திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ புத்தகத்தின் முன்னுரையில் தெலுங்கில் பொருட்படுத்த கூடிய அளவுக்கு இலக்கியம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.
சென்றாண்டு செண்னை புத்தக கண்காட்சியில் தமிழினி பதிப்பகத்தில் சில புத்தகங்கள் வாங்கிவிட்டு வெளியே வந்து விலைப்பட்டியல் போடப்பட்டு கொண்டிருந்த போது ஒருவர் ‘அஞ்சலை’ நாவலை கொடுத்து இதையும் வாங்கி கொள்ளுங்கள் என்றார்.நான் அதை தயக்கத்துடன் பார்த்துவிட்டு வேண்டாம் என்றேன்.
‘எப்படி எழுதியிருக்கார் படிச்சு பாருங்க’ என்றார்.
‘வேண்டாம்ங்க’ என்றேன்.
‘சரி நீங்க படிச்சி பார்த்துட்டு நல்லாயிருந்தா பணத்த மணியார்டர் பண்ணுங்க , இல்லாட்டி வேண்டாம்’ என்றார்.
அப்படி செஞ்சா அது எழுத்தாளர மதிக்காத மாதிரி ஆயிடுங்க
‘பரவாயில்ல எடுத்துட்டு போங்க’.அவர் விடவில்லை.என்ன செய்வது என்று தெரியாமல் பணத்தைக் கொடுத்து வாங்கி கொண்டேன்.
கண்மணி குணசேகரன் என் மாவட்டத்துக்காரர் என்பதை அறிந்து கொண்டேன்.அது பெண்ணியம் பேசும் நாவல் என்று நினைத்தேன். ஆனால் அவர் அஞ்சலைக்காக வாக்காலத்து வாங்கவே இல்லை.மாறாக அவள் வாழ்வை எதிர்த்து நிற்க திராணி அற்றவளாக ஓடி கொண்டேயிருக்கிறாள். பல இடங்களில் ஒரு பெண் உடம்பிற்குள் ‘கூடு விட்டு கூடு பாய்வது’ என்று சொல்வார்களே அது போல எழுதியிருக்கிறார்.
அவரை அவர் வேலை செய்யும் பனிமனையில் பார்க்கச் சென்றேன்.அன்று அவர் வேலைக்கு வரவில்லை.வேறொரு நாள் சென்று பார்க்க வேண்டும்.நான் நேரில் பார்க்க சென்ற முதல் எழுத்தாளர். திருநெல்வேலிக்கு அந்தப் பக்கம் இருப்பவர்கள் தான் எழுதுவார்களா, நெய்வேலிக்கியெல்லாம் இடம் இல்லையா என்று ஏங்கியது உண்டு.அந்த வகையிலும் எனக்கு சந்தோஷமே.
குறிஞ்சிப்பாடி அன்பு புத்தக நிலையம் பரசுரித்த ‘அஞ்சலை’ தமிழினி மூலம் கண்டறியப்பட்டு மறு பிரசுரம் செய்யப்படாமல் இருந்திருந்தால் அவருக்கு கிடைக்க வேண்டிய இந்த அங்கீகாரம் கிடைத்திருக்குமா?.சுந்தர ராமசாமி விருது……..தெரியவில்லை.இனி கண்டிப்பாக கண்மனி குனசேகரனின் ஆக்கங்கள் எப்படியும் மொழிபெயர்க்கப்படும்.
தெலுங்கில் வசந்தகுமார் போன்றோர் இருப்பார்களா?
அங்கிகரிக்கப்பட்டவர்களயே மறுபடி மறுபடியும் அங்கிகரிக்கும் இன்றைய சூழலில் புதிதாக ஒருவரை அங்கிகரிப்பது எத்தனை பெரிய சவால்.?
தெலுங்கு என் தாய்மொழி.ஆனால் எழுத படிக்க தெரியாது.ஓரளவு பேசுவேன்.அவ்வளவுதான். கண்டிப்பாக அதன் அடிப்படையில் நான் இதை கேட்கவில்லை.
தலித் இலக்கியம் சார்ந்து,நக்சல்பாரி அமைப்பு சார்ந்து (இஸம் சார்ந்தல்ல), இசை மரபு சார்ந்து (நான் பார்த்த சில நல்ல தெலுங்கு படங்கள் இசையை சார்ந்தவை) யாரேனும் நன்றாக எழுதியிருக்ககூடும்.
இது பொது புத்தி சார்ந்த கேள்வியே.ஆதாரமெல்லாம் ஏதுமில்லை.எனக்கு கன்னடத்தில் தீவிரமான திரைப்படங்கள் எடுக்கப்படுவது தியோடர் பாஸ்கரன் கட்டுரையை படித்தபின் தான் தெரிந்தது.ஆகவே இந்த கேள்வி தவறாக கூட இருக்கலாம்.கேட்க வேண்டும் என்று பட்டது.கேட்கிறேன்.
நன்றி,
ச.சர்வோத்தமன்.
அன்புள்ள சடகோபன் சர்வோத்தமன்
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. வெளிவந்த, மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளைப் பற்றியே என் மதிப்பீடு உள்ளது. அறியப்படாத, புறக்கணிக்கப்பட்ட நல்ல படைப்புகள் இருக்க நியாயம் உண்டு. அதுவும் கடுமையான வர்க்க முரண்பாடுகள் உள்ள தெலுங்குச்சூழலில். அதையும் முன்னுரையில் சொல்லியிருக்கிறேன்.
தமிழில் வசந்தகுமார் போன்ற ஒருவர் ஒரு நூலுக்கு கிடைப்பது ஒரு நல்லூழ். இளம் படைப்பாளிக்கு அவர் நூலை செம்மைப்படுத்துவது மிகமிக உதவிகரமானது. ஆனால் அவரைப்போல அதிகம்பேர் இல்லை.
தமிழில் இருந்து சாகித்ய அக்காதமி விருது பெற்று பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும் படைப்புகள் பெரும்பாலும் மேலோட்டமானவை. அதிகார அமைப்புக்கு வேண்டியவர்களால் உருவாக்கபப்டுபவை. ஆகவே தமிழைப்பற்றியும் இதேபோன்ற எண்ணம் பிறமொழி வாசகர்களிடையே உள்ளது என்பதை தேசியக் கருத்தரங்குகளில் கண்டிருக்கிறேன். மலையாளத்தில் ஆற்றூர் ரவிவர்மா போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் செய்யும் முயற்சிகளால் இப்போதுதான் இவ்வெண்ணம் மறைகிறது
ஜெ.
நன்றி
ஜெயமோகன்