நாதஸ்வரம் தவில்-கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

நானும் என்னுடைய நண்பர் நாகசுர வித்வான் இஞ்சிக்குடி சுப்ரமணியமும் இரண்டு நாள்களுக்கு முன்னால் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார். நகைக் கடன் வேண்டுமா என்று கேட்டு ஒரு தனியார் வங்கியின் இளம் முகவர் அவரை அணுகியிருக்கிறார். சற்றுநேரத்தில் இருவரும் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொண்டனர்.

அந்த இளைஞரின் சகோதரி இஞ்சிக்குடி சுப்பிரமணியத்திடம் திருவாரூர் இசைப் பள்ளியில் நாகசுரம் பயின்றவர். அந்த இளைஞரும் அதே பள்ளியில் தவில் கற்றிருக்கிறார். பூம் பூம் மாடுகளை அழைத்துச் சென்று பணம் வசூலிக்கும் சாதியைச் சேர்ந்தவர் அந்த இளைஞர். பேசிக் கொண்டிருக்கும் போது, தனக்குத் தவில் வாசிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனதைப் பற்றி விரக்தியுடன் பேசியிருக்கிறார். குடும்பச் சூழல் தன்னை வேறு பாதைக்குத் திருப்பி விட்டது என்றும் புலம்பியிருக்கிறார்.

இஞ்சிக்குடி சுப்பிரமணியத்தின் வாதம் என்னவென்றால், இது போன்று எத்தனையோ இளைஞர்கள் வறுமையின் காரணமாகவும் குடும்பச் சூழலில் காரணமாகவும் திசைமாறி எங்கோ போய் விடுகிறார்கள். சுப்பிரமணியத்திடம் நாகசுரம் பயின்ற மாணவர்களில் மிகவும் சிறிய வயதில் ஒரு பையன் உண்டு. வயது 12 முடிவதற்கு முன்னதாகவே அவனைப் பள்ளியில் சேர்த்தமைக்காக உயர் அதிகாரிகள் அவரைக் கடிந்து கொண்டனர். அந்த மாணவனும் பூம் பூம் மாட்டுக்காரக் குடும்பம். இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த பலர் படித்தாலும், சுப்பிரமணியத்துக்கு இணை நாயனம் வாசிக்கும் அளவுக்கு அந்தப் பொடியன்தான் தேறியிருந்தான். பல இடங்களில் அவர் கூட வாசிப்பதற்காக அவனை அழைத்து சென்றிருக்கிறார்.

இங்கே இன்னொரு கருத்தையும் நான் தெரிவித்தாக வேண்டும். வாய்ப்பாட்டு கற்றுக் கொள்பவர்களும் மற்ற இசைக்கருவிகளை வாசிப்பவர்களும் முறையாகக் கல்வி பயின்று கொண்டேதான இசைத்துறையில் ஈடுபடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள 17 அரசு இசைப் பள்ளிகளிலும் பயிலும் பெரும்பான்மையான மாணவர்களில் 10-ஆம் வகுப்பைத் தாண்டியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியானால் அவர்கள் எத்தகைய குடும்பப் பின்னணியில் இருந்து வருகிறார்கள் என்பது நமக்குப் புரிந்து விடும்.

நீங்கள் தெரிவித்திருப்பது போல, மேளக்காரன் என்றால் இளக்காரமாக வெளிப்படையாகப் பார்க்கிறோமோ இல்லையோ, மனதளவில் ஒரு இளக்காரம் இந்த சமூகத்திடம் இருக்கத்தான் செய்கிறது. சென்னையில் மிகப் பிரமாதமாக வாசிக்கும் வியாசர்பாடி கோதண்டராமனுக்கு இந்த இசை விழாவில் ஒரு கச்சேரிக்குக்கூட வாய்ப்பு இல்லை என்று கேள்விப்பட்டேன்.

நாகசுர, தவில் இசையை சம்பிரதாயமாக மட்டுமே நாம் இன்று அணுகுகிறோம். கல்யாண வீட்டுக்கு சமையலுக்கு அட்வான்ஸ் கொடுக்கும் போது, மேளக்காரர்களையும் அழைத்து வந்து விடுமாறு ஏற்பாடு செய்து விடுகிறோம். நாகசுர தவில் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் இப்படித்தான் வருகின்றன. சென்னையில் கருமாதிக்கும் நாகசுரம் தவில் வைக்கிறார்கள். இப்படி கல்யாணம், கருமாதி என்று வித்தியாசம் இல்லாமல் வாசிக்க ஒப்புக் கொண்டால் பணம் வரும்.

இன்று காலமாற்றம் வேறு மாதிரியாக இருக்கிறது. பேர் பெற்ற தவில் கலைஞர்கள், பேர் பெற்ற நாகசுரக் கலைஞர்களை விட அதிகமாக சம்பாதிக்கிறார்கள். எல்லோரும் இன்று சிறப்பு தவில்தான். நாகசுரம் தவில் இணைந்த ஒரு இசைக்குழுவைப் பார்க்க முடியவில்லை.

கோலப்பன்

முந்தைய கட்டுரைஉரை; கடிதங்கள்
அடுத்த கட்டுரைபூமணி- உறவுகள்