கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

எண்ணாயிரம் “பழந்தமிழ் நாட்டில் வணிகர்கள் குலங்கள் அப்படி எண்ணிக்கைப் பெயர்களாக இருந்தன….. ” என சொல்கிறீர்கள்.

அது பிராமணர்களுக்கும் பொருந்தும். ஒரு தமிழ் அய்யர் பிரிவின் பெயர் `அஷ்ட ஸஹஸ்ரம்`

வன்பாக்கம் விஜயராகவன்

*

நான் இப்போது தான் தங்களது கதைகளை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். வணங்கான் அருமையான கதை. நான் தமிழக நாடார் வரலாறு படித்திருக்கிறேன். திரு பொன்னீலன் அவர்களின் ‘மறுபக்கம்’ படித்திருக்கிறேன். நாடார்களுக்கு ஏற்பட்ட அவலங்களை நினைத்து நெகிழ்ந்து தொடர்ந்து படிக்க முடியாமல் கவலைப் பட்டிருக்கிறேன்.

நான் எனது நண்பர்களிடமும், சமயம் வாய்க்கும்போது சொல்வேன் – எங்களுக்கு ஏற்பட்ட அவமானங்களும், தனிமைப் படுத்தலுமே – எங்களுக்கு என்று எல்லாம் அமைத்துக் கொண்டோம் – தனி பள்ளி, தனி கோவில், தனி நந்தவனம், தனி சவரத் தொழிலாளி, தனி சலவைத் தொழிலாளி, முதலியன. எங்கு சென்றாலும் அந்த மக்களுடன் கலந்து விடல், கடுமையான உழைப்பு – நாடார் மக்களை முன்னேற்றின.

திரு காமராஜ் அவர்களின் இலவசக் கல்வித் திட்டம் நாடார் மக்களை மட்டும் அல்ல, எல்லா மக்களையும் படிப்பின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது.

மிக்க மகிழ்ச்சி ஐயா தங்களுடன் தொடர்பு கொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததற்கு.
மனப்பூர்வ நன்றிகளும், வாழ்த்துகளும்.

ரத்னவேல் நடராஜன்

அன்புள்ள ரத்னவேல் நடராஜன்

1880ல் தொகுக்கப்பட்ட அபிதானசிந்தாமணியிலேயே நாடார் சாதியினர் தங்களுக்கென உருவாக்கிக்கொண்டுள்ள கல்விநிலையங்களைப்பற்றியும் கல்வியில் அவர்களுக்கிருக்கும் தீவிர ஈடுபாடு பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. அனேகமாக தமிழகத்தில் கல்வியில்முதன்மை ஈடுபாடு காட்டிய இரண்டாவது சமூகம். காமராஜ் அந்த உணர்வை அனைத்து மக்களுக்கும் அளித்தவர்

நன்றி

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம். நான் உங்களை குறுந்தொகை தமிழ் கவிமரபின் நுழைவாயில் மூலம் சந்தித்ததில் என் கவி விருப்பம் இன்னும் தீ உற்றபடுள்ளது. மிக்க நன்றி.
பகவத் கீதையை பற்றியான சித்பாவனந்தர் எழுதிய உரை எங்கு கிடைகும் யாருடைய அச்சில் வெளி வந்திருகிறது . மற்றும் நடராஜ குரு அவர்கள் எழுதிய உறையும் எங்கு கிடைகும் யாருடைய அச்சில் வெளி வந்திருகிறது .
நன்றி.

பன்னீர் செல்வம் .

அன்புள்ள பன்னீர்செல்வம்

சித்பவானந்தர் கீதை திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் வெளியீடு.

நடராஜகுரு உரை டெல்லி டிகெ பிரிண்ட்வேர்ல்ட் இந்திய வெளியீடு

நன்றி

ஜெ

முந்தைய கட்டுரைஉண்டாட்டு – நாஞ்சில் விழா
அடுத்த கட்டுரைமலேசியா