காந்தி ஒரு கட்டுரைப்போட்டி

காந்தி இன்று இணையதளத்தை நடத்திவரும் நண்பர் சுநீல் கிருஷ்ணன் காந்தியைப் பள்ளி மாணவர்களிடம் அறிமுகம் செய்வதற்காக ஒரு கட்டுரைப்போட்டி நடத்தினார். அந்த திட்டம் பற்றி அவர் ஒரு கடிதத்தில் இவ்வாறு விவரித்திருந்தார்

“ஜெ எழுதி சென்ற வருடம் நான் வாசித்த முதல் புத்தகம் இன்றைய காந்தி.பாடப் புத்தகங்களிலும் நண்பர்களுடனான பேச்சுக்கள் மூலமும் நான் அறிந்த காந்தி மறைந்து வேறொரு காந்தியாக அவர் உயிர் பெறத் தொடங்கினார்.பின்பு காந்தியத்தின் நடைமுறை சாத்தியத்தை எடுத்து இயம்பும் விதமாக ஹசாரே போராட்டம் அமைந்தது.ஹசாரேவுக்காகத் தளம் தொடங்கிப் பின்பு அது காந்திக்காக மாறியது.

காந்தி , உண்மையில் எனக்கு வியப்பளித்த ஆளுமை, இது தான் காந்தி என்று வரையறுக்க முடியாத ஒரு ஆளுமையாக , தோண்டத் தோண்டப் பெரும் வியப்பாக வளர்ந்தது.தினமும் அவருடைய ஆளுமை சார்ந்து ஏதோ ஓர் புதிய பரிமாணத்தைத் தொடர்ந்து கண்டுகொண்டே இருக்கிறேன்.ஒரு குழந்தை கையில் கிடைக்கும் க்யூப் போல காந்தியின் மிகப் புதிரான ஆளுமையைப் புரட்டிக் கொண்டே இருக்கிறேன். காந்தியை அறிதலும், புரிதலும் காந்தி தளத்திற்காகத் தேடித்தேடி வாசிக்கத் தொடங்கிய பின்பு என்று தான் கூறவேண்டும்.

பின்னர் யுவன் கவிதையரங்கு நிகழ்ந்த பொழுது- நான் அரங்கரிடத்திலும், கிருஷ்ணன் இடத்திலும்- விஷ்ணுபுர இலக்கிய வட்டம் போல நாம் இன்றைய காந்தி சமூக வட்டம் என்று ஒன்று தொடங்க வேண்டும் என்று சொன்னேன், காந்தியை சரியான விதத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். கிருஷ்ணன் சொன்னது- முதலில் தளம் அதே ஆர்வத்தோடு அடுத்த வருடம் வரை தாக்குப் பிடிக்கிறதா என்று பார்ப்போம் என்பதே.அது நியாயமாகவே பட்டது. காந்தியை வாசிக்க வாசிக்க அவர் உண்மையில் பெரும் பொறுமையின்மையை ஏற்படுத்தினார், ஏதாவது செய்தாக வேண்டும் எனும் எண்ணம் அரித்துக்கொண்டே இருந்தது. நான் உறுப்பினராக உள்ள லயன்ஸ் சங்கத்தில் மாணவர்களுக்கு அக்டோபர் 2 போட்டி நடத்த வேண்டும் என்று கேட்டேன், முதலில் சரியென்று சொன்னவர்கள் பின்னர் ஆர்வமிழந்து விட்டனர்.

இறந்துபோன பள்ளி நண்பனின் நினைவாக நாங்கள் சில நண்பர்கள் மற்றும் அந்த நண்பனின் தாயார் இணைந்து ஒரு அறக்கட்டளையை இரண்டு வருடங்களாக நடத்தி வருகிறோம்.இது ஒரு சிறு அறக்கட்டளை தான், கல்வி உதவி அளிப்பதே முக்கிய நோக்கம், வேறு சில சிறிய பணிகளிலும் ஈடுபட்டு வந்தோம்.மணியம்மா ( நண்பனின் அம்மா ) அவர்களிடம் லயன்ஸ் சங்கம் கவிழ்த்ததைப் பற்றி வருந்திக் கொண்டிருந்தேன், அப்பொழுது நமது அறக்கட்டளை சார்பாக இதை எடுத்து நடத்தலாம் என்றார். அதன் பிறகு காந்தி தள நிர்வாகி நண்பர்களுடன் கலந்து கொண்டு , தலைப்பை முடிவு செய்தோம். எங்கள் பகுதியில் உள்ள ஐந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கட்டுரைப் போட்டியை மட்டுமேனும் நடத்துவதாக முடிவானது.

மேலும் இதை இனிவரும் காலங்களில் பெரிய அளவில் செய்ய வேண்டும் எனும் திட்டம், அதனால் சிறிய அளவிலேனும் இங்கு முயற்சித்துப் பார்க்கலாம் , மாணவர்கள் மத்தியில் காந்தியைப் பற்றிய புரிதல் என்ன என்பதப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு. மேலும் பள்ளியில் காந்தியைப் பற்றி இருக்கும் நேர்மறை சித்திரம், பொதுவாகக் கல்லூரி நுழைந்தவுடன் எதிர்மறையாக மாறிவிடுகிறது, அதற்குப் பொதுவில் காந்தியைப் பற்றி முன்வைக்கப்படும் அடிப்படையற்ற வசைகளும் , அவதூறுகளும் காரணம்.இதை உடைக்க வேண்டுமெனில் அதற்கு முன்பே காந்தியை சரியாகச் சென்று சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளியிலும் வெவ்வேறு அனுபவம் . தலைப்பு மற்றும் விதிமுறைகளை ஒரு கடிதமாக அச்செடுத்துத் தலைமை ஆசிரியரிடத்தில் நேரில் கொண்டு சேர்த்து விளக்கிக் கூறினோம். பள்ளியிலிருந்து எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்குபெறலாம், கட்டுரைக்கான தாள் நாங்களே கொடுத்து விடுகிறோம். பள்ளிக்குத் தோதான தேதியில், அங்கே ஒரு அறையில் வைத்துப் போட்டியை நடத்தி முடித்துக் கொள்ளலாம் என்பதாகத் திட்டம்.பள்ளி செய்ய வேண்டியது, எங்களுக்குத் தேதி குறித்துக் கொடுப்பதும், மாணவர்களிடம் தெரிவிப்பதும் மட்டும் தான்

ஆனால் பள்ளி ஆசிரியர்களின் விட்டேற்றி மனோபாவம் உண்மையில் விரக்தியை ஏற்படுத்தியது, ஒவ்வொரு பள்ளிக்கும் மூன்று முறைக்குக் குறையாமல் திரும்பத் திரும்பச் சென்று நினைவு கூர்ந்து வர வேண்டி இருந்தது. பரிசுத் தொகையாக 1000, 750, 500 கொடுப்பதாக அறிவித்து இருந்தோம். அதைத் தவிரக் கலந்து கொள்ளும் அனைவருக்கும், சான்றிதழ் , மற்றும் யானை டாக்டர் கொடுப்பதாக முடிவானது. பள்ளியளவில் சிறந்த கட்டுரைக்குப் புத்தகம் பரிசாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்பொழுது பள்ளியளவில் முதலிரண்டு இடங்களுக்குப் பரிசு கொடுப்பதாக உள்ளோம்.எட்டாம் வகுப்போ அதற்கு மேலுள்ள மாணவர்கள் இதற்கு தகுதியானவர்கள்.

முதலிரண்டு பள்ளிகள் உண்மையில் மனதை முறித்தது, அபத்தமான கட்டுரைகள், சுத்தமாக ஒத்துழைப்பு இல்லாதது என்று, ஆனால் அடுத்தடுத்து நன்றாக நடந்தது. கட்டுரைக்கான விதிமுறைகளை ஒரு பள்ளித் தமிழ் ஆசிரியரிடம் விளக்கிக் கூறினேன்- பின்னர் அவர் கேட்டது ” எல்லாம் சரி சார், மெட்டீரியல் எப்ப கொடுப்பீங்க ?” அதைப் படித்து மனனம் செய்து எழுத வைக்கத் திட்டம்!

மற்றொரு தமிழ் ஆசிரியர் ” ஏன் சார், தலைப்பு இவளவு நெகடிவா இருக்கு?” – இன்றைய சூழலில் காந்தியம் என்பதே எதிர்மறையாக உணரப்படுகிறது.

வெவ்வேறு நாட்களில், நானும் எனது நண்பனும் பள்ளிகளில் சென்று ஒரு மணிநேரம் மேற்பார்வை பார்த்துப் போட்டிகளை நடத்தினோம்.மொத்தம் 87 மாணவர்கள் கலந்துகொண்டனர், சரிபாதி கட்டுரைகள் சுமாராக இருந்தது, பலரும் தலைப்பை சரியாக உள்வாங்கவில்லை, காந்தி பிறந்தது , வளர்ந்தது என்று வரலாற்றையே எழுதினர்.மாணவர்களிடம் கட்டுரை முடிந்தவுடன் பேசினேன், தமிழ் நோட்ஸில் உள்ள கட்டுரையை எழுதியதாகச் சொன்னார்கள். ஒரு பள்ளியில் அனேக மாணவர்கள் ஒரே கருத்தை வார்த்தை பிசகாமல் எழுதியுள்ளனர்.

கட்டுரைகளைப் பரிசீலிக்கத் தமிழ் ஆசிரியரை நாங்கள் அணுகவில்லை, அவர்கள் சொல் அலங்காரங்களுக்கு முன்னுரிமை வழங்கிவிடுவார்கள்,கருத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்பது நோக்கம். விஷ்ணுபுர விழாவிற்குத் தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கொண்டு வந்து இருந்தேன். ஜெ, எஸ் ரா மற்றும் நண்பர்களுக்கு சில கட்டுரைகளை வாசித்துக் காண்பித்தேன், பரிசை அவர்கள் முடிவு செய்ய வேண்டும் என்று எண்ணினாலும் நேரமின்மை காரணமாக நாங்களே முடிவு செய்துவிட்டோம்.

அப்படியே- காந்தி இன்று தளம் பற்றிய கருத்துகளையும், விமரிசனங்களையும் முன்வைக்குமாறு நண்பர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்..

நன்றி
சுனில்

காந்தி இன்று இணையதளத்தில் விரிவாகவே இப்போட்டி பற்றி எழுதியிருக்கிறார் சுனீல்

முந்தைய கட்டுரைபூமணி- உறவுகள்
அடுத்த கட்டுரைஅன்பை வாங்கிக்கொள்ளுதல்…[கடலூர் சீனு]