தமிழிலக்கியத்தை நான் இரண்டு வகையில் கற்றுக்கொண்டேன். ஒன்று, பள்ளிக்கூடத்தில் பாடத்திட்டத்தில் அடங்கிய வடிவத்தில். அது பேச்சிப்பாறையில் இருந்து அளந்து திறந்துவிடப்படும் நீர் ஓடும் கால்வாய் போல இருபக்கமும் சிமிண்ட்டால் கட்டிய கரைகளும் கச்சிதமான படிகள் கட்டப்பட்ட துறைகளும் கொண்டது. தேவையான இடங்களில் பாறைகள். எங்கும் எப்போதும் ஒரே வேகம், ஒரே ஆழம்.
இன்னொன்று, பள்ளிக்கு வெளியே மரபான முறையில் தமிழறிந்த ஆசிரியரிடம் சென்று கற்றுக்கொண்டது. அது முத்துக்குளிவயலில் சிற்றோடைகளாக ஊறி, கன்னியின் கூந்தலிழைகள் போல ஒன்றாகி, முப்பிரிப் பின்னலாக முறுகி, நீல நீர்ப்பெருக்காகி மலையிறங்கி மண் மணக்க ஊருக்குள் வரும் கோதையாறு போன்றது.
அதன் திசைகள் மழைக்கேற்ப மாறும். அதன் எல்லைகள் அடிக்கடி உடைந்து மீறும். தென்னையும் மூங்கிலும் தாழையும் நாணலுமாக இருபக்கமும் உயிரின் பசுமை காவல்காப்பது அந்தப் பெருக்கு. கொக்குகளும் மீன்கொத்திகளும் மடையான்களும் பறந்து பறந்து முத்தமிடுவது. மீன்களும் முதலைகளும் ஆமைகளும் நீர்க்கோலிகளும் நீந்தித் திளைப்பது. தென்றல் காற்றில் புல்லரிப்பது. தமிழ் என்றால் என்ன என்று நான் கண்டது அங்கேதான். அறியா வயதில் எனக்குத் தமிழ் கற்றுத்தந்தவர்களை இப்போது வணங்குகிறேன்
பள்ளியில் எனக்கு வந்த தமிழாசிரியர் சொன்னார். ‘தமிழ்ப்பாடல்களை அசை பிரித்துப் புரிந்துகொள்ளவேண்டும்’ என்று. அன்று மாலை என் தமிழய்யா சொன்னார் ‘முட்டாக்கூமுட்டைக அப்டித்தான் சொல்லுவானுக… தமிழ்ப் பாட்ட அசைபோட்டுப் புரிஞ்சுகிடணும்லே’
இருவகை வழிகள். ஒன்று அசை பிரித்தல். இன்னொன்று அசைபோடுதல். அசைபிரிப்பது ஆராய்ச்சியின் வழி. அறிந்துகொள்ளுதலின் வழி. வகுத்துக்கொள்ளுதலின் வழி.அதைத்தான் நமக்குக் கல்விநிறுவனங்கள் கற்றுத்தருகின்றன. அசைபோடுதல் கவிதை வாசகனின் வழி. உணர்ந்துகொள்ளுதலின் வழி. உள்வாங்குதலின் வழி, வாழ்க்கையாக ஆக்கிக்கொள்வதன் வழி. அதை நமக்குக் கல்வி நிறுவனங்கள் சொல்லித்தருவதில்லை. சொல்லித்தரவும் முடியாது. அது நம்முடைய சொந்த ரசனையுணர்வால் நம்முடைய வாழ்க்கையனுபவங்களால் நாமே அடையும் ஒரு நுண்மை மட்டுமே.
அந்த நுண்மை அகத்திலே வாய்க்காத ஒருவருக்கு எந்தப் பெரும்பண்டிதரும் கவிதையைக் கற்றுத்தந்துவிடமுடியாது.
தேவதச்சன் எழுதினார்.‘காற்றில் வினோத நடனம்புரியும் இலைகளை கைவிரல்களால் பற்றுகிறேன். ஒவ்வொரு முறையும் இலைதான் சிக்குகிறது. நடனம் மட்டும் எங்கோ மறைந்துவிடுகிறது’ என.
காற்றில் இலை ஆடும் அந்த மகத்துவ நடனத்தை நம் விரலால் தொட முடியாது. இந்த விரல் நம் அன்றாட அலுவல்களுக்கானது. உழைப்பதற்கும் உண்பதற்குமானது. ஆக்குவதற்கும் அழிப்பதற்குமானது. இவற்றுக்கெல்லாம் அப்பாலுள்ள அதிதூய விரல்களால் தொட்டறியவேண்டியது அந்த நடனம்.
ஆனால் சில விஷயங்களைக் கற்பிக்கமுடியும். எது கவிதை அல்ல என்று நாம் சொல்லமுடியும். எப்படி வாசிக்கக்கூடாது என்று சொல்லமுடியும். அவை திட்டவட்டமாக சொல்லத்தக்கவை. சங்க இலக்கியங்கள் அச்சுக்கு வந்து பொதுவாசிப்பை எட்டியபின் இந்த முக்கால்நூற்றாண்டாக அவற்றை நாம் ஒருவகைத் தொல்பொருட்களாகவே வாசித்து வருகிறோம். தமிழரின் பண்டை வாழ்க்கையை அறிந்துகொள்வதற்கான தடயங்களாக அவற்றைப் பார்க்கிறோம்.
[நீர்முள்ளிப் பூ]
ஒரு கவிதைவாசகனின் பார்வையே வேறாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அவனைப்பொறுத்தவரை சங்கக்கவிதை என்பது நேற்றின் மிச்சம் அல்ல. கவிதைக்குக் காலம் இல்லை. அது இன்று-நேற்று-நாளையில் இல்லை. அது நித்தியமான நிகழ்காலத்தில் உள்ளது. என்றுமுள்ள இக்கணத்தில் அது நிகழ்கிறது.
ஆகவே பண்டைய வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள வாசகன் சங்கக்கவிதையை வாசிப்பதில்லை, இன்றைய வாழ்க்கையை இக்கணத்து வாழ்க்கையை உணர்ந்துகொள்ளவே அவற்றை வாசிக்கிறான். தமிழனையும் தமிழ்ப்பண்பாட்டையும் தெரிந்துகொள்ள அவற்றை அவன் வாசிப்பதில்லை. மனிதர்களை, மானுடத்தை உணர்ந்துகொள்ள அவற்றை வாசிக்கிறான். தமிழகத்தைத் தெரிந்துகொள்ள அவன் வாசிப்பதில்லை தன் அகத்தை அறிந்துகொள்ள வாசிக்கிறான்.
நடுவே இருப்பது ஒரு பொற்கதவம். மரபின் பண்பாட்டின் காலத்தின் பெருங்கதவம். நான் இந்தப்பக்கம் நின்று மெல்லப் பணிவுடன் அதைத் தட்டுகிறேன். அந்தப்பக்கம் நின்றுகொண்டு அந்தக் கவிஞன், என் முதுமூதாதை அதைக்கேட்டு அதன் மணித்தாழை மெல்ல விலக்குகிறான். அந்தத் தாழ் விலகும் மெல்லிய ஒலி எனக்குக் கேட்கும் கணம் ஒன்றுண்டு. கவிதை திறந்துகொள்ளும் அற்புதத்தருணம் அது. அதை ஒருமுறை உணர்ந்தவனுக்கு சங்கக்கவிதைகள் சென்றகாலத்தின் புதிர்மொழிச்சுருள்கள் அல்ல. மனக்குகையில் ஒளியேற்றும் மந்திரங்கள். புராதனச் சுவரோவியங்கள் அல்ல, மடியில் தவழும் குழந்தைகள்.
அந்த வாசிப்புக்கான வழி என்ன? அதைப் பயிற்றுவிக்க முடியாது. ஆனால் நான் எப்படி வாசிக்கிறேன் என சொல்லமுடியும். அந்த வாசிப்பு வழியாக நாம் ஒரு வாசிப்பை உருவாக்கிக்கொள்ளமுடியும். அந்த வாசிப்புமுறையையே என் ஆசிரியர் அசைபோடுதல் என்று சொன்னார்.
[இரவிகுளம்]
அசைபோடுதல் என்றால் என்ன? எனக்கு அதற்கான வழிமுறை ஒன்று உண்டு. நான் கவிதையைக் கூர்ந்து வாசிப்பேன். முதலில் கவிதையின் ஒட்டுமொத்தமான பொருளையும் சொற்களின் பொருள்களையும் புரிந்துகொள்வேன். உடனே அந்தக்கவிதை என் மூளைக்குத் தெளிவாகி விடுகிறது. அதன்பின் அந்த கவிதையின் அர்த்ததைப்பற்றிக் கவலைப்பட மாட்டேன். அப்படியே கவிதையை வாசிப்பேன். சூயிங் கம் மெல்வது போலக் கவிதையை வாய்க்குள் சொல்லிக்கொண்டே இருப்பேன். பலமுறை. ஒருகட்டத்தில் கவிதை வெறும் மொழியாக மாறிவிடும்.
அந்த வாசிப்பில் எங்கோ அக்கவிதையின் முக்கியமான சில சொற்சேர்க்கைகள் எனக்குள் பதிவாகிவிடும். பாலைநிலத்து விதைகள் போல எனக்குள் புதைந்து கிடக்கும். வாழ்க்கையின் தருணங்களில் எப்போதோ ஏதோ ஒரு துளி நீர் பட்டு சட்டென்று அக்கவிதை எனக்குள் முளைத்தெழுந்து வரும். அது ஒரு பெரும் பரவசம். அப்போது அது அந்தக் கவிஞனின் கவிதை அல்ல, என்னுடைய கவிதை. அந்தக் கவிதை அக்கவிஞனின் அகத்தில் நிகழ்ந்தபோது அவன் எந்த உச்சநிலையில் நின்றானோ அங்கே அப்போது நான் நின்று கொண்டிருப்பேன். அந்த சிகரநுனியில் அவனை நான் ஆரத்தழுவிக்கொள்வேன்.
பத்தாண்டுக்கு முன்னால் நான் மூணாறு அருகே இரவிகுளம் மலர்மலைச்சரிவில் ஒரு வனவிடுதியில் தங்கியிருந்தேன். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளை பாடியது போல ‘எவிடெ திரிஞ்ஞு ஒந்நு நோக்கியாலும் அவிடெல்லாம் பூத்த மரங்ங்கள் மாத்ரம்’ காடே ஒரு பெரிய பூவாக மாறிவிட்டது. நடுவே மலை ஒரு பெரும் மகரந்தக்கொத்து.
அருகே இருந்த விடுதியில் ஒரு காதலிணை. அந்த இளைஞன் என்னை அடையாளம் கண்டுகொண்டான். பாஷாபோஷிணி இதழில் வந்த என் அனுபவக்கதைகளை வாசித்திருந்தான். சுருக்கமாக ஒரு சில வார்த்தைகள் பேசினோம். அப்போதுகூட அந்தப் பெண் அவன் தோளுடன் ஒட்டியிருந்தாள். அவன் தோளில் போடப்பட்ட ஒரு மாலை போலிருந்தாள். சிலசமயம் அவன் மார்பில் பச்சைகுத்தப்பட்ட படம் போலிருந்தாள். காதலின் நிறைநிலையில் புற உலகமே இல்லாமல் ததும்பிக்கொண்டிருந்தாள். அவள் கண்கள் அவனையன்றி எதையும் பார்க்கவில்லை.
மறுநாள் அவன் கிளம்புவதாகச் சொன்னான். நான் ‘ஏன், நேற்றுத்தானே வந்தீர்கள்? அதற்குள்ளாகவா?’ என்றேன். ‘இல்லை, போகலாம் என்று சொல்கிறாள்’ என்றான். ‘ஏன்? மலைச்சரிவே பூத்து மலர்ந்திருக்கிறதே’ என்றேன். ‘ஆமாம் அதுதான்சார் பிரச்சினை…’ என்றான். ‘காடே இப்படிப் பூத்திருக்கும்போது என்னால் அதை மறக்க முடியவில்லை. அடிக்கடி காட்டைப்பற்றி பேசுகிறேன். அது அவளுக்குப் பிடிக்கவில்லை. எர்ணாகுளத்துக்குப் போய்ப் பூக்களே இல்லாத ஒரு இடத்தில் சாதாரணமாக ஓர் அறை போட்டு அங்கே தங்கவேண்டும் என்று சொல்கிறாள்’
சிரித்துக்கொண்டு ‘அது சரிதான்…உங்களுக்கு நடுவே எதற்கு இவ்வளவு பூக்கள்?’ என்றேன். உடனே ஒரு குறுந்தொகை வரி நினைவில் மலர்ந்தது ‘பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன’ காதலனும் காதலியும் தழுவிக்கொள்ளும்போது நடுவே பூ ஒன்று வந்தாலும்கூட ஒரு ஆண்டு முழுக்கப் பிரிந்திருந்தது போல உணர்கிறார்கள்.
அந்தத் தருணத்தால் தூண்டப்பட்டு ‘பூவிடைப்படினும்’ என்ற வரியைப் பித்துப்பிடித்தவன் போலச் சொல்லிக்கொண்டே இருந்தேன். அந்த வரியில் இருந்து பறந்து எழுந்து சிறகடித்து மீண்டும் மீண்டும் அதிலேயே வந்தமர்ந்துகொண்டிருந்தேன். ஆம், அதுவே அசைபோடுதல். கவிதையை நமக்குள் இருந்தே எடுத்து நாமே சுவைத்தறிதல்.
ஒரு மலர் குறுக்கே வந்தால்கூடப் பெரும் தடையாக ஆகுமளவுக்கு உறவு நெருக்கமாக ஆகும் தருணங்கள் உண்டா வாழ்க்கையில்? அப்படிப்பட்ட உறவென்பது சாத்தியமா? இந்த மண்ணில் இரு உயிர்கள் நடுவே அப்படி ஒரு முழுமையான லயம் நிகழ முடியுமா?
அந்தக்காட்சியை சிறைக்குடி ஆந்தையார் காட்டிய கோணத்தில் நிகழ்த்திக்கொள்கிறேன். இருவர், இருவர் மட்டுமே உள்ள இடத்தில் இருவர் மட்டுமே இருக்கும் நிலையில் இருக்கிறார்கள். உள்ளம் இணைந்து உடல் இணைந்து. நடுவே ஒரு மலர் வந்தாலும் உச் என ஒலி எழுப்பி அவள் அதைத் தட்டி விடுகிறாள். ஒரு மலரின் தடை கூட இல்லாத முழுமையான லயம்.
ஆனால் உண்மையில் அது முழுமையா? இல்லை முழுமைக்கான ஏக்கம் அல்லவா? இணைகையில் இன்னும் இன்னும் என ஏங்கும் அகத்தின் தாவலை அல்லவா அந்த நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது. உடலும் உள்ளமும் இணைகையிலும் இணையாது எஞ்சும் ஒன்றை, எத்தனை முயன்றாலும் சென்று தொடமுடியாத அதை, அப்போது அவள் உணர்கிறாள் என்பதனால் அல்லவா அந்த ஏக்கம்?
ஆனால் ஏன் அப்படி அதைப் பார்க்கவேண்டும்? அந்த நிலையில் முழுமையான லயம் ஒருபோதும் கைகூடவில்லை என்றாலும் அப்படி ஒரு நிலை உண்டு என்பதை அகம் உணர்கிறதே அதுவே பெரிய வரம் அல்லவா? அந்த மலையின் அடிவாரத்தையே நம்மால் அடைய முடிகிறதென்றாலும் சிகரத்தின் பொன்னொளி மின்னும் முகடு நமக்குத் தெரிகிறதே அதுவே மகத்தான தரிசனம் அல்லவா?
அந்த முழுமைநிலையை உணர்ந்தவள்தான் மலரின் தடையையும் தாங்கமுடியாதவளாகிறாள். அதைத்தான் ‘நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப் பிரிவரிதாகிய தண்டாக் காமம்’ என்கிறாள். இணைபிரிந்து வாழாத அன்றில் போலப் பிரிவறியாப் பெருங்காதல். அப்படி ஒன்று உண்டு என்று உணர்ந்த கணம் அதனளவிலேயே முழுமையானது. ஆம், மானுடர்க்கு அவ்வளவே அருளப்பட்டுள்ளது.
அந்த இணை கிளம்பிச்செல்லும்போது புன்னகையுடன் கையசைத்தேன். நெஞ்சுக்குள் சொல்லிக்கொண்டேன் ‘உங்களுக்கு நடுவே மாபெரும் மலர்க்கூட்டங்களே மலர்வதாக’ என்று. இன்னும் ஒரு வருடத்தில் அவர்களின் படுக்கையில் நடுவே ஒரு மலர் கண்வளரக்கூடும். அந்த மலர் வழியாக அவர்கள் இன்னும் நெருக்கமாக ஒருவரை ஒருவர் அறிதலும் கூடும்.
பூவிடைப் படினும் யாண்டுகழிந் தன்ன
நீருறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமொ
டுடனுயிர் போகுக தில்ல கடனறிந்
திருவே மாகிய வுலகத்
தொருவே மாகிய புன்மை நா முயற்கே
– சிறைக்குடி ஆந்தையார்
என்ன ஒரு வரி! பூவிடைப்படினும்…பூவிடைப்படுதல். உறவுகளில் அறிதல்களில், தியானங்களில், முழுமைகளில் நடுவே வரும் அந்தப் பூ. அது என்ன? மிக மென்மையாக நசுங்கி மணம் வீசி நடுவே நுழைந்து பிரிக்கும் அந்த மலர். என்ன அது?
பாண்டிசேரி ஸ்ரீ அன்னை அவர்கள்,மலர்களை நாம் உணரவேண்டிய ஒரு மாபெரும் கவிதையின் சொற்களாகவே கண்டார். மலர்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பொருள் உண்டு என்று அவர் சொல்லியிருக்கிறார். மலர்களின் ஆன்மீக சாரம் பற்றிய அவரது நூல் ஒரு மகத்தான காவியம்போல என்னைக் கொள்ளைகொண்டிருக்கிறது. [The Spiritual Significance of Flowers – The Mother] மலர்கள் ஒவ்வொன்றுக்கும் அவர் அர்த்தம் சொல்கிறார். அதன் பின் மலர்களைக் கொண்டு கோலங்களை அமைத்து தான் உணர்ந்த கவித்துவத்தை வெளிப்படுத்துகிறார்
ஒவ்வொரு மலரும் ஒரு சொல்லைச் சொல்ல விரிந்த, குவிந்த உதடுகள். ஒவ்வொரு மலரும் ஓர் ஆன்மா விரிந்து நிற்கும் கண்கள். உலகமெங்கும் கவிதையில் மலர்கள் வகிக்கும் பங்கென்ன என ஒருவன் ஆராயப் போனால் மானுட ஆன்மீகத்தின் வரலாற்றையே அவன் எழுதிவிடமுடியும்.
இந்த மண்ணில் மரங்களும் செடிகளும் காய்களும் கனிகளும் விதைகளும் உள்ளன. அவையெல்லாம் தாவரவெளியின் நடைமுறை வாழ்க்கை சார்ந்தவை என்று தோன்றுகிறது. ஆனால் மலர்கள் அப்படி அல்ல. அவற்றுக்கு அப்படி ஒரு திட்டவட்டமான நடைமுறைப்பயன் இல்லை. நடைமுறைப்பயன் இருந்தால் இத்தனை வண்ணங்களும் இத்தனை வடிவங்களும் இத்தனை நறுமணங்களும் அவற்றுக்குத் தேவை இல்லை.
மலர்கள் தாவரங்களுக்குள் உறையும் இன்னொன்று தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் முறை. ஒளியை நாடும் கிளைகளும் ஆழத்தை அறியும் வேர்களும் தாங்களறிந்த ரகசியமொன்றை மலர்கள் வழியாக வெளிப்படுத்துகின்றனவா? பூமிக்கு என ஒரு ரகசியமிருந்தால் அது மலர்களாக மட்டுமே வெளிப்படமுடியும் போலும்.
சங்கப்பாடல்களில் மலர்கள் கொள்ளும் அர்த்தங்களை அசைபோட்டு அசைபோட்டுத்தான் அறியமுடியும். அறிஞன் தவறவிடக்கூடிய அர்த்தங்களால் ஆனவை அவை. குழந்தைகள் சட்டென்று உணர்ந்து கொள்ளும் ஆழங்கள் அவை. ‘கூன்முள் முண்டகக் கூர்ம்பனி மாமலர் நூலறு முத்திற் காலொடு பாறித் துறைதொறும் பரக்கும்’ என்று குன்றியனார் பாடும் வரி என் கண்ணில் மலர்பரவிய நீர்வெளியாக அலையடிக்கிறது. என்ன மலர் அது?
[நீர்முள்ளி, முண்டகம்]
முண்டகம் என்றால் எங்களூரில் நீர்முள்ளி என்று சொல்வார்கள். நீர்முள்ளி ஒரு காட்டுப்பூ. மெல்லிய ஆனால் கூரிய முட்கள் நிறைந்த தண்டுகள் கொண்டது. முயலின் செவி போன்ற இலைகள். ஊதா நிறத்தில் மலர். ’அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து’ என்று குறுந்தொகையில் அம்மூவனார் பாடுகிறார்.
அணிலின் பல் போன்ற முள் கொண்டது. குன்றியனார் பாடும்போதும் ‘கூன்முள் முண்டகம்’ என்று சொல்கிறார். நீர்முள்ளியைக் கண்டால் அது மிகமிக அரிதாகப் பூத்தெடுத்த மலரை அச்சத்துடன் ஆயிரம் முள்களால் பாதுகாத்து நிற்பது போலத் தெரியும். ஆசைகொண்டு தொடப்போனால் அத்தனை முட்களும் சிலிர்த்துக் கொள்ளும் என்ற எண்ணம் எழும்.
கூன்முண் முண்டகக் கூர்ம்பனி மாமலர்
நூலறு முத்திற் காலொடு பாறித்
துறைதொறும் பரக்குந் தூமணற் சேர்ப்பனை
யானுங் காதலென் யாயுநனி வெய்யள்
எந்தையுங் கொடீஇயர் வேண்டும்
அம்ப லூரு மவனொடு மொழிமே.
– குன்றியனார்
இந்தக்கவிதைக்கு எந்த உரைநூலில் இருந்தும் ஒரு நேரடிப்பொருளையே பெறமுடியும். ‘வளைந்த முட்கள் கொண்ட முண்டகத்தின் குளிர்ந்த மலர்கள் நூலறுந்த முத்துக்கள் போலக் காற்றில் பறந்து சிதறி நீர்த்துறைகள் தோறும் பரவும் தூய மணல்வெளிகொண்ட கடற்கரைகளின் தலைவனை நான் விரும்புகிறேன். என் தாய் வெறுக்கிறாள். என் தந்தையும் கொடியவர். இந்த ஊரோ அவனையும் என்னையும் பற்றி வம்பு பேசுகிறது’.
அறிஞர் உரைகளில் இன்னும் ஒரு சின்ன விளக்கமும் இருக்கும். ஊர் அலர் பேசுவதற்கு முண்டகத்தின் மலர்கள் காற்றில் நீர்த்துறைகள் தோறும் பரவுதல் உவமையாக்கப்பட்டுள்ளது. இன்னும் கொஞ்சம் வாசித்தால் இது உள்ளுறை உவமம் என்பார்கள். அதன்பின் நெய்தல் திணை என்பார்கள். அப்படியே சென்றுகொண்டே இருக்கும்.
ஆனால் அதெல்லாமே இந்தக் கவிதையைத் தெரிந்துகொள்ளத்தான் பயன்படும். உணர்ந்துகொள்ள, கவிதைக்குள் சென்று மலர, அவை தடையாகக்கூட அமையும். சங்கக்கவிதையின் உண்மையான உள்ளுறை இயற்கை. இயற்கையில் வைத்து வாசிக்காமல் சங்கப்பாடல்களை வாசித்துப் பொருள்கொள்வது ஓவியத்தைத் தடவிப்பார்ப்பது போல.
ஒட்டுமொத்த சங்கப்பாடல்களே இயற்கையில் உள்ளுறைந்திருக்கும் அர்த்தங்களை மொழியால் தொட்டு எடுப்பதற்கான முயற்சிகள் மட்டுமே என நான் சொல்வேன். இயற்கையை நோக்கி வைத்த சுட்டிகள் அவை. அவை சுட்டும் வழியில் சென்று இயற்கையை அடையாமல் சுட்டும் தன்மையை ஆராய்ந்துகொண்டிருப்பது போல விரயம் வேறேதும் இல்லை. ஆனால் நாம் அப்படித்தான் செய்துகொண்டிருக்கிறோம்.
முத்துமாலையின் நூல் அறுந்து அதன் மணிகள் சிதறிப் பரவி விரிவதுபோல முண்டகத்தின் மலர்கள் காற்றில் பரவிப் படித்துறைதோறும் பரவுகின்றன என்று இந்தக்கவிதை சொல்கிறது. முள்ளி இருவகை. காட்டுமுள்ளி அதிகமாக தாழ்வான மலைச்சரிவுகளில் வளரும். நீர்முள்ளி, வாய்க்கால் கரைகளில் வளரும். கூர்ம்பனி மாமலர் –அதாவது பனிகூர்ந்த மாமலர்– என்று சொல்லும்போது நீர்முள்ளியையே குறிப்பிடுகிறார் கவிஞர்.
அந்தமலரை அறிந்த ஒருவருக்கு இந்தக்கவிதை சட்டென்று வேறுவகையில் திறந்துகொள்ளும். வழக்கமாக வாய்க்கால்களிலும் ஆற்றிலும் பூக்களைக் கொட்டி, துறைகள் தோறும் பரவும் மலர் என்றால் புன்னையும் வேங்கையும்தான். வசந்தகாலத்தில் கொன்றை. அப்படிப் பல மரங்களும் செடிகளும் உள்ளன. அவற்றில் ஒன்று அல்ல நீர்முள்ளி. நீர்முள்ளி அவ்வளவு பெரும்பரப்பாக வளர்வதில்லை. சிறிய கொத்துக்கூட்டங்களாகவே நிற்கும். பெருமளவில் பூத்துத் தள்ளுவதுமில்லை. அதன் இதழ்கள் காற்றில் அரிதாகவே உதிர்ந்து பறக்கும். நீர்க்கரைகளில் வாழ்ந்த நான், நீர்முள்ளி இதழ்கள் நீரில் பரவுவதைக் கண்டதே இல்லை.
அப்படியென்றால் கவிதை ஒரு சாதாரண நிகழ்வைச் சொல்லவில்லை. ஓர் இயற்கைக்காட்சியை வர்ணிக்கவில்லை. சாதாரணமாக நிகழாத ஒன்றை, அரிய ஒன்றைக் கற்பனையில் சித்தரித்துக்காட்டுகிறது. நீர்முள்ளியின் மலருக்கு எத்தனை அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கவனிக்கவேண்டும். முதலில் அதன் முள்ளைச் சொல்கிறார். அடுத்து அதன் மலரின் குளுமை. கூன்முள் கொண்ட செடி. தன் மலர்களை முள்ளைக்கொண்டு வேலியிட்டுத் தன்னுள் அடக்கி வைத்து நிற்கும் நாணம் கொண்ட செடி. பனித்த மலர். முள்ளும் மலரும். எதைக்குறிக்கிறது இந்த மலர்? இந்த மலரின் அர்த்தமென்ன?
பூத்துக் குலுங்கிப் பொங்கி உதிர்ந்து திசை நிறைத்து நீரோட்டங்களில் பரவி நீர்ப்பரப்புகளில் அலைமோதித் துறைகள் தோறும் கரைகளில் படிந்து கிடக்கும் வழக்கமான மலர் அல்ல. தன் முள்ளால் தன் மலர்தலுக்கு வேலியிட்டுக் குளிர்ந்து தனித்திருக்கும் வெட்கிய மலர். பூமுள் குத்தாமல் தொட முடியாத கன்னிமையின் மலர். தன்னை வெளிக்காட்டாமல் அடங்கி நிற்கும் மலர். அது பரவ ஆரம்பிப்பதில் உள்ளது கவிதை. அதை நூலறுந்த மாலையின் முத்துக்கள் எனச் சொல்லும் இடத்தில் நிகழ்கிறது கவிதை! அந்த மலரின் நிறை காக்கும் காப்புச்சரடு அறுந்து விடுகிறது போல. கரையுடைக்கும் காதல், நிறை மறக்கும் காதல்.
இந்தக்கவிதையின் சாரமிருப்பது அந்த மலரில். அந்த மலரைக் கையிலெடுக்கையில் ‘கூன்முள் முண்டகக் கூர்ம்பனி மாமலர் நூலறு முத்திற் காலொடு பாறிய’ ஆச்சரியத்தை உணரும்போதே நம்மைக் குன்றியனாரின் கவிதை வந்து தொடுகிறது.
[மேலும்]