20 வருடம் முன்பு சுந்தர ராமசாமி தோப்பில் முகமது மீரானின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ யைப் படித்துவிட்டுச் சொன்னார், ‘இவரு மனிதாபிமானி. எளிய மக்களோட சுகதுக்கங்களிலே இயல்பா மனசு போய்ப் படிஞ்சுடுது. அவங்க கஷ்டப்பட்டு மேலே வாறதுக்குமேலே இவருக்கு அலாதியான ஒரு கரிசனம் இருக்கு. இதுதான் இவரோட பலம்” ஆம், பெரும்பாலான சிறந்த யதார்த்தவாத இலக்கியவாதிகளைப்போலவே மீரானும் மனிதாபிமானி. மனிதவாழ்க்கையின் அவலங்களையும் அவற்றின் பாறைக்கனத்தினூடாக வேர் ஊன்றித் தளிர்விட்டு எழும் அன்பின் அழியாத உயிரையும்தான் எப்போதும் அவர் சொல்கிறார். மீண்டும் மீண்டும் எளிய மனிதர்களின் துயரங்களையே அவர் புனைவு நாடுகிறது