ஊட்டியிலிருந்து கொண்டுவந்தவை – கடலூர் சீனு

6-9-2010

இனிய ஜெ.எம்.,

ஊட்டி சந்திப்பு முடியும்போது, இந்த மாதமத்தியில் நீங்கள் மலேசியா போகப்போவதாக சொன்னீர்கள். இக்கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம் நீங்கள் மலேசியாவில் இருக்கக்கூடும். (தலைநகர் பினாங்குதானே?) ஊட்டி உலாவின்போது இயற்கையைப் பருகும் எளிய வழி ஒன்றை சொல்லித் தந்தீர்கள். அப்போது நான் கண்ட காட்சி ஓர் இலை கூட மாறாத துல்லியத்துடன் நேற்று இரவு என் கனவில் மீண்டது. ஊட்டி தினங்கள் முழுக்க முழுக்க எனக்கேயான தினங்கள் என இப்போது உணர்கிறேன்.

இந்திய சிந்தனை மரபுகளின் அடிப்படை அலகுகளான விடுதலை, பிரபஞ்சசாரம், ஊழ், வாழ்க்கைச்சூழல் துவங்கிக் களவியல் என்ற புதுக்கவிதையில் முடிந்த மூன்று நாள் வகுப்புகளில் பேசப்பட்ட அத்தனை வார்த்தைகளையும், அதன் பின்புல ரசனை அனுபவங்களையும், நான் படிப்பின் வழியே சேகரிக்கக் குறைந்த பட்சம் மூன்று வருடங்களை அடமானம் வைக்க வேண்டும்.

குறிப்பாக நாஞ்சில் நாடன் சார் எடுத்த கம்பராமாயண வகுப்பு, அதிலும் குறிப்பாக ‘எவ்வுயிர்க்கும் நல்லான்’ என்ற வார்த்தையை அவர் உச்சரித்த விதம் என் மரபணுவில் கலந்து விட்டது. ராமனை நேர்கொள்ளும் ராவணனின் மனஓட்டம் அக்கவிதையை வாசிக்கும்போது நாஞ்சில் சார் முகத்தில் அப்படியே பூத்து நிற்கிறது. பலநூற்றாண்டுகள் முன் வாழ்ந்த கம்பனின் சொல் அதன் உக்கிரமும், ஆழமும், உச்சமும், அழகும் குலையாமல் நாஞ்சில் சாரின் குரல் வழியே என் செவியை எட்டியது. நூற்றாண்டுகள் கடந்த மனங்களை மொழி என்ற சரடின் வழி இணைக்கும் இலக்கியம் எனும் பெருவல்லமை. ஓர் எளிய இலக்கிய வாசகனான என்னைவிட்டு பிரமிப்பு இன்னும் நீங்கவில்லை.

வகுப்புக்குப் பின்னான நேரங்களில் பேசப்பட்டவை வகுப்புகளுக்குச் சற்றும் நிலை குறைந்தவை அல்ல. குறிப்பாக ராஜமார்த்தாண்டன் அவர்களை மையப்படுத்தி ஆசிரிய மாணவ உறவு குறித்து நீங்கள் பேசியவை என் மனதுக்கு மிகமிக அணுக்கமான சொற்கள். பறவைகள் இல்லாத சிங்கப்பூர் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது சலீம் அலி என்பவர் பற்றிப் பேசினீர்கள். கடலூர் வந்து முதல் வேலையாக நூலகத்தைப் பிடித்து உலுக்கிவிட்டேன். ‘ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ – சலீம் அலியின் சுயசரிதை கிடைத்தது. பாதி படித்துவிட்டேன். அவரது வேறு புத்தகங்கள் தமிழில் உண்டா எனத் தேடவேண்டும்.

உங்கள் தடையற்ற சொற்பெருக்கையும், நில்லாத நகைச்சுவையையும் ஆச்சர்யத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக தோப்பில் முகமது மீரான் அவர்களை நீங்கள் மோனோ ஆக்ட் செய்த விதம். நீங்க யார்? தோப்பில்; என்ன செய்றீங்க? வத்தல்; இங்க எங்க? நாவல். மறக்கமுடியாத காமெடி.

புதுக்கவிதைகள் பற்றிப் பேசும்போது பூனைபோல் நகரும் மேகம் என்றொரு உவமை சொன்னீர்கள். ஆச்சர்யமாக சில நிமிடங்கள் முன் அதை அனுபவமாக உணர்ந்திருந்தேன். சமையலறையில் தேநீர் குடித்தபடி எதிர்ப்பக்க மலைச்சாரலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். சமையலறையை விட்டுப் பதுங்கிப் பதுங்கி புல்மேடேறியது பூனை ஒன்று. நேரெதிரே மலையேறியது மேகம். மேகம்போல் நகரும் பூனை. பூனைபோல் நகரும் மேகம். சொந்த வாழ்வில் பிரதிபலிக்கும் போது இலக்கியம் அதன் மேன்மைகளை வெளிக்காட்டுகிறது.

பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னீர்கள். உங்கள் மகளைப் பார்க்கச்சென்றபோது நடந்தது. ‘வகுப்பை விட்டு வெளிவந்தனர் ஒரு நூறு சைதன்யாக்கள். அத்தனை பேருக்கும் தகப்பன் நான் என்ற உணர்வை, உவகையை ஒரு கணம் தொட்டு மீண்டேன்’ என்று சொன்னீர்கள். இதை வேறு புள்ளியில் நான் சந்தித்தேன். கும்பகோணப் பள்ளி தீவிபத்து. எடுத்து வெளியிடப்படாத செய்திப்படங்களின் துண்டுகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஓர் அறையில் கிடக்கின்றன எரிந்து உருக்குலைந்த பிள்ளைகளின் உடல்கள். தன் பிள்ளையின் பிணம் தேடி வருகிறான் ஓர் தகப்பன். அனைத்தையும் பார்க்கிறான். அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைத்துப் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாக எண்ணி மார்பிலறைந்து கதறுகிறான். இத்தனை பிள்ளைகளுக்குத் தகப்பன் என்ற உணர்வு அவனை எத்தனை வலியுடன் வந்தடைந்திருக்கும்?

மற்றபடி வகுப்புக்கு வெளியே இலக்கிய ஆளுமைகள், வேத தரிசனங்கள், உளவியல், சமகால வரலாறு, தொல்லியல் ஆய்வுகள், உலக இலக்கியப் போக்குகள், இசை, சினிமா என எத்தனை விஷயங்கள் ஆழம் குறையாமல் பேசினீர்கள். நினைக்க நினைக்க ஆச்சர்யம். 24 மணிநேரமும் இலக்கியவாதியாகவே இருக்கும் ஓர் மனிதரை எப்படி ஆச்சர்யப்படாமல் இருக்க முடியும்?

சமீபத்தில் கோணவாச்சி என்று ஒரு சிறுகதை படித்தேன். இந்தமாத காலச்சுவடில் கரகுபெரிஜா என்று ஒரு கதை படித்தேன். கதாசிரியர் பெயர்களை மனனம் செய்துவிட்டேன். இனிமேல் அந்தப் பெயர்களைக் கண்டால் அந்தப் பக்கங்களைத் தாண்டிக் குதித்து ஓடிவிடுவேன். ஓர் இலக்கிய வாசகனாக எக்காலத்திலும் இவர்களால் ஒரு நல்ல கதையை எழுதிவிட முடியாது என்று என்னால் உறுதியாகவே சொல்லமுடியும். இவர்களைப் படிக்காமல் விட்டால் ஓர் இலக்கியவாசகனாக நான் இழப்பது ஒன்றும் இல்லை. ஆனால் உங்கள் நிலவரம்தான் பரிதாபம். இலக்கியத்தில் அப்டுடேட் ஆக இருக்க அனைத்துத் தலைவலிகளையும் படித்துத்தான் தீரவேண்டும்.

மற்றபடி ஊட்டி வாசக நண்பர்கள் ஒவ்வொருவரும் கனிவான நட்பினைப் பகிர்ந்து கொண்டார்கள். இலக்கியத்தால் பக்குவப்பட்ட மனங்கள். முகாம் முடிந்து டவுன் பஸ் ஏற சாலைக்கு வந்தேன். தூரத்து மலைச்சாரல், பள்ளத்தாக்குப் பின்னணியில் சாலை விளிம்பில், வெறும் சாலையில் டவுன் பஸ்ஸுக்காக சப்பளங்கால் போட்டு அமர்ந்து காத்திருந்தார் தேவதேவன். பக்கத்தில் மண்டிபோட்டபடி இளம் வாசகர் இருவர்.

தேவதேவன் புல்போலும் எளிமையானவர், கம்பீரமானவர், உயிர்த்துடிப்பானவர், அழகானவர். தூத்துக்குடி நிலப்பரப்பு அவரை எப்படி இட்லி சட்டி போல அவித்து உலகத்துக்குத் தேவைப்பட்ட, பக்குவப்பட்ட மனிதராக அவரை எப்படி வெளியேற்றுகிறது என்பது பற்றி (மற்றவர்) சிரிக்கச் சிரிக்கப் பேசினார். வன்முறை, போர்கள் இவைகளில் சம்பந்தப்படாத எளிய மனிதன் கூட அவன் விருப்பமின்றியே அவன் ஆதரவு அவற்றிற்கு வழங்கப்படுவதன் சிடுக்குகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்.

டவுன்பஸ் வந்தது, ஏறினோம். “மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா” என ஒலிநாடா ஓடிக் கொண்டிருந்தது. மெல்லிய மழையில் தேவதேவனுக்கும் நண்பர்களுக்கும் விடை தந்துவிட்டு பஸ் ஏறினேன். பஸ் ஜன்னல் வழி மலைச் சிகரங்களைப் பார்த்தேன். மனதுக்குள் துண்டு துண்டான சித்திரங்கள். டேன் டீ பற்றிய வரலாறைக் கேட்டபடி குடியிருப்பின் வழியே மலையேறினோம். தூரத்தில் ஒரு புல்வெளியில் காக்கை ஒன்றை துரத்தித் துரத்தி விளையாடிக் கொண்டிருந்தது ஒரு குட்டி வெள்ளை நாய். அதை கம்பீரமாக சாய்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஆரஞ்சுநிறத் தாய் நாய்.

ஒரு வேளையில், ஓர் வீட்டுத் தோட்டத்தில் கதவைத் திறக்கச் சொல்லி தோட்டத்துக் கதவில் முட்டி முட்டி ஹம்மோ ஹம்மோ என அழுது கொண்டிருந்தாள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மனநிலை தவறிய பெண் ஒருத்தி. பூட்டப்பட்ட கதவுக்கு அந்தப்பக்கம் இருக்கும் “கச்சிதமான உலகம்” தான் எத்தனை குரூரமானது. என்னை சமன் செய்துகொள்ள வானத்தைப் பார்த்தேன். பஸ் ஜன்னல் வழி அதே வானம். ஹம்மோ ஹம்மோ என கதறியபடி எதிர்ப்பக்க மலையை முட்டியழ விரைந்து கொண்டிருந்தது ஓர் கருங்கொண்டல்.

அன்புடன்,
கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 17 – கிர்நார்
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 18 – டோலாவீரா