பெருமதிப்புக்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.
இன்று தங்கள் வலைத்தளத்தில் வந்திருந்த “இலட்சியவாதத்தின் நிழலில்” என்ற தலைப்பில் வந்திருந்த கட்டுரையைப் படித்து மிகவும் நெகிழ்ச்சி அடைந்தேன். உண்மையிலேயே உங்கள் நண்பர் திரு.சந்திரகுமார் சொன்னது போல் “அறம்” சிறுகதைத் தொகுப்புக்கு இதைக் காட்டிலும் சிறந்த விருது இருக்க முடியாது. குழந்தைகளின் ஒவ்வொரு ஓவியமும் “யானை டாக்ட’’ரைக் கண்முன்னே நிறுத்துகின்றன. உண்மையிலேயே நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்(உங்களால் நாங்களும் கூட). இந்நிலை தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.
என்றும் அன்புடன்
அ.சேஷகிரி,
ஆழ்வார்திருநகரி
அன்புள்ள சேஷகிரி,
நன்றி
உண்மையில் இலட்சியவாதத்தின் சில தருணங்களே அறம் தொகுதியில் உள்ளன. அவற்றின் வாழும் நிலைகளை நேரில் கண்டது மிகப்பெரிய அங்கீகாரமாக இருந்தது.
ஜெ
அன்பின் ஜெயமோகன்,
நீங்கள் சொன்னது:
இந்த சமநிலையை அடையாதவர்கள், ஏதோ ஒருவகையில் உண்மையான மகிழ்ச்சியை வாழ்க்கையில் தொலைத்து அர்த்தமற்றவற்றின் பின்னால் ஓடிக்களைத்தவர்கள், ஐம்பதுக்குப்பின் கசப்பும் வெறுப்பும் குரோதமும் நிறைந்தவர்களாக ஆகிறார்கள்
நான் மனதில் பல காலமாய் நினைத்து வருவதை, நிலைத்துப் பதியும் வகையில் சொன்னமைக்கு நன்றி.
உங்களைவிட எனக்கு 6 மாதம் வயது அதிகம்.
தமிழகத்தில் இருந்த போது (20 வயது வரை) மகிழ்ச்சி குறைவான வாழ்வு, பணம் உள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும்; பின் கடந்த 30 ஆண்டுகளில் புலம் பெயர்ந்து பொருளாதாரத்திற்காக அல்லற்பட்டு, புற்றுநோயையும் போராடி மீண்ட எனக்கு, 25 ஆண்டுகளாக தோழியாக, துணைவியாக இருந்துவரும் மனைவி மற்றும் 17 வயது மகன் சமநிலையைக் கொடுத்துள்ளனர். கசப்பும், வெறுப்பும் குறைந்துவிட்டது, நன்றியும், மகிழ்ச்சியும் அதிகரித்துக் கொண்டுள்ளது.
உங்களுடைய பதிவு மேலும் விழிப்பு கொடுத்துள்ளது. நன்றி மறுபடியும்.
அன்புடன்
வாசன்
அல்புகர்க்கி, நியு மெக்ஸிக்கோ – யூ எஸ்
அன்புள்ள வாசன்
நன்றி
நான் பெரும்பாலும் சுற்றியுள்ளவர்களை, குறிப்பாக அரசு ஊழியத்தில் உள்ளவர்களை கவனிக்கையில் அடைந்த மனச்சித்திரம் அது. வாழ்க்கை வீணாக்கப்பட்டுவிட்டது என உணர்பவர்களின் வெறுமை. உலகியல் சார்ந்த எந்தத் தீவிரமும் வெறுமைக்கே கொண்டு சென்று சேர்க்கும்.
ஜெ