விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் இரண்டாம் வருட விருது மூத்த படைப்பாளி திரு. பூமணி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க சம்மதித்திருந்தார். நானும் அவரும் 16 டிசம்பர் ஈரோடு செல்வதாக ஏற்பாடாகியிருந்தது. இரவு பத்தேகாலுக்கு நான் ரயில் நிலையம் சென்ற போது, ராமகிருஷ்ணன் சார் ஒரு புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார். என்னை நோக்கிப் புன்னகைத்து “வாங்க” என்றார். எனக்கு அவரைப் பெரிய பழக்கமில்லை. எனக்கிருந்த ஆரம்பத் தயக்கம் காணாமல் போக எங்கள் உரையாடல் சகஜமாக நீண்டது. எளிமையாகவும் ஏராளமான எடுத்துக்காட்டுகளுடனும் மிகத் தெளிவாக இருந்தது அவரது பேச்சு. அவற்றிலிருந்து சில பகுதிகள் .
நான் : சமீபத்தில் ரஷ்யன் கல்சுரல் சென்டரில் நீங்கள் நடத்திய உலக இலக்கிய அறிமுகம் பெரிய வெற்றி பெற்றது. இது ஒரு முன்னோடி முயற்சி என்று எண்ணுகிறேன். இது போன்று நிகழ்ச்சிகள் மேலும் தொடர்வீர்களா..?
எஸ். ரா : அந்த நிகழ்ச்சிக்கு ஆதரவாகப் பல கடிதங்கள், போன் அழைப்புக்கள் வந்தன. அதன் ஒலிவடிவம் எப்போது வெளிவரும் என்று கேட்டு பலர் போன் செய்திருந்தனர். ஒலிவடிவம் தற்போது தயாராகி வருகிறது. வருடந்தோறும் இது போல நவம்பர் மாதத்தில் ஒரு அறிமுக நிகழ்ச்சி நடத்த உத்தேசித்திருக்கிறேன். இந்த நிகழ்ச்சி, அடுத்து டிசம்பரில் சங்கீத சீசன், தொடர்ந்து புத்தகத் திருவிழா என்று ஒரு தொடர் நிகழ்வு ஆண்டு தோறும் வந்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நிறைய இடங்களிலிருந்து ஸ்பான்ஸர் செய்ய முன் வந்திருக்கிறார்கள். அதிகமான நிகழ்ச்சிகள் நடத்துமாறு வேண்டுகிறார்கள். நான் ஒப்புக்கொள்ள மறுத்தேன். ஏனென்றால் இதை நான் அதிகமாக எனது நேரத்தைக் கோரும் ஒரு பணியாகக் கொள்ள இயலாது.
நான் : இலக்கியத்தின் முகவரியிட்டு நடக்கும் சில முயற்சிகளின் தரம் சில நேரங்களில் ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவற்றிற்குக் குறிப்பிடத்தக்க ஆதரவும் கிடைப்பதை கவனித்திருப்பீர்கள். நாங்கள் கவலைப்படுவது, வெளியில் நின்று காண்பவருக்கு இந்த வித்தியாசங்கள் தெரியப்போவதில்லை. திறமையும் இலக்கியத்தின்பால் உள்ள நேர்மையும் உழைப்பும் கொண்ட படைப்பாளிகள் அருகே போலிகள் வைத்துப் போற்றப்படும் அபாயம் சோர்வளிக்கிறது.
எஸ். ரா : இதில் வருத்தப்படுவதற்கு எதுவுமில்லை. இது எக்காலத்திலும் நடந்து வருகிறது. புதுமைப்பித்தன் காலத்திற்குப் போவோம். அப்போது நட்சத்திர எழுத்தாளர்களின் படம் போட்டு சிறுபத்திரிகைகளே வெளிவந்தன. புதுமைப்பித்தனின் கதை, நடுவே எங்காவது இருக்கும். இன்று நாம் அவற்றைத் தேடி வாசிப்பதே புதுமைப்பித்தனின் கதை அதில் வந்திருக்கும் காரணத்தினால்தான். அந்த நட்சத்திர எழுத்தாளர்கள் என்ன ஆனார்கள்? ஜெயகாந்தன் காலகட்டத்தில் ஏறத்தாழ அதே புகழுடன் இருந்த மூன்று நான்கு எழுத்தாளர்களை என்னால் காட்ட முடியும். உங்களுக்கு அவர்கள் பெயர்கள் கூட தெரிந்திருக்காது. ஜெயகாந்தன் தீவிர எழுத்திலிருந்து விலகி பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அவரது புகழ்..? இதற்கு இன்றும் அதே இடம் தான்.. இல்லையா..? எல்லா வகையான எழுத்துகளுக்கும் அதற்கான வாசகர்கள் உண்டு. எனவே தற்காலிகமான கூட்டம் ஒரு பொருட்டல்ல. ஆனால் சமூகம் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது. அது தன் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பவர்கள் யாரோ அவர்களை நினைவில் வைத்துக்கொள்கிறது. ஆக, படைப்பின் வலிமை அதைக் காலம் தாண்டிக் கொண்டு செல்வதே. அத்தகைய வலிமையான படைப்புகள் தங்கும். மற்றவை மாய்ந்து போகும்.
நான் : புதுமைப்பித்தன் பற்றிப் பேசினீர்கள். இந்தக் கேள்வியை கேட்க நான் அஞ்சுகிறேன். ஏனென்றால், கா.நா.சு. விலிருந்து, சுந்தர ராமசாமி, ஜெயமோகன், நீங்கள் என தமிழிலக்கியத்தின் சாதனைப் படைப்பாளிகள் போற்றும் ஆளுமை புதுமைப்பித்தன். ஆனால் அவருடைய பல சிறுகதைகள் நேரடிப் பிரச்சாரங்கள் போன்றே இருக்கின்றன. சில சமூக அவலங்கள், மனித மனநிலைகளின் எளிய சித்தரிப்புகள், வறுமை, நகர வெறுப்பு என்று சாதாரணமாகவே தோன்றுகின்றன. அல்லது நாம் வலிந்து அர்த்தங்களை அவற்றில் சுமத்தவேண்டும். தமிழில் வகை மாதிரிகளை முயன்றவர் என்பதில் புதுமைப்பித்தனே தொடக்கம். அவருடைய சில கதைகள் இன்றும் மைல்கல்களாகவே இருக்கின்றன என்பதிலும் ஜயமில்லை.
எஸ். ரா : ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். புதுமைப்பித்தனின் காலம். அன்று திருநெல்வேலியிலிருந்து சென்னை செல்வதென்பதே ஒரு பெரும்பயணம். ஒருவன் வேலை தேடிப் போகும் நிலையை யோசித்துப்பாருங்கள். அவனுக்கு வேலையும் கிடைத்தும் அதனை உதறி எழுத்தில் ஈடுபடுகிறான். அது போல நீங்கள் சொன்ன மற்றொன்று – புதுமைப் பித்தன் முயன்ற மாதிரிகள். அவரது சிற்பியின் நரகம் புரியவில்லை என்று சொல்லும் வாசகர்களை இன்றும் எனக்குத் தெரியும். இந்த ஒட்டு மொத்த பரப்பில் வைத்துத்தான் நாம் புதுமைப்பித்தனை ஆராய வேண்டும்.
நான் : கி.ரா, கு.அழகிரிசாமி, பூமணி, தேவதச்சனில் தொடங்கி, நீங்கள், யுவன் சந்திரசேகர் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் இலக்கியத்தில் முன்னணிப் படைப்பாளர்கள் அந்த ஊரைச் சார்ந்தவர்கள். ஒரு பிராந்தியத்திலிருந்து இத்தனை கலைஞர்கள் .. ! சார், கோவில்பட்டி என்னை எப்போதும் வியக்கவைக்கும் ஊர். வறுமை சூழ்ந்த வறண்ட கரிய நிலம் என்ற அடையாளம் கொண்ட அந்த மண்ணில் என்று விழுந்த விதை இப்படி தீராமல் முளைவிடுகிறது என்று வியந்திருக்கிறேன். அதுவும் இடைசெவல் – என்றென்றும் தமிழ் இலக்கிய வாசகர்கள் மரியாதையுடன் நினைவுகூரும் சிறிய கிராமம் அது. ஊரைப் பற்றி உங்கள் மனதில் உள்ள சித்திரம் சார்..
எஸ். ரா : தமிழகத்தின் எல்லா பகுதிகளிலிருந்தும் பல்வேறு துறைகளில் கலைஞர்கள் வந்துள்ளனர். ஆம். கோவில்பட்டியில் இலக்கியம் முக்கியத்துவம் அடைந்திருந்தது. அதற்கு நைனாவிற்கு ( கி.ராவை அவ்வாறு தான் அழைக்கிறார் ) நாங்களெல்லாம் முதலில் நன்றி சொல்லவேண்டும். ஒரு நாற்பது பேர் அவரது துண்டுதலால் எழுத வந்திருக்கிறோம். (அப்பாடா ..!) எழுதும் ஒரு சிறு பொறி ஒருவனிடம் கண்டால் அதைக் கொழுந்து விட்டு எரியச்செய்யும் ஆற்றல் அவரிடமிருந்தது. தினமும் நாங்கள் ஒரு பத்துப் பதினைந்து பேர் அவருடன் நடக்கப் போவோம். கோழி தனது குஞ்சுகளை கவனமாகக் கொண்டு செல்வதைப்போல் நைனா எங்களுடன் பேசி அழைத்துச்செல்வார். மிக விரிந்த வாசிப்புப் பின்புலம் கொண்டவர். தமிழிலக்கியம் மட்டுமன்று உலக இலக்கியத்திலும் அவருக்கு தேர்ந்த பரிச்சயமிருந்தது.
அடுத்துச் சொல்லவேண்டியது தேவதச்சனைப் பற்றி. இன்று நெருங்கிய நண்பர்களாக தமிழ் இலக்கியத்தில் நீங்கள் பார்க்கும் பெரும்பாலானோர் முதலில் சந்தித்துக்கொண்டதே அவரது நகைக்கடை வாசலில் வைத்துத்தான். அந்த இடம் முக்கியமான ஒரு விவாத மையமாக இருந்தது. இப்போதும் நான் கோவில்பட்டி வரும் போது தவறாமல் அங்கு தேவதச்சனை சந்திக்கிறேன். முதலில் அங்கு வரும் இலக்கிய ஆர்வலர்களிடம் சிறு விளையாட்டு செய்வோம் ( சிரிக்கிறார் ). புதிதாக வந்தவரை சூழ்ந்திருந்து இலக்கியம் பற்றி கேள்வி கேட்போம். அவரது அறிவுக்கும் சொல்லும் விடைகளுக்கும் ஏற்பக் கேள்விகள் ஆழமாகும் . ஒரு கட்டத்தில் சபை ஒப்புதல் அளிக்கும். பலர் இந்த சோதனையின் பாதியிலே தாக்குப்பிடிக்க முடியாமல் ஓடியிருக்கிறார்கள். ஆனால் ஜெயித்தவர்கள் தப்பித்தோம் என்று நினைக்க வேண்டாம். இனிமேல்தான் முன்னைவிடக் கடுமையான சோதனை காத்திருக்கிறது. அப்பாஸூக்கு போன் போடுவோம். ”அவரை பங்களாவுக்கு அனுப்புங்க..” என்று வில்லன் பாணியில் உத்தரவு வரும். அவரை சிம்மாசனம் போன்ற ஒரு இருக்கையில் அமர வைத்து அங்கே கூடியிருக்கும் முற்போக்கு அறிஞர்கள் கேள்வி கேட்பார்கள். வந்தவரது ரஷ்ய இலக்கியத் தேர்ச்சி மற்றும் கோட்பாட்டு அறிவுகள் பரிசோதிக்கப்படும். இப்படியான சுவையான நிகழ்வுகள் பல நடந்திருக்கின்றன.
நான் : ஒரு இடத்தின் வாழ்பனுபவங்கள், இயற்கைச் சூழல், அரசியல் நிலவரங்கள் போன்றவை சார்ந்த அனுபவங்களைக் கண்காணாத் தொலைவில் இருக்கும் ஒரு வாசகனுக்கு நகர்த்தும் வலிமை இலக்கியத்திற்கு உண்டு. அவனால் மாஸ்கோவின் பனிபடர்ந்த சாலையையும், இடைச்செவலின் கரிசலையும் கற்பனையால் விரித்தெடுக்க முடியும். ஆனால் படைப்பாளிகள் தங்கள் சொந்த மண் சார்ந்து ஆக்கங்களை உருவாக்குவது உலகம் முழுவதும் பொதுவாகக் காணக்கிடைக்கிறது ( உங்களுக்கு நெடுங்குருதி ). ஆனால் பிராந்தியத் தன்மை படைப்பில் செலுத்தும் ஆதிக்கம் ரசனைக்குப் பொருந்துவதில்லை என்று எண்ணுகிறேன்.
எஸ். ரா : அப்படியல்ல. இலக்கியம் என்ற அறிவார்ந்த துறைக்கு இது ஓரளவு சரியாக இருக்கலாம். ஆனால் இசை போன்ற பிற கலைகளில் ஒருவரின் பிறந்த மண் ஏற்படுத்தும் தாக்கத்தை தெளிவாகக் காணலாம். உதாரணமாக, புதிதாக ஓபேரா இசை கேட்கும் ஒருவர், அந்தப் பாடகி உச்ச கதியில் கத்துவது போல உணரலாம். கொஞ்சம் நுட்பங்கள் புரிந்த ஒருவருக்குப் பாடகி ஏற்ற இறக்கங்களை நிகழ்த்துவது புரியும். திருப்பங்கள், சோதனை முயற்சிகளை அவர் ரசிக்கலாம். ஆனால் அந்த இசையில் ஒன்றிக் கண்ணீர் உகுக்க அவரால் சாத்தியப்படுவதில்லை. அது ஒரு இத்தாலியனால் முடியும்.
இதற்கு எங்கள் மண் சார்ந்த ஒரு உதாகரணம் சொல்ல முடியும். இன்றும் எங்கள் ஊரில் பழைய விவசாயிகளுக்கு சினிமா மீது எந்த ஈர்ப்பும் இல்லை. அதற்கு ஒரு பண்பாட்டுக் காரணம் இருக்கிறது. உட்காருவது என்பது அவர்களுக்கு அன்னியமான ஒரு செயலாகவே இருந்துள்ளது. காலையில் எழுந்ததும் வேலைக்குச் செல்வார்கள். பிறகு தொடர்ந்த நடை தான். எப்போதாவது வெயிலுக்குக் கருவேலத்தின் நிழலில் சிறிது நேரம். உடனே, “என்ன உக்காந்துகிட்டு வேலையைப் பாக்காம…” என உள்ளுணர்வு எழுப்ப வேலைக்குத் திரும்புவார்கள். நைனா கூட ”நாற்காலி” என்று ஒரு கதை எழுதியிருப்பார். கிட்டத்தட்ட உட்காருதல் என்பது ஒரு விலக்கப்பட்ட செயல் போன்றது தான் அவர்களுக்கு ! அப்படிப்பட்டவர்களை முதன் முதலில் மூன்று மணிநேரம் ஓரிடத்தில் உட்காரச் சொன்னது சினிமா.. இதனாலேயே அந்தக் கலை அவர்களைச் சென்றடைவதில் பெரும் தடையை சந்திக்க நேர்ந்தது. எங்கள் வீட்டிலேயே நான்கு நாற்காலிகளில் மூன்று உபயோகிக்கப் படாமலேயே இருந்தது. ஒன்றில் அப்பா அமர்ந்திருப்பார். இன்னும் ஒரு சுவையான நிகழ்ச்சி ஞாபகம் வருகிறது. எங்கள் ஊர் கோயில் திருவிழாவிற்கு நாடகம் போட ஒருமுறை பிரபலமான நாடகக் குழு வந்திருந்தது. நாடகம் தொடங்கி சிறிது நேரத்தில் பார்வையாளர் மத்தியில் சிறு சலசலப்பு. விசாரித்ததில் “ என்ன நின்னுக்கிட்டே பேசிட்டிருக்காங்க.. அங்கிட்டு இங்கிட்டு கொஞ்சம் நடக்கிறது..” என்று சொன்னார்கள். நாடகக் கம்பெனிக்கு ஒரு புதிய புரிதல் கிடைத்தது.
இவற்றைக் கொண்டு. கர்நாடக இசை ஏன் கரிசல் போன்ற பகுதிகளில் ஏற்கப்படுவதில்லை என்பதற்கு நாம் விளக்கமளிக்கலாம். இந்த வகை இசை அமர்ந்து கேட்பவர்களுக்கானது. பாடுபவர்களும் கேட்பவர்களும் அமர்ந்திருப்பார்கள். ஆனால் கரிசலின் கேளிக்கையின் இயல்பு அப்படி அல்ல. அங்கு இரு சாராரும் அமர்வதில்லை. இன்னும் சில நேரங்களில் பார்வையாளர்களின் பங்களிப்பு கூட நிகழ்வதுண்டு. இவ்வாறு ஒரு கலாச்சார பண்பாட்டுக்குப் பழகியவர்களை மற்றொரு பகுதியின் கலைக்குப் பழக்குவது அத்தனை சுலபமல்ல. பிற கலைகளுடன் நமக்கு நிகழ்வது ஒத்திசைவு – டில்லியில் வசிக்க நேர்ந்தால் இந்தி பேசி கோதுமை சாப்பிடுவது போல. ஒன்றுதல் அல்ல.
நாம் முதன் முதலாக அனுபவிக்கும் கலையனுபவங்கள் நம் மனதின் முதல் அடுக்கில் படிகின்றன. அதற்கு பின் வரும் நமது வாசிப்புகள், சிந்தனைகள் அனைத்தும் அந்த முதல் அடுக்கின் மேல் நாம் அமர்த்திக் கொள்பவை. வருடங்கள் செல்லச் செல்ல அந்த அடுக்குகள் வளர்ந்து உயர்கின்றன. கீழே அழுத்தத்தில் ஒழுகும் முதல்சுவை பீரிட்டு வெளிவர வாய்ப்பு காத்து விழித்திருக்கும். ஒரு நாள் பூங்காவில் நடக்கும் போது ஒரு பெரியவரைப் பார்த்தேன். பழுத்து உதிர்ந்த ஒரு இலையை வெகுநேரமாக உற்று பார்த்துக்கொண்டிருந்தார். பூங்காவில் உலவும் கூட்டம், பசுமையான சூழல், விளையாடும் குழந்தைகள் என எதுவும் அவரைப் பாதித்த்தாக தெரியவில்லை. வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் தருணங்கள்தான் இவை. பெரிய வியாபாரம் செய்தவர்கள் ஐம்பது வயது தாண்டிபின் சொந்த ஊர் திரும்பி வேட்டியும் மேல்துண்டுமாகக் கயிற்றுக்கட்டிலில் அமர்ந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
நான் : சார், இப்போது எழுத்தின் மர்மம் பற்றி.. மொழி, சிந்தனை, மனம் என்று ஒரு கூட்டு நிகழும் வேளைதான் நல்ல படைப்பு வெளிப்படும். அதன் பரவசத்தைப்பற்றிப் படைப்பாளிகள் காலந்தோறும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். வாழ்கையைத் தியாகம் செய்து எழுதுவது இந்த அனுபவத்திற்காகவே என்று நினைக்கிறேன். இதுதான் புதியவர்களை எழுத்தை நோக்கி ஈர்க்கிறது. எத்தனையோ அபாயங்களை நேரிட்ட பின்னும், சில வேளைகளில் கிட்டத்தட்ட மொத்த அழிவை சந்திக்க நேர்ந்த பின்னும், உயிர்த்துடிப்புடன் படைப்பியக்கம் மீண்டு முன்னேற அதன் இயக்கு விசை இதுவென்று கருதுகிறேன்.
எஸ். ரா : உண்மைதான். எழுத்தின் உன்னதப் பொழுதுகளில் எழுத்தாளன் அபூர்வமாக அவ்வகைப் பரவசம் காண்பதுண்டு. ஆனால் அது நிலையானதல்ல. எழுதி முடிந்த்தும் அவன் மீண்டும் அனைத்து சாதாரணத்துடன் தனது பழைய ஆளுமைக்கே மீள்கிறான். இது ஒரு சிகரத்தில் ஏறிக் கீழே பள்ளத்தாக்கில் விழுவதைப் போல. அந்த சிகரத்தில் எட்ட ஒருவனுக்கு உதவும் எந்த வழிமுறையும் இதற்குச் சமமாக போற்றப்பட வேண்டியவையே. ஒரு சம்பவம் நினைவில் வருகிறது. ஒரு பேருந்து நிலையத்தில் காண நேர்ந்தது. ஒருவர் கையிலிருந்த பொட்டலதிலிருந்து கடலை தின்றுகொண்டிருந்தார். தன்னிச்சையாக அவரது கை பொட்டலத்திற்கும் வாய்க்குமாக இயங்கிக்கொண்டிருந்தது. பொட்டலம் காலியாகி ஒரே ஒரு கடலை மட்டும் கடைசியில் மிஞ்சியது என்று உணர்ந்தபோது அவரிடம் ஒரு அதிர்ச்சியை கவனித்தேன். அந்தக் கடலையை உள்ளங்கையில் வைத்து சிறிது நேரம் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தார். ஏதோ இதற்கு முன் கடலையையே அவர் காணாதது போல. பின்பு மிக மெல்ல அதன் தேலை உரித்து மறுபடியும் சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். இரண்டாக உடைத்து, மிகப் பொறுமையாக ஒரு பாதியைக் கண் மூடி மென்றார். அப்புறம் அது போல அடுத்த பாதியை. இவ்வாறு அந்தக் கடைசிக் கடலை ஒரு பேரனுபவமானது. பாருங்கள் எத்தனை எளிய நிகழ்ச்சி. ஆனால் தியானம் போன்ற எந்த ஒரு மேன்மையான கருவியும் தரும் அனுபவம் ! ஆனால் இது ஒற்றை அனுபவமாகத் தேங்கிவிட்டது. எழுத்தில் எனது தேடல் முழுவதும் இந்தப் பரப்பைச் சார்ந்தே இருக்கிறது. சிகரத்தில் ஏறுவதற்கும் கீழே விழுவதற்குமான முரணைப்பற்றி.
நான் : அருமையான விளக்கம் சார் !. இன்னும் இது சார்ந்து மற்றுமொரு கேள்வி. ஒரு நாவல் என்பது வருடங்களின் உழைப்பைக் கோரும் பணி. ஒரு நாள் ஓரு பகுதியை உச்சபட்சக் கலை நேர்த்தியுடன் முடித்துவிட்டீர்கள் என்று கொள்வோம். அதற்கு அடுத்த நாளோ, பிறிதொரு நாளோ மறுபடி தொடரும் போது, முந்தைய வேகம் வர வேண்டுமே. அங்கு ஒரு தடை நிலையை உணர்ந்திருக்கிறீர்களா..? அல்லது அந்நிலையை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்..?
எஸ். ரா : நாவல் ஒரு வரிசைக்கிரம ஒழுங்கில் எழுதப்படுகிறது என்று யார் உங்களுக்குச் சொன்னது..? எந்த அத்யாயம் எதற்குப் பின்னால் எழுதப்படுகிறது என்பது முன்னர் தீர்மானிக்கப்படும் ஒன்று அல்ல. நிறைய எழுதப்படும், பல முறை திருத்தங்கள், மாற்றங்கள் செய்யபடும். சில அத்தியாயங்கள், அவை மிகச் சிறப்பாக வந்திருப்பினும் கைவிடப்படும். அவற்றை எழுத ஆரம்பித்த மனநிலையிலிருந்து அப்போது நாவல் வேறு திசையில் நகர்ந்திருக்கலாம்.
நான் : ஒரு நாவலை எழுதிமுடித்தபின் அந்த மனநிலையிலிருந்து வெளிவர பிரத்தியேக முயற்சிகள் எதுவும் மேற்கொள்கிறீர்களா..? அந்த மனநிலை எஞ்சி, தொடர்ந்து அடுத்துவரும் படைப்புக்களில் பாதிப்பை ஏற்படுத்தியதுண்டா..?
எஸ். ரா : இல்லை என்றே சொல்வேன். நாவல் முடிந்தபின் அந்த மனநிலையிலிருந்து முற்றாகவே வெளியில் வந்துவிடுவேன். அபூர்வமாக ஒரு சில தருணங்களில் மனம் சிலவற்றைத் தன்னில் உறையவைத்துக்கொள்ளும். எனினும் பிரத்யேக முயற்சியெடுத்து வெளிவந்ததாக ஞாபகம் இல்லை.
நான் : ஒரு நாவல் வெளி வருகிறது. அதை மீள் வாசிப்பு செய்தபின், ஒரு வாய்ப்புக் கிடைத்தால் கொஞ்சம் மாற்றியெழுதலாமே என்று எப்போதாவது நினைத்ததுண்டா..?
எஸ். ரா : எப்போதும்தான் வாய்ப்புக் கிடைக்கிறது. நாவலின் உருவாக்கத்தில் மாற்றங்கள் முடிவற்றவை. புரூப் ரீடிங் முடிந்தும் கூட மாற்றங்களைச் செய்திருக்கிறேன். ஆனால் வெளிவந்த பின் அது தான் அதன் வடிவமும் உள்ளடக்கமும். பின்பு மாற்றமில்லை.
நான் : இலக்கியத்தில் வெவ்வேறு பள்ளிகள் ( Schools ) இருந்துள்ளன. ஒவ்வொரு காலகட்டதிலும் அப்போதைய மேதைகளைச் சார்ந்து ஒரு இளம் குழு துளிர்க்கும். சொன்னீரகளே.. கி.ரா வைச் சுற்றி உயிர்பெற்ற புதிய தலைமுறை எழுத்தாளர்களைப் பற்றி. இன்று தமிழில் அது போன்ற பள்ளிகள் என்று பெரிதாகப் பேசப்படுவதிலைலையே..
எஸ். ரா : இத்தனை வசதிகள் இல்லாமலிருந்த காலம் அது. ஒரு பகுதியின் வாசகர்கள் அதற்குக் குறைந்த தொலைவில் உள்ள எழுத்தாளரை அடிக்கடி சந்திப்பார்கள். எழுத்தாளரின் வீடு மெல்ல மெல்ல ஒரு மையமாக ஆகும். காலப்போக்கில் வாசகர்ளுக்கும் எழுத்தாளருக்கும் உள்ள பிணைப்பு அதிகமாகி அவர்கள் எழுத்தாளராகும் தருணத்தில் மூத்த எழுத்தாளரின் பாதிப்பு தெரியும். இன்று அப்படி அல்ல. முக்கியமான எந்த எழுத்தாளரையும் எளிதில் படிக்கவும் தொடர்பு கொள்ளவும் வசதிகள் பெருகிவிட்டன. ஒரு வாசகன் பல எழுத்தாளர்களுடன் தொடர்ந்த உரையாடலில் இருக்கிறான். பிரமிக்க வைக்கும் வாசிப்புப் பின்புலம் உடைய பல வாசகர்களை நான் கண்டிருக்கிறேன்.
நான் : வாசகர்களைப் பற்றி சொன்னீர்கள். இன்று நம்முடைய தேர்ந்த எழுத்தாளர்கள் அனைவருமே முதலில் தேர்ந்த வாசகர்கள். ஆனால் வாகசன் எழுத்தாளனாக மலரும் நிகழ்வு என்றும் ஆச்சரியமூட்டுகிறது. நீங்கள் குறிப்பிட்டது போல இலக்கியத்தின் நுண்மை உணர்ந்த, சமகால மற்றும் செவ்வியல் இலக்கியங்களில் பரிச்சயம் உடைய பல வாசகர்களுடன் உரையாடியிருக்கிறேன். ஆனால் அவர்களில் கணிசமான பேர் எதையும் எழுதியதில்லை.
எஸ். ரா : ஆமாம். அது ஆர்வமூட்டும் விஷயந்தான். ஆனால் வாசகர்களை வேறொரு கோணத்திலும் நாம் ஆராயவேண்டும். படித்து அந்நேரம் புன்னகைத்துச் செல்லும் வாசகர்கள் ஏராளம். ஆனால் தனது ஆத்மார்த்கமான நிறைவிற்காகப் படிக்கும் வாசகர்கள் உண்டு. அவர்கள் அதிகமாகத் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. சமீபத்தில் அப்படி ஒருவரை சந்தித்தேன். அவர் ஒரு அரசு அலுவலர். அவரது வீட்டில் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. நடுவில் மேசை நாற்காலி, சுற்றிலும் வட்ட வடிவ அடுக்குகளில் நுற்றுக்கணக்கான புத்தகங்கள் ! துறை வாரியாக. என்னைக் காரில் அழைத்துச் செல்லும் போதோ, திரும்பி விடப் போகும் போதோ அவர் புத்தகங்களைப் பற்றி எதுவுமே பேசவில்லை. பிற்பாடு அவருடன் பணிபுரிபவர்களிடம் விசாரித்தேன். ” ஏதோ பொஸ்தகம் எல்லாம் நிறைய வச்சிருக்காரு சார்.. படிப்பாரு போல ” என்ற பதில் தான் கிடைத்தது. எழுத்தாளன் இயற்கையின் ஒரு நிகழ்வு என்று தான் நினைக்கிறேன். எனவே தான் இரண்டையும் “ Creation ” என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம். இயற்கை தீராமல் புதுமையைத் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது. பூ என்பதை விளக்க ஒரே ஒரு பூ போதுமே ! என் இத்தனை வகைகள்..? சிறிய நிறபேதங்கள், இதழ் வேறுபாடுகள், வாசனை வகைகளில் புதுமை என இயற்கை முடிவில்லாத சோதனையில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தவறாமல் ஒவ்வொரு படைப்பிலும் மேன்மை காக்கிறது. அதையே தான் எழுத்தாளனின் உருவாக்கத்திலும் செய்கிறது என்று எண்ணுகிறேன்.
வேறொன்றையும் குறிப்பிட இருக்கிறது. அது ஒருவன் தான் ஒரு எழுத்தாளன் என்று உள்ளுர உணரும் தன்மை. அவன் மேலேறி வருந்தோறும் அவனிடமிருந்து பல எளிய பழக்கங்கள், நட்புகள், ஏன் சில உறவுகள் கூட உதிரத்தொடங்குகின்றன. இவ்வாறு அவன் நுட்பமாக சுத்திகரிக்கப்படுகிறான்; தனியனாகிறான். ஒரு கட்டத்தில் ” நான் வேறு ” என்று உணரும் நாள் அவன் எழுத்தாளனாகிறான்.
நான் : தற்போதைய வசதிகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். உண்மைதான் இன்று ஒரு அரிய நூல் அது உலகத்தின் எந்த நுலகத்தில் இருந்தாலும் நமக்கு வாசிக்கக் கிடைக்கிறது. இணையத்தின் வீச்சு அப்படி. ஆனால் புதிய எழுத்தாளர்களின் வருகையில் இது குறிப்பிடத்தக்க புரட்சியை விளைவிக்கவில்லையே..
எஸ். ரா : உண்மைதான். வாசகர்களுக்கு இணையம் ஒரு வரம் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் குறிப்பிட்டது போல புதிய தலைமுறை எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மலரவில்லை என்பது ஒரு குறைதான். எனது ஒரு நண்பர் அவரது தாயாரின் பெயரால் கவிதை, சிறுகதை மற்றும் நாவல் என்று மூன்று துறைகளுக்கு விருது கொடுக்க விரும்பினார். அவரது நிபந்தனைகள் – வயது நாற்பதிற்குக் குறைவாக இருக்கவேண்டும். 3 தொகுப்புகள் வெளிவந்திருக்க வேண்டும். என்னிடம் சிபாரிசு செய்யச் சொன்னார். குறிப்பிடத்தக்கதாய் யாரையும் என்னால் சுட்ட முடியாமல் போனது சோகம் . வயது வரம்பைச் சற்று தளர்த்தியும் பயனளிக்கவில்லை. இது தான் இன்றைய நிலைமை. மற்றபடி, நான் ஏற்கனவே சொன்னது போல எழுத்தாளனை முழுமையாக உருவாக்க எந்த புறச்சத்தியாலும் முடியாது.
நான் : சார், நீங்கள் திட்டமிடுதலில் நிபுணர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சிறுபத்திரிக்கை, வெகுஜன இதழ், பயணங்கள், விழாக்கள், சினிமா வேலைகள், நாவல் வேலைகள் என்று விரிகிறது உங்கள் உலகம். இந்த இயக்கங்கள் ஒன்றை ஒன்று சமயங்களில் முட்டிக்கொள்வதுண்டா..?
எஸ். ரா : பெரும்பாலும் இல்லை. நான் ஒரு முழு ஆண்டுக்குத் திட்டமிடுபவன். உதாகரணமாக இருபது விழாக்கள் ஒரு வருடத்திற்கு என்று முடிவு செய்தால் அதற்கு மேல் ஒத்துக்கொள்வதில்லை. அந்த வருடத்தில் கொண்டு வரவேண்டிய நாவல், அது கோரும் களப்பணி ஆகியவற்றை வகுத்துக்கொள்கிறேன். மிக முக்கியமாகக் கருதும் படங்களை மட்டுமே எழுத ஒத்துக்கொள்கிறேன். விடுமுறையும் உண்டு. மே மாதம் முழுவதும் சென்னையிலேயே இருப்பதில்லை; குடும்பத்துடன் வெளியூர். அதுபோல டிசம்பர், ஜனவரி மாதத்திட்டங்கள் கொஞ்சம் தளர்வாக இருக்குமாறு பார்த்துக்கொள்கிறேன். சங்கீத சீசன், புத்தக விழா என்று வருவதால் அந்த மாதங்களில் பெரிய வேலைகளை ஆரம்பிப்பதில்லை.
மற்றபடி, எனது எழுத்துப்பணிகள் இரவிலேயே நடக்கின்றன. வழக்கமாக இரண்டு மணி. காலையில் முந்தைய நாள் எழுதியவற்றில் திருத்தங்கள் செய்கிறேன். பின்பு எல்லா இ-மெயில்களுக்கும் பதில் – கிட்டத்தட்ட ஒரு மணி நேரம். பின்பு படிப்பு அல்லது என்னைப்பார்க்க வருபவர்களைச் சந்தித்தல். மத்தியானம் ஒரு படம், மாலையில் சிவன் பூங்காவில் நடை.
*********************