நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு,
இன்று, எனது கல்லூரியில் பணிபுரியும் அவ்வளவு பேருக்கும் புத்தாண்டுப் பரிசாக அறம் புத்தகத்தைப் பரிசளித்தேன்.
ஒரே நேரத்தில், அத்தனை பேருக்கும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு புத்தகத்தைப் பரிசாக வழங்குவது மிகப் பெருமிதமாக இருந்தது.
தனித்தனியாக அனைவருக்குமே வாழ்த்துக் கூறிப் புத்தகத்தைக் கொடுக்கும் போதும் ஒரு சில விஷயங்களை கவனித்தேன்.
1. புத்தகம்தானே என்று யாருமே ஒரு வித அலட்சியமாகப் பாராமல், அத்தனை பேருமே சற்று மரியாதையுடனே பெற்றுக் கொண்டார்கள்.
2. பெரும்பாலும் எல்லோருக்குமே புத்தகம் படிக்க வேண்டும் என்று விருப்பம் இருக்கிறது. என்ன வாங்குவது, அல்லது எதை வாங்குவது என்றே
அவர்களுக்குத் தெரிய வில்லை.
3. அநேகமாக அனைவருக்குமே ஜெயமோகன் என்ற பெயர் பரிச்சயமாக இருக்கிறது.
4. பாதிப் பேராவது புத்தகத்தைப் படிப்பார்கள் என்றும், ஐந்தில் ஒரு பாகம், அதாவது ஐம்பது பேராவது புத்தகத்தை முழுமையாக படித்து முடிப்பார்கள்
என்றும் நம்புகிறேன்.
இந்தப் புத்தகத்தைப் பற்றியும், ஏன் அறம் புத்தகத்தைப் பரிசாகக் கொடுக்கிறேன் என்பதைப் பற்றியும் ஒரு சிறிய கட்டுரையாக எழுதி அதை அந்தப் புத்தகத்திலேயே
இணைத்துக் கொடுத்திருக்கிறேன்.
முன் கூட்டி இதற்கு அனுமதி கேளாமல், இந்த உரிமையை எடுத்துக் கொண்டேன். மன்னிக்கவும்.
மேலும், அந்தக் கட்டுரையை எனது வலைப் பக்கத்திலும் வெளியிட்டுள்ளேன்.
மிக்க அன்புடன்,
கருணாநிதி.கு
அன்புள்ள கருணா
அறம் கதைகளின் நோக்கமே அத்தகைய கைகள் சிலவற்றுக்கு சென்றுசேர்வதுதான். அக்கதைகளின் நாயகர்களுடன் தங்களை எவ்வகையிலேனும் அடையாளம் காண்பவர்களே அதன் வாசகர்கள்.
திருச்சி எஸ்.ஆர்.வி. பள்ளியில் திரு துளசிதாஸ் அறம் நூலைப் பலருக்கு வாங்கிக்கொடுத்ததாகச் சொன்னார். கல்லூரியில் ஓர் நூலறிமுக விழாவும் ஏற்பாடு செய்திருந்தார். அதன்பின்னர் திருப்பூர் காதுகேளாதோர் பள்ளி சார்பில் அந்த மாணவர்களுக்குக் கதைகளை அறிமுகம் செய்து ஒரு விருதும் அளித்தனர். ஆம், அக்கதைகள் அதற்கான வாசகர்களைத் தேடிச்சென்றுகொண்டே இருக்கின்றன
உங்கள் கட்டுரை ஆத்மார்த்தமாக நேரடியாகப் பேசுகிறது
நன்றி
ஜெ
பொருள் சார்ந்த வாழ்க்கையோ, புகழ் சார்ந்த வாழ்க்கையோ அளிக்காத மனநிறைவை, அறம் சார்ந்த வாழ்க்கை கொடுத்து வருகிறது. அதற்கு சான்றாக, மகாத்மாவையோ, சுபாஷ் சந்திர போஸையோ, பகத் சிங்கையோ காட்டுவதை விட, நமக்கு அருகில் வாழ்ந்த, நாம் அறிந்து கொள்ள மறந்த எளிய உண்மை மனிதர்களைக் காட்டுகிறது இந்த அறம் புத்தகம்.
கருணாவின் கட்டுரை