அறிவியல்கல்வியும் கலைக்கல்வியும்

art

 

அன்புள்ள ஜெ.எம்

நான் முறையாக ஒரு பொறியாளர். பொறியியல் படித்த பிறகு இப்போது ஒரு நிறுவனத்தில் வேலைபார்க்கிறேன். இந்த வேலைக்கு வருவதுவரை நான் எதைப்பற்றியும் சிந்தனையே செய்ததில்லை. இப்போது எனக்கு நல்ல சம்பளம் உண்டு. சிறைவான வாழ்க்கைதான். ஆனால் எனக்கு இந்த வேலையில் இருக்கவே முடியவில்லை. ஏன் இந்த வேலையை பார்க்கவேண்டும் என்ற எண்ணம்தான் இருக்கிறது. பொறியியல் படிப்பு படிக்கும்போது நானெல்லாம் கடுமையாக உழைத்து படித்தேன். மற்ற கலைப்படிப்பு மாணவர்கள் எல்லாம் சுதந்திரமாக இருந்தார்கள். அவர்களுக்கு படிப்பதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை. நான் அவர்களைப்பற்றி மதிப்பாக நினைத்தது கிடையாது. நான் படிப்பதுதான் உருப்படியான படிப்பு என நினைத்தேன். ஆனால் இன்றைக்கு சந்தேகமாக இருக்கிறது. திரும்பத்திரும்ப ஒரேபோல மெக்கானிக்கலான வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன். இதிலே அறிவுக்கு ஒரு இடமும் இல்லை. இதற்காகவா இந்த உழைப்பு என்று நினைப்பு வருகிறது

ஆனால் என்னுடைய தோழர்களுக்கு பிரச்சினையே இல்லை. அவர்களுக்கு வேலையும் சனிக்கிழமை கொண்டாட்டமும்தான் வாழ்க்கை. எதைப்பற்றியும் உருப்படியாக எதுவும் தெரியாது. நெட்டில் மேய்ந்து சில தகவல்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள். சினிமா என்றால் ஹாலிவுட் சினிமா. சங்கீதம் என்றால் அதேமாதிரி அமெரிக்க சங்கீதம். பேஷன். கொஞ்சம் மேலோட்டமான அரசியல். எல்லாவற்றையும் கிண்டலும் நக்கலுமாக பேசிக்கொள்வது. டிவிட் செய்வது .எஸ்ஸெம்மஸ் அனுப்புவது. எல்லாரும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். ஒன்றுமே தெரியாமல் இருக்கிறோம் என்பதே தெரியவில்லை. இவர்களுடன் சேர என்னால் முடியவில்லை

சிலசமயம் நான் இதையெல்லாம் உதறிவிட்டு என்னுடைய மூளைக்கு சவாலான ஏதாவது துறைக்கு போனால் என்ன என்று நினைப்பேன். ஆனால் அதற்கு இனிமேல் வாய்ப்பு இல்லை என்றும் எனக்கு படுகிறது. என் வடது 32. குடும்பம் இருக்கிறது. எப்படியோ இங்கே வந்து மாட்டிக்கொண்டேன். இந்த வேலைக்கு எதற்கு இவ்வளவு படிப்பு? நண்பர்களிடம் பேசினால் என்ன சொல்கிறார்கள் என்றால் நாம்தான் கிரீம் என்று. கிரீமே இப்படி என்றால் தமிழ்நாட்டிலே அறிவுத்துறை என்றால் ஒன்று உள்ளதா? நான் இதை விட்டு வெளியேறலாமா?

சிவா ராம்சந்தர்

 

அன்புள்ள சிவா

நீங்கள் சொல்வது உண்மைதான், இந்தியாவில் அறிவியல்மாணவர்கள் கலைப்படிப்பு மானவர்களை விட கடுமையாக உழைக்கவேண்டியிருக்கிறது. அறிவியல் மாணவர்களை விட தொழில்நுட்ப படிப்பு மாணவர்கள் அதிகமாக உழைக்கிறார்கள். ஆகவே அந்த துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களை முதல்தரத்தினர் என நினைத்துக்கொள்கிறார்கள்

உண்மையில் நம்முடைய படிப்புகள் இங்கே கையாளப்படும் விதம்தான் அந்த வேறுபாட்டை உருவாக்குகிறது. சரியான முறையில் கற்பிக்கப்பட்டால் கலைக்கல்விக்குத்க்தான் மிக அதிகமாக படிக்கவேண்டியிருக்கும். இலக்கியம், வரலாறு, சமூகவியல், பொருளாதாரம் போன்ற துறைகளில் உண்மையில் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டமே இருக்கமுடியாது. காரணம் அவை கருத்துநிலைகளைப்பற்றிய, கருத்தியல்களை பற்றி படிக்கின்றன. அவை ஒவ்வொரு வருடமும் வளர்ந்து உருமாறிக்கொண்டிருக்கின்றன. புதியபுதிய கொள்கைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. யோசித்துப்பாருங்கள். இன்றைய பொருளியல்படிப்பு உண்மையில் இன்றைய பொருளியலை படிப்பதாக இருந்தால் அதைவிட சிக்கலான,சவாலான ஒரு படிப்பு இருக்கமுடியுமா?

ஆனால் இங்கே உள்ளது மனப்பாடக்கல்வி. நம் கல்விநிலையங்களில் குறிப்பிட்ட சில பாடங்களை வைத்து அவற்றை மனப்பாடம் செய்து அவற்றுக்குள் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு அந்தப்பாடங்களைக்கொண்டே பதில் சொன்னால்போதும் என்ற நிலை உள்ளது. அப்படி கச்சிதமான பதில் சொல்லும் மாணவர் சிறந்தவராக மேலே எழுந்து வருகிறார். ஆகவே கலைக்கல்வி படிக்காமல் கடைசிநிமிடத்தில் ஒப்பேற்றவேண்டிய ஒன்றாக ஆகிவிட்டது. ஒரு புத்தகம் கூட படிக்காமல் பொருளியலில் இலக்கியத்தில் வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்று வெளிவர முடிகிறது.

இன்றுகூட இக்கல்வியை கல்லூரிப்பாடத்திட்டத்துக்கு வெளியே தானாக முனைந்து வாசிக்க முயலும் மாணவர்கள் இரவுபகலாக வாசித்துக்கொண்டிருக்கவேண்டிய நிலைதான் உள்ளது. ஒரு சாதாரண சமூக நிகழ்வை புரிந்துகொண்டு சமூகவியல்கோட்பாடுகளுடன் இணைத்துக்கொள்ள பலகோணங்களில் பற்பலநூல்கள் வழியாக அதை அணுகியாகவேண்டும். ஏன், தமிழிலக்கியத்தை ஒருவன் முறையாகவும் முழுமையாகவும் முதுகலை படிப்புக்குள் படித்து முடிக்கவேண்டும் என்றால் அவன் படிக்கவேண்டிய, உள்வாங்கவேண்டிய நூல்கள் எவ்வளவு? குறைந்தது ஐந்நூறு நூல்களாவது வரக்கூடும்.

அடுத்தபடியாகவே அறிவியல் கல்வி. அதுவும் பாடத்திட்டத்தின் எல்லைக்குள் உள்ளது. ஆனாலும் அதில் இங்கே அடிப்படை தகவல்களை மனப்பாடம் செய்தாகவேண்டிய கட்டாயம் உள்ளதனால் படிப்பு ’சுமை’ அதிகம். என் மனைவியில் வேளாண்மை இளங்கலை பாடத்திட்டத்தை பாத்திருக்கிறேன். நூற்றுக்கணக்கான பக்கங்களுக்கு செடிகள், பூச்சிகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விதைகள் பற்றிய வெறும் தகவல்கள். மிகக்குறைவாகவே கொள்கைகளும் கோட்பாடுகளும் இருந்தன. அதாவது புரிந்து உள்வாங்கிக்கொள்ளவேண்டியவை மிகக்குறைவு.

பொறியியல், மருத்துவப்படிப்புகள் இதைவிட அதிகமான வெற்றுத் தகவல்குவியல் கொண்டவை.செய்து பார்க்கவேண்டியவையும் இருப்பதனலால் ’சுமை’ இன்னும் அதிகமாக ஆகிறது. ஆனால் நான் கவனித்தவரை கருத்துநிலைகளும் கருத்தியல்களும் மிகமிகக் குறைவாகவே இப்படிப்புகளில் உள்ளன. சுயமாக சிந்திக்கவேண்டிய சவால்ம் அனேகமாக இருப்பதில்லை. தெரிந்துகொண்டாகவேண்டியவையே உள்ளன.

ஆகவே உண்மையில் சரியானபடி கற்பிக்கப்பட்டால் கல்வியில் இவற்றின் முக்கியத்துவம் நேர் தலைகீழ் வரிசையில் இருந்தாகவேண்டும். இவற்றுக்குச் செலுத்தப்படும் உழைப்பும் அதே வரிசையில் இருந்தாகவேண்டும். சமூகத்தின் மிகச்சிறந்த மூளைகள் முதலில் கலைக்கல்விக்கும் அதன்பின் அறிவியலுக்கும்தான் செல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு சமூகத்தின் கனவுகளை வடிவமைப்பவன், கொள்கையை வகுப்பவன் கலைக்கல்வி கற்று வெளிவருபவனே. நானறிந்தவரை வளர்ந்த நாடுகளில் அந்நிலைதான் உள்ளது.

இங்கே அப்படி இல்லை என்பதனால்தான் நாம் வெறுமே தொழில்நுட்ப ஊழியர்களை மட்டும் உற்பத்தி செய்யும் சமூகமாக இருக்கிறோம். அந்த ஊழியர்களை நம் நாட்டுக்காக பயன்படுத்திக்கொள்ள நமக்கு தெரியவில்லை. அவர்களை ஏற்றுமதிசெய்து சம்பாதிக்க மட்டுமே முடிகிறது.

என்ன சிக்கல் என்றால் நம்முடைய மிகச்சிறந்த மாணவர்கள் இளமையிலேயே தொழில்நுட்பக் கல்விக்கு ஆற்றுப்படுத்தப்படுகிறார்கள். அதன் தகவல்களை மூளைக்குள் நிரப்பவும் திருப்பி கக்கவும் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். காலப்போக்கில் அவர்களின் புரிதல்திறன் மிகமிக குறைவாக ஆகிறது. ஒரு அசலான கருத்தை புரிந்துகொள்ளவே அவர்களில் மிகப்பெரும்பாலானவர்களால் முடிவதில்லை. அவர்களால் தகவல்களை மட்டுமே உள்வாங்க முடியும். தகவல்களை மட்டுமே சொல்லமுடியும். தகவல்களை மட்டுமே விவாதிக்கவும் முடியும். ஒருபோதும் கருத்துக்களை நோக்கி வரமுடிவதில்லை.

இதனால் இவர்களின் ரசனையும் தர்க்கத்திறனும் பரிதாபகரமானவையாக உள்ளன. நான் பார்த்தவரையில் இங்குள்ள மருத்துவர்கள் அளவுக்கு ரசனை மழுங்கிய ,மூளைத்திறன் குறைந்த மனிதர்களே இல்லை. ஒரு சராசரி மருத்துவரிடம் நம்முடைய நோய் தவிர எதைப்பற்றியும் பேசமுடியாது. சிலசமயம் ரயிலில் ஒரே கூபேயில் அவர்களுடன் பயணம்செய்ய நேரும். அவர்கள் பேச்சைக்கேட்டால் ரயிலை விட்டு இறங்கி ஓடிவிடத்தோன்றும். சமீபத்தில் எர்ணாகுளம் சென்றபோது கூபேயில் ஓர் இருதயநிபுணருடன் பயணம்செய்தேன். ஒரு கட்டத்தில் அவருக்கு ஏதாவது மூளைவளர்ச்சி பிரச்சினை உண்டா என்றுகூட ஐயப்பட்டேன்.

அடுத்தபடியாக பொறியியலாளர்கள், கணிப்பொறியாளர்கள். பெரும்பாலும் அவர்களை சுந்தர ராமசாமி சொன்னது போல ‘அறியாமை மட்டுமே அளிக்கும் பரிசுத்தமான தன்னம்பிக்கை கொண்டவர்கள்’ என்றே சொல்லமுடியும். அவர்களுக்கு அவர்களின் துறைசார்ந்த அடிப்படைத்தகவலறிவு தவிர எதுவுமே தெரியாது.அந்த துறையிலேயே கருத்துக்களை, கோட்பாடுகளை, புதியநகர்வுகளை மிகச்சிலர் தவிர பிறரால் புரிந்துகொள்ள முடியாது. அதற்கான அறிவுப்பயிற்சியே அவர்களிடம் இல்லை.

ஆனால் தாங்கள் உயர்கல்வி கற்றவர்கள், அறிவுஜீவிகள் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருக்கும். ஆகவே எதையும் ஏளனம் செய்ய, அலட்சியம் செய்ய அவர்களால் முடியும். எதிலும் துணிந்து கருத்துச்சொல்ல அவர்களால் முடியும். இத்தகைய இளைஞர்களை நாம் உருவாக்கி எங்கும் நிரப்பிக்கொண்டிருக்கிறோம்.

சிலரே உங்களைப்போல சுய விமர்சனம் செய்து பார்க்க முடிகிறது. ஆனால் அதற்குள் காலம் கடந்துசெல்கிறது. நீங்கள் கேட்டதற்கு என் பதில் நடைமுறையில் இனி ஒன்றும் செய்யமுடியாதென்பதே. முப்பது வயதுக்குள்தான் எந்த துறையினாலும் அதன் அடித்தூர் பற்றி மேலேறிச்செல்லும் மன ஆற்றல் இருக்கிறது. இலக்கியவாதி என்றால்கூட முப்பது வயதுக்குள்தான் கிளாஸிக்குகளை வாசித்து உள்வாங்க முடிகிறது. அசாதாரணமான சிலரால் எல்லைகளை மீறிச்செல்லமுடியும் . சாதாரணமாக சாத்தியமில்லை.

ஜெ

 

மறுபிரசுரம்/ முதற்பிரசுரம்/ Jan 18, 2011

முந்தைய கட்டுரைஇந்திய மருத்துவத்தின் அடுக்குகள்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 7