குறுந்தொகை-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

எப்படி நெல்லி தின்று தண்ணீர் அருந்திய ஆட்டிற்குக் கொம்பு முதல் குளம்பு வரை இனித்ததோ உங்கள் உரை கேட்டு என் உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்தது.

இலக்கியம் இவ்வளவு சுவையோ? காதலை விட சுவை அதிகமோ எனத் தோன்றுகிறது :-)

அக உணர்வுகளை இயற்கை என்னும் பூதக் கண்ணாடி கொண்டு விளக்கினார்களோ, குறுந்தொகையை உங்கள் உரை அழகாக விளக்கியது.

என்னுடைய பத்தாம் வகுப்பில் அகநானூற்றுப் பாடல் ஒன்றில் படித்த பசலை நோய், அதனால் வளையல் ஒட்டியாணம் ஆகும் அளவிற்குத் தலைவி மெலிந்த கற்பனை அப்போதே பிடித்தது. உங்கள் உரைக்குப் பிறகு எல்லாவற்றையும் படிக்கவேண்டும் என்ற ஆவல் மிகுதியாகிறது.

அந்தத் தேனிலவு தம்பதியினர், பூக்களால் ஆன மலை எல்லாம் நீங்கள் விளக்க விளக்கக் காட்சியாக மாறியது. இன்னும் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

இந்த உரையை ஒரு தாளில் எழுதி உங்கள் கையொப்பம் வாங்கி என்னுடைய வால்லேடில் வைத்து அடிக்கடி படித்து ரசிக்க வேண்டும். இந்த அனுபவத்திற்கு நன்றி.

அன்புடன்
ஜெய்சங்கர்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=0S-GyhYoA6Q

அன்புள்ள ஜெய்சங்கர்,

நன்றி

சங்க இலக்கியங்களைப்பற்றி மட்டுமல்லாமல் இலக்கியம் பற்றியே பொதுவாக நான் ஒரு விஷயத்தைக் கடந்த இருபதாண்டுகளாகச் சொல்லிவருகிறேன். இலக்கியப்பிரதி என்பது ஆழ்மனதுக்கும் மொழிக்குமான ஒரு நுட்பமான பரிமாற்றம். ஒரு ஆடல். அந்த மொழிவடிவமே நமக்குக் கிடைக்கிறது. அம்மொழிவடிவம் நம் ஆழ்மனதை சீண்டவும் விழிப்புறச்செய்யவும் பழக்கிக்கொள்வதற்குப் பெயரே வாசிப்பு என்பது. நம்மில் வாசகர்கள் என முன்னிற்பவர்களில் பெரும்பாலானவர்கள் எழுதப்பட்டவற்றை, கூறப்பட்டவற்றை மட்டுமே வாசிப்பவர்கள். மொழிவடிவம் அதன் குறியீடுகள் மூலம் நம் கனவுத்திரையில் உருவாக்கும் விளைவுகளே உண்மையான இலக்கியப்படைப்பு. அதை வாசிப்பவர்களே இலக்கியத்தை உண்மையில் வாசிக்கிறார்கள். சங்க இலக்கியங்களை அப்படி வாசிக்கலாமென்பதற்கான ஒரு சிறு வழிகாட்டலே அந்த உரை.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

குறுந்தொகை சொற்பொழிவு மிக சிறப்பாக இருந்தது.. ஆனாலும் ஒரு குறை இன்னும் கொஞ்சம் பேசுவீர்கள் என எதிர்பார்த்த போது , திடீரென முடிந்தது போல இருந்தது…

சங்க இலக்கியத்தை , தமிழகத்தை அறிந்து கொள்ளப் படிக்காதீர்கள் . தன் அகத்தை அறிந்து கொள்ளப் படியுங்கள் என சொன்னது ஷார்ட் அண்ட் ஸ்வீட்..

இது தொடர்பாக ஒரு கேள்வி. ஏற்கனவே பதில் அளித்து இருந்தாலும், இன்னும் கொஞ்சம் விளக்கம் அளித்தால் நல்லது..

இலக்கியம் படிப்பது நம்மை நாமே அறிந்து கொள்ளவும், யதார்த்த வாழ்வின் அவசரங்களில் தவற விடும் நுட்பமான வாழ்வை ”வாழ்ந்து” பார்க்கவும், இன்னும் பல விதங்களிலும் பயன்படுகிறது என்பது ஒரு பார்வை.

இலக்கிய வாசிப்புக்குப் பயன் என்று எதுவும் தேவையே இல்லை என்பது இன்னொரு பார்வை..

சூரிய உதயத்தைப் பார்ப்பதால் , இந்தப் பலன் கிடைக்கும் என்ற அவசியம் ஏதும் இல்லாமலேயே , சூரியோதயத்தை ரசிக்கிறோம். இந்த ரசிப்புத்தன்மைதான் இலக்கியத்துக்கு அவசியமேயன்றி, அதில் பலனைத் தேடக்கூடாது என்பது ஒரு பார்வை..

ஒரு வாசகன் இலக்கியத்தை எப்படி அணுக வேண்டும் ?

அன்புடன்,
சுந்தரேஷ்

அன்புள்ள சுந்தரேஷ்

இலக்கியத்தின் பயன் பற்றி நான் விரிவாகவே எழுதியிருக்கிறேன்.

இலக்கியம் பிற கலைகளைப்போல ஒரு ‘தூய’ அழகனுபவம் அல்ல. அது மொழி சம்பந்தமானது. மொழி சிந்தனையும்கூட. ஆகவே சிந்தனையில் இருந்து இலக்கியத்தைப் பிரிக்கவே முடியாது.

ஜெ

முந்தைய கட்டுரைபூவிடைப்படுதல் 4
அடுத்த கட்டுரைஎன் நூல்கள் மறுபதிப்பு