பூமணி சந்திப்பு – செந்தில்குமார் தேவன்

கடந்தவாரம் அரங்கசாமி அழைத்து கோவில்பட்டியில் யாராவது இருக்கிறார்களா? அவசரமாக பூமணி அவர்களின் புகைப்படம் தேவைப்படுகிறது எனக் கேட்டிருந்தார்.

வாரக்கடைசியில் நான் விருதுநகர் செல்வதாக இருந்ததால் ஞாயிறு காலை 10 மணி அளவில் கோவில்பட்டி- பாரதி நகரிலுள்ள பூமணி அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்தேன்.

பூமணி அவர்களின் மனைவி தொலைபேசியில் சொன்ன குறிப்புகளின் படி வீட்டைக் கண்டுபிடிப்பது எளிதாகவே இருந்தது.  அவரும், அவர் மனைவியும் 1 வயதிருக்கும் பேரனும் இருந்தார்கள். பூமணி புன்னைகையுடன் வரவேற்றார். ஜெ சொல்லியிருந்தது போல பூமணி முதுமையின் தளர்ச்சியுடன் உடல்  மெலிந்தவராக மெல்லிய கை நடுக்கத்துடனும் இருந்தார்.

 

எழுத்தாளர் பூமணி
எழுத்தாளர் பூமணி

’இளைஞராக இருப்பீர்கள் என எதிர்பார்த்தேன், ரொம்ப சின்னப்பையனா இருக்கீங்களே’என்றார். ’சென்னையில் என்ன பண்றீங்க, சொந்த ஊர் எது? உங்களுக்கு எப்படி என்னைத் தெரியும், எப்ப இருந்து இலக்கியப் பக்கம்’ என்றார்.உண்மையில் இந்த விருது விழா அறிவிப்பு வரும் முன் அவர் பற்றி எனக்கு அவர் பெயர் தவிர்த்து எதுவும் தெரியாது. அவரை சந்திக்கச் செல்லத் திட்டமிட்டவுடன் அழியாச்சுடர்கள் தளத்தில் வெளியாகியுள்ள அவரது சிறுகதைகளை வாசித்துவிட்டுச் சென்றேன். சுய விவரங்களும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பற்றியும் அதில் நான் கத்துக் குட்டி என்பதையும் சொன்னேன். அரங்கசாமி போனில் அழைத்ததாகக் கூறி அவர் பற்றி மேலும் கேட்டறிந்து கொண்டார்.

அவர் கூட்டுறவுத்துறையில் இணைப்பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றதாகச் சொன்னார். சொந்த ஊர் கோவில்பட்டி அருகே கிராமம். சென்னையில் 30 வருடம் பணியாற்றி ஓய்வு பெற்றபின் கோவில்பட்டி வந்துவிட்டதாகச் சொன்னார். என் அம்மா அதே துறையில் தற்போது அதே பணியில் இருப்பதைத் தெரிவித்தேன். மகிழ்ந்து விவரங்கள் கேட்டுக்கொண்டார்.

அவரது ‘அஞ்ஞாடி’ நாவல் பற்றி கேட்டேன். உற்சாகமாகப் பேசத்தொடங்கினார். கதைக்களன் குறித்தும் நாவல் தொட்டுச் செல்லும் இடங்கள் குறித்தும் சில சில குறிப்புகள் சொன்னார். இரண்டு மூன்று நூற்றாண்டுகளில் கதை சுழலுகிறது. இந்திராகாந்தியின் காலத்தில் கதை முடிவடைகிறது, ஆயிரத்து ஐநூறு பக்கங்களில் க்ரியா  புத்தகக் கண்காட்சியில் வெளியிடுகிறது, விலை தான் 900 ரூபாய் யாரும் வாங்குவாங்களா? என்றார். விலையெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை சார், உள்ளருக்க விசயம் தான் முக்கியம், என்ன விலைனாலும் வாங்க வாசகர்கள் இருக்காங்க என்றேன்.

’நல்ல வாசிப்புப் புலம் உள்ளவர்கள்னு நான் நம்புபவர்களுக்கு நாவலை அனுப்பிருந்தேன். நாவலைப் படிச்சவங்க எல்லாரும் தமிழில் முக்கியமான நாவல்னு சொல்றாங்க’ என புன்னகையுடன் சொன்னார்.

’இவ்வள்ளவு பெரிய நாவல்னா நிறைய ரிசர்ச் பண்ணவேண்டியது இருந்திருக்குமே’என்றேன். ’ஆமா டெல்லி,கல்கட்டா, சென்னைனு நிறைய லைப்ரரி, ஆவணங்கள்னு தேடியிருக்கேன்.
திருஞானசம்பந்தர் நூற்றுக்கணக்கான சமணர்கள் கழுவேறக் காரணமாக இருந்தார்’ எனப் பெரியபுராணத்தில் இருந்து குறிப்பெடுத்து நாவலில் பயன்படுத்தியிருக்கிறேன். யார் யார் அதுக்கு என்ன சொல்லித் திட்டப் போகிறார்களோ’ என சொல்லிச் சிரித்தார்.

’எப்படி சார் அரசு அதிகாரியாக இருந்து கொண்டே எழுத நேரம் கிடைத்தது? உங்களது எல்லா நாவல்களுக்குமே இதே அளவு ரிசர்ச் செய்திருக்கீர்களா’என்றேன். ’இல்லை இல்லை அப்போதெல்லாம் நேரம் கிடையாது. சொல்லப்போனால் அவற்றிற்காக எந்த ஆராய்ச்சியும் செய்ததில்லை.

மேலும் நான் அதிகம் எழுதுபனும் அல்ல. என் வாழ்நாளில் இதுவரை மொத்தம் 51 சிறுகதைகள் மட்டுமே எழுதியுள்ளேன் என்றார்.  அது சரிதான். அரசு வேலையில் இருக்கும் போது நம் நேரமெல்லாம் அதிலேயே போய்விடும் ஆனால் குடும்பம் நடத்த வருமானம் வேண்டுமே. என்ன செய்ய? கோவில்பட்டி வந்த பின் வாசிக்க நிறைய நேரம் கிடைக்கிறது. மூர்க்கமாக இன்னும் இன்னும் என எழுத மனம் தவிக்கிறது. ஆனால் உடல் தான் ஒத்துழைக்க மறுக்கிறது. சொல்லப்போனால் தினம் தினம் உடலுக்கும் மனதிற்கும் தான் போராட்டமாகத்தான் கழிகிறது.’

’கோவில்பட்டியிலிருந்து சம காலத்திலேயே இவ்வளவு எழுத்தாளர்கள் இருக்கிறீர்களே சார்? என்ன காரணம்?’  ’கிரா தான். வேறென்ன’ (உற்சாகமாக சொல்கிறார்).. ’நாங்கள்ளாம் பள்ளி கல்லூரிகளில் இருக்கும் போது அவர் தான் எங்களுக்கு ஆதர்சம். பெரியவர் மிக அற்புதமான எழுத்தாளர். எங்கள் ஊரை எழுத்தில் வடித்தவர். அவரைத்தொடர்ந்தே நாங்கள் வந்தோம்.  எல்லாம் இங்கிருந்து தொடங்கியவர்கள் தான். பின்னர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.’

’எந்தக்கல்லூரியில் சார் படித்தீர்கள்’என்றேன். ’விருதுநகர் கல்லூரியில் தான், கல்லூரியில் படிக்கும் போது யாப்பில் செய்யுள் எழுதுவது மிகவும் பிடித்தமான விசயம். எழுதித் தள்ளியிருக்கிறேன். இப்பொழுது எல்லாம் மறந்து விட்டது. தளை தட்டுகிறது.’முக்கியமான தமிழாசிரியர்கள் என சில பெயர்களைக் குறிப்பிட்டார். நினைவில் இல்லை.

இருவாரம் முன்பு ஜெயமோகன் மற்றும் நண்பர்களுடன் கிராவை சந்தித்தோம் என சொன்னேன். மகிழ்ந்து கிராவின் உடல் நலம் கேட்டுக்கொண்டார். வேறு என்ன என்ன இலக்கிய நிகழ்வுகள் நடக்கிறது என்றார். விஷ்ணுபுரம் அமைப்பு நடத்தும் இலக்கிய அரங்குகள் குறித்து விவரித்தேன். சென்னையில் எஸ்ரா வழங்கிய உலக இலக்கிய அறிமுக சொற்பொழிவு குறித்தும் சொன்னேன். எல்லா இலக்கியக் கூட்டங்களுக்குமே தற்போது அரங்கம் நிறைந்து விடுகிறது என்றேன்.

உலக இலக்கியம் குறித்துப் பேசுவது நல்லதுதான் ஆனால் அதே வாசகர்களுக்கு, இங்குள்ளவர்கள் குறித்த அறிமுகம் தேவையில்லையா? ரஷ்யாவையும் ஜப்பானையும் தெரிந்து கொள்ளும் வாசகர்கள் இங்குள்ள கிராவையும் பூமணியையும் தெரிந்து வைத்துள்ளார்களா? உலக இலக்கிய அறிமுகத்திற்கு ஒரு வாரம் செலவழிக்கும் போது நமது எழுத்தாளர்களுக்கு இரண்டு நாள் ஒதுக்கக்கூடாதா?

இதுவே ஒருவகையில் புதிய வாசகர்களை உலக இலக்கியத்தை வியந்தோதவும் உள்ளூர் இலக்கியவாதிகளை  கவனம் பெறாமல் செய்யவும் வழிவகுக்கும் என்றார். முதலில் நம்மவர்களைப் பற்றிப் பேசிவிட்டுத்தானே வெளியூருக்குப் போக வேண்டும் என்றார். சரிதான் எனப் பட்டது. அரங்காவிடமும் ஜெமோவிடம் சொல்லி நாம் ஒரு நிகழ்வை நிகழ்த்த வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.

’சார் ஜெயமோகன் இலக்கிய முன்னோடிகள் வரிசையில் முன்னோடிகள் அனைவரைப் பற்றியும் எழுதியிருக்கிறார்’என்றேன். சிரித்தபடி, ’ஆம் கேள்விப்பட்டேன் வாசிக்க வேண்டும்’என்றார்.

’பயணங்களெல்லாம் அடிக்கடி செல்வீர்களா சார்?.’ ‘ட்ரெயின் டிக்கெட் கிடைத்தால் மட்டுமே பயணம், இல்லையேல் தவிர்த்துவிடுவேன் என்றார்.  கோவைக்கு எப்போ வரீங்க? டிக்கெட் வந்துசேர்ந்ததா’ என்றேன்? ’அரங்கசாமி டிக்கெட் போட்டதாக சொன்னார். இன்னும் வந்து சேரவில்லை. விருது தினத்தன்று கோவை ஞானியைப் பார்க்க வேண்டும். நான் மதிக்கும், முக்கியமான ஆளுமை, பார்க்கவேண்டும்’ என்றார்.

’’உங்களுக்குத் தெரியுமான்னு தெரியல, எனக்கு விஷ்ணுபுரம் விருதுனு செய்தி வந்தவுடனேயே பாராட்டு சொன்னவங்களவிட அதை வாங்க வேண்டாம்னு சொன்னவங்க தான் அதிகம். ஜெயமோகன் உங்கள் பெயரை வைத்து ஆதாயம் தேடப்பார்க்கிறார் என்று சொன்னார்கள். இந்துத்துவா என்றார்கள்.’’

”சிறிய எழுத்தாளர் பெரிய எழுத்தாளர்களுக்கு விருது கொடுத்து ஆதாயம் தேடப்பார்க்கிறார்” என்று போன வருடமே சொன்னார்கள் சார். ”சிறிய எழுத்தாளர்கள் எல்லாராலும் விருது கொடுக்கமுடியும் என்றால்  எல்லாரும் கொடுக்கட்டுமே அப்படியாவது நம் இலக்கிய முன்னோடிகளுக்கு இன்னும் கவுரவம் கிடைக்கட்டுமே’ என ஜெயமோகன் பதில் சொல்லியிருந்தார் சார் ’என்றேன்.

’சரிதான் சரிதான்.. ’என சத்தமாக சிரித்தார்.

தாங்கள் எதுவும் செய்யவில்லையென்றாலும் இங்கே எந்த முயற்சியையும் குறை சொல்வதற்குதான் சார் ஆள் இருக்கிறார்கள் என்றேன். அகாடமி விருதுகள் எல்லாம் அரசியலாகிப்போன நிலையில் விஷ்ணுபுரம் விருது என்ற ஐடியா எப்படி உருவானது என சுருக்கமாக சொன்னேன். கவிப்பேரரசர்கள் எல்லாம் நாவலுக்கான சாகித்திய அகாடமி வாங்குகிறார்கள் என ஒரு நிமிடம் உணர்ச்சி வசப் பட்டார்.

அவர் மனைவி காஃபி கொடுத்து விட்டுத் தம்பிக்கு நீங்கள் சொல்வதிலெல்லாம் ஆர்வமிருக்கிறதோ இல்லையோ அவர் வந்த வேலையைப் பார்க்க விட வேண்டியதுதானே என்றார். ஆர்வமில்லையா! அவருடன் பேசியதில் எனக்கு வந்த வேலையே மறந்து விட்டதும்மா, என்றபடி புகைப்படம் எடுப்பதற்காக அவரை வீட்டின் வெளியே அழைத்து வந்தேன்.

’இயல்பா இருக்கணும் தம்பி. போஸ் கொடுக்கறதெல்லாம் வேணாம். ரொம்ப நேரம் நிக்க வைக்காதிங்க’என்றார். ஆஹா ! அரங்கா திட்டுவாரே.. சரி.. சமாளித்துக்கொள்வோம் என அவரை சேரில் அமரவைத்து சில புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் கொண்டேன்.

அவர் மனைவி என் பின்னால் வந்து நின்றபடி அவரிடம், ’அவங்க இண்டர்னெட்லலாம் போடுவாங்க…  இப்படியா உர்ர்ர்னு நிக்கறது.. கொஞ்சம் சிரிச்சா என்னங்க’என்றார்? இவர் ‘அதெப்படி கேமெராவைப் பார்த்தா தன்னால சிரிப்பு வருமா? அது செயற்கையா இருக்கும்’னார்.

’சார், சிரிச்சா இன்னும் இளமையா தெரியிரீங்க’ன்னேன். சிரிக்கத் தொடங்கிவிட்டார்.

’சார் நீங்க ஏன் இண்டர்னெட்டில் எழுதக் கூடாது நாங்கல்லாம் படிக்க வாய்ப்பு கிடைக்குமே’என்றேன்.
’எனக்குக் கையில பேனாவும் பேப்பரும் இருந்தாதான் எழுத வரும். கம்ப்யூட்டர பாத்து உட்காந்தா என்னமோ எதிரிய பாக்கிற மாதிரியே இருக்கு.. தமிழ்த் தட்டச்சும் தெரியாது. அது எனக்கு சரியா வரல..

இண்டெர்னெட்ல எழுதுறது ஒருவகையில விளம்பரம் பண்ணிக்கிற மாதிரியோனு தோணுது, நான் ஆரம்பத்திலிருந்தே சிறுபத்திரிக்கைகளில் மட்டுமே எழுதிப் பழகிட்டேன்.அதுபோகநான் நாவலை இண்டர்னெட்டில் போட்டுவிட்டால் பப்ளிசர் என்ன செய்வார்’’என்று உண்மையான அக்கறையுடன் கேட்டார். ’சார் நெட்ல பெரும்பாலும் யாரும் முழு நாவல் வெளியிடுவதில்லை சார். கட்டுரைகள் சிறுகதைகள் கடிதங்கள் போன்றவை தான்’என்றேன். ’என் வாசகர் ஒருவர் எனது எழுத்துக்களை ப்ளாக் ஆரம்பித்து போட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டிருக்கிறார், பார்க்கலாம்’என்றார்.

’இப்பக் கூட ஆனந்த விகடனிலிருந்தும் குமுதத்திலிருந்தும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ”நட்சத்திர எழுத்தாளர்கள் கதை வரிசைக்காக” என சிறுகதைகள் கேட்டார்கள். ஆனால் நடிகை தொடை பக்கத்தில நமக்கு என்ன வேலைனு வேணாம்னுட்டேன். இத்தன வருசம் சிறுபத்திரிக்கைகளில் எழுதிட்டோம். இனிமேலும் அதிலேயே எழுதுவோம். அதான் இப்போ பேர்லல் (parallel)  மேகசின்ஸ்லாம் வந்திடுச்சுல்ல.தீவிரமான வாசகர்கள் எங்கிருந்தாலும் இப்பவும் தேடி வரத்தான் செய்ராங்க, நமக்கு அது போதும்’என்றார்.

அவர் மனைவி தம்பி சும்மாவாவது இவர் படத்தை இணையத்திலே அவர் பெயரோட போட்டு வைய்யுங்க. இவர் வாசகர்களுக்குக்கூட அவர் முகம் தெரியாது என்றார்.

போட்டோ எடுத்துமுடித்தவுடன், ’விஷ்ணுபுரம் படிச்சீங்களா சார்’ என்றேன். ’நான் ஜெயமோகனது நூல்கள் அதிகம் படித்ததில்லை. ஆரம்பத்தில் அவரது ரப்பர் படித்தேன். அது பெரிய அளவில் கவரவில்லை, அப்புறம் சில வருடம் கழித்துக் காடு தொடங்கினேன். பாதியில் நிறுத்திவிட்டேன். எனது நாவல் வேலையில் இருந்தேன். பின்னர் தொடராமல் விட்டுப்போய்விட்டது’என்றார்.

விஷ்ணுபுரம் பற்றிய ஒரு அறிமுகம் கொடுத்து அதன் சாரத்தைத் தொகுத்து சொல்ல ஆரம்பித்தேன். ’விஷ்ணுபுரம்னு தலைப்பை மட்டும் பார்த்து இந்த்துவா நாவல்னு சொல்றவங்களும் இருக்காங்க சார், ஆனா நாவல் அது விஷ்ணுவே இல்லைனு சொல்லுது’என்றேன்.

’அப்படியா.. தெரியாமப் போச்சே,  நான் எனது அடுத்த நாவலில் ஆண்டாள் பற்றி எழுதப் போகிறேன். நீங்க சொல்றதப்பாத்தா விஷ்ணுபுரம் தான் முதல்ல படிக்கணும் போலயே’ என்றார்.

’விருதை வாங்கவேணாம்னு இவ்வளவு பேர் சொல்லும் போது எனக்குக் கொஞ்சம் தயக்கமிருந்தது, முக்கியமான நண்பர்களிடம் கேட்டேன். இறுதியில் கோவை ஞானியிடம் பேசினேன்.அவர் “நான் செய்ய வேண்டிய வேலை. என்னால முடியல.. அவன் செய்றான். ஆயிரம்மடங்கு சந்தோசத்தோட, யோசிக்காம ஏத்துக்கோ என்றார்” அப்பறம் யோசிக்கவே இல்லை (ஞானியும் அஞ்ஞாடியைப்படித்துப் பாராட்டியவர்களில் ஒருவர் )என்றார்.

பேச்சு இயல்பாக ஜெயமோகன் பற்றி வந்தது. ’விருது குறித்து ஜெயமோகன் போனில் அழைத்து விவரம் சொல்லி விருதை ஏற்கிறீர்களா என்றார். நான் அவரிடம் நேரில் பேசியது இல்லை. அதனால் நேர்ல வாங்க பேசுவோம்னு அழைத்தேன்’ என்றார். என் வீட்டருகே கட்டிட வேலை நடைபெறுவதால் ரொம்ப சத்தம். வீட்டில் அமர்ந்து பேசுவதற்குத் தொந்திரவாக இருக்கும். எனவே  வந்திருந்த இரண்டு நாட்களும் ஜெயமோகன் ஹோட்டலில் தங்கியிருந்தார். அவருடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வயதிலேயே(?) மிகப்பரந்த வாசிப்புப்புலம் வைத்திருக்கிறார் எனத் தெரிந்தது என்றார். நல்ல விமரிசனப் பார்வையும் இருக்கிறது.

குமரகுருபரரின் பிள்ளைத்தமிழ் பேரனைக் கொஞ்சும் தாத்தாவாக, ஒரு துறவி, மடாதிபதி  சிறப்பாக எழுதியுள்ளதாக ஜெயமோகன் சொன்னார், நான் பெரியாழ்வாரின் பிள்ளைத்தமிழில் அவர் ஒரு குழந்தையாகவே மாறி எழுதியிருக்கிறார் அதுவே சிறந்தது என்றேன் என்றார்.

’எனக்கு பக்தி கிடையாது சார், நான் நாத்திகன், ஆனால் பெரிய முத்திரை விழுந்துவிட்டது’என ஜெயமோகன் சொன்னார் என்றார். ’நீங்க என்ன சார் நினைக்கிறீங்க’என்றேன்.  இரண்டு நாள் அவருடன் பேசியதில் இலக்கியத்தில் மட்டுமல்ல மற்றும் பல கருத்துக்களிலும் எனக்கு அவருடன் உடன்பாடு இருந்தாகப் பட்டது என்றார். ’விஷ்ணுபுரம்னு தலைப்பு வைக்க எவருக்கும் உரிமை உண்டு’என்றார். ’ஆனால் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்’என்றார். ’சார் அவர் சர்ச்சைகளில் சிக்குவதில்லை அவர் தன் கருத்தை வெளிப்படையாக வைக்கிறார், அதை சர்ச்சையாக ஆக்குகிறார்கள்’ என்றேன். உதாரண்மாக பாரதி விவாதத்தை சொன்னேன்.

’அப்ப யார மகாகவினு சொல்றார்?’ன்னார். மகாகவி என்பதை ஒரு பட்டமாக வழங்குவதில் தனக்குப் பிரச்சனையில்லை ஆனால் அது ஒரு அளவுகோல் எனில் கம்பனே தமிழில் அதன் உச்சம். பாரதியின் தரவரிசைப்படி கம்பனுக்கே அவரும் முதலிடம் கொடுத்ததையும் சுட்டிக்காட்டுகிறார் என்றேன்.

உற்று கவனித்தவரிடமிருந்து சில நொடிகள் பதிலில்லையென்றவுடன், ஐயயோ தேவையில்லாத டாப்பிக்க ஆரம்பிச்சுட்டமோ என உள்ளுக்குள் பதறினேன்.

’சரிதான். கம்பன் பக்கத்தில வர இங்க யாரும் இல்ல. மானுட வாழ்க்கைய அவனவிட சொன்னவன் தமிழ்ல யாரும் இல்ல.. ’பாரதியென்ன அப்படிப் பெரிய விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட கவிஞனா? பாரதியை மட்டும் படித்த எவரும் அவனைப் புகழத்தான் செய்வார்கள். நமது இலக்கிய மரபு மிகப்பெரியது. அவை அனைத்தையும் படித்தவர்களால் மட்டுமே உண்மையில் அவன் இடம் என்ன என உணர முடியும்’என்றார்.

’இல்ல சார் இவர் அதப் பத்தி சொல்லல,  நவீன தமிழ் உரைநடையில் பாரதியே முன்னோடி. ஆனால் பாரதியின் காலத்தில் அவரது சமகால இந்திய படைப்பாளிகளின் மத்தியில் அவரது இடமென்ன, மொத்த தமிழ் இலக்கிய மரபில் பாரதியின் இடம் என்ன என விரிவாக விவாதித்திருக்கிறார்’என்றேன். முக்கியமானதாக இருக்கும் போலயே எனக்கு அந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டுமே, கிடைக்குமா என்றார். அனுப்பிவைப்பதாகச் சொன்னேன்.

அப்படியே பின் தொடரும் நிழலின் குரல் பற்றியும் சொல்லி ஏன் இடது சாரிகள் இவரைத்திட்டுகிறார்கள் எனவும் சொன்னேன். ’சரிதான் சரிதான் இதெல்லாம் அடித்துப்பேச ஒரு ஆள் வேணும் தான்.
எனது அடுத்த நாவல் வேலை ஆரம்பிக்கும் முன் ஜெயமோகன் படைப்புகள் அனைத்தையும் படித்து முடித்துவிட வேண்டும் என இருக்கிறேன். (நேற்று தொலைபேசியில் பேசும் போது மீண்டும் அதையே சொன்னார், முடிந்தால் கோவைக்கு ஜெயமோகன் நூல்களில் முக்கியமானவற்றின் பட்டியல் கொண்டுவாருங்கள் என்றார்.) புத்தகக் கண்காட்சியில் அவரது அத்தனை புத்தகங்களையும் வாங்கிவர வேண்டும்’என்றார்.

’ஜெயமோகன் அவரது அடுத்த நாவல் குறித்துச் சொல்லும் போது அவர் சொன்ன விசயங்கள் எனது நாவலிலும்  வருவது போல் இருந்தது. நல்ல வேளை எனது நாவல் அவர் நாவலுக்கு முன்பே வெளிவந்துவிடும்.’ (சிரிக்கிறார்)

’இளைய தலைமுறையில் வாசகர்கள் உங்களைப் பார்க்க வருகிறார்களா? இளைஞர்களிடம் இலக்கிய ஆர்வமிருகிறதா, ஆங்கிலக் கல்வியின் மோகம் அவர்களை இலக்கியத்திடம் அன்னியப்படுத்துகிறதா’ என்றேன்.

’ஒரு வகையில உண்மைதான். என் பையன் மெட்ரிகுலேசன் படிச்சு இஞ்சினியரா இருக்கான், அவனுக்கு நான் என்ன எழுதியிருக்கேன்னு பெரிசா ஒண்ணும் தெரியாது. அப்பா ஏதோ எழுத்தாளர், என்னமோ எழுதுறார், யார் யாரோ பார்க்க வாரங்க அவ்வளவு தான். ஆனா நீங்களும் இளைஞர் தான் விசயம் தெரிந்து பார்க்க வரீங்க.. கொஞ்சம் வாசகர்கள்னாலும் தீவிரமானவர்கள் இருக்கத்தான செய்யறாங்க.

ஆனா எல்லாருக்கும் நாம பேசும் விசயங்களில் ஆர்வம் கிடையாது. தொந்திரவாக நினைக்கிறார்கள்.
ஒரு ஊருக்குள் சிமெண்ட் தொழிற்சாலை வந்தவுடன் சுற்றியுள்ள மரங்கள் எல்லாம் முக்காடு போட்டது போல் தலையைக் கவிழ்த்து நிற்கின்றன. அது போல தான் பல விசயங்கள். வயல்ல மயில் வருதுனு மயிலுக்கு விசம் வச்சுக் கொல்றாங்க. இதல்லாம் எங்க போய் சொல்றது.. நெனச்சா மனசுக்கு ரொம்ப பாரமா இருக்கு. எழுத்தாளன் என்ன செய்யலாம். ஒரு சைலண்ட் ஸ்பெக்டேடரா இருந்து எல்லாத்தையும் பதிவு செய்துவிட்டு போகலாம். நான் அதைத்தான் செய்றேன்’என்றார்.

’நம்ம இலக்கிய மரபு ரொம்பப் பெரியது. அத்தனையும் படிக்க முடியலன்னாலும் எல்லாத்துலயும் கொஞ்சம் கொஞ்சம் ருசி பார்த்து விடுங்கள்’என்றார். பகல் 12க்கு மேல் ஆகிவிட்டது. நான் விடைபெற்றுக் கொண்டு ’கோவையில் சந்திப்போம் சார்’என விருதுநகர் கிளம்பினேன்.

மதியம் வீட்டில் வந்து அம்மாவிடம் ’கோவில்பட்டியில் உங்கள் துறை அதிகாரி மாணிக்கவாசகம் சாரைப் பார்த்தேன்’என்றேன். ’அட, நல்லாத் தெரியுமே சார் எப்படி இருக்கிறார்? நேர்மையான அதிகாரி அவர்’ எனப் பேசிவிட்டு அரைமணி நேரம் கழித்து ’நீ எதற்கு அவர் வீட்டுக்கு போயிருந்த’என்றார்.

’இந்த வருசம் அவருக்குத்தான் விருது கொடுக்கிறாங்கமா’என்றேன். ’பூமணிக்குத்தான விருதுன்னு சொன்ன…’ சட்டென முன்தலையில் தட்டிக் கொண்டு ’மாணிக்கவாசகம் சார்தான் பூமணியா? இத்தன  வருசமா இது தெரியாமப் போச்சே’ என்றார்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருதுவிழா குறித்து…
அடுத்த கட்டுரைகாளிகாம்பாள்