சமீபத்தில் ஒரு நெருக்கமான நண்பருக்கு தெலுங்கு திரைபப்டத்திற்கு கதை-வசனம் எழுதும் வாய்ப்பு வந்தது. அவரை தயாரிப்பாளர் விமான டிக்கெட் எடுத்துக்கொடுத்து ஐதராபாதுக்கு அழைத்தார். அவர் சென்று கதை சொன்னார். தெலுங்குக்கு அடிதடிப்படம்தான் ஆகும். இந்தக்கதையும் வழக்கமான ‘சாதுமிரண்டால்‘ வகை கதைதான். ஆனால் ஒரு சாது உக்கிரமான அடிதடி நாயகன் ஆவதன் பரிணாமத்தை கொஞ்சம் உளவியல் பூர்வமாகச் சொல்லியிருந்தார்.
தயாரிப்பாளர் ”ரொம்ப நல்ல கதை” என்றார். ”ஆனால் எங்கள் கதை இலாகா உங்கள் கதையை ஆராய்ச்சி செய்யும்” என்றார். உடனே நாலைந்து கதைநிபுணர்கள் வந்தார்கள். கதையை ‘ரிப்பேர்‘ பார்க்க ஆரம்பித்தார்கள். முதல் விஷயம் வழக்கமான ‘ஓப்பனிங்‘ தான். ஹீரோ சும்மா அப்பாவியாக அறிமுகம் ஆகக்கூடாது. ஆகவே கதாநாயகன் ரீபோக் ஷ¥ முதலில் திரையை நிறைக்க நாலைந்து வெற்றுக்குண்டர்களைக் தூக்கிப்போட்டு மிதித்தபடி அவர் அறிமுகம் ஆகவேண்டும்
நண்பர் பதறினார். ”அய்யோ, கதை போய்விடுமே” கதைநிபுணர் சொன்னார் ”ஹீரோ வெங்கடேஷ் இல்லையா சார்? அவர் எப்படி அப்பாவியாக இருக்க முடியும்? அவர் அப்பாவி இல்லை என்று ஆந்திராவில் எல்ல்லாருக்குமே தெரியுமே” சரி அப்படியானால் என்ன செய்வது? அடுத்த காட்சியிலேயே அவர் பரம அப்பாவி. அதுதான் முதல் ட்விஸ்ட். பத்து நிமிடத்திற்கு மூன்று தலைகீழ் திருப்பம் இருந்தால்தான் ஆந்திராவில் படம் ஓடும் என்றார்.
ஆனால் உண்மையில் அப்படிஎடுத்த படங்கள் எதுவுமே ஓடாமல் ஆந்திர சினிமாவே வழிமுட்டி நிற்பதனால்தான் புதிய இடங்களில் கதைதேடுகிறார்கள். அதற்காகத்தான் ஒரு புதியவர் கதை சொல்கிறார் என்றதுமே விமானம் ஏற்பாடு செய்கிறார்கள் ஆந்திரக் கதை நிபுணர்களுக்கு நாகேஷ் சொன்னமாதிரி ‘கேட்கத்தான்‘ தெரியும்.
நாலரை மணிநேர கதைவிவாதம் முடிந்தபின்னர் நண்பருக்கு ஒரு சின்ன ஐயம். கதை இப்போது அப்படியே பாட்ஷா கதைபோல இருக்கிறதே. ‘அதேதான் சார். ஆக்சுவலா பாட்ஷாவே ஒரு பழைய தெலுங்குக் கதைதான். தெலுங்குக்கு கதையை மற்றக்கூடாது சார்” அப்படியானால் எதற்கு புதிய கதைவிவாதம்? வேறு எதற்காகவும் இல்லை. புதியகதைவழியாக பழைய கதைக்குப்போனால் ஒரு உளவியல் உற்சாகம், அவ்வளவுதான்.
தெலுங்கின் கதைத்தொழிலாளர்கள் நடுவே மாட்டிக்கொண்ட ஒருவர் ராஜ் ஆதித்யா. கேரள திரைக்கதை ஆசிரியர் ஒருவர் கூப்பிட்டு அவரைபப்ற்றி சொல்லிக்கொண்டே இருந்தார். எழுபதுகளில் மலையாளத்தில் பிரபலமான திரைப்படப் பாடலாசிரியர்- கதாசிரியர்- இயக்குநர் ஸ்ரீகுமாரன் தம்பி. அவரது பல பாடல்கள் இன்றும் நினைவில் ஒலிப்பவை
தீபாராதனை தொழும் நேரம்
உனி விழி தீபங்களைக் கண்டு நான் நின்றேன்
என்ற அவரது வரியை நான் பல தருணங்களில் மன எழுச்சியுடன் எண்ணிக்கொண்டிருக்கிறேன். ஸ்ரீகுமாரன் தம்பி மலையாளத்தில் நல்ல சினிமாவின் முன்னோடி. கர்நாடக இசைப்பின்னணி கொண்ட ராகம் முதலிய பல படங்கள் இன்றும் அவரது பெயரைச் சொல்கின்றன.
அவரது மகன் பெயர் ராஜகுமாரன் தம்பி. இளம் வயதிலேயே மகனை ஒரு குழந்தை நடிகராக தன் படங்களில் அறிமுகம் செய்தார் ஸ்ரீகுமாரன் தம்பி. அதன் பின் வளர்ந்ததும் ராஜகுமாரன் தம்பி சினிமாவிலேயே தன் எதிர்காலத்தை கற்பனைசெய்தார். பிரியதர்சனின் பல இந்திப் படங்களில் உதவியாளராக பணியாற்றினார். மலையாளத்தில் எதிர்காலம் இல்லை என்று அவர் தெலுங்குக்குச் சென்றார். ராஜ் ஆதித்யா என்று பெயரை மாற்றிக் கொண்டார்.
தெலுங்கில் உதவி இயக்குநராகவும் திரைக்கதை உதவியாளராகவும் பணியார்றிய ராஜகுமாரன் தம்பியின் முதல் படம் இஷ்டம். இது உஷாகிரண் மூவீஸ் நிறுவனத்துக்காக அவர் எழுதியது. அவரது அடுத்தபடம் ‘பௌருடு‘. இரண்டு வருடங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் மகன் சுமந்த் மற்றும் காஜல் நடித்து வெளிவந்த அந்தப்படம் ஒரு பெரிய வெற்றி. வணிக அம்சம் இருந்தாலும் தரமான ஒரு படமாக அது கருதப்படுகிறது.
மூன்றாவதாக ராஜகுமாரன் தம்பி ‘மல்லீ மல்லே‘ என்ற படத்தை எழுதி இயக்கினார். இது அவரது கனவுப்படம் என்று ஆரம்பத்திலேயே சொல்லிவந்தார். அந்தப்படம் 21.3.2009 அன்று வெளியாகியது. அதில் புதுமுகங்களான ஸ்கந்தா மற்றும் கல்யாணி நடித்திருந்தார்கள். அதை ஒரு தரமான படமாகவே ராஜகுமாரன் தம்பி உருவகித்திருந்தார்.
ஆனால் தயாரிப்பாளருக்கு மெல்லமெல்ல வழக்கமான தெலுங்கு ஜ்வரம் உருவாக ஆரம்பித்தது. கதைத்தொழிலாளர்களை உள்ளே கொண்டுவந்தார். அவர்களை வைத்து தனியாக ஆலோசனைகள் நடத்தி கதையை மாற்ற ஆரம்பித்தார். பாடல்கள், சண்டைகள், நகைச்சுவைகள், குளியல் போன்ற வழக்கமான தெலுங்கு சரக்குகளை உள்ளே செலுத்தினார். அதற்கு ராஜகுமாரன் தம்பி ஒத்துக்கொள்ளவில்லை. அவருக்கும் தயாரிப்பாளருக்கும் நடுவே பூசல்கள் வெடித்தன.
ஒருகட்டத்தில் ராஜகுமாரன் தம்பி எடுத்து முடித்த படத்தை தயாரிப்பாளர் அவர் கையிலெடுத்துக்கோண்டு தானே ஆள்வைத்து எடுத்த பல பகுதிகளைச் சேர்த்து மீண்டும் படத்தொகுப்புசெய்தார். அவர் என்ன செய்தாரென ராஜகுமாரன் தம்பிக்குத் தெரியவில்லை. ஆந்திராவின் பட உலகம் எப்போதும் தயாரிப்பாளர்களால் கட்டுப்படுத்தப்படுவது. அங்கே இயக்குநர்களுக்கு குரலே கிடையாது. படம் வரும் சனிக்கிழமையன்று வெளியாவதாக இருந்தது. தன் படத்தை ஒருமுறை பார்க்க ராஜகுமாரன் தம்பி பலமுறை கேட்டும் தயாரிப்பாளர் ஒத்துக்கொள்ளவில்லை. படத்தைப்பற்றி சிலரிடம் கேட்ட ராஜகுமாரன் தம்பி மனம் உடைந்துபோனார். அவரது கனவுப்படம் கற்பழிக்கப்பட்டிருந்தது. .
அன்றிரவு ராஜகுமாரன் தம்பி தன் அப்பா ஸ்ரீகுமாரன் தம்பிக்கு ·போன்செய்து அழுது புலம்பியதாக அவர் தெரிவிக்கிறார். தன்னுடைய இலட்சியப்படத்தை, இருபதாண்டுக்கால கனவை, தயாரிப்பாளரும் கதைத்தொழிலாளர்களும் சிதைத்துவிட்டதாக அவர் சொல்லியிருக்கிறார். ஸ்ரீகுமாரன் தம்பி மீண்டும் மீண்டும் மகனை தேற்றியிருக்கிறார். குருவாயூரில் ஒரு ரக்தபுஷ்ப அர்ச்சனைசெய்வதாகவும் எல்லாம் சரியாகப்போகும் என்றும் ஆறுதல் சொல்லியிருக்கிறார். ராஜகுமாரன் தம்பி அதன்பின் தன் அம்மாவை கூப்பிடு அதையே சொல்லி புலம்பியிருக்கிறார். ஸ்ரீகுமாரன் தம்பி மீண்டும் கூப்பிட்டு தேற்றியிருக்கிறார் ஆனால் ராஜகுமாரன் தம்பி அழுதுகொண்டே இருந்தாராம்.
22 ஆம் தேதி காலையில் ஸ்ரீகுமாரன் தம்பிக்குச் செய்தி வந்தது. ஸ்ரீகுமாரன் தம்பி செகண்டிராபாதில் அவர் தங்கியிருந்த ஓட்டல் பஸேராவின் அறையில் சீலிங் ·பேனில் தூக்கு மாட்டி ராஜகுமாரன் தம்பி தற்கொலை செய்துகொண்டிருந்தார். 35 வயதான ராஜகுமாரன் தம்பி வுக்கு தீப்தி நாயர் என்ற மனைவியும் மூன்று வயதான மகளும் உள்ளனர். அவர்கள் சென்னையில் தங்கியிருந்தார்கள்.
ராஜகுமாரன் தம்பிவின் மரணம் சினிமாவின் வணிகத்துக்கும் கலைக்கும் இடையே உள்ல நிரந்தரமான போரின் களப்பலிகளில் ஒன்று. இப்படி நாடகத்தனமாக முடியாமல் மெல்லமெல்ல சிதைந்து அழியும் பல நூறு வாழ்க்கைகள் தமிழிலும் உண்டு.
http://mathrubhumi.org/news.php?id=14052&cat=1&sub=15&subit=0