பூமணி- மண்ணும் மனிதர்களும்

 

பூமணிக்கு விருது அளிப்பதாக முடிவுசெய்தபின்னர் அச்செய்தியை அவரிடம் நேரில் சொல்வதற்காகக் கோயில்பட்டி சென்றிருந்தேன். அதற்கு முன்னர் அவரை நான் ஒருமுறைதான் நேரில் பாத்திருக்கிறேன், ஏறத்தாழ ஏழு வருடங்களுக்கு முன்னர் வண்ணதாசனின் மகள் திருமணத்தில். ஒரு எளிமையான கைகுலுக்கல். அப்போது பூமணி ஓர் எழுத்தாளர் போலிருக்கவில்லை, நானறிந்த பல நூறு அரசு அதிகாரிகளில் ஒருவரைப்போலிருந்தார். நேர்த்தியான ஆடைகள். படியவாரிய தலைமயிர். கண்ணாடிக்குள் அளவெடுக்கும் கண்கள். மெல்லிய குரலில் பேச்சு. நிதானமான பாவனைகள். ஒரு சில சொற்கள் பேசிக்கொண்டோம்.

 

நான் பூமணியிடம் அன்று அவரது ’பிறகு’,’வெக்கை’ ஆகிய இருநாவல்களைப் பற்றி சில சொற்கள் சொன்னேன். சிரித்துக்கொண்டே ‘அதெல்லாம் எழுதி ரொம்ப நாளாச்சு’ என்றார். அப்போது அவர் ’கருவேலம்பூக்கள்’ படம் எடுத்து முடித்திருந்தார். படம் எப்படி வந்திருக்கிறது என்று கேட்டேன். நன்றாக வந்திருப்பதாக எல்லாரும் சொல்கிறார்கள் என்றார். மீண்டும் இலக்கியத்துக்கு எப்போது வருகிறீர்கள் என்றேன். சிரித்துக்கொண்டு எப்போதுமே இலக்கியத்தில்தான் இருப்பதாகவும் ஒரு பெரிய நாவலை எழுதிக்கொண்டிருப்பதகாவும் சொன்னார். மேடையின் மெல்லிசை முழக்கத்தில் பாதிகேட்டுப் பாதி உதட்டசைவால் ஒரு சிறிய உரையாடல்.

கோயில்பட்டிக்கு வருகிறேன் என்றதும் பூமணி வரவேற்றார். ஆனால் அவரது வீட்டுக் கட்டுமான வேலை நடந்துகொண்டிருப்பதனால் வெளியே சந்திக்கலாம் என்றார். நான் அவரை நான் தங்கியிருந்த விடுதிக்கு வரமுடியுமா என்றேன். மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார். அவர் இல்லம் தேடிச்சென்று சந்திக்கவேண்டுமென்ற ஆசை நிறைவேறாமல் போனதில் கொஞ்சம் வருத்தம்தான். விடுதியறையில் காத்திருந்தேன். கதவு தட்டப்பட்டது. நான் ‘யார்?’ என்றேன். ’நான்தான் பூமணி’ என்றார். சற்று அதிர்ச்சியாக இருந்தது. பூமணி முற்றிலும் இன்னொருவராக இருந்தார். அக்கறையே இல்லாத ஆடைகள். நன்றாக நரைத்த தலை. நரைத்த மீசை. சட்டென்று வயோதிகம் வந்து கூடியது போல.. பூமணியின் கைகால்கள் மெல்ல நடுங்கின. நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்படுவதாகச் சொன்னார். அது அவரது நடை பாவனை எல்லாவற்றையும் மாற்றி அவரை இன்னொருவராக ஆக்கிவிட்டிருந்தது. சென்னையை நிரந்தரமாகத் துறந்து கோயில்பட்டிக்கே வந்துவிட்டதாகச் சொன்னார். ஏனென்று கேட்டேன். ‘எப்பவுமே சென்னையிலே இருக்கிற ஐடியா இருந்ததில்லை. சரி, கடமைகள் முடிஞ்சது வந்திட்டேன்’ என்றார்

அன்று மாலை வரை பூமணியிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவரது இளமைக்காலம், இலக்கிய வாசிப்பு, அரசுத்துறை ஊழியம், எல்லாவற்றைப்பற்றியும். ஒரு பதிவுக்கருவி கொண்டுசென்றிருந்தேன். அதுவேலைசெய்யவில்லை. ஆகவே அவர் பேசுவதை முழுக்கக் கையாலேயே குறிப்பெடுத்தேன். வழக்கமாகக் கரிசல் நிலத்தில் வெயில் எரிந்துகொண்டிருக்கும். ஆனால் அன்று இதமான சாரல்மழை இருந்தது. மாலையில் தேவதச்சனின் சேது ஜுவல்லரிஸ் என்ற நகைக்கடையைத் தேடிசென்றேன். அதைக்கண்டுபிடிப்பது அப்படி சிரமமாக இல்லை, ஆனால் நானறிந்த கோயில்பட்டி நிறைய மாறியிருந்தது. புதிய பெரிய கட்டிடங்கள். பரபரப்பான சாலை. தேவதச்சனின் கடையே மாறியிருந்தது, ஏதோ நகையைப் பரிசீலித்துக்கொண்டிருந்தவர் என்னை ஏறிட்டுப்பார்த்தார். கண்ணாடிக்குள் தெறித்த கண்களில் சட்டென்று வியப்பு.

‘’பூமணி சொன்னார், வருவீங்கன்னு சொன்னார். உக்காருங்க’ என்றார் தேவதச்சன். நான் அவர் முன்னால் அமர்ந்துகோண்டேன். ’நகைவியாபாரமெல்லாம் எப்படிப் போகுது’ என்றேன். ‘போய்ட்டிருக்கு’ என்றார் தேவதச்சன்.’இப்ப பெரிய பெரிய கார்ப்பரேட் கடைகள் வந்தாச்சு. ஜனங்களுக்கு அவங்க விளம்பரம் மேலே மயக்கம். விலையிலயும் கொஞ்சம் குறைச்சுக்க முடியும்…முன்னெல்லாம் பொற்கொல்லர்னா ஒரு குடும்ப உறவு இருக்கும். கல்யாணம் நிச்சயிச்சா உடனே செய்றது ஆசாரிய வந்து பாக்கிறதுதான். பெரும்பாலான சமயங்களிலே பொண்ணையும் கூட்டிட்டு வருவாங்க. பொண்ணோட அம்மாவுக்குப் போட்ட நகைகளைக் கொண்டு வருவாங்க. உருக்கிப் புதுசா செய்றதுக்காக…அந்த நகையும் இதே கடையிலேதான் செஞ்சிருப்போம்…இங்கதான் செஞ்சதுன்னு சொல்லிக் குடுப்பாங்க…அந்த உறவு இப்ப இல்லை. நேத்து ஒருத்தர் வந்தார். ரெண்டுதலைமுறையா எங்க கஸ்டமர். எவ்வளவோ வேலைசெஞ்சு குடுத்திருக்கோம். கொஞ்சம் விலை வித்தியாசம், சட்டுன்னு அங்க போறம்னு கெளம்பிட்டார். பல தலைமுறைப் பழக்கம் , அதுக்கு ஒரு பிரயோசனமும் இல்லைன்னு ஆயிட்டுது’ என்றார்

கடையில் இருந்து கிளம்பித் தேவதச்சனுடன் நடந்துசென்றேன். இருபதாண்டுகளுக்கு முன்னால் அவரிடம் அப்படிக் கவிதையின் படிமங்களையும் உருவகங்களையும் பற்றிப் பேசிக்கொண்டே சென்ற நாட்கள் நினைவுக்கு வந்தன. செண்பகவல்லி அம்மன் கோயிலுக்குப் பின்னாலுள்ள மைதானத்துக்குச் செல்லும் படிகளில் ஏறிச்சென்றோம். பழமையான வீடுகள் இன்னும் மிச்சமிருந்தன. சில வக்கீல்கள் அங்கே குடியிருப்பதாகச் சொன்னார். ஒரு வீட்டில் வ.உ.சி கொஞ்சகாலம் குடியிருந்தாராம். வீடு பழைமைகொண்டு மூடிப் போடப்பட்டிருந்தது. அதன் படிகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். செண்பகவல்லி அம்மன் எப்படி கோயில்பட்டி என்ற சிற்றூரின் குடிதெய்வமாக உருவாகி வந்தாள் என்று தேவதச்சன் சொன்னார். இரவு நெடுநேரம் வரை கோயில்பட்டியின் வளர்ச்சியைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தோம். ஒரு சிறிய சாலையோரத்து கிராமமாக இருந்தது, ஒரு தொழில்நகரமாக வளர்ந்த கதையைச் சொன்னார்.

மறுநாள் தேவதச்சன் அதிகாலையில் விடுதிக்கு வந்தார். கதிரேசன்கோயில் மலைக்கு ஒரு ஆட்டோவில் சென்றோம். கரடு என்றுதான் சொல்லவேண்டும். மலைக்குமேல் உள்ள முருகன் கோயில் வெறும் ஒரு வேலாக இருந்த காலம் எல்லாம் தேவதச்சனுக்குத் தெரியும். அன்றெல்லாம் பிள்ளைகளுடன் அவர் அங்கே வந்து விளையாடியதுண்டு. நெடுங்காலம் குடிகாரர்களின் மையமாக இருந்த இடம். கீழே சின்னக் குற்றவாளிகளும் உதிரித்தொழிலாளர்களும் வாழும் தெருக்கள். இன்று எல்லாமே மாறிவிட்டன. அப்பகுதி எங்கும் புதிதாக ‘நகர்’கள் முளைத்துப் பரவிக்கொண்டிருந்தன.அந்தக் கோயிலை எடுத்துக்கட்டுவது அப்பகுதிக்கு ஓர் அடையாளத்தைக்கொடுத்து அங்கே நிலத்தின் மதிப்பை ஏற்றும் என நினைத்த நில வியாபாரிகளால் கோயில் பெரிதாகக் கட்டப்பட்டு சிமிண்ட் படிகளும் அமைக்கப்பட்டது. அதற்குப்பலனும் இருந்தது, கதிரேசன்கோயில் நகர் இன்று மிகவும் மதிக்கப்படும் பகுதி. அருகேதான் இன்னும் அந்தக் குடிசைப்பகுதி இருக்கிறதென்றாலும்.

ஆனால் அது இன்று குடிசைப்பகுதியல்ல என்று தோன்றியது. சில ஓட்டு வீடுகள் இருந்தன. மிச்சமெல்லாம் புதியதாகக் கட்டப்பட்ட சிமிண்ட் வீடுகள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை கிடந்த கோயில்பட்டியை இந்திய அளவுகோலின்படி செல்வச் செழிப்பான நகரமென்றே சொல்லவேண்டும். ஏராளமான புதிய வீடுகள் டிஸ்டெம்பர் அடித்த சுவர்களுடன் இளமழைக்குப்பின் முளைத்த பசுமையுடன் நின்றன. சுற்றி விரிந்திருந்த கரிசல் நிலம் தொடுவானில் சற்றே உயர்ந்திருந்த மண்மேட்டை அடைந்து வானுக்கேறியது. கோயில்பட்டி கண்ணெதிரே வளர்ந்துகோண்டிருப்பதுபோல எனக்கு பிரமை ஏற்பட்டது. பெயர் சுட்டுவதுபோலக் கோயில்பட்டி ஒரு கூடுமிடமாகவே இருந்திருக்கிறது. மங்கம்மாள்சாலையில் வணிகர்கள் இளைப்பாறும் ஒரு சின்ன மையம். கேப்பைக்களியும் பதநீரும் விற்கும் வியாபாரிகள் அங்கே மரத்தடிநிழலில் அமர்ந்திருந்திருக்கலாம்.

1689 முதல் 1704 வரை மதுரையை ஆண்ட ராணிமங்கம்மாளால் உருவாக்கப்பட்டது தென்னகத்துக்கான நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை 47. இன்றும்கூட இப்பகுதிகளில் இதை மங்கம்மாசாலை என்றுதான் சொல்கிறார்கள். மங்கம்மாள் இந்தியாவை ஆண்ட அபூர்வமான பேரரசிகளில் ஒருவர். அவருடன் ஒப்பிடுவதற்கு இன்னொரு அரசிதான், காகதீயப்பேரரசி ராணி ருத்ராம்பாள். மங்கம்மாளின் காலகட்டத்தில் திருச்சிமுதல் குமரிவரை அவளுடைய கட்டுப்பாட்டில்தான் இருந்தது, அனேகமாகத் தமிழகத்தின் முக்காற்பங்கு. வரிவசூல் அமைப்புகள் முழுமை பெற்றிருந்தன. பெரிய படையெடுப்புகள் ஏதும் நிகழவில்லை, படைகொண்டுவந்த ஔரங்கசீபின் தளபதியைக் கப்பம் கொடுத்துத் திருப்பியனுப்பினாள் மங்கம்மாள். பிற மன்னர்களைப்போல மங்கம்மாள் கோயில்களைக் கட்டவில்லை. சாலைகள், சந்தைகள், ஏரிகள் ஆகியவற்றிலேயே அவர் கவனம் செலுத்தினார். தென்னாட்டில் உள்ள பல ஊர்கள் அவரால் உருவாக்கப்பட்டவையே.

ஏசுசபைக் குறிப்புகளை வைத்துப்பார்த்தால் மங்கம்மாளுக்கு முன்னர் மதுரையில் இருந்து குமரிக்கு வரும் பாதையானது கிழக்குமலைத்தொடர்களை ஒட்டி அமைந்திருந்தது. முக்கியமான காரணம் இப்பகுதி நிலம் வளமானது என்பதும் ஆகவே இங்கே சிற்றரசுகள் உருவாகியிருந்தன என்பதும்தான். மக்கள் வாழும் நிலம் வழியாகவே சாலைகள் அமையமுடியும். வண்டிகளுக்கு நீரும் உணவும் தேவைப்பட்டது. இன்றைய சாலை இருக்குமிடம் வெறும் பொட்டல். இன்று கரிசல் என்று சொல்லப்படும் நிலம் நீரற்றபாலையாக, கைவிடப்பட்ட தரிசாகக் கிடந்திருக்கும். அங்கே இருந்தவர்கள் பெரும்பாலும் பாலையை நம்பி வாழும் மக்கள். அவர்களுக்குத் திருட்டு குற்றமல்ல.

அத்துடன் மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றிக்கொண்டபோது தோற்கடிக்கப்பட்ட பாண்டியவம்சம் தென்னாட்டில் கயத்தாறிலும் தென்காசியிலும்தான் குடியேறியது. நெடுங்காலம் கயத்தாறு அவர்களின் மையமாக இருந்தது. விஸ்வநாதநாயக்கனின் பேரமைச்சர் அரியநாதமுதலியார் கயத்தாறைச் சுற்றி ஆண்டிருந்த பஞ்சவழுதிகள் என்ற சிற்றரசர்களைத் தோற்கடித்தார் என்று சொல்லப்படுகிறது. இவர்களெல்லாருமே தங்களைப் பாண்டிய வம்சத்தவர் என சொல்லிக்கொண்டவர்கள். பாண்டியர்களின் மறவப்படையின் பெரும்பகுதி இங்கே சிதறி வாழ்ந்தனர். நிலத்தின் வளமின்மை அவர்களைக் கொள்ளையர்களாக ஆக்கியிருந்தது. எப்போதாவது குமரிக்குப் பெரும்படையுடன் வரும்போதுமட்டுமே இந்த விரிந்த பொட்டல்நிலம் பாதையாகப் பயன்படுத்தப்பட்டது.

மங்கம்மாள் இங்கே ஒருசாலையை அமைக்க முடிவெடுத்தபோது கடுமையான எதிர்ப்ப்பு வந்ததாகச் சொல்லப்படுகிறது. வாய்மொழிக்கதைகளின்படி மங்கம்மாள் பெண்களுக்கே உரிய மதிநுட்பத்துடன் முடிவெடுத்தார். இப்பகுதியில் ஆங்காங்கே ஆதிக்கம் செலுத்திய கள்வர் குலங்களையே தேர்ந்தெடுத்துக் குலப்பட்டமும் அடையாளமும் கொடுத்து அப்பகுதிகளின் காவலர்களாக நியமித்தார். அவர்கள் அங்கே பயணிகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கவேண்டும், அவர்கள் சிறு சுங்கம் வசூலித்துக்கொள்ளலாம். மங்கம்மாள் கட்டிய நூற்றுக்கணக்கான கல்மண்டபங்கள் சமீபத்தில் நாற்கரச்சாலை வரும்வரைக்கும்கூட இச்சாலையின் இருமருங்கும் இருந்தன.

மங்கம்மாள் சாலை மிகவிரைவிலேயே முக்கியமான வணிகப்பாதையாக ஆகியது. அதனூடாக வந்த வண்டிகள் தங்குமிடங்கள் ஊர்களாக ஆயின. தெற்கே உவரி புன்னைக்காயல் பகுதிகளில் இருந்து வந்த நாடார் வணிகர்கள் குடியேறிய சாத்தூர் சிவகாசி விருதுபட்டி போன்ற ஊர்கள் வளர்ந்து பேரூர்களாக நகரங்களாக மாறின. அவ்வாறுதான் கோயில்பட்டியும் உருவெடுத்தது. ஒப்புநோக்கக் கோயில்பட்டிக்கு அருகே உள்ள கழுகுமலை, கயத்தாறு , கங்கைகொண்டான் போன்ற ஊர்களே முக்கியமானவை. அங்கேதான் கோயில்கள் இருந்தன. ஆனால் கோயில்பட்டி சட்டென்று வளர ஆரம்பித்து அவ்வூர்களைத் தாண்டிச் சென்றது.

திருநெல்வேலி கண்ட்ரி மேனுவல் எழுதிய எச்.ஆர்.பேட் கோயில்பட்டியின் வளர்ச்சியை முன்னரே ஊகித்தவர்களில் ஒருவர். கோயில்பட்டியைச் சுற்றியிருக்கும் கரிசல்நிலம் பருத்தி விவசாயத்துக்கு மிகமிக ஏற்றது என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த நிலப்பகுதியில் உள்ள வறண்ட காலநிலையும் இதமான மழையும் கூடப் பருத்திக்கு ஏற்றதுதான். பருத்தி விவசாயம் அப்போதே கோயில்பட்டி சுற்றுவட்டாரக் கிராமங்களின் முக்கியமான தொழிலாக ஆகிவிட்டிருந்தது. பருத்தியை வாங்கி விற்கும் வணிகமையமாகக் கோயில்பட்டி உருவம் கொள்ள ஆரம்பித்தது. பருத்தியை நூலாக்கும் மில்கள் கோயில்பட்டியில் உருவானபோது அது தொழில்நகரமாகவும் ஆகியது. 1891 இல் வந்த லாயல் மில்லும் 1926 இல் வந்த லட்சுமி மில்லும் இன்றும் கோயில்பட்டியின் அடையாளங்கள்.

மெல்லமெல்ல மில் தொழில் வலுவிழந்தபோதுதான் கோயில்பட்டியில் தீப்பெட்டித்தொழில் ஆரம்பித்து வேகம் கொண்டது. கோயில்பட்டியின் வறண்ட காலநிலை தீப்பெட்டித்தொழிலுக்கு மிகமிக உகந்தது. ஏராளமான மலிவான உழைப்பு கிடைத்தது இன்னொருகாரணம்,. இன்றைய கோயில்பட்டியின் செழிப்பு தீப்பெட்டித்தொழிலினால்தான் என்பதை மறுக்கமுடியாது. கோயில்பட்டியின் விவசாயம் சமூகக் கட்டமைப்பு எல்லாவற்றையுமே தீப்பெட்டித்தொழில் முற்றாக மாற்றியமைத்துவிட்டது. கோயில்பட்டி குறைந்தகாலத்துக்குத் தரமான பேனா நிப்புகள் செய்யக்கூடிய இடமாகவும் அறியப்பட்டது. அதிகமும் கையாலேயே செய்யவேண்டிய இவ்வேலையை இங்கே கிடைக்கும் மலிவான குழந்தைத்தொழிலாளர்களின் உழைப்புக்காகவே கொண்டுவந்தார்கள். இத்தொழில் இன்று நசிந்துவிட்டது.

கோயில்பட்டியைச்சுற்றிய நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குக் கோயில்பட்டிதான் மையம். சுற்றியுள்ள கிராமங்களில் இடைசெவல் இலக்கிய முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கேதான் தமிழின் இரு முக்கியமான பெரும்படைப்பாளிகள் உருவானார்கள். கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணனும். கி.ராஜநாராயணன் வழியாக இந்த நிலம் இலக்கியத்தில் அழியாத இடம் பெற்றது. கரிசல் இலக்கியம் என்ற சொல்லாட்சி உருவானது. கரிசல் இலக்கியத்திற்கு இன்று ஒரு நீண்ட படைப்பாளி வரிசையே உள்ளது. கோயில்பட்டியை ஒட்டிய ஆண்டிபட்டி என்ற கிராமம்தான் பூமணிக்கும். அந்தக் கரிசல் மண்ணயே அவரும் எழுதினார். அவ்வகையில் அவரும் கரிசல் எழுத்தாளர் என்று சொல்லலாம்.

பூமணி தேவேந்திரகுல வேளாளர் என்று சொல்லப்படும் பள்ளர் [அல்லது மள்ளர்] சமூகத்தைச் சேர்ந்தவர். தேவேந்திரகுலத்தவர் அட்டவணைச்சாதிகளில் சேர்ந்தவர் என்பதனால் பூமணியை தலித் எழுத்தாளர் என்பது வழக்கம். ஆனால் இவ்வகை அடையாளங்களை முழுக்க நிராகரிக்கக்கூடியவராகவே எப்போதும் பூமணி இருந்திருக்கிறார். ”தலித் என்ற வார்த்தை எனக்கு அன்னியமானது. அந்த வார்த்தைக்கு ஒடுக்கப்பட்டவன் என்ற அர்த்தம் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எந்தச்சாதியில்தான் ஒடுக்கப்பட்டவன் இல்லை? எல்லாச்சாதியிலும் ஒடுக்குகிறவனும் ஒடுக்கப்பட்டவனும் உண்டு. ஆனால் அந்த வார்த்தை குறிப்பிட்ட சில சாதிகளை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவதற்காக முன்வைக்கப்படுகிறது. இதில் ஓர் அசிங்கமான உள்நோக்கம் உண்டு

அன்றைக்கு சூத்திரனுக்குக் கீழே வைக்கப்பட்டிருந்தவன் பின்னர் ஒரு புண்ணியவானின் கருணையால் அரிசனன் ஆனான்,அப்புறம் பட்டியல்சாதிக்காரன், தாழ்த்தப்பட்டவன், ஆதி திராவிடன் என்று மாறினான். இன்று தலித் கூட்டில் அடைத்திருக்கிறார்கள், ஆக தூரத்தில் நின்று சுட்டிக்காட்டுவதற்கு ஒரு நிரந்தர அடையாளம் வேண்டியிருக்கிறது. இந்த லட்சணத்தில் சமபந்தி போஜனம் சமத்துவபுரம் எல்லா இழவும் உண்டு

சௌக்கியமா என்று வழக்கமாகக் குசலம் விசாரிப்பதுபோல தலித் இலக்கியம் பற்றி எல்லாரும் விசாரிக்கிறார்கள். முற்பட்ட பிற்பட்ட அட்டவணைச்சாதி என்று இலக்கியத்தைத் தரம்பிரிக்கமுடியாது. அனுபவங்களும் உணர்வுகளும் எந்த சாதிக்காரர்களால் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன என்பதைவிட அவை என்ன என்பதுதான் முக்கியம். என்னைப்பொறுத்தவரை அழகிரிப்பகடை,சங்கரய்யர் இருவருடைய உணர்வுகளுக்கும் சாதியில்லை.

கிடையாடுகளைத் துண்டந்துண்டமாகப் பிரித்து வேலிகளுக்குள் அடைத்துவைப்பதுபோல இலக்கியத்தை சாதிவேலிகளுக்குள் அடைத்து அதன் நோக்கங்களைக் குறுக்கிவிடக்கூடாது. எழுத்தாளனின் விரல்களுக்கு விலங்கிடமுடியாது,சாதி அடையாளத்துடன் இனம் காட்டப்படும் தலித் இலக்கியத்தில் எனக்கு உடன்பாடில்லை. அந்த வார்த்த்தையின் உண்மையான அர்த்தத்தில் இலக்கியம் இருந்தால் அது வரவேற்கப்படவேண்டியதே.

என்னை தலித் என்று கூறிக்கொள்ள விரும்பவில்லை. அந்தக் கடன்வாங்கிய பட்டம் எனக்குத் தேவையுமில்லை. எழுத்தாளனை இப்படி சிறுகூண்டுகளுக்குள் அடைத்து நிறுத்திவைப்பது இலக்கியத்துக்குச் செய்யும் பெரிய துரோகமாகும். இதுதான் தொடர்ந்து நடக்கிறது

தலித் என்ற வார்த்தை இறக்குமதிசெய்யப்படுவதற்கு முன்பே நான் சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைப்பற்றி எழுதியவன். என்னை இச்சாதிக்காரன் என்று சொல்லிக்கொள்வதில் கூச்சமோ தயக்கமோ கிடையாது,. அதற்காக நான் வேறு எந்த இனத்தினரைப்பற்றியும் எழுதக்கூடாது என்று தடைவிதிப்பதற்கு எந்தக் கொம்பனுக்கும் உரிமை இல்லை. ஏனென்றால் அடிப்படையால் நான் ஒரு மனுசன்’ என்று பூமணி தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

பூமணி சொல்வதை அவரது வாசகன் முழுமையாக ஏற்றுக்கொள்வான். அவரை தலித் எழுத்தாளர் என்று சொல்லமுடியுமா என்றால் அவர் அவர்களைப்பற்றி மட்டும் எழுதியவரல்ல. கரிசல் எழுத்தாளார் என்று சொல்லமுடியுமா என்றால் அவரது எழுத்தின் எல்லை அதுவும் அல்ல. அவரை ஒடுக்கப்பட்ட மக்களின் கதைசொல்லி என்று சொல்லக்கூட முடியாது, அவர் எல்லா மக்களையும் கதைமாந்தர்களாக ஆக்கி எழுதியிருக்கிறார். சரி, முற்போக்கு எழுத்து என அவரது எழுத்ததைச் சொல்லிவிடமுடியுமா என்றால் அவர் எங்கும் அரசியலை அடையாளப்படுத்தியவரல்ல. ஆகவே அவரை இலக்கியவாதி என்று மட்டுமே அடையாளப்படுத்தமுடியும்

ஆனால் பூமணி எழுதும் வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள அப்பகுதியின் சாதி சமூக அமைப்பின் ஒரு சித்திரம் நமக்குத் தேவையாக உள்ளது. இது தமிழ்நாட்டின் பிறபகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு உருவாகும் பலவகையான புரிதல்பிழைகளைத் தவிர்க்கும். இந்தவாழ்க்கைச்சித்திரத்தின் நுட்பமான பல உள்ளோட்டங்களை அடையாளம் காணவும் செய்யும். அந்தத் தேவைக்காக, அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு பூமணியின் சமூகப்பின்னணியை நாம் ஆராயலாம். தமிழில் சமூக யதார்த்ததை எழுதிய எந்தக் கலைஞனையும் இந்த விரிவான பின்னணியில் வைத்து ஆராய்வது அவசியம்.

சங்க காலத்தில் மள்ளர்கள் என்று அழைக்கப்பட்டவர்களே இன்று பள்ளர்கள் என்றும் காலாடி,குடும்பர்,மூப்பர்,பண்ணாடி என்ற பிற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களைத் தேவேந்திர குலத்தவர் என்ற பொருளில் தேவேந்திரகுல வேளாளர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டம் சங்கரநாயினார் கோவில் கோபுர வாசல் உள்புறம் கீழ்ப்பக்கம் உள்ள கல்வெட்டு

விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 14 நாள்
திங்கட்கிழமையும் உத்திராடமும் பெற்ற நாள்
தெய்வேந்திரக் குடும்பன் பலாத்துப்படி : முன்
துவாபர யுகத்தில் உக்கிரப் பெருவழுதியும்
சோழனும் சேரனும் உலகம் வறுமைப்பட்டு
இருக்கின்ற காலத்திலே தெய்வேந்திரன் பக்கல் மழை
கேட்கப் போனவிடத்திலே பகவானும் மனம்
மகிழ்ந்து இரும் என்ன சேரனும் சோழனும்
வணங்கியிருக்க பாண்டியன் தெய்வேந்திரனுடனே
கூடியிருக்க, தேவேந்திரனும் வரிசை செய்தாற்போல
கவடு நினைக்க. பாண்டியன் கோபித்து எழுந்து
தேவ கன்னிகை மக்கள் நாலு குடும்பத்தாரை
கைப்பிடியாய்ப் பிடித்துக் கொண்டு சென்னல்
விதையும், கன்னல் விதையும் (கதலி) விதையும்
பனைவிதையும் முதலான பல வித்தும் ஒரு ரிசபமும்
ஒரு சாவியும் கொண்டு பூமியில் வந்தான்
நால்வரில் முதல்வனுக்கு தேவேந்திரக் குடும்பப்
பட்டமும் கட்டி, மூன்று பேருக்கு வாரியன்,
அக்கசாலை, (இளந்தாரியன்) என்று வரிசைப்
பட்டமும் கட்டி ஒரு நாளையிலே 12000 கிணறு
வெட்டி வேளாண்மை கண்ட படியினாலே
ராஜாவும் மனம் மகிழ்ந்து வெள்ளானையும்
வெள்ளை வட்டக் குடையும் சேறாடியும் பகல் பந்தம்
பாவாடை ரெட்டைச் சிலம்பும் ரெட்டைக்
கொடுக்கும் நன்மைக்கு 16 பந்தக்காலும் துன்மைக்கு
2 தேரும் பஞ்சவன் விருந்தும் . . . . .18 மேளமும்
கட்டளையிட்டு நடக்கிற காலத்திலெ . . . . . ”
—- தென்னிந்திய கோயிற் சாசனங்கள்ஃ பாகம் 2, எண் 863ஃ பக்கம் 803

கூறும் ஆதாரத்தின் அடிப்படையில் இவர்களை தேவேந்திர குலத்தவர் என்று சொல்வது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மள்ளர்களின் பூர்வீகநிலம் இப்பகுதியல்ல என்றே சொல்லவேண்டும். ஏனென்றால் அவர்கள் நெல்விவசாயிகள் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஆகவே மருதநிலத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்திருக்கக்கூடும். அவர்களின் வரலாற்றில் இரு பெரும் சரிவுக்காலங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. ஒன்று, ஏழு எட்டாம் நூற்றாண்டு முதல் பிற்காலச் சோழர்- பாண்டியர் ஆட்சியில் நிகழ்ந்தது. இந்தக்காலகட்டத்தைத் தமிழகத்தில் பெரிய ஆலயங்களை மையமாக்கிப் பொருளியலமைப்புகள் உருவான காலகட்டம் என்று சொல்லமுடியும். அன்றைய நில உரிமை முறைப்படி வேளாண் நிலங்கள் கிராமங்களுக்குரியவையாக, கூட்டு உரிமை கொண்டவையாக இருந்தன. தனிநபர் உரிமை இல்லை. வேளாண்மைக்குத் தேவையான நிலம் அந்தந்தப் பருவத்தின் தேவைக்கு ஏற்ப அளந்து பயன்படுத்தப்பட்டது. வேளாண்மை செய்யப்படாத நிலங்கள் ஏராளமாகக் கிடந்தன.

அன்று பெரும்பாலான வேளாண்நிலங்கள் மள்ளர் கிராமங்களுக்குரியவையாக இருந்திருக்கலாம். சோழ-பாண்டிய ஆட்சிக்காலத்தில் ஆலயங்கள் நில உடைமை மையங்களாக ஆனபோது கிராமநிலங்கள் முழுக்கக் கோயில்சொத்துக்களாக ஆயின. அவற்றின் நிர்வாக உரிமை சைவ-வைணவ மடங்களுக்கும், அம்மடங்களிடமிருந்து வேளாளர்களுக்கும் சென்று சேர்ந்தது. இந்தக் காலகட்டம் வேளாளர்களின் பொற்காலம். ஏராளமான வேளாளகுலங்கள் உருவாகி வந்த காலகட்டம் இது. மள்ளர்கள் நிலங்களை இழந்து குத்தகைக்காரர்களாக, நிலங்களில் வேலைசெய்பவர்களாக ஆக நேர்ந்தது.

இரண்டாவது சரிவுக்காலகட்டம் என்பது பதினைந்தாம் நூற்றாண்டு முதல் நாயக்கர்களின் குடியேற்றத்தை ஒட்டி நிகழ்ந்தது. இருநூறாண்டுகளுக்கும் மேலாக நாயக்கர்கள் ஆந்திரநிலப்பகுதியில் இருந்து வந்து தென்னகத்தில் குடியேறியபடியே இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பெரும்பாலும் மள்ளர்களின் நிலங்களே அளிக்கப்பட்டன. மள்ளர்கள் மேலும் மேலும் பண்படாத தரிசுகளை நோக்கித் தள்ளப்பட்டார்கள். நாயக்கர்களின் பிந்தைய தலைமுறைகள் தரிசுகளைப் பயிர்செய்யவேண்டிய கட்டாயத்துக்காளானார்கள். நாயக்கமன்னர்கள் இவர்களுக்காகவே ஏரிகளையும் குளங்களையும் தொடர்ந்து உருவாக்கினார்கள்.

இவ்விரு சரிவுக்காலகட்டங்களைத் தாண்டி மள்ளர்கள் நவீனகாலகட்டத்துக்குள் நுழையும்போது அவர்களின் சமூக நிலை குழம்பியதாகவே இருந்தது.1770 லும் 1874 லும் ஏற்பட்ட இரு பெரும் பஞ்சங்களால் ஏராளமான மக்கள் பஞ்சப்பராரிகளாக ஆகி விவசாயக்கூலிகளாகவும் நில அடிமைகளாகவும் ஆகிவிட்டிருந்தனர். அந்த அவலநிலையில் இருந்தமையால்தான் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாகக் கணிக்கப்பட்டார்கள். அந்தச் சலுகை அவர்களுக்குத் தேவையாகவும் இருந்தது.சுதந்திரத்துக்குப்பின் அவர்களின் பொருளியல் மேம்பாடு அடைந்தமைக்கு அந்த அடையாளமும் அது அளித்த முன்னுரிமைகளும் பெரும் உதவி புரிந்தன.

ஆனால் எங்கெல்லாம் தேவேந்திரர் மட்டும் வாழ்ந்த கிராமங்கள் இருந்தனவோ அங்கெல்லாம் அவர்கள் நில உரிமையாளர்களாகவும் நீடித்தனர். பருத்தி போன்ற பணப்பயிர்கள் வந்தபோது அல்லது நவீன பாசனவசதிகள் வந்தபோது வசதியான நிலக்கிழார்களாகவும் இருந்தார்கள். இந்த முரண்பாடு பூமணியின் படைப்புலகிலேயே காணக்கிடைக்கிறது. அவர் தலித் வாழ்க்கையை எழுதுகிறார் என்ற எண்ணத்தில் வாசிப்பவர்கள், குறிப்பாக வடதமிழகத்து வாசகர்கள், பூமணி ஒருபக்கம் அம்மக்களின் கடுமையான வறுமையை எழுதும்போதே மறுபக்கம் அவர்கள் நிலம் வைத்து விவசாயம் செய்வதையும் எழுதுவதைக் கண்டு குழப்பம் கொள்கிறார்கள். இந்த சாதிப்பின்புலத்தைப் புரிந்துகொள்வது பூமணியின் கதைகள் காட்டும் உலகை நுணுக்கமாக அறிய உதவிகரமானது. அதாவது பூமணி நில அடிமைகளின் கதையை எழுதவில்லை. சிறு நில உடைமையாளர்களை, வறட்சியால் அல்லது வேறு காரணங்களால் கூலிவிவசாயத்துக்குச் செல்லும் மக்களையே காட்டுகிறார்.

பூமணி எழுதும் சமூகப்புலத்தில் வேளாளர்கள் அனேகமாகக் கண்ணுக்குப்படவில்லை. அவர்கள் பெரும்பாலும் கோயில் இருக்கும் ஊர்களிலேயே இருந்தார்கள் என்று தோன்றுகிறது. பிராமணர்களின் ஊர் இன்று பூமணியின் புனைவுப்பரப்புக்குள் வருகிறது. குத்தகைக்காரர்களால் கைவிடப்பட்டு மெல்லமெல்ல அழிகிறது அந்த அக்ரஹாரம். அதன் கதையை ’நைவேத்யம்’ என்ற நாவலில் அவர் எழுதியிருக்கிறார். ஊரில் மறவர்களின் இடமும் குறைவே. கரிசலில் மறவர்கள் முக்கியமான சாதி என்றே திருநெல்வேலி கெஜட்டீர் கூறுகிறது. என்றாலும் பூமணி எழுதும் நிலப்பகுதியில் அவர்கள் அதிகமில்லை.

பூமணியின் சமூகசித்திரத்தில் முக்கியமான சாதிகளாக இருப்பவர்கள் மூவரே. பெரும்பாலும் நிலக்கிழார்களாக இருப்பவர்கள் நாயக்கர்கள்.நாயக்கர்களுக்கிடையே உள்ள சாதி வேறுபாடுகளைப் பூமணி காட்டுவதில்லை. அவரது புனைவுலகில் நாயக்கர்கள் சிக்கனத்தில் பிடிவாதமும் உழைப்பில் தீவிரமும்கொண்ட நில உடைமையாளர்களாகவே வருகிறார்கள். நாயக்கர்களின் வயல்களில் வேலைசெய்யக்கூடியவர்களாகவே தேவேந்திரர் அதிகமும் காட்டப்படுகிறார்கள். ஆனால் அவர்களிலும் நில உரிமையாளர்கள் உண்டு. தேவேந்திரர்களுக்கு நிகரான பொருளியல் தகுதியுடன் ஆனால் மேலான சமூகநிலையுடன் கோனார்கள். அவர்கள் வேளாண்மைச்சமூகத்துடன் இணக்கமாக ஆனால் அதற்கு வெளியே இருக்கிறார்கள்.

தேவேந்திரர்களுக்குக் கீழே இருப்பவர்கள் பகடைகள் அல்லது அருந்ததியர். அவர்கள் இப்பகுதியின் வேளாண்மைக்கு இன்றியமையாதவர்களாக இருக்கிறார்கள். குமரிமாவட்டத்தில் ஆற்றுப்பாசனப்பகுதியைச் சேர்ந்த எனக்கு இந்த நுட்பம் பிடிபடக் கொஞ்சம் பிந்தியது. தோல் தொழிலாளர்களான அருந்ததியர் குமரிமாவட்டத்தில் மிகமிகக் குறைவு. ஏனென்றால் அன்றெல்லாம் செருப்பு என்பது இங்கே சிலரால் மட்டுமே போடப்படுவதாக இருந்தது. ஆனால் கரிசலில் செருப்பு ஆடுமேய்ப்பவர்களுக்கு இன்றியமையாத ஒன்று. அத்துடன் இப்பகுதியில் விவசாயம் என்பது கிணற்றில் இருந்து கமலைமூலம் நீர் இறைத்துச் செய்யப்படுவதாகவே இருந்தது. அதற்குத் தோல்தொழிலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. இவர்களைத்தவிர இந்த வேளாண்சமூகத்தை நம்பி வாழும் ஆசாரிகள் போன்றவர்கள். ’பிறகு’ நாவலில் சுப்பையனாசாரி ஊருக்குள் ஒரு கொல்லர் வந்துவிட்டால் பிழைப்பைப் பங்கிட்டுக்கொள்ளவேண்டும் என்பதற்காக அவரே கொல்லர் வேலையையும் செய்துகொடுக்கிறார்.

இந்த சமூகப்புலத்தில்தான் பூமணியின் கதைகள் நிகழ்கின்றன. கதைமாந்தர்களைப் பெரும்பாலும் சாதி அடையாளத்துடன்தான் பூமணி சொல்கிறார். கந்தையா நாயக்கர், அழகிரிப்பகடை, சுப்பையனாசாரி என. அவர்களுக்கிடையே உள்ள உறவுமுறைகளை அவர் விளக்குவதில்லை. அவை பெரும்பாலும் நுட்பமான உரையாடல் வழியாகக் காட்டப்படுகின்றன. ‘ஏலே சக்கிலியத்தாயளி’ என்று ஒரு நாயக்கர் அழைக்கமுடிகிறது ‘சாமியவுக’ என்று பகடை அவர் முன்னால் கைகட்டி நிற்கிறார். ஆனால் பகடைக்கும் மள்ளருக்கும் இடையே நட்பான சூழல் நிலவுகிறது. கோனார்களுக்கும் ஆசாரிகளுக்கும் இடையே சமத்துவம் திகழ்கிறது. பூமணியின் புனைவுலகு முழுக்க உரையாடல்களில் வாசகன் கொள்ளவேண்டிய கவனமே சாதிப்படிநிலைகளில் எவர் எங்கே இருக்கிறார் என்பதை உரையாடல்கள் காட்டிச்செல்கின்றன என்பதைத்தான்.

’தமிழ்நாட்டில் வர்க்கம் என்ற துல்லியமான பிரிவு உள்ளதா என்ன? சாதியும் சாதிப்போராட்டமும்தான் இன்று தலைவிரித்தாடுகின்றன’ என்று பூமணி ஒரு பேட்டியில் சொல்கிறார். ஆனால் பூமணியின் கதைகளில், குறிப்பாக மிகவிரிவான ஒரு சமூக சித்திரத்தை அளிக்கும் ’பிறகு’ போன்ற நாவல்களில் சாதிமுரண்பாடுகள் பெரிதாக சித்தரிக்கப்படவில்லை. பூமணி காட்டும் உலகில் சாதியின் ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் உள்ளது. அதைமீறி மானுட உறவுகளும் உள்ளன. ’பிறகு’ நாவலில் ஒருவகையான காவியத்தன்மையுடன் கந்தையா நாயக்கருக்கும் அழகிரிப்பகடைக்குமான உறவு சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். பூமணி சமூக மோதல்களைக்கூட மனித வாழ்க்கைக்குள் கொண்டுவந்து உறவுகளின் சிக்கலாக மட்டுமே காட்டுகிறார். அவரது கலையின் சிறப்பம்சமே இதுதான் எனலாம்.

ஆனால் ஒரு கூர்ந்த வாசகன், பூமணியின் கதைகளுக்குள் நாயக்கர்களுக்கும் தேவேந்திரர் போன்ற அடுத்தகட்ட சாதியினருக்குமான நுட்பமான மோதல் மௌனமாக அனலடித்துக்கொண்டே இருப்பதைக் காணலாம். அதை நில உடைமையாளாருக்கும் உழைப்பாளர்களுக்குமான மோதலாகவும் கொள்ளலாம். ஆனால் பூமணியின் புனைவுலகில் அவர் எந்தத் தரப்பின் குரலாகவும் ஒலிப்பதில்லை. உள்ளது உள்ளபடி என்ற அவரது அழகியல்நோக்கு அதற்கு அனுமதிப்பதில்லை. ஒரு பற்றற்ற சாட்சி போல அவரது கண் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறது, நூற்றுக்கிழவன் போன்ற லௌகீக விவேகம் எல்லாவற்றையும் ஆழ்ந்த சமநிலையுடன் பதிவுசெய்கிறது.

 

 

மறுபிரசுரம் /முதற்பிரசுரம்  Dec 23, 2011

 

பூமணியின் வழியில்

பூமணி- சொல்லின் தனிமை

பூமணி-கடிதங்கள்

பூமணி- எழுத்தறிதல்

பூமணி- உறவுகள்

பூமணி- மண்ணும் மனிதர்களும்

விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை

பூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-28
அடுத்த கட்டுரைரே – கடிதம்