஒளியை நாடும் கிளைகளும் ஆழத்தை அறியும் வேர்களும் தாங்களறிந்த ரகசியமொன்றை மலர்கள் வழியாக வெளிப்படுத்துகின்றனவா? பூமிக்கு என ஒரு ரகசியமிருந்தால் அது மலர்களாக மட்டுமே வெளிப்படமுடியும் போலும்.)

என்ற இடம் கவி உச்சமும் தத்துவ உச்சமும் சந்தித்துக் கொள்ளும் புள்ளி. அருகருகே இரு இமய உச்சி அல்லது இரு முலைகளிலும் பால் சுரக்கும் ஒரு தாய். இதை உங்கள் புத்தாண்டுப் பரிசாக வாசகர் சார்பாக ஏற்கிறேன். இக்கடிதமாய் பதில் வாழ்த்து சொல்கிறேன்.

கிருஷ்ணன்.

முந்தைய கட்டுரைபெருங்காடும் நான் மேய்ந்த நுனிப்புல்லும் – சீனு
அடுத்த கட்டுரைஅறிதலுக்கு வெளியே-சீனு