ஒலியும் மௌனமும்

அன்புள்ள ஜெ,

இசையை நீங்கள் கேட்கும் முறைமை பற்றி எழுதியிருந்ததை படித்தேன். ஒலிகளைக் காட்சிகளாய் உணர்வது என்பது எனக்கு முற்றிலும் புதிதாக இருக்கிறது. ஒளியையும் பிரித்தறிந்தால் முடிவில் இருப்பது ஒலியலைகளே என்று எங்கேயோ படித்த ஞாபகம். உங்கள்மனம் ஒருவேளை பிம்பங்களால் மட்டுமேயானதோ என்றொரு ஐயமும் ஏற்பட்டது. ஆனால்அவ்வாறிருக்க சாத்தியம் மிகக்குறைவு என்றே தோன்றுகிறது.

எந்த ஒரு தத்துவ சிந்தனையும், மரபும், மார்கமும் ஒலிகளுக்குத் தரும்முக்கியத்துவம் மிக அதிகம் என்றே தோன்றுகிறது. அது ஓங்காரத்தை உலக முதலாய் நிறுத்தும் சிந்தனை மரபாகட்டும், அல்லது வார்த்தையிலிருந்து உருவானதாகஉலகைக்காட்டும் பைபிளாகட்டும்.(In the beginning was the Word, and the Word was with God, and the Word was God – John 1:1). “ந காயத்ரி பரமோ மந்த்ரஹ” என்று சந்தஸ்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அதிகமே.

ஒரு நாள் எனது நண்பர்களுக்காக நள்ளிரவு தாண்டி கடற்கரையில் உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு வெள்ளைக்காரர் அருகில் வந்து அமர்ந்துகொண்டார்.முப்பது வயதே இருக்கும். எந்த இடையூறும் செய்யாது பாடல் முடியும் வரைஅமர்ந்திருந்தார். பாடி முடித்ததும், இது யார் பாடிய பாடல், எதாவது ஆல்பமா என்றுகேட்டார்.திரைப்படத்தில் வந்த பாடல் என்று சொன்னேன் (பாட்டும் நானே-திருவிளையாடல்). அந்த பாடலை குறித்து தன் கருத்துகளைச்சொன்னார். வேறு சிலபாடல்களைப் பாடச்சொல்லி கேட்டார்.

உலகப் பொதுவான இசை குறித்த கருத்துகளை பேசிக்கொண்டிருந்தபோது, நான் “இசை என்பதுநிசப்தத்தை மிக அழகாக உணரச்செய்யும் ஒரு கருவி. அவ்வளவே. இசையில் ஏதுமில்லை. அதன்அழகு நிசப்தத்தில் ஒளிந்திருக்கிறது” என்று சொன்னேன். அவர் அதை மறுத்துச்சொன்னார், உலகில் நிசப்தம் என்ற ஒரு விஷயமே இல்லை, அனைத்தும் ஒலிகளாலானதே. நீ பாடமாட்டாய்ஆனால் அலைகளை என்ன செய்வாய், காற்றை என்ன செய்வாய்,உலகில் ஏதேனும் ஒரு மூலையில் ஒலிதன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும் என்று சொன்னார்.

இந்த உலகம் ஒலிகளாலானது என்று சொல்வார்கள். ஒலிகளே இல்லாமல் போனால் இந்த உலகம்என்னவாகும்? உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் ஒலிக்காதுபோனால் இந்த அண்டம்அப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும். கடல் அலைகள் நுரைத்துக்கொண்டிருக்கும்.காற்றிருக்கும் வரை இந்தப்பேரண்டம் ஒலிகளால் அலைகிழிக்கப்பட்டுக்கொண்டுதான்இருக்கும். என்றால் அமைதி என்பது இயற்கையில் கிடையாதா? அமைதி என்ற சொல் வெறும்சொல்மட்டுமேவா? மனக்கட்டமைப்புத்தானா? கற்பிக்கப்பட்ட மௌனமும் அமைதியும், அதுதருவதாகச்சொல்லப்பட்ட யோகவயமான மனமும் வெறும் கற்பனைதானா? ஒலிகளைத்தவிர்த்துவிட்டாலும் என் உடலில் பாயும் குருதியின் ஒலியை என்னசெய்யமுடியும். அமைதியான உலகில் மனிதன் உடலுள் குருதி ஓடும் சத்தம் மட்டுமே மிகஅதிகமான சப்தத்தை ஏற்படுத்திவிடமுடியும். அமைதி என்பது மரணம் என்றால் வாழ்கை என்பதுஒலி. உண்மையில் ஒலிகள்தாம் நம்மை உயிருள்ளவையாக்குகின்றன. உலகம் ஒலிவயமானது.இயற்கையில் உயிருள்ள அனைத்துமே ஒலிகளால் பின்னப்பட்டிருக்கிறது. உலகம் ஒலிகளால்நெய்யப்பட்ட ஒரு அற்புதமான போர்வை.ஒலிகள் அமைதியின் உண்மைமுகம்.

எனது புரிதல்கள் பெரும்பாலும் ஒலிவயமானதாக இருக்கிறது என்றேநம்புகிறேன். என்னால் காட்சிகளாக யோசிப்பது என்பது யோசிக்க முடியாததாகவே இருக்கிறது. ஆச்சரியம்தான். ஒலி குறித்து விரிவாக உங்களிடம் விளக்கம் பெறவேண்டும் என்று நினைக்கிறேன்.விரிவாக எழுதுகிறேன். உங்கள் நேரம் ஒதுக்குமாறு இப்போதே வேண்டுகிறேன்.

-ராம்

அன்புள்ள ராம்,

தியானம் பழகிய ஆரம்பநாட்களில் எனக்கு ஒரு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது. புலன் மயக்கம். அதை பெரும்பாலான தியானசாதகர்கள் உணர்ந்திருப்பார்கள்.கேட்பது காண்பதாகவும் காண்பது கேட்பதாகவும் மாறித்தோன்றும். அதில் மிகவும் விசித்திரமான அனுபவம் ஒலி நம்மை உண்மையிலேயே உடம்பைத் தொட்டு வருடிச்செல்வது.

அதை முதன்முதலில் அனுபவிக்கும்போது ஏற்படும் பதற்றம் சாதாரணமானதல்ல. அந்த அனுபவத்தில் உள்ள உக்கிரமும் புதுமையும் நம்மை அதை நோக்கி ஈர்க்கும். அதேசமயம் அதில் உள்ள விபரீதம் நம்மை அச்சத்தில் விரைக்கச்செய்யும். அதில் இருந்து தப்ப நாம் முயல முயல நம் பிரக்ஞையின் ஒருபகுதி அதிலேயே இறுகப்பிடித்துக் கொண்டு அடம்பிடிக்கும். கெட்டகனவில் இருந்து விடுபட எம்புவது போல நாம் திமிறி முயன்று விடுபடுவோம்.

வெளிவந்த உடனே எத்தனை அபூர்வமான ஓர் அனுபவம் அது என எண்ணி வியந்து அதை மேலும் அடைய முயல்வோம். ஆனால் அது நிரந்தரமாக பின்னால் சென்றுவிட்டிருக்கும். மீண்டும் அதை நிகழ்த்திக்கொள்ள முடியுமா என்று எண்ணுவோம். ஆனால் என்ன சிக்கல் என்றால் அந்த அனுபவத்தால் கிளர்ச்சி அடைந்த நிலையில் அதை நாம் மீண்டும் அடையவே முடியாது. விஷ்ணுபுரத்தில் இந்த அனுபவத்தின் விவரிப்பு உள்ளது.

பின்பு நான் உளவியலாளர்களிடம் பேசியபோது அது அபூர்வமான அனுபவம் அல்ல என்றும் பெரும்பாலான போதைப்பொருட்கள் — குறிப்பாக எல் எஸ் டி- அதை அளிப்பதாகவும் சொன்னார்கள்.நானே ஒருமுறை கஞ்சாவில் அதை அறிந்திருக்கிறேன். என் மனைவி ஒருமுறை கருக்கலைந்து பெதடின் ஊசி போடப்பட்டபோது அந்த அனுபவத்தை அடைந்ததாகச் சொன்னாள்.

ஆலிவர் சாக்ஸ்
ஆலிவர் சாக்ஸ்

ஆனால் பின்னர் ஆலிவர் சாக்ஸ் போன்ற உளவியலாளர்களின் ஆய்வுகளை வாசித்தபோது போதையனுபவத்துக்கும் இந்த தியான அனுபவத்துக்கும் இடையேயானான பெரும் வேறுபாட்டை நான் மதிப்பிட்டுக்கொண்டேன். போதை என்பது மயக்கம், மயக்கத்தினால் வரும் அனுபவச்சீர்குலைவு. போதையில் கவனம் சிதறிக்கிடக்கிறது. அதன் ஒரு நுனி தற்செயலாக அகப்பட்டதில் படிந்துகொள்கிறது. அதில் நம் அவதானிப்பு என்பது குறைவு

தியானம் என்பது அதிகவனம். அங்கே நம் அனுபவத்தைக் கவனிக்கும் நாம் விழித்திருக்கிறோம். மிக நுண்மையாக நம் அகம் அதிர்ந்துகோண்டிருக்கிறது. நாம் ஒருமுனைப்பட்டிருக்கிறோம்.

இரண்டிலும் வழக்கமான புலனறிதல்களின் ஒழுங்கு தலைகீழாக்கப்பட்டிருக்கிறது. கண்ணால் காண்பதை காட்சியாகவும் காதால் கேட்பதை கேள்வியாகவும் தொடுவதை தொடுவுணர்ச்சியாகவும் ஒழுங்கமைத்துக்கொள்ளும் மூளையின் கட்டமைப்பு இல்லாமலாகிவிட்டிருக்கிறது. ஆகவே அனுபவங்கள் தலைகீழாகின்றன.

ஒருவகையில் புற அனுபவத்துக்கு இயற்கை விதித்துள்ள எல்லைகள் அழிகின்றன. அனுபவத்தின் களம் சட்டென்று அதிபிரம்மாண்டமானதாக ஆகிறது. வானத்தை நம்மால் தொட்டுணரமுடியும் என்றால் இடியொலியைச் சுவைக்க முடியும் என்றால் எத்தனை மகத்தான விஷயம் அது! அதை நாம் ஆவலுடன் அள்ளிக்கொள்கிறோம்.அந்த பிரம்மாண்டத்தை அஞ்சவும் செய்கிறோம்

நரம்பியலின் கூற்று என்னவென்றால் மனிதமூளையைப்பொறுத்தவரை எல்லா அறிதல்களும் நரம்புகள் வழி வந்துசேரும் மின்னதிர்வுகள் மட்டுமே. ஒவ்வொரு அனுபவத்துக்கும் மூளை அதற்கான இடத்தை வைத்திருக்கிறது. ஓர் அனுபவத்தை அதை கொண்டுவந்த புலனுடன் சேர்த்தே மூளை அறிகிறது. ஆனால் இது மூளையின் முதல்தளமே. போதையில், தியானத்தில் அந்த சுயவிதியை விட்டு மூளை வெளியேறிவிடுகிறது.

ஆகவே இசை என்பதும் காட்சி என்பதும் வாசனை என்பதும் குளிர்வெப்பம் என்பதும் சுவை என்பதும் ஒரே அனுபவத்தின் வெவ்வேறு தளங்களே. மூளை கொள்ளும் அனுபவப் பிரமைகள்தான் அவை. சாதாரணமான அனுபவத்தளத்திலேயே அவற்றின் எல்லைகள் அழிந்துவிடும் வாய்ப்புகள் ஏராளமாக உண்டு.

மூளையின் அமைப்பு சார்ந்து ஒலிநுண்ணுணர்வு கொண்டவர்கள் உண்டு. காட்சி நுண்ணுணர்வு கொண்டவர்கள் உண்டு. முந்தையவகையினருக்கு இசை அளிக்கும் அனுபவம் அல்ல பிந்தைய வகையினருக்கு இசை அளிப்பது. மொழிநுண்ணுணர்வு என்பது முற்றிலும் இன்னொன்று.

மேலும் கலை அனுபவம் என்பது குறியீடுகள் அர்த்தப்படுத்திக் கொள்ளப்படுவதனால் உருவாகும் அக அனுபவம். ஓர் ஒலி அல்லது காட்சிக் குறியீட்டுடன் நாம் என்னென்ன அனுபவங்களை இணைத்துக்கொள்கிறோம் என்பதைச் சார்ந்தது அது. இந்த இணைப்பே குறியீடுகளின் அர்த்தத்தைப் பெருக்கி கலையை நம்முள் விஸ்வரூபம் எடுக்கச் செய்கிறது. ஸ என்பது ஓர் ஒலிக்குறியீடு. நீள்வட்டம் என்பது ஓர் காட்சிக்குறியீடு. பலநூறு குறியீடுகளால் பின்னப்பட்டே கலை உருவாகிறது.

குறியீடுகளில் இருந்து கற்பனை மூலம் எந்த அளவுக்கு முன்னகர்கிறோம் என்பதை வைத்தே நாம் கலையை ரசிக்கும் அநுபவத்தின் ஆழம் தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு குறியீடுகளுடன் அனுபவங்களை இணைத்து இணைத்து நம் அகத்தை விரிவடையச்செய்வதையே கலையை ரசிக்கும் பயிற்ச்சி என்கிறோம்.

எந்தக்கலையும் முதலில் வெறுமையாகவே நமக்கு அறிமுகமாகிறது. வெறும் ஒலிகளாக, நிறங்களாக,சொற்களாக. நாம் தொடர்ந்து அதில் ஈடுபடும்போது மெல்ல மெல்ல அது நமக்குள் உள்ள பலவற்றுடன் இணைவு பெறுகிறது. ‘வண்னத்துப்பூச்சி அமர்கிறது கூரிய வாளின் நுனியில்’ என்ற வரி நமக்கு வெறும் காட்சி மட்டும் அல்ல. வண்ணத்துப்பூச்சியின் மென்மை அதில் இணைந்துள்ளது. இன்னொருவருக்கு வண்ணத்துப்பூச்சி ஒரு படபடக்கும் விழியாக ஆகக்கூடும். ஜென் மரபை அறிந்தவர்களுக்கு மேலதிக தத்துவ இணைப்புகள் நிகழக்கூடும்.

இசையைக் கேட்கும் ஒருவருக்கு அந்த ஒலிக்குறியீடுகள் வழியாக என்ன மன இணைப்புகள் உள்ளன என்பதை ஒட்டியே அவரது இசையனுபவம் அமைகிறது. அதற்கு ஒருவரின் நுண்ணுணர்வுகள் எந்த தளத்தைச் சேர்ந்தவை என்பதையே நாம் நோக்க வேண்டும். காட்சி சார்ந்த நுண்ணுணர்வு அதிகமான ஒருவருக்கு அவரது முன் அனுபவங்களின் சேகரிப்பு முழுக்க காட்சிகளாகவே இருக்கும். ஒலிக்குறியீடுகள் அந்த காட்சிகளையே தொட்டு எழுப்பும்.

பொதுவாக இலக்கியவாதிகளுக்கு காட்சிசார்ந்த நுண்ணுணர்வுகள்தான் அதிகம் என எண்ணுகிறேன். வாழ்க்கையை அவர்கள் ‘காட்ட’வே முயல்கிறார்கள். மொழி ஒரு ஒலித்தொகுப்பு. ஆனால் அதன் அர்த்த தளம் எப்போதுமே காட்சிகளினால் ஆனது. ஆகவே மொழிநுண்னுணர்வு எப்போதுமே காட்சிகளாகவே இருக்கிறது.

இப்போது எண்ணிப்பார்க்கிறேன், தமிழில் பெரும்பாலான கவிஞர்கள் இசைப்படிமங்களை காட்சிகளாகவே எழுதியிருக்கிறார்கள். மிகச்சிறந்த உதாரணம் சுகுமாரனின் ‘இசை தரும் படிமங்கள்’ என்னும் கவிதை.

காலம் ஒரு கண்ணாடி வெளி

எனக்கு மீந்தன

கண்ணீரும் சிறகுகளும்

என இசையனுபவத்தை காட்சிப்படிமங்களாக மட்டுமே முன்வைக்கும் கவிதை அது.

அதேபோல ராஜ சுந்தரராஜனின் ‘ஆரோகணம்’ ‘அவரோகணம்’ என்னும் இரு கவிதைகளும் உதாரணமாகச் சொல்லத்தக்கவை. அவை செவிப்புலனின் அனுபவத்தை காட்சிப்படிமங்களாக அனுபவமாக முன்வைக்கின்றன.

‘வெளிதுழாவிய சிறகுகள்

கூடுவந்தணைந்தன’

என்பது அவரோகணம் என்னும் ஒலியனுபவத்தின் காட்சிச் சித்தரிப்பு.

நித்ய சைதன்ய யதி எனக்கு ஒரு தியானமுறையை சொல்லித்தந்தார். இரைச்சல் இல்லாத ஏதேனும் ஓர் இடத்தில் கண்மூடி அமர்ந்துகொள்வது. சுற்றிலும் கேட்கும் ஒலிகளில் கவனத்தை குவிப்பது. சற்று நேரம் இதைச் செய்யும்போது மிகத்தூரத்தில் உள்ள ஒலிகளெல்லாம் நமக்கு கேட்க ஆரம்பிக்கும். நாம் சாதாரணமாக ஒலிகளை வடிகட்டி தேவையானவற்றை மட்டுமே கேட்கிறோம் என்று புரியும். பல இடங்களில் குழந்தைகளும் பறவைகளும் ஓயாமல் ஒலியெழுப்பிக்கொண்டிருப்பது தெரியும்.

அவ்வாறு ஒலிகளைக் கேட்க ஆரம்பித்தால் மெல்ல மெல்ல நம் பிரக்ஞை பரவுவதை உணர முடியும். ஒலி மூலமே தூரமும் வெளியும் நமக்கு அனுபவமாகும். நமது இருப்பு பல கிலோமீட்டர் பரப்புக்கு விரிந்துவிடும். நாம் பிரம்மாண்டமாக ஆகி பூமியாகவே நிறைந்துவிடுமோம். அந்த நிலையில் அது கேள்வியனுபவமாகவோ காட்சியனுபவமாகவோ இல்லாமல் இருத்தல் அனுபவமாகவே ஆகிவிடும்.

நீங்கள் சொன்ன ‘சங்கீதத்தின் சாரம் மௌனம்’ என்ற கூற்றை இவ்வாறுதான் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய சிந்தனை மரபில் மௌனம் என்பதை ஓர் ஒலியாகவே உருவகித்திருக்கிறார்கள் — ஓம் என்று. தனித்தனியான புலன் அனுபவங்கள் இணைந்து ஒற்றை அனுபவமாக ஆகும் நிலை உண்டு. அதைப்போலவே அனுபவம் தூய இருப்பாக ஆகும் நிலையும் உண்டு. அதையே மௌனநிலை என்றார்கள். இசையில் மட்டுமல்ல எங்கும் உள்ள மௌனம் அதுதான்

இந்திய சிந்தனை மரபில் மௌனம் என்பது அந்த லயத்தின் குறியீடாகவே சொல்லப்படுகிறது. மிகச்சிறந்த இசை எங்கேனும் ஓர் இடத்தில் தூய இருத்தல் மட்டுமாக ஆகி மீள முடியும். அதுவே மௌன உச்சம். உங்கள் வெள்ளைய நண்பர் அந்த தளத்துக்கு வெளியே நின்று காதை மட்டுமே வைத்து அக்கருத்தை புரிந்துகொள்ள முயல்கிறார்.

நான் காசர்கோடில் வேலைபார்த்தபோது ஒரு நணபர் இருந்தார். சற்றே மனநிலை பிசகியவர். வந்ததுமே எம்டிஎ·ப் எனப்படும் மைய வினியோக கருவியை அணுகுவார். காதில் ஒலிவாங்கியை போட்டுக்கொள்வார். அக்காலத்தில் மனிதர்களே தொலைபேசியை இயக்கினார்கள்.ஒரு ஒயரை ஒரு இணைப்பில் குத்துவார். பேச்சு கேட்க ஆரம்பிக்கும். .இன்னொரு ஒயரை குத்தி அதனுடன் இணைப்பார். ஒலி சிதறிக் குழம்பும்.

அப்படியே இணைத்துக்கொண்டே செல்வார். ஒரு கட்டத்தில் எல்லா ஒலிகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ம்ம்ம்ம்ம் என்று ஒலிக்கும். அதன் அழுத்தத்தைக் கூட்டிக்கொண்டே செல்வார். ஒரு இடத்தில் அவருடைய காதுச்சவ்வு அதிர்ந்து உறைந்து நிற்க சுத்தமான பெரும் மௌனம். பலநூறு பேச்சுகளினால் ஆன மௌனம். அதிலேயே மூன்றுநான்கு மணிநேரம் அமர்ந்திருப்பார். அது அவருக்கு ஒரு தியானம். அவரது மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த அர்த்தமற்ற பேச்சுகள் அந்த மௌனத்தில் ஆழ்ந்து மூழ்கி மறையுமோ என்னவோ

ஜெ

சஞ்சய் சுப்ரமணியம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 84
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 85