சங்கக்கவிதை மரபின் ஆரம்பத்திலேயே நம் கவிதை அகத்தையும் புறத்தையும் பிரித்துக்கொண்டது. சங்கப்பாடல்களின் தலைவாயிலான குறுந்தொகை ஓர் அகத்துறை இலக்கியம். இந்தப் பிரிவினையை நமக்கு நாம் நம் மரபைக் கற்க ஆரம்பித்தபோதே கற்றுத்தர ஆரம்பிப்பார்கள்.
ஆனால் பிரித்த கணத்தில் இருந்தே அகத்தையும் புறத்தையும் நம் கவிதை இணைக்க ஆரம்பித்துவிட்டது என்பதை நாம் பலசமயம் அறிவதில்லை. கூந்தலை இரு புரிகளாகப் பிரித்து அவற்றைப் பின்னிப்பின்னிச்செல்வது போலப் பிரபஞ்ச அறிதலை அகம் புறம் எனப் பிரித்தபின் அவ்விரண்டையும் பின்னிப் பின்னித் தன் அறிதல்களை நிகழ்த்துகிறது சங்கக்கவிதை. அவ்வாறு அர்த்தங்களை உருவாக்கிக்கொண்டே செல்கிறது அது.
அகத்தில் புறத்தையும் புறத்தில் அகத்தையும் கலப்பதே சங்கப்பாடல்களின் அழகியலின் ஆதாரமான விளையாட்டு.
அகவாழ்க்கை என்றால் என்ன? பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, முழுப்போதையில் என் சட்டையைப் பிடித்து சுவரோடு சேர்த்துச் சொன்னார் ‘டேய் மயிராண்டி, வாழ்க்கை என்பது என்னடா? உறவும் பிரிவும் மட்டும்தானே?’ கண்கள் எரிந்துகொண்டிருந்தன. ‘ஆமாம்’ என்றேன். அதை சங்கக்கவிஞன் உணர்ந்திருந்தான் . அகம் என்பதே உறவும் பிரிவும்தான். குறிஞ்சியும் பாலையும். நடுவே உள்ள பிற மூன்று திணைகளும் குறிஞ்சியில் இருந்து பாலைக்கும் பாலையில் இருந்து குறிஞ்சிக்கும் செல்லும் வழிகள் மட்டுமே.
அந்த அகத்தைப் புறவயமான உலகின்மேல் ஏற்றிக்காட்டுவதே அகப்பாடல்களின் வழி. யோசித்துப்பாருங்கள், மிகமிக நுட்பமான இயற்கைச்சித்திரங்கள் சங்ககால அக இலக்கியங்களிலேயே உள்ளன. அந்தப் புறச்சித்திரங்கள் அகத்தின் வெளிப்பாடுகள். ஆகவேதான் அவை உயிருள்ள படிமங்களாக ஆகின்றன.
அதேபோல சங்க இலக்கியப் புறப்பாடல்களில்தான் அகவயமான உணர்ச்சிகள் பெருகிக் கொந்தளிக்கின்றன. மரணம், இழப்பு, தனிமை, கோபம் என மொத்தப் புறப்பாடல்களும் அகவய உணர்ச்சிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அகம் இல்லையேல் புறத்தின் சித்திரங்களுக்கு ஒரு மதிப்பும் இல்லை.
இதோ என் கண் முன் விரிந்துள்ள எல்லாம் என் மனமே என்ற உணர்வு ஒருபக்கம். என் மனமென்பது இந்த புற உலகின் வெளியே என்ற உணர்வு மறு பக்கம். இந்த விளையாட்டை ஒவ்வொரு கவிதையிலும் எவன் வாசித்தெடுக்கிறானோ அவனே சங்கப்பாடல்களின் வாசகன். அவனுக்குரிய நுழைவாயில் குறுந்தொகையே.
பின்னர் தமிழில் அகம் புறம் என்ற இந்தப் பிரிவினை மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது. நாமறியும் அறிதல் நான்கு தளங்கள் கொண்டது என்கிறது சைவ சித்தாந்தம். அகம், அகப்புறம், புறம், புறப்புறம்.
அகம் என்பது நம் தூய அகம். அது நம்முடைய சாமானிய அறிதலுக்கு அப்பாற்பட்டது. யோகத்தால் மட்டுமே அறியப்படுவது. அகப்புறம் என்பதே நாம் அகம் என்று சாதாரணமாக உணரக்கூடியது. அது நம்மைச்சூழ்ந்துள்ள புறப்பொருளால் அடையாளப்படுத்தப்பட்ட நம் அகம். அதையே நாம் சங்கப்பாடல்களில் அகம் எனக் காண்கிறோம்.
நாம் உணர்வாலும் அறிவாலும் அறியும் நம் அகம் அதன் எல்லாத் தோற்றங்களையும் வெளியே இருந்து பெற்றுக்கொண்ட வடிவங்களைக் கொண்டே அமைத்துக்கொண்டுள்ளது. மனதைப்பற்றிய எல்லாப் பேச்சுகளையும் இயற்கையில் இருந்து பெற்றுக்கொண்ட படிமங்களைக்கொண்டே நாம் சொல்கிறோம். மனம் வலித்தது என்கிறோம். நெஞ்சு இனித்தது என்கிறோம். இதயம் உருகியது என்கிறோம். இந்தப் புற அம்சம் இல்லாமல் சாதாரணமாக நம் அகத்தை அறியவும் முடியாது, கூறவும் முடியாது.
ஆகவேதான் சங்க இலக்கியங்கள் அகத்தைப் புறத்தே ஏற்றிச் சொல்கின்றன. கோபத்தை சிவப்பு எனக் காட்டுகின்றன. சோகத்தைக் கறுப்பாகக் காட்டுகின்றன. வெளியே நிகழும் இயற்கைச்செயலை ஆன்மாவின் அசைவாக ஆக்குகின்றன.
புறம் என சைவசித்தாந்தம் சொல்வதில் அகமும் உள்ளது. அகம் கலக்காத புறத்தைக் காண நம்மால் முடிவதில்லை. நம்முடைய உணர்ச்சிகள் கலந்த மலைகளை, கடலை, சாலையை, அறையை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளும் நம் மனதுக்குக் குறியீடுகள்தான். அந்தப் புறத்தையே நம் புறப்பாடல்கள் காட்டுகின்றன.
அவற்றுக்கு அப்பால் உள்ளது புறப்புறம். தூய பொருள். அகம் தீண்டாத பொருள். அப்படி ஒரு புறப்புறம் இல்லை, அது மாயையே என்றுதான் வேதாந்தம் சொல்கிறது. சித்தாந்தத்தைப் பொறுத்தவரை அப்படி ஒரு தூய பொருள் உண்டு. அதை அறிய முடியும். அதற்குத் தூய அகத்தை அடையவேண்டும். தூய அகமும் தூய பொருளும் முழுமுதல் சக்திகள்.
ஆம், நம் தத்துவ சிந்தனை ஒரு அதிதூய கவித்துவ அனுபவமாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை சங்கப்பாடல்கள். நம்மைச்சூழந்திருக்கும் இந்தக் காடு விதைநிலமாக இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை. இன்று நாம் பிரித்துப் பிரித்துச் சிந்திக்கும் அனைத்தும் குழந்தைகளுக்குரிய பெரும் பரவசத்துடன் கண்டடையப்பட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவை.
அந்த பிரக்ஞையுடன் நாம் வாசிக்கவேண்டும். தலைக்காவேரியில் மொத்தக் காவேரியையும் ஒரு கைப்பிடி நீரின் கொப்பளிப்பாக நாம் காண்கிறோம். நாம் நீராடும் இந்தப் பெருநதியின் ஊற்றுமுகத்தில் ஒரு கை அள்ளிப் பருகும் மன எழுச்சியுடன் நாம் சங்கப்பாடல்களை அணுகவேண்டும்.
இங்கே ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். இங்கே நான் குறிப்பிட்ட இக்கவிதைகளை நான் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாகக் குறுந்தொகை நூலைப் பிரித்துக் கண்ணில் பட்ட முதல் கவிதையை எடுத்துக்கொண்டேன். அவற்றைக்கொண்டே இந்த உரையை அமைத்தேன். ஆம் குறுந்தொகையின் எல்லாப் பாடல்களிலும் இத்தகைய நுட்பங்கள் உண்டு.
இவ்வளவு மென்மையான குரலில் பேசும் இத்தனை நுட்பமான கவிதைகள் அன்று எவ்வாறு பொருள்பட்டன? இன்று இவற்றை இவ்வளவு விரித்துரைக்க வேண்டியிருக்கின்றனவே?
அன்று இவற்றை எழுதிய வாசித்த சமூகம் சின்னஞ்சிறியதாக இருந்தது. ஒன்றுடன் ஒன்று ஒட்டி இறுகி வாழ்ந்தது. ஆகவே அவர்கள் ஒருவர் நினைப்பது இன்னொருவருக்குப் புரிந்தது. இன்று நாம் விரிந்து அகன்றுவிட்டோம். ஒவ்வொருவரும் இன்னொருவரிடமிருந்து வெகுதொலைவில் இருக்கிறோம். மெல்லிய குரல்கள் இன்று கேட்பதில்லை. கூக்குரல்கள் மட்டுமே கேட்கின்றன.
கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.
– கொல்லன் அழிசி
‘ஊர் தூங்கினாலும் நான் தூங்கவில்லை. எங்கள் வீட்டருகே ஏழில் மலையில் மயிலின் கால் போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் பூத்துக்கனத்த கொம்பில் இருந்து உதிர்ந்த மலர்களின் ஒலியைக் கேட்டுக்கொண்டிருந்தோம்’ என்கிறாள் சங்கத்தலைவி.
அந்த மலர் உதிரும் ஒலியைக் கேட்கும் காதுகள் தேவை. சங்கப்பாடலை ரசிப்பதற்கு இந்தக் கூக்குரல்கள் நடுவே நாம் சற்றே செவிகூர்வோம். நம் மரபின் இந்த மெல்லிய குரலைக் கேட்போம்.
நமக்கும் நம் மரபுக்கும் இடையே வந்த மலர்கள் இந்த சங்கப்பாடல்கள். இவை நம்மைப் பிரிப்பதில்லை. நமக்கு நினைவூட்டுகின்றன, நம்மை ஏதோ ஒரு மாயப்புள்ளியில் நம் மரபுடன் இணைக்கின்றன.
நன்றி
[23-12-2012 அன்று சென்னையில் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் நிகழ்த்திய உரையின் எழுத்து முன்வடிவம்]