2008 செப்டெம்பர் நாலாம் தேதி நாங்கள் ஓர் இந்தியப்பயணம் சென்றோம். ஈரோட்டில் இருந்து தாரமங்கலம் சென்று அங்கிருந்து கர்நாடகம் ஆந்திரம் மத்தியபிரதேசம் உத்தரப்பிரதேசம் சென்று காசியை அடைந்தபின் திரும்பி பிகார் வங்காளம் ஒரிசா வழியாக ஆந்திராவுக்குள் நுழைந்து சென்னை வந்தோம். ஒவ்வொரு நாளும் அந்தப் பயண அனுபவங்களை இந்த தளத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். அவை இந்த தளத்துக்கு வந்த வாசகர்களுக்குப் பெரும் கிளர்ச்சியைக் கொடுத்தவை. அந்த வழியில் பலர் மீண்டும் பயணங்கள் மேற்கொண்டார்கள். பைக்கில்கூட ஒரு குழு சுற்றி மீண்டது.
[4-9-2008 அன்று ஈரோட்டில் இருந்து இந்தியப்பயணம் கிளம்பியநாள். ]
வரும் 2012 ஜனவரி 14 முதல் மீண்டுமொரு பயணத்தைத் திட்டமிட்டிருக்கிறோம். இம்முறை ஒரு நோக்கம் உள்ள பயணம். இந்தியாவின் தொன்மையான நிலவழி வணிகப்பாதைகள் எவை என்ற ஒரு வினா எனக்கு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. அவற்றைப்பற்றிக் குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. பயணிகளின் குறிப்புகளில் வணிகப்பாதைகள் பற்றிய விவரணைகள் அதிகமில்லை. ஊகிக்க ஒரு வழி, புராதனமான சமணத்தலங்களை வைத்துக் கணக்கிடுவதுதான். சமணர்களே அதிகமும் வணிகர்கள். அவர்களின் வணிகப்பாதைகளில்தான் சமண பஸ்திகள் அமைந்தன.
ஆகவே தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகம் மகாராஷ்டிரம் வழியாக குஜராத் சென்று ராஜஸ்தானுக்குள் நுழைந்து ஜெய்சால்மர் வரை சென்றபின் மத்தியப்பிரதேசம் ஆந்திரம் வழியாகத் திரும்பி வரும் ஒரு பயணத்தைத் திட்டமிட்டிருக்கிறோம். இப்பகுதிகளில் அமைந்துள்ள சமணக் கோயில்கள், படுக்கைகளைப் பார்வையிட்டபடி செல்வது இலக்கு. ஒருமாத காலம் காரில். ஒருநாள் அதிகபட்சம் 250 கிமீ தாண்டுவோம். கூடுமானவரை இலவச தங்குமிடங்கள்,இலவச உணவு.
இதில் நான், கிருஷ்ணன்,வசந்தகுமார், கடலூர் சீனு, கெ.பி.வினோத், ஜெர்மானிய நண்பர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஆரம்பம் முதல் கடைசிவரை பங்குகொள்கிறோம். அரங்கசாமி முதல் பன்னிரண்டு நாள் மட்டும். அகமதாபாதில் வந்துசேர்ந்துகொள்ளும் செந்தில்குமார் தேவன் எஞ்சிய பதினெட்டு நாள் வருவார். ஒரு பொலேரோ வண்டி. ஓட்டுநர் தவிர ஏழு இருக்கைகள். ஆகவே ஒன்றைப் பங்கிட்டுக்கொள்ளவேண்டியிருந்தது.( ஹிந்தி தெரிந்த நல்ல ஓட்டுனர் இருந்தால் நண்பர்கள் சொல்லுங்கள்)
இதுவும் புதிய நிலங்களை புதிய மக்களைக் காணும் பேரனுபவமாக அமையும் என்று நினைக்கிறேன். இத்தகைய பயணங்களில் எல்லாமே அனுபவங்கள்தான். எல்லா அனுபவங்களும் இனிமையானவைதான். பின்னர் நினைத்துப்பார்க்கையில் அவை உருவாக்கும் ஏக்கம் அபாரமானது.
ஒரு ஊருக்குச் செல்லும் பயணத்துக்கும் இத்தகைய பயணங்களுக்கும் பெரும் வேறுபாடுண்டு. சென்றமுறை கிளம்பிச்செல்வது வரை நான் எத்தனையோ சொல்லியும்கூட நம் நண்பர்களுக்கு அந்த வேறுபாடு புரியவில்லை. ‘ஒரேமூச்சிலே அவ்ளவு ஊரையும் பாக்கணுமா, தனித்தனியாப் போலாமே’ என்றார்கள். தனித்தனியாகச் செல்லும் அனுபவம் வேறு. ஒரேமூச்சில் இந்திய நிலப்பரப்பைக் கடந்துசெல்லும்போது உருவாவது முற்றிலும் வேறு அனுபவம்.
முதலில் இந்தியா என்ற பிரம்மாண்டமான பன்மைச்சமூகத்தின் பல்லாயிரம் பண்பாட்டு வேறுபாடுகளை, நிலவேறுபாடுகளைப் பார்க்கலாம். சிலநாட்களுக்குள் அந்த பன்மைக்குள் ஓடும் ஒரு அடிப்படையான பண்பாட்டு இணைப்பை இந்தியாவெங்கும் மீண்டும் மீண்டும் காணமுடியும். அதுவே உண்மையான இந்திய தரிசனம். உண்மையில் அந்தப் பயணம் முடிந்து வந்த பின் இந்த நான்கு வருடங்களில் நண்பர்கள் வாரம் ஒருமுறையேனும் அந்த அனுபவத்தைப் பெரும் பரவசத்துடன் சொல்வதுண்டு. அந்த இந்தியதரிசனத்தின் ஒரு உதாரணம் இல்லாமல் ஓர் உரையாடல்கூட எங்களுக்குள் நிகழ்ந்ததில்லை.
இந்தப்பயணம் பற்றிய திட்டமிடல் சென்ற செப்டெம்பரிலேயே நடந்தாலும் இப்போதுதான் எதிர்பார்ப்பு முனைகொள்ள ஆரம்பித்துள்ளது. மானசீகமாக இப்போதே பயணத்தை ஆரம்பித்துவிட்டோம்
இந்தியப்பயணம் 1 புறப்பாடு
இந்தியப்பயணம் 2 தாரமங்கலம்
3 லெபாக்ஷி
4 பெனுகொண்டா
5.தாட்பத்ரி
6.அகோபிலம்
7. மகநந்தீஸ்வரம்
8.ஸ்ரீசைலம்
9 நல்கொண்டா
10. ஃபணகிரி
11 வரங்கல்
12 கரீம்நகர்
13 நாக்பூர் போபால்
14 சாஞ்சி