அன்புள்ள ஜெ,
திகசியை நீங்கல் சந்தித்த நிகழ்ச்சி ஒரு இனம்புரியாத நெகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் அவரது இலக்கியக்கொள்கைகளை முழுமையாக மறுத்து வருபவர் என்பதை நான் அறிவேன். அன்பும் மூத்தவர் என்ற மரியாதையும் அதையெல்லாம் தாண்டியது என்பதை நீங்கள் சொல்வீர்கள். ஆனால் அதன்பிரகாரம் நடந்துகொள்வது எவ்வளவு கஷ்டம் என்பது தெரிந்ததே. உங்கள் திரந்த மனம் வாழ்த்துக்களுக்கு உரிய ஒன்று.
செல்வகுமார்
அன்புள்ள ஜெமோ
நெல்லையில் வெயில் அதிகம் என்று எழுதியிருந்தீர்கள். இந்த வருடம் இதுவரைக்கும் நெல்லையில் வெயில் அதிகமாக கிடையாது. வெயில் இல்லாமல் வானம் மூட்டமாகவே இருக்கிறது. நெல்லையில் வெயில் அதிகமாக அடிப்பதற்குக் காரணங்கள் பல உண்டு. அதற்கு முக்கியமான காரணம் மலைகள் அருகே இல்லாமல் சுற்றிலும் பொட்டலாகவும் சமமான பூமியாகவும் இருக்கிறது என்பதுதான். ஆகவே வெப்பக்காற்று அதிகமாக அடிக்கிறது. திருநெல்வேலியில் வெயில் கொஞ்சம் குறைவு. இங்கே அந்தக்கால மன்னன்ர்கள் வெட்டிய குளங்கள் உள்ளன. அவற்றிற்கு தாமிரவருணியின் வெள்ளப்பருவத்து தண்ணீர் வந்து சேகரமாகிறது. ஆகவே குளுமை உண்டு. கிணற்றிலும் நீர் உண்டு. ஆனால் அந்தக்குளங்களையெல்லாம் நாம் ஜனநாயக பூர்வமாக சாக்கடைகளை திறந்து விட்டு சாக்கடைத்தேக்கங்களாக ஆக்கிவருகிறோம். நெல்லைஅழிந்துகொண்டிருக்கிறது என்று பழையவர்கள் சொல்வார்கள். அது உண்மையோ பொய்யோ நெல்லை நாறிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை
செந்தூரான்