இனிய ஜெ.எம்.,
கிட்டத்தட்ட மார்ச் மாதம் தொடங்கி இன்றுவரை இந்த 4 மாதங்களாக ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறேன். சில செட்டில்மென்டுகள் முற்றிலும் இந்த மாதம் முடிந்துவிடும். பிறகு ஜூலை 1 முதல் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் (கடமைகளை முடித்துவிட்டு) விலகப்போகிறேன். ஆம் கிட்டத்தட்டத் துறவு. இனி எதற்காகவும் ஓடிக்கொண்டிருக்கப் போவதில்லை. 3 மாதகாலமாக எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை. இறுதியாக ரொமிலாதாப்பரின் சில புத்தகங்கள், இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு 1 , 2 அதுதான் படித்தது. புத்தகம் பக்கமே போகவில்லை. திரும்பவும் ஊட்டி முகாம் வழி இலக்கியத்துக்குள் திரும்ப வேண்டும்.
நிச்சயம் போன வருடம் ஊட்டிக்கு வந்தபோது உள்ள நான் இன்று இல்லை. போனவருட முகாம் இலக்கியம் தவிர்த்து எனக்குத் தனிப்பட்ட முறையில் நிறையக் கற்றுத் தந்தது. குறிப்பாக ‘உண்மை அறிதல்’ எனும் என் பயணத்துக்குப் பேருதவியாக இருந்தது. என் தனிப்பட்ட ஈகோக்கள் உடைந்து சிதறின. முதல் சந்திப்பில் எனக்கு நிர்மால்யா அவர்களை “என் 20 வருட நண்பர்” என்று சொல்லி எனக்கு அறிமுகம் செய்தீர்கள். பதிலுக்கு நான் என் நண்பர் வெங்கடாஜலத்தை என் 10 வருட நண்பர் எனச் சொல்லி உங்களுக்கு அறிமுகம் செய்தேன். என்ன ஒரு முட்டாள்தனம். பல பேருடன் நான் ஒரு மாதிரியான மூர்க்கத்தனமான பாண்டேஜில் இருந்தேன். அத்தனையும் அன்று இரவு ஊட்டியில் தனிமையில் குளிரில் விடிய விடிய யோசித்து என்னை மீண்டும் தொகுத்துக் கொண்டேன்.
என் உள்ளுணர்வின் உந்துதலாலும் வழிகாட்டலாலும் சில விஷயங்கள் புலப்பட்டனது. இந்த ஒருவருட காலமும் என்னை, உறவுகளுடனான என் பிணைப்பை சுத்திகரிப்பதிலேயே கழித்தேன். ஒருபோதும் எந்த விஷயத்தையும் நான் திட்டவட்டமாக சொல்பவன் அல்ல. ஆனால் இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடி திட்டவட்டமாகவும் ஆணித்தரமாகவும் என்னால் சொல்ல முடியும். இந்த உலகின் எல்லா உறவுகளைக் கடந்து அம்மா, பிள்ளை, நட்பு என சகலமும் தாண்டி உயர்ந்த ஒன்று உண்மையுடன் நம்மை இணைக்கும் ஓர் ஆசிரியன். அத்தகைய ஆசிரியன் தரும் விஷயங்களை ஒப்பிட்டால் இவ்வுலக பந்தங்கள் தருபவை ஒன்றுமே இல்லை. ஆம் எனக்கு அம்பானி வேண்டாம், ரமணர்தான் வேண்டும். விட்டு விடுதலையாக வேண்டும் ஒரு சிட்டுக்குருவி போல.
இந்த 3 மாதம் புத்தகம்தான் படிக்கவில்லையே தவிர உங்கள் பிளாக் தினமும் காலை படித்துவிடுவேன். இந்த 3 மாத காலமும் ஏதோ ஜபம் போல உங்கள் பெயரையே உச்சரித்துக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் “இன்னும் ஒரு வார்த்தை திரும்ப ஜெயமோகன் பத்தி பேசுன உன்னைய கொன்னுடுவேன்” என மிரட்டிய என் நண்பர் இப்போதெல்லாம் “டேய் தயவுசெஞ்சு ஜெயமோகன விட்டுட்டு வேற ஏதாவது பேசுடா இல்லன்னா தற்கொலை பண்ணிக்குவேன்” என்ற ரேஞ்சுக்கு வந்துவிட்டார். சமீபத்தில் நண்பர்களுடன் ‘அவன், இவன்’ பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் க்ளைமாக்ஸில் மிகப்பெரிய மாட்டுச்சந்தை. அடிமாடுகளாக விற்கப்படுவதாக ஒரு காட்சி வருகிறது. படம் முடிந்து திரும்பும்போது என் நண்பர்களிடம் நான் ஜெயமோகன் வாழ்விலே ஒருமுறை என்று ஒரு புக் எழுதிருக்கார் அதுல… திரும்பிப் பார்த்தால் ஒருவரையும் காணோம். அற்ப மானிடப் பதர்கள்!
மூன்று மாதமும் இரவில், வாங்கிவைத்து இதுவரை பார்க்காத உலகசினிமாக்களைத் தொடர்ந்து அடித்து நொறுக்கினேன். டேவிட் லீன் இயக்கிய “பிரிட்ஜ் ஓவர் ரிவர் க்வாய்” அற்புதமான படம். தொடர்ந்து படம் பார்த்ததில் ஒன்று புரிந்தது. உண்மைக்கு இரண்டு தளம், ஒன்று: “அன்றாட உண்மை”. இதில்தான் நியாயம், தர்மம், அறச்சீற்றம் எல்லாம் புழங்குகிறது. இந்த அன்றாட உண்மை நிற்கும் அடித்தளம், சாரம் என்பது “மேலான உண்மை”. ஒரு திரைப்படத்தால், ஒரு திரைப்பட இயக்குனரால் (அவர் கலைஞனாக இருக்கும்பட்சத்தில்) தன்திறன் மூலம் இந்த அன்றாட உண்மையின் புழங்குதளங்களை முழுவீச்சில் முன்வைக்கமுடியும். ஆனால் ஒரு திரைப்படத்தால் ஒருபோதும் இனி வரும் காலங்களிலும் “மேலான உண்மை” என்பதன் நிழலைக்கூடத் தீண்ட முடியாது.
ஆனால் இலக்கியம் அதன் சகல கண்ணிகள் வழியாக வாசகமனதை “மேலான உண்மை” என்பதைத் தீண்டுவதற்கான வழிமுறைகளை முன்வைக்கிறது. ஓர் இலக்கியவாதி ஒரு திரைப்பட இயக்குனரை விடப் பலமடங்கு மேம்பட்டவன். ஒரு இலக்கியப் பிரதியைப் படமாக எடுக்கும்போது குறைந்துபோகும் முக்கியமான அம்சம் இந்த “மேலான உண்மை” என்று நினைக்கிறேன்.
மற்றொன்று, ஒரு திரைப்படக் காட்சியில் இருக்கும் “திட்டவட்டத்தன்மை’’. விஷ்ணுபுரத்தில் பொழுது புலரும் சித்திரங்கள் பல வருகின்றன. (பல வருகின்றன – திரும்பத் திரும்ப வரவில்லை) ஒரு பகல் அஜிதனின் புலர்வு. மற்றொன்று பவதத்தரின் பகல். மற்றொன்று புத்த பிட்சுக்களது. நாவலில் தனித்தனிப் பொழுது புலர்வு இருந்தாலும் ஒவ்வொரு முறை படிக்கும்போதும் அது நமக்குப் புதிதாகவே இருக்கிறது. காரணம் ஒவ்வொருமுறை படிக்கும் போதும் நம் ஆழ்மன பிம்ப அடுக்குகள் வேறுவிதமாகக் கலைந்து அடுக்கப்படுகிறது. இன்னும் எத்தனைமுறை படித்தாலும் விஷ்ணுபுரத்துப் பகல் புலர்வுக் காட்சிகள் புதிதாகவே இருக்கும். இதை ஒரு இயக்குனரால், அவர் தலைசிறந்த இயக்குனராகவே இருந்தாலும் எப்படி உருவாக்க முடியும்?
சமீபத்தில் ஒரு காட்சி. ஒரு ஓட்டல் வாசலில் நின்றிருந்தேன். பிச்சைக்கார இளம்பெண் தன் கைக்குழந்தையோடு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். முலைகுடித்தபின்னும் குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்தது. தாய் எப்படி எப்படியோ சமாதானம் செய்தாள். அதில் ஒன்று ஓட்டல் வாசலில் டிஜிட்டல் பேனர். விதவிதமாக உணவின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தன. அம்மா அதில் பிரியாணியைத் தேர்ந்தெடுத்தாள் ‘இந்த பாரு குட்டி, பிரியாணி சாப்புடலாமா? ஆ காட்டு அபக். அம்மாவுக்குக் கொஞ்சம், அப்புக்குட்டிக்குக் கொஞ்சம், அபக்’ குழந்தை அழுதுகொண்டே இருந்தது.
உள்ளே என்னவோ செய்தது. சில நல்ல படங்களும் இப்படித்தான் உள்ளே என்னவோ செய்கின்றன.
சீனு, கடலூர்