மேளம்-கடிதங்கள்

ஜெ,

இந்தப் பதிவு(மேளம்)வண்ணதாசன் அவர்களின் ஒரு சிறுகதையை சட்டென்று நினைவிற்கு கொண்டுவந்ததில் ஆச்சரியமில்லை.

ஒரு டவுண் பஸ் பிரயாணத்தில் பல வருடங்களுக்கு முன் தனது திருமணத்திற்கு நாதஸ்வரம் வாசித்தவரை அடையாளம் கண்டு கொண்டு நினைவுகள் அங்கே போய்விடும்…


எங்களுடைய கல்யாணத்துக்கு நாதஸ்வரம் வாசித்தவரைப்பார்த்த மாத்திரத்திலேயே அடையாளம் தெரிந்துவிட்டது. ரெண்டு தவில், ரெண்டு நாதஸ்வரம், ஒரு சுருதிப்பெட்டி, ஐந்தாறு பேர் என்று டவுண் பஸ் நெரிசலுக்குள் ஏறுவது என்பது சிரமமானதுதான். “மனுஷன் நிற்கிறதுக்கே இடத்தைக் காணோம். பிசுங்கிக்கிட்டு இருக்கு, இதிலே இது வேறு இடைஞ்சல்” என்று கிளம்பின எரிச்சலையும் முனகல்களையும் பிளந்து வகிர்ந்து கொண்டு காவித்துணி போர்த்திய தவில், காவித்துணி உறை போட்ட நாயனம் எல்லாம் ஒவ்வொன்றாக நகர, இந்த மாதிரி நெரிசலையும் எரிச்சலையும் எவ்வளவு பார்த்தாயிற்று என்கிற மாதிரி ஒரு குறுஞ்சிரிப்புடன் அவர் மேலே கம்பியைப்பிடித்துக்கொண்டு வரும்போதே எனக்கு ஞாபகம் வந்துவிட்டது.

முந்தின நாள் கொலு மேளத்திலிருந்து, கல்யாணத்தன்றைக்குக்காலையில் ஆரம்பித்து சாயந்திரம் வரை கேட்டுக்கேட்டு வாசிப்பில் ரொம்ப குளிர்ந்து போயிருந்த நேரம். வரவேற்பு முடிந்து, புகைப்படக்காரர் க்ரூப் போட்டோக்களுக்குக் குடும்பத்தினரைத் தயார் படுத்திக்கொண்டிருந்தார். அவ்வளவு நன்றாக வாசிக்கிறவரை எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும் போல இருந்தது. பக்கத்தில் இருந்த பாலுவைக் கேட்டேன். ‘மாப்பிள்ளை உங்ககூடப்பேசணும்கிறாரு‘ என்று அவன் கையோடு கூப்பிட்டுக் கொண்டே வந்துவிட்டான். அவர் வருவதைப்பார்த்து நான் எழுந்திருந்தேன்.

….

இவர் ‘சிங்காரவேலனே தேவா‘ வாசிக்கவில்லை. ‘நலந்தானா’ வாசிக்கவில்லை. அதெல்லாம் வாசித்திருந்தால் கொஞ்சம் ஏறிட்டாவது பார்த்திருப்பார்கள். ‘அலை பாயுதே‘ வாசித்தார். கேட்டுக்கேட்டு எல்லோருக்கும் தெரிந்த பாட்டு, அல்லது தெரிந்தது போல தலையசைக்கிற பாட்டு.


நடேசக்கம்பர் மகனும், அகிலாண்டத்தின் அத்தானும்

எஸ்ஸெக்ஸ் சிவா

***

அன்புள்ள ஜெ

மேளம் என்ற சொல்லை மிக அவமரியாதையாகத் தமிழிலே பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பதை எழுதியிருந்தீர்கள். அப்படிப் பயன்படுத்தியவர்களில் கவிஞர் பாரதிதாசனும் உண்டு. அறிஞர் அண்ணா பற்றி அவர் எழுதி அவரது பத்திரிகையிலேயே வெளியான கட்டுரையில் அவர் அந்த வார்த்தையை எப்படிக் கேவலமாக கையாள்கிறார் என்று பாருங்கள்

புரட்சிக்கவியின் சாதிய மனோபாவமும் கழகக் கணக்குகளும்

சிவராமன்

**

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

திரு சிவாஜி அவர்கள் மிகச்சிறந்த நடிகர்தான்.அனால், ‘தில்லானா மோகனாம்பாள்’ கதைக்கு திரு கோபுலு அவர்கள் வரைந்த சித்திரங்களின் பாவங்கள் ….! சிக்கல் சண்முக சுந்தரத்தின் இளமையும், துடிப்பும், துள்ளலும் அழகும் , நாதஸ்வர வாசிப்பின் போது வெளிப்படும் உணர்ச்சிகளும் , கோபுலுவின் கோட்டோவியங்கள் மூலம் உயிர் பெற்றன. மோகனாம்பாளின் எழிலும், நாட்டிய மிடுக்கும், உள்ளக் கொந்தளிப்புகளும் கலைமணி அவர்களின் கதையை ஒரு அமரசித்திரம் ஆக்கிற்று. எத்தனை , எத்தனை வகையில் நாட்டிய முத்திரைகள் …! ஒவ்வொரு பாத்திரத்தையும் கண் முன் கொண்டுவரும் அற்புதப் படைப்புகள்.

அதனால், திரைப்படம் பார்க்கும் பொழுது திரு சிவாஜி கணேசனும், நாட்டியப் பேரொளி பத்மினியும் தங்கள் பங்கை சிறப்பாக செய்தார்கள் என்றாலும், அந்தத் திரைப்படம் எனக்கு ஓர் ஏமாற்றமாகவே இருந்தது.

அன்புடன்,
சங்கரநாராயணன்

முந்தைய கட்டுரைஇந்தியாவில் ஏசு
அடுத்த கட்டுரைஎண்ணியிருப்பேனோ