இனிய ஜெ.எம்.,
இன்று மகிழ்ச்சியான மாலை. என் மருமகனுக்கு மதன்குமார் என்று பெயர் சூட்டி இருக்கிறார்களாம். ஒருகிலோ இனிப்பு வாங்கி காலபைரவர் சன்னதியில் நின்று எல்லோருக்கும் விநியோகித்தேன். என்முன் பல ஏந்திய கைகள். ஆனந்தத்திலும், பதட்டத்திலும் கை உடுக்கை அடித்தது. கொடுப்பதில் ஏதோ ஒரு இன்பம் – மரபணுவில் பதிந்துபோன இன்பம் ஒன்று உள்ளதாகத் தோன்றுகிறது. இல்லையேல் கர்ணனால் பிறவிக் கொடையாளியாக ஆகி இருக்க முடியாது. 9 மணிக்கு டிஸ்கவரியில் ஸ்டீபன் ஹாக்கின்ஸின் “காலம்” பற்றி நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்தேன்.
ஆச்சர்யப்பட்டுப்போனேன். 10 ஆவது படிக்கும்போது ஒரு கதை எழுதினேன். எதிர்காலத்தில் நடக்கும் – 2090இல். கிபி 1983ல் அமெரிக்க விமானி ஒருவர் பறக்கும்தட்டு ஒன்றைப் பார்த்ததாக பேட்டி அளிக்கிறார். இது கதையின் முகப்புத் துவக்கம். 2090ல் விஞ்ஞானி ஒருவர் நான்காம் பரிமாணத்தில் பயணிக்கக்கூடிய காலயந்திரம் ஒன்றை வடிவமைக்கிறார். உதவியாளர் நம்ப மறுக்கிறார். விஞ்ஞானி “மனிதன் எதிர்கால ஆயுள் என்ன என்று தெரிந்துகொள்ள, இந்தக் காலத்தினுள் ஒரு ரோபாட்டை வைத்தனுப்பி முயற்சி செய்யலாம்” என்கிறார்.
ரோபாட் கலத்தில் ஏறிச்சென்று சில வருடங்களுக்குப் பிறகான செய்தித்தாளுடன் வருகிறது. அதில் உதவியாளன் ஆராதிக்கும் குருஜியைக் கொல்ல வந்த மர்ம மனிதன் யாரோ, மர்மமான முறையில் இறந்துபோனது குறித்து செய்தி இருக்கிறது. ஆவல்மேலிட உதவியாளன் விஞ்ஞானி பேச்சைக் கேட்காமல் கலம் ஏறி அந்த நாள் சென்று இறங்குகிறான். மொட்டைமாடியில் யாரோ ஒருவன் தன் குருவை சுடக் காத்திருப்பதைப் பார்க்கிறான். சூழல் மறந்து கூவியபடி ஓடி அவன் மீது பாய்ந்து தாக்குகிறான். தானியங்கி முறையால் ஆளற்று வந்து நிற்கும் கலத்தைக் கண்டு விஞ்ஞானி குழம்புகிறார். ரோபாட்டை அனுப்புகிறார். திரும்பி வந்த ரோபாட் காட்டிய ஒளிப்படச்சுருள் கண்டு அதிர்ந்து போகிறார். குருஜியைக் கொல்லவந்த கொலையாளியை, உதவியாளர் பின்மண்டையில் பலமாகத் தாக்குகிறார். இறந்து விழும் கொலையாளி அதே உதவியாளன்தான். குழம்பிப்போன விஞ்ஞானிக்குப் பைத்தியமே பிடித்துவிடுகிறது.
ரோபாட்டைக் கலத்தில் வைத்துக் கைக்குக் கிடைத்த எண்ணைத் திருகி விடுகிறார். அந்த எண் 1987. ‘நாங்கள் பறக்கும் தட்டில் வந்திறங்கிய வேற்றுக்கிரக மனிதனைப் பார்த்தோம்’ – 1983 வருட பொதுமக்கள் பேட்டி, அந்த மனிதனின் அபூர்வப் படம். இந்த முத்தாய்ப்பில் கதை முடிகிறது. (எனக்குக் கூச்ச சுபாவம், ரொம்பப் புகழாதீங்க).
இங்கே ஆச்சர்யம் என்ன எனில் ஹாக்கின்ஸ், ப்ளாக்ஹோல் போல, வார்ம்ஹோல் ஒன்றைப் பற்றிப் பேசுகிறார். உதாரணமாக, ஒரு சினிமா திரையைக் ‘காலம்’ என உருவகித்தால், அதில் இருக்கும் சில குண்டூசி ஓட்டைகள் வார்ம் ஹோல். இந்த ஓட்டையை விரிவுபடுத்த முடிந்தால் அதன் வழியே மனிதன் எதிர்காலத்துக்குள் நுழைந்து இறந்த காலத்துக்குள் வரலாம். அதாவது நாளை எனும் வாசல் வழி புகுந்து, ஜுராசிக் காலத்தில் இறங்கலாம். உதாரணத்துக்கு ஒரு குறும்படம் காட்டினார்கள். ஒரு மனிதன் துப்பாக்கியை பூட்டிக் கொண்டிருக்கிறான். அதே மனிதன் பக்கத்து வாசல் வழி வெளியேறிப் பின்வாசல் வழி வருகிறான். நிகழ்கால மனிதன் துப்பாக்கியைப் பூட்டிக் கொண்டிருக்க, எதிர்கால மனிதன் அவனைச் சுடுகிறான். இறந்த காலத்தில் நின்று.
ஹாக்கின்ஸ் சொல்கிறார் “நமக்கு இன்னும் கைவசப்படாத நுட்பம் நான்காம் பரிமாணத்தில் நுழைவது. நுழைந்த உடனே பைத்தியம் பிடித்து விடும்.” மாமேதைகள் ஒன்றாக சிந்திப்பார்கள் என்பது மெய்தான் போல!
மற்றொரு மகிழ்ச்சி. அம்மா வந்துவிட்டார்கள். 60 நீண்ட நாட்கள். தலையில் பாரமாக ஏறி, கால்களைத் தள்ளாட வைக்கும் காலம். உடல் உரச வீட்டை வளைய வரும் டாம் ஜெரி பூனைகள், வாசலிலேயே கிடக்கும் ஒற்றைக்கண் ப்ளாக்கி நாய், மதியம் தடுப்பு தாண்டி வந்து கதவுக்குள் தலை நீட்டி கீரைக்கட்டு தேடும் லட்சுமி மாடு, காலை சமையல்கட்டு ஜன்னலில் தோசை கிளறிப்பார்க்கும் காக்கை. காக்கை அசந்த நேரத்தில் விள்ளல் தோசையைப் பற்றியபடி வால் பறக்க சீதாப்பழ மரமேறிப்பதுங்கும் அணில், குலை எடை தாங்காமல் காம்பவுண்டு சுவரில் சாய்ந்து கிடக்கும் வாழை மரம் என அனைத்தும், அனைத்தும் ஒளியூட்டம் கொண்டு துலக்கம் பெற்றுவிட்டன மீண்டும். ஆம் அம்மா வந்துவிட்டார்கள்.
மற்றொரு மகிழ்ச்சி, காலச்சுவடு அனுப்பி இருந்த புத்தகப் பரிசு. ஆகஸ்ட் இதழில் கல்வியமைப்பு பற்றி வாசகர் கடிதம் எழுதி இருந்தேன். ஊக்குவிக்கும் பொருட்டே புத்தகப்பரிசு. அதாவது நான் எழுதி சம்பாதித்திருக்கிறேன். நினைக்க நினைக்க சந்தோஷம். தலைப்பு வானகமே, இளவெயிலே, மரச்செறிவே. வானத்தையே தன் அகமாகக்கொண்ட, இளவெயிலைத் தன் மூச்சுக்காற்றாகக் கொண்ட கவிஞன். எத்தனை உத்வேகத்தோடு இந்த வரிகள் எழுதப்பட்டிருக்கும்?
சில மாதங்கள் முன் பாண்டிச்சேரி ஈஸ்வரன் கோயில் தெரு, பாரதி குடியிருந்த வீட்டுக்குப் போயிருந்தேன். காலத்தை ஈடுகொடுக்க சில நவீனங்களைச் சேர்த்து வீட்டை அப்படியே வைத்திருக்கிறார்கள். பாரதி மியூசியமாக அதைப் பராமரித்து வருகிறது புதுவை அரசு. சிறிய வராண்டா. தட்டோடு போட்ட மேற்கூரை தாண்டினால், இடதுபக்கம் ஓர் அறை, அலுவலகம் மற்றும் பாரதி புத்தகங்களினாலான நூலகம். ரேழி தாண்டினால் இடதுபக்கமும் வலதுபக்கமும் விசாலமான அறைகள். ப வடிவ நடை. நடையால் அணைகட்டப்பட்ட ப வடிவ முற்றம். கதிரும் நிலவும் ஒளிமேல் நிழல்களை உருட்டி விளையாடும் முற்றம். நடுவே நின்று அண்ணாந்து பார்த்தேன். மேகமற்ற ஒளி பொருந்திய வானம். பாரதி பார்த்த அதே வானம்.
சுவரெங்கும் பாரதியின் லேமினேட் செய்யப்பட்ட நகல் கடிதங்கள். மையமாய், பாரதி செல்லம்மா உடன் நிற்கும் ஆளுயரப் படம். பக்கத்தில் சட்டமிடப்பட்டு இந்தியா இதழின் முதல் பிரதி. வீடெங்கும் ஏதேதோ வரலாற்றுச் சுவடுகள். பாரதி தனக்கான அரிசியைக் குருவிகளுக்கிறைத்த முற்றம் இதுவாகத்தான் இருக்கக்கூடும் என மயங்கினேன் (வரலாறு யாருக்கு வேணும்?) முற்றத்துக்குள் இறங்க ஓர் சிறிய படி, அதிலேயே அமர்ந்து விட்டேன். (வீட்டில் என்னைத் தவிர யாருமில்லை. கண்காணிப்பாளினி சில மாதங்கள் முன் பி.சி. ஸ்ரீராம் வந்துபோனபோதும் இப்படிக் காலியாகத்தான் வீடு இருந்ததாக சொன்னார்) பாரதி, என் பாரதி, உண்டு, உறங்கி, சுகித்து, படித்து, எழுதிய வீடு.
“சிங்கம், நாய்தரக் கொள்ளுமோ நல்லராட்சியை” என் மந்திர வரிகளில் ஒன்று. என்னைச் சூழும் கீழ்மைகளை, என் இயல்பால் எனக்கு நானே வருவித்துக் கொண்ட அவமதிப்புகளை இந்த வார்த்தைகள் கொண்டே சுட்டெரித்துத் தாண்டுவேன். என் மனம் எப்போதும் கீழ்மைகள் நோக்கிச் சாயாதிருக்க இதுவே என் சுடரொளி வார்த்தைகள்.
பாரதி கதைகளில் பிடித்தது “அந்தரடிச்சான் சாகிப்”. பாரதி நகைச்சுவை உணர்ச்சி உடையவன் என்பதன் சிறந்த உதாரணம் இக்கதை. சிலநாள் முன்பு பஜாரில் ஓர் ஆட்டோ டிரைவர் ஆட்டோவைத் துடைத்துக் கொண்டிருந்தார். தோரணையில் வாழ்ந்து கெட்டவர் போலப் புலப்பட்டது. துடைத்த தினுசில் சொந்த ஆட்டோ எனப்புரிந்தது. ஆட்டோ பின்னால் “எண்ணிய முடிதல் வேண்டும்” கவிதையை எழுதி இருந்தார்.
நான் அவரிடம் ‘பாரதியை ரொம்பப் பிடிக்குமா’ என்று கேட்டேன். ‘அந்த ஆள யாருன்னு கூட எனக்குத் தெரியாது. எப்படியோ வாழ்ந்தேன். தட்டுக்கெட்டு சீரழிஞ்சேன். எல்லாரும் விட்டுட்டுப் போய்ட்டாங்க. சாகலாம் போல துக்கம். அப்பத்தான் இந்தாளு புத்தகம் கண்ல பட்டுச்சு. ‘தேடிச்சோறு நிதம் தின்று’ படிச்சேன். எனக்கே நான் சொல்லிக்கிட்ட மாதிரி இருந்தது. இதோ ஆட்டோ ஓட்டிட்டு இருக்கேன்’ அப்படின்னார். “ஒவ்வொருவாட்டி டிசி எடுக்கும்போதும், ஒவ்வொரு கவிதை எழுதி வைப்பேன். என்னைப்போல எவனாது திரிவான்ல” அப்படின்னார். மாநிலம் பயனுறத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என் பாரதி.
சீனு
கடலூர்.