அன்பார்ந்த நண்பர்களே,
வணக்கம்
அலங்கார மேடையேறி அறிவார்ந்த கருத்துக்களைச் செறிவுடன் எடுத்துரைக்கும் கலை எனக்குத் தெரியாது. அந்த ஆற்றலும் கிடையாது. அன்னியப்பட்டுக் காட்சிப் பொருளாவதில் எப்போதுமே கூச்சந்தான். கூச்சத்திலேயே என் காலமும் ஓடியடைந்துவிட்டது.
எனக்குத் தொழில் எழுத்து. தெரிந்ததெல்லாம் எழுத்து. அது போதும்.
கற்பனை வானில் கண்டமானிக்கிப் பறந்து திரிந்த வெள்ளித் திரையை இழுத்துப் பிடித்து வசக்கிக் கால் பொசுக்கும் எதார்த்த மண்ணில் விரித்துப் பாமர மக்களின் வாழ்க்கையைக் காட்சிகளாக வரைந்த அசல் கலைஞனுக்கும் இலக்கியத்தை சுவாசிக்கும் படைப்புக் கலைஞர்களுக்கும் தரமான படைப்புகளைத் தேடித் தேடித் தேன் குடிக்கும் பட்டாம்பூச்சிகளுக்கும் சொல்லிக் கொள்ள ரெண்டொரு வார்த்தை உண்டு. அதை அமர்ந்தவாறே பகிர்ந்துகொள்ள உங்கள் அனுமதியை வேண்டுகிறேன்.
இளைய படைப்பாளிகள் மூத்த படைப்பாளிகளை இனங்கண்டு அங்கீகரித்து கவுரவிக்கும் அரிய நிகழ்வை அனுபவிப்பதில் நெஞ்சம் நெகிழ்கிறது, மகிழ்கிறது. இன்னும் சில ஆண்டுகள் பிழைத்துக் கிடந்து தமிழிலக்கியத்துக்கும் தமிழுக்கும் தொண்டாற்றும் உற்சாகம் எனக்குள் மடைதிறக்கிறது.
தன்னிலிருந்தே தமிழிலக்கியம் தொடங்குவதாகப் பீத்திக்கொள்ளும் தற்புகழ்ச்சியாளர்களின் தம்பட்டமும் விதவிதமான குழுக்களின் வெற்றுக் கூச்சலும் குருபீட போதனைகளும் சாதியக் காழ்ப்பும் கலந்த பேரிரைச்சலுக்கிடையில் இப்படியொரு ஆரோக்கியமான சூழல் உருவாகியிருப்பது ஆறுதலளிக்கிறது. சூழலை உருவாக்கியவர்களை மனசாரப் பாராட்டியாகணும்.
இலக்கியத் தளத்தில் நான் ஓரங்கட்டப்படுவதாக, ஒதுக்கப்படுவதாக, இருட்டடிப்பு செய்யப்படுவதாக எப்போதுமே எனக்கு சுய ஆதங்கம் கிடையாது. இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அப்படியே இருந்தாலும் என்னைப் புறக்கணித்துவிட்டீர்களே என்று கூரைமீதேறிக் கூவி நியாயம் கேட்கவா முடியும்?
பொய் மேகங்கள் உறுமி ஊர்கூடி ஒரு பாட்டம் மழை பெய்துவிட்டு மறைந்து போகும். அல்லது காயும் வெயில் கண்டு மிரண்டு கலைந்தோடிவிடும். அந்தத் தெளிவில் வாழையடி வாழையாக வரும் வாசகனுக்கு உண்மை வெட்டவெளிச்சமாகிவிடும். ஓலைச் சரசரப்புகளை ஒதுக்கித் தள்ளி ஓரங்கட்டிவிட்டுத் தான் உண்டு தன் வேலையும் உண்டு என்று பாடு சோலியைப் பார்ப்பவன் நான். காலத்தில் பூத்துக் கரிசக்காட்டில் மணக்கும் மஞ்சணத்திப் பூவாக இருப்பதில் சந்தோசந்தான்.
விருதுகள் மீது எனக்கு விருப்போ வெறுப்போ கிடையாது. அதை எதிர்பார்த்து எழுதினால் அது இலக்கியத்திற்கு செய்யும் பெரிய துரோகம். என் எழுத்து என்னை செழுமைப்படுத்தணும், முழுமைப்படுத்தணும். பிறர் சிந்தனையைக் கிளறணும். என் வலியை வாதையை இன்ப துன்பத்தை அவர்களுக்கு உணர்த்தணும். அந்த வெற்றிதான் எனக்குக் கிடைக்கும் பெரிய விருது.
அரசியல் பணம் பதவி சாதி செல்வாக்கு சொறிதல் என மலினப்படுத்தப்பட்டுவிட்ட பரிசுகளும் விருதுகளும் பொற்கிழிகளும் பட்டங்களும் அருவருப்பூட்டுகின்றன, குமட்டுகின்றன. எங்கோ ஒரு மூலையிலிருந்து நியாயமான நடுநிலையான அங்கீகாரம் கிடைக்கும்போது மனசு ஆசுவாசப்படுகிறது. நாலு பேர் நமது எழுத்துக்களையும் படித்து உணர்வுகளைப் புரிந்து பாராட்டுகிறார்கள். பலருக்குச் சொல்கிறார்கள். அந்த மரியாதையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட உடனேயே இணைய தளத்தின் சகல மூலைகளிலிருந்தும் விவாதங்கள் கிளம்பியிருப்பதாக அறிகிறேன். இந்த ஆரோக்கியமான விவாதங்கள்தான் தமிழிலக்கியத்தின் பரிமாணத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். உலக அரங்கில் தமிழை நிலை நிறுத்தும். அதில் இளையவர்களின் பங்கு மகத்தானது.
கலைக்கு சாதி மதம் இனம் குலம் கோத்திரம் கிடையாது. அது எண்ணற்ற கோள்கள் சஞ்சரிக்கும் பிரபஞ்ச வெளி. நூறு பூக்கள் மலரும் நந்தவனம். அது கருக்கொண்டிருக்கும் உணர்வுகள் உலகளாவியவை. அவற்றை சாதி மதத்துக்குள் அடைத்துவிட முடியாது.
கலைஞன் சுதந்திரமானவன். கடலில் குளித்து வெயிலில் காய்ந்து காற்றில் தலையுலர்த்தும் காடோடி. சமூகமும் சட்டமும் பச்சை குத்தியுள்ள சாதி முத்திரையால் அவனது விரல்களுக்கு விலங்கிடமுடியாது. அந்தணச் சிறுவனைக் கொண்டு பாலுத்தேவனின் கன்னத்தில் அறையச்செய்து பரம்பரை பரம்பரையாகக் காலங்காலமாக சமூகத்தின் ஆழ்மனசில் படிந்து உறைந்து கிடக்கும் சாதியத்தைச் சாடும் தார்மீகர்களுக்கும் சொந்தக்காரன் அவன்.
சாதி வேலிகளைத்தாண்டிக் கிளைக்கும் உன்னதமான உறவுகளை அவன் போற்றிப் பாடுவான். அறங்கெட்டு ரத்த சோகை பீடித்த வறட்டுத் தத்துவங்களின் தரங்கெட்ட நிலை கண்டு வெந்து நொந்து புழுங்குவான். சமூகத்தின் வேர்களை தொன்மங்களை விழுமியங்களை வராக அவதாரமெடுத்துத் தேடி, அகழ்ந்தெடுத்து வருங்கால சந்ததிக்கு வழங்கவேண்டிய வரலாற்றுக் கடமை அவனுக்குண்டு. கடவுள்களின் பிறவிகளை மீள்பார்வையில் விசாரணைக்குட்படுத்தும் மனுசக்கடவுள் அவன். அவனை விசாரிக்க அவனை ஆழமாகப் புரிந்த யாருக்கும் உரிமையுண்டு.
இன்றைய இளையவர்கள் அறிவிலும் புரிதலிலும் என்னைவிட மூத்தவர்களாக இருக்கிறார்கள். அசாத்திய வேகம். அதனால் நெருக்கமாகிவிடுகிறார்கள். அந்தத் தோழமை முதுமையை மறக்கச் செய்கிறது.
உலகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் இவர்கள் விரல்களால் பரிமாறிக் கொள்ளும் மவுன மொழி வியப்பளிக்கிறது. இவர்களுக்கு உலக இலக்கியங்களின் பரிச்சயம் வாய்த்திருக்கிறது. அவற்றுக்கு ஈடான, ஏன் அவற்றை மிஞ்சும் உன்னத இலக்கியங்கள் நம்மிடமும் உண்டு. அவற்றை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. சொந்த மரபில் வேர் பிடித்து வளரும் மரம் போலாகுமா?
இணைய தளத்தின் வாயிலாக ஒரு நிமிசத்தில் இணைந்து செயல்பட முடிந்த உங்களால் எதையும் சாதிக்க முடியும். தரமான தமிழிலக்கியப் படைப்புகளை உலகுக்கு இனங்காட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் உங்களுக்குண்டு. அதில் மொழிபெயர்ப்பின் பங்கு மிகப்பெரிது. பிறமொழிப் படைப்புகள் மலையாளத்திலும் கன்னடத்திலும் வங்கமொழியிலும் எவ்வாறு உடனுக்குடன் பெயர்த்துக் கொண்டுவர முடிகிறது? தங்கள் படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு செல்ல முடிந்தது? அந்த வல்லமை நமக்கில்லையா?
தமிழிலக்கியச் சூழலில் மொழிபெயர்ப்பைப் பொறுத்தமட்டில் பெரிய வெற்றிடம் இருப்பதாகவே கூறலாம். அதை நிரப்பினாலொழிய நம்மால் கரையேறமுடியாது. இருக்கிற சில மொழிபெயர்ப்பாளர்களிடம் நிறையவே போதாமை உள்ளதாகத் தெரிகிறது. அவர்களைச் சொல்லியும் குத்தமில்லை. மொழிபெயர்க்க விரும்பியதையெல்லாம் வெளியிட பதிப்பாளர்கள் முன்வருவதில்லையே!
சாகித்திய அகாடமி சாகித்திய அகாடமி என்று ஒண்ணு உண்டல்லவா? அவ்வப்போது கூட்டங்கள் நடத்தி இலக்கியக் கோட்பாடுகளைப் பிளந்துகட்டுவார்களே அவர்கள்தான். ஆண்டுதோறும் பரிசளிப்புச் சடங்கு நடத்திப் பரபரப்பாகப் பேச வைப்பார்களே அவர்கள்தான். பரிசளிக்கப்பட்ட படைப்புகளை (தரம் தகுதி ஒருபுறம் இருக்கட்டும்) பரஸ்பரம் எத்தனை இந்திய மொழிகளில் பெயர்த்து அறிமுகப்படுத்தியிருப்பார்கள்? அவர்களுக்குத்தான் வெளிச்சம்.
இளையவர்களே, தரமான தமிழ்ப் படைப்புகளை உலகத்தோர்க்கு இனங்காட்டுங்கள். அப்போதுதான் பிற நாட்டார் அவற்றுக்குத் தலை வணங்குவார்கள்.
மொழிக்காவலர்களுக்கு அடியேனின் அன்பான வேண்டுகோள். அரசியல் நெருக்கடி நிர்ப்பந்தம் அல்லது சுய ஆதாயத்துக்காக நேர்மையை அடகுவைத்துவிட்டு ஒலிபெருக்கி எழுத்துக்களை மொழிபெயர்த்து உலக அரங்கில் உலவ விடுவதற்குத் துணை போகாதீர்கள். அதனால் தமிழுக்கும் தமிழனுக்கும் தலைகுனிவுதான்.
அதுக்கு உடந்தையாவதை இளைய சமுதாயமும் காலமும் மன்னிக்காது. பாரதி உங்களைப் பரிகசிப்பான்.
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை செய்வாரடி _ கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி.
ரெம்ப நன்றி.
(2011 ஆம் வருடத்திற்கான விஷ்ணுபுரம் விருதினைப் பெற்றுக்கொண்ட போது திரு பூமணி அவர்கள் ஆற்றிய ஏற்புரை)