பெருவெளி-இதழ் அளவிலும் பெரியது( A4 Size), பக்கங்களும் அதிகமுள்ளது(102).
பாலஸ்தீனியர்களால் தேசியக்கவிஞராக அங்கீகரிக்கப்பட்ட மறைந்த கவிஞர் மஹ்மூத் தர்வீஷ் ஆகஸ்ட் பற்றி ஒரு அஞ்சலிக் கட்டுரை உள்ளது. (கவிஞராக, செயல்வீரராக, இயக்கப் போராளியாக இருந்தவர். இந்த நூற்றாண்டின் ஒரு கலைஞன், அறிவுஜீவி எப்படி ஒரு போராட்ட உந்து சக்தியாக மாறுகிறான் என்பதற்கான முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். கவிதை உலகை மாற்றிவிடாது என்றாலும் ஒரு போர்க்குணமிக்க மனிதனை அதுதான் உருவாக்குகிறது என்றவர்.)
இலங்கை பேராதெனிய பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் பணியாற்றும் கல்வியியலாளரான கலாநிதி எஸ். எச். ஹஸ்புல்லாவுடன் ஒரு கலந்துரையாடல் நடத்தி இனங்களின் வரலாறே இலங்கையின் வரலாறு என்ற அவரின் விரிவான கருத்தைப் பதிவு செய்திருக்கிறது.
இன்று இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டுக்கும் நாடுகளிற்கு இடையிலான அனைத்து வகை போராட்டங்களிற்கும் டிஜிடல் தொழில் விளையாட்டுகளே பிரதான காரணியாக இருக்கின்றது என ஒரு கட்டுரை இயம்புகிறது.
இஸ்லாம் இயக்கங்கள் சந்திக்கும் நிலை, அரசியல் பௌத்தம், சிங்கள இனவாதம் என்ற நீண்ட கட்டுரைகள் உள்ளன.
முற்றிலும் மாறுபட்ட கட்டமைப்பும், கதைப்போக்கும் கொண்ட சிறுகதைகள் படித்து ரசிக்கத்தக்கனவாக உள்ளன.
கவிதைப் பக்கங்கள் நிறையவே உள்ளன.
அதைவிட அதிகம் புத்தக அறிமுகங்கள் (சுமார் 13 புத்தகங்கள் காணக் கிடைக்கின்றன.)
பழமொழிகள் பகுதியில்சமூக சீர்திருத்தவாதிகள் கவனத்தைக் கவரும் ஒரு பழமொழி உள்ளது. ‘செத்தவன் பொண்டில முடிச்சாலும் / உட்டவன் பொண்டில முடிக்கப்படாதாம்’ என்பதே அது. செத்துப்போன ஒருவனின் மனைவியை வேறொருவன் திருமணம் முடிக்க நாடினால் அவளது சுத்தப் பரிசோதனை வெளிப்பாட்டின் பின் அந்தப் பெண் விரும்பினால் அவனைத் திருமணம் செய்து கொள்ளலாம். அவ்வாறு திருமணம் செய்தால் அதில் எந்தவித வாதப்பிரதிவாதங்களுக்கும் சந்தர்ப்பம் இல்லை. அதேவேளை விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணை மணக்கும்போது பல விஷயங்களை அலசி ஆராய வேண்டியுள்ளது. ஏன் அவள் விவாகரத்துப் பெற்றாள்? அவள் நடத்தை சந்தேகத்திற்குரியதா? அல்லது நடத்தை கெட்டவள் என்பது நிரூபணமானவளா? குணவியல்பில் குறையுள்ளவளா? தீராத ரோகங்களுக்கு ஆளானவளா? கணவனை, அவனது குடும்பத்தை மதித்து நடக்கத் தெரியாதவளா? என்றெல்லாம் பார்த்து மணமுடிக்கவேண்டும் என்று சொல்கிறது.
இலக்கிய நிகழ்வுகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. வளர நினைக்கும் ஒரு படைப்பாளி உண்மையில் விமர்சனங்களை விருந்து வைத்துக்கேட்க வேண்டும். (பாவலர் பஸில் காரியப்பர் தமது தலைமையுரையில். . ), காண்டேகரின் இலக்கிய ஓட்டம், அப்பாஸின் கதைக்கோப்பு, முஹம்மது பஸீரின் சமூகப் பார்வை, ஜெயகாந்தனின் எதிர்ச்சிந்தனை, ரவீந்திரநாத் தாகூரின் விடுதலை வேட்கை என்று கவரப்பட்ட நான். . .(நாவலாசிரியர் அ.ஸ.அப்தஸ்ஸமது) திரையிசையில் சில நல்ல கவிதைகள் பாடலாயிருக்கின்றன உ.ம். பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது…. , இளைய நிலா பொழிகிறது. . ., விழியில் விழுந்து இதயம் நுழைந்து. . .(ஆசுகவி அன்புடீன்)
அரவாணிகள் குறித்து இரு பிரதிகளை அறிமுகம் செய்திருக்கிறது. தமிழ்ச் சூழலில் அரவாணிகள் குறித்த பதிவுகள் மிக அரிதாகவே இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் ரேவதியின் உணர்வும் உருவமும் (அரவாணிகள் வாழ்க்கை கதைகள்), லிவிங்ஸ்மைல் வித்யாவின் நான் சரவணன் வித்யா என்ற இருதொகுதிகளும் வெளிவந்துள்ளன. அரவாணிகள் பரிதாபத்திற்குரியவர்கள் அல்ல. (உடலியல் சார்ந்த) அவர்களின் உடலை வைத்து பரிதாபப்படுவதுதான் அவர்கள் மீது செலுத்தப்படும் மிகப் பெரிய வன்முறை. அரவாணிகளும் மனிதர்களும் இறைவனின் படைப்பு. ஆண் பெண் போல் ஒரு மூன்றாம் பாலினம் என்ற ஒரு இயல்புப் போக்கே அவர்கள் சார்ந்த நிலைப்பாடாக இருக்கவேண்டும் என்பதே இப்பிரதிகள் முன்வைக்கும் மனித வாழ்வின் அரசியலாகும்.
. . .இன்னும் பல விஷயங்கள் இதழில் உள்ளன. ஒவ்வொன்றையும் எடுத்துச் சொல்ல பக்கங்கள் போதாது.
தனி இதழ் விலை ரூ.120
வருடம் ரூ.520
தொடர்புக்கு:
பெருவெளி,
# 31/நீ, உப தபாலக வீதி,
பதுர் நகர்,
அக்கரைப்பற்று–01.
ஸ்ரீலங்கா.